21/09/2019 அரசியல் உரிமைகளுக்கான தமிழ் மக்களின் போராட்டம் நீண்டது. எழுபது வருடங்களாக உயிர்ப்புடன் தொடர்வது. பல வழிகளில் வீரியம் மிக்கது. வியந்து நோக்கத்தக்க பல்வேறு வழி முறைகளையும் உத்திகளையும் கொண்டது. ஆனாலும் அது விளைவுகளைத் தரத்தவறியுள்ளது. இது கவலைக்குரியது - கவனத்துக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் மீள் பரிசீலனைக்கும் உரியது.
இந்த அரசியல் போராட்டம் பிரதானமாக இரண்டு வழிமுறைகளிலானது. சாத்வீகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட அது, பின்னர் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அது சாத்வீக வழிக்குள் வலிந்து தள்ளப்பட்டுள்ளது.
உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து, சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் கடும்போக்கைக் கரைத்து வெற்றியளித்த விடுதலைப் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இதனை தமிழ்த்தலைவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.
அன்றைய இந்திய சாத்வீகப் போராட்டம் அந்நியராகிய ஆங்கிலேயருடைய கொள்கைகள் ஆட்சி முறைகளில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையைக் கொண்டிருந்தது. சாத்வீகப் போராட்டத்தின் சத்திய உணர்வை அதன் ஊடான தியாகத்தை ஆங்கிலேயர்கள் உணரத்தக்க மனிதாபிமானத்தைக் கொண்டிருந்தனர்.
ஆனால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்களின் உண்மைத் தன்மையும் அதன் நியாயமான நிலைப்பாடும் பேரின ஆட்சியாளர்களின் கடும்போக்கு மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அந்தப் போராட்டங்களை அவர்கள் எள்ளிநகையாடினார்கள். அந்தப் போராட்டத்தின் வலிமையை அவர்கள் உணர்ந்து, தமது கடும்போக்கில் மாற்றங்களைக் கைக்கொள்ளவில்லை. மாறாக பொலிஸாரையும் படைகளையும் ஏவிவிட்டு, போராட்டங்களை அடித்து நொருக்கி அடக்கியொடுக்குவதற்கான செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்தினார்கள்.
சாத்வீகப் போராட்டங்கள் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்க, காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழ் மக்களை சமூக ரீதியாக அழித்தொழிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அஹிம்சை வழியிலான போராட்டங்கள் நசுக்கப்பட்ட அதேவேளை, தமிழினத்தின் எதிர்காலத்தையும். அதன் இருப்பையும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கத்தக்க மறைமுக நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அரசியல் உரிமைக்கான போரட்டத்தை முன்னெடுத்த அதேவேளை, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவையும் எழுந்திருந்தது. இந்தப் பின்புலத்திலேயே ஆயுதப் போராட்டம் தலையெடுத்திருந்தது.
ஆயுதப் போராட்டத்துக்கு முன்னதாக சத்தியாக்கிரகப் போராட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. பின்னர் அந்தப் போராட்டங்கள் ஒத்துழையாமை இயக்கம் என்ற வடிவத்தில் அரச நிர்வாக சேவைகளை முடக்குவதற்கான போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒத்துழையாமை போராட்டம்
தனிச்சிங்களச் சட்டம் 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது தந்தை செல்வாவுக்கும் பண்டாரநாயக்காவுக்கும் இடையில் அரசியல் உரிமைகள் தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. தமிழ் மக்களின் தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நாடாளுமன்றத்துக்கு எதிரில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். அவருடைய தலைமையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரசாங்கம் தனது அடியாட்களாகிய குண்டர்களைப் பயன்படுத்தி அடித்து நொருக்கியது. இரத்தம் வழிய வழிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள். முக்கிய தலைவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று அப்புறுப்படுத்தினார்கள்.
அதன் பின்னரும் தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் சம அரசியல் உரிமைக்காகவும் உரத்து குரல் கொடுத்தார். தனிச்சிங்களச் சட்டத்தின் அடையாளமாக வாகன இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை அரசு பயன்படுத்தியது. தனிச்சிங்களத்தை எதிர்த்த தந்தை செல்வா அந்த சிங்கள எழுத்துக்களை தார் பூசி அழிப்பதில் முன்னிலையில் நின்று செயற்பட்டார். தனது வாகன இலக்கத்தகட்டில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்துக்குப் பதிலாக தமிழ் ஸ்ரீ எழுத்தைப் பயன்படுத்தி வீதிகளில் வலம் வந்தார்.
அரசாங்கத்தின் நிர்வாக நடைமுறைக்கு முரணான வகையில் சிங்கள எழுத்துக்குப் பதிலாக தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியமைக்காக அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து வெளியில் வந்த அவர் ஒய்ந்துவிடவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து யாழ். கச்சேரி உட்பட அரச அலுலவலகங்களை பொதுமக்களை அணிதிரட்டி முற்றுகையிட்டு அரச நிர்வாகத்தை அவர் முடக்கினார். தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் தமிழில் அஞ்சல் தலை (முத்திரைகளை) அச்சடித்து சுய ஆட்சி அதிகாரத்தைக் கொண்ட நிர்வாகத்தின் அடையாளமாக அஞ்சல் சேவை நடத்தப்பட்டது.
தமிழ் மக்களின் ஒத்துழையாமை இயக்கச் செயற்பாடுகள் அரசாங்கத்தை அச்சத்தில் ஆழ்த்தியது. தனது கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்ட தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் வெகுண்டெழுந்தார்கள். அதன் விளைவாக அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமைகளைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த அரசாங்கம் தனது அடக்குமுறை நடவடிக்கைகளைப் பல வழிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளலாயிற்று. இந்தப் பின்புலத்திலேயே ஆயுதப் போராட்டத்துக்கான எண்ணக்கருவாகிய தனிநாட்டுக் கோரிக்கை உருவாகி 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அதற்கான அங்கீகாரம் வடக்கு–கிழக்கு தமிழ் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டமும் முகிழ்த்தது.
ஆயுதப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் ஆர்வத்தோடும் உணர்வெழுச்சியோடும் இணைந்தார்கள். பல்வேறு ஆயுத குழுக்கள் செயற்பட்டிருந்த போதிலும் திம்புப் பேச்சுவார்த்தையில் அந்தக் குழுக்கள் ஒன்றிணைந்து பங்கேற்று அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவை முன்வைத்தது. பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டு வடக்கு–கிழக்கு இணைந்த மாகாணசபை உருவாக்கப்பட்டது. அதன் நிர்வாகப் பொறுப்பை தேர்தலின் மூலம் ஏற்றிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினால் இந்திய அமைதிப்படையின் உதவியுடனும் பாதுகாப்புடனும்கூட வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியவில்லை. அதற்கான வாய்ப்பையும் வசதிகளையும் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால் தன்னிச்சையாக ஈழப்பிரகடனத்தைச் செய்த அந்த மாகாணசபையின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இந்திய அமைதிப்படையினருடன் இலங்கையில் இருந்து வெளியேறி இந்திய அரசாங்கத்தின் பராமரிப்பில் வாழ்ந்திருந்தார்.
ஆயுதப் போராட்டமும் அறவழிப் போராட்டமும்
ஆயுதக் குழுக்களிடையிலான மோதல்களின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தனி இயக்கமாகச் செயற்பட்ட விடுதலைப்புலிகள் இந்திய அமைதிப் படையுடனும் பின்னர் இலங்கை அரச படைகளுடனும் மிகத் தீவிரமாகப் போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் தனது தனிநாட்டுக் கோரிக்கைக்காக பல்வேறு படிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டது.
நினைவழியா வகையிலான உத்திகளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் சுவடுகள் தீரம் மிக்கவை. தமிழ் வீரத்தின் - தமிழ் இளைஞர்களின் வீரத்தை, அர்ப்பணிப்பை, தியாகத்தை அற்புதமாக வெளிப்படுத்தியவை. நீருக்குள் நெருப்பு கொண்டு செல்லும் வல்லமை பொருந்திய படை நடவடிக்கைகள் இந்தப் போராட்டத்தின் உயிர் மூச்சாக இடம்பெற்றிருந்தன.
ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்தை – சாத்வீகப் போராட்டத்தின் வழிகாட்டியான இந்தியாவுக்கே முன்மாதிரியான உண்ணா நோன்பின் வலிமையையும் விடுதலைப்புலிகளின் போராட்டம் வெளிப்படுத்தியிருந்தது. இந்திய அமைதிப்படை காலத்தில் 1987 ஆம் ஆண்டு நல்லூரில் தியாகி திலீபன் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் அறவழிப் போராட்டத்தின் அதியுச்ச வெளிப்பாடாகும்.
வடக்கு–கிழக்குப் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதைக் கைவிட வேண்டும்.
சிறைச்சாலைகளிலும் இராணுவ முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் ஊர்காவல் படைகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்த வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் தனது அறவழிப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்.
உணவை ஒறுத்து நீர்கூட அருந்தாமல் திலீபன் மேற்கொண்ட மிகக் கடுமையான அறவழிப் போராட்டம் இந்திய அரசின் அரசியல் ரீதியான அறிவுக் கண்களையும் திறக்கவில்லை. ஆட்சியாளர்களின் இதயத்தையும் தொடவில்லை. அந்தப் போராட்டத்தை அவர்கள் அலட்சியப்படுத்தினார்கள். ஆனாலும் தனது கொள்கையில் பற்றுறுதி கொண்டிருந்த திலீபன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் உயிர்
பிரியும் வரையில் தனது போராட்டம் என்ற கூற்றுக்கு அமைய நீரையும் ஒறுத்து தனது உயிரைத் தியாகம் செய்திருந்தார்.
இந்த உன்னதமான உயிர்த்தியாகம் இடம்பெற்று 32 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தியாகி திலீபனின் அறவழிப் போராட்டத்தின் பின்னர் மிகவும் தீவிரமடைந்த ஆயுதப் போராட்டம் இந்திய அமைதிப்படையை இலங்கையில் இருந்து பின்வாங்கச் செய்திருந்தது. ஆயினும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது. சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களும் முடங்கிப் போயின.
உக்கிரமடைந்த ஆயுத மோதல்கள் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் அரசியல் தீர்வும் கிட்டவில்லை. அன்றாடப் பிரச்சினைகளான எரியும் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை.
மீண்டும் சாத்வீக வழியிலான போராட்டங்களில் ஈடுபட தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி உருவாக்கிய நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கமும்கூட பிரச்சினைகளுக்கு முடிவு காணவில்லை.
உயிர்ப்புடன் அழுத்தும் அதே பிரச்சினைகள்
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, சிக்கல்கள் நேர்ந்தபோதெல்லாம் ஒத்துழைத்து உதவிபுரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது.
முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னர் தியாகி திலீபன் தனது அறவழிப் போராட்டத்தில் முன்வைத்த அதேகோரிக்கைகள் இன்னும் பெரும் பிரச்சினைகளாக உயிர்ப்புடன் அழுத்திக் கொண்டிருக்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் முன்னரிலும் பார்க்க தீவிரமடைந்துள்ளன.
யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்ட போதிலும் அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் அவர்களை இன்னும் பயங்கரவாதிகளாகவே நோக்குகின்றார்கள். கருதுகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் நாட்டு மக்களை ஐக்கியப்படுத்தவும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாய்கிழிய பிரசாரம் செய்கின்ற அவர்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற வகையில் சமூகங்களிடையே வெறுப்பையும் பகைமை உணர்வையும் ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மறுபுறத்தில் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தச் சூழலிலேயே தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருக்கின்றன. நன்றியறிதலுடன் திலீபனை பலரும் வணங்கி அஞ்சலிக்கின்றார்கள்.
மறுபுறத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக ஜனாதிபதி தேர்தல் பற்றிய அறிவித்தலும் வெளியாகி இருக்கின்றது. இதுவரையில் களத்தில் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை உளப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றார்களா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியலிலும் மிக ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.
வரப்போகின்ற தேர்தலில் யாரை ஆதரிப்பது, யாரை ஒதுக்குவது என்று தீர்மானிப்பதில் தமிழர் தரப்பு அல்லாட நேர்ந்துள்ளது. அறவழிப் போராட்டங்கள் அலட்சியப்படுத்தியதன் காரணமாகக் கிளர்ந்தெழுந்த ஆயுதப் போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழர் தரப்பு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலையும்கூட ஒரு போராட்ட களமாகவே கருதிச் செயற்பட வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
தியாகி திலீபன் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடுமையான தனது அறவழிப்போராட்டத்தை ஆரம்பித்ததைப் போன்று தமிழர் தரப்பும் கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க வேண்டிய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அன்று திலீபன் இந்திய அரசு தனது கோரிக்கைகளை ஏற்றுச் செயற்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திற்கு அச்சாணியாகத் திகழ்ந்த அறவழிப்போராட்டத்தையே அவரும் கையில் எடுத்திருந்ததே அதற்குக் காரணம்.
ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற கொள்கைப் பிடிப்பைக் கொண்ட கட்சிகளின் வேட்பாளர்களே களத்தில் இறங்குகின்ற சூழலில் யார் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுவது, எத்தகைய நம்பிக்கையைக் கொள்ள முடியும் என்பதற்கான அறிகுறிகள் தமிழர் தரப்புக்குத் தெளிவாகத் தென்படவில்லை.
வெறுமனே வாய்மொழி மூலமான உத்தரவாதங்களும், நிபந்தனையற்ற ஆதரவும் இதுவரையில் ஏமாற்றத்திலேயே கொண்டு சென்று நிறுத்தி இருக்கின்றன. ஆயுத வலிமை பெற்றிருந்தபோது, சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய சமாதான முயற்சிகளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நல்லெண்ண நடவடிக்கைகளும்கூட தமிழர் தரப்பை நடு ஆற்றில் கைவிடவே வழிவகுத்திருந்தன.
இத்தகைய மிகக் கசப்பானதோர் அரசியல் அனுபவத்தின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தமிழ் மக்களும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நிர்பந்தத்துக்குள் தமிழ் அரசியல் தலைமைகளும் சிக்கியிருக்கின்றன.
கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகின்ற பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய தரப்புக்களின் வேட்பாளர்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச மீது எந்த வகையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் வேட்பாளர் தெரிவுக்காகக் காத்திருக்கின்ற சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகிய மூவரில் யார் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட வல்லவர் என்பதைத் தீர்மானிப்பதிலும் சிக்கல்கள எழுந்துள்ளன.
ஐக்கிய தேசி ய கட்சிக்குள் நிலவுகின்ற உட்கட்சிப் பூசல்களும், தலைமைப் பதவிக்கான மோதல்களும் தெரிவு செய்யப்படுகின்ற வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எத்தகைய அதிகார வல்லமையுடன் காரியங்களை முன்னெடுப்பார் என்பதைத் தீர்மானிப்பதம் கடினமான விடயமாக உள்ளது.
யுத்தத்தின் பின்னரான ஒரு தசாப்த காலத்தில் சமூக, அரசியல், பொருளதார ரீதியாக நாடு பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. பிராந்திய வல்லரசுப் போட்டியில் நிலவுகின்ற அரசியல், இராணுவ பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்கள் மட்டுமல்லாமல், பிராந்திய மட்டத்திலான கலாசார ஊடுருவல் தாக்கங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களின் ஒரு பகுதியினராகிய சிறுபான்மை தேசிய இனமகிய தமிழ் மக்களுக்கு சமஉரிமைகளை வழங்குவதிலும் அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எத்தகைய பற்றுறுதியுடன் வரப்போகின்ற ஜனாதிபதி செயற்பட முடியும் என்பதைத் தீர்மானிப்பதிலும் சிக்கலான நிலைமைகளே தென்படுகின்றன.
இந்த நிலையில் தமிழ்த்தரப்பு என்ன செய்யப் போகின்றது? எவ்வாறு செயற்படப் போகின்றது என்ற கேள்விகள் இப்போத விஸ்வரூபமெடுத்துள்ளன.
பி.மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment