19/09/2019 ஹட்டன் பொகவந்தலாவ , டிக்கோயா ஆகிய பகுதிகளில் இன்று 19 அதிகாலை மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதோடு உண்டியல்களும் உடைக்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவயில் ரொப்கில் வானகாடு தோட்டத்திலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும், டிக்கோயா சாஞ்சிமலை பகுதியில் ராமர் கோவில் உட்பட இரண்டு கோவில்கள் இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொகவந்தலாவ மற்றும் நோர்வூட் பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை, பெருந்தோட்டப்பகுதிகளில் கடந்தகாலங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு புராதன பொருட்கள் கொள்ளையிடிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி ஊடகவியலாளருக்கு பயங்கரவாததடுப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

19/09/2019 முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது.
குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம் தேவைப்படுவதால் செப்ரெம்பர் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடம் கொழும்பு 01 என்ற முகவரிக்கு  சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு , பனிக்கன்குளம், மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார் விசாரணைக்கான அழைப்பு கடிதத்தை கையளித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி