தமிழர் சந்ததியினர் புகலிடத்தில் எவ்வாறு தமிழை தக்கவைப்பார்கள்....?

.
மகாகவி பாரதியின் பேத்தி  தமிழைப்பேசுவதற்கு மறந்த சூழல்......?
                                          முருகபூபதி



சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சிட்னிக்கு மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்தி செல்வி மீரா சுந்தரராஜன் வருகை தந்திருக்கும் தகவல் அறிந்து மெல்பனிலிருந்து அவருடன் தொலைபேசியில் தமிழில் உரையாடினேன்.
உடனே அவர் தம்மால் தமிழில் உரையாட முடியவில்லை என்று கவலையுடன் சொன்னார். அவர் பாரதியின் ஆங்கிலப்படைப்புகள் தொடர்பாக ஆய்வுசெய்வதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் தற்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் மீரா,  பேராசிரியர் சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியரின் மகளாவார். நீண்டகாலமாக அவர் அமெரிக்காவில் ஆங்கிலச்சூழலில் வசிக்கின்றமையினால் அவருக்கு தமிழ் மீதான பரிச்சயம் குறைந்துவிட்டதை அறியமுடிந்தது.
மீராவின் தாயார் திருமதி விஜயபாரதி,  மகாகவி பாரதியின் ஒரு மகளின் புதல்வியாவார்.  பேராசிரியர் சுந்தரராஜன் - விஜயபாரதி தம்பதியர்   இலங்கைக்கு  சில தடவைகள் பாரதி விழாக்களுக்கு வருகை தந்துள்ளனர்.   திருமதி விஜயபாரதிக்கு இசைஞானமும் இருந்தமையினால் பாரதியின் பாடல்களை இனிய ராகத்துடன் பாடுவார்.
பெற்றோர்கள் தமிழில்  பாரதி இயல் ஆய்வாளர்கள். ஆனால் - அவர்களின் மகள் மீரா பாரதியின் ஆங்கிலப்படைப்புகளை ஆங்கிலத்திலேயே ஆய்வுசெய்பவர்.
இந்தப்பின்னணியில் மெல்பனில் கடந்த 21 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் -  அண்மையில் பெருவிழா கொண்டாடிய மெல்பன் பாரதி பள்ளியின் சிறப்பு மலருக்காக இந்தப்பள்ளியின் முன்னாள் - இந்நாள் பெற்றோர்களுடன் உரையாடி ஒரு கட்டுரை எழுதினேன்.




தேமதுரத்தமிழ் ஓசை உலகமெலாம் பரவச்செய்வோம்
தெருவெங்கும் தமிழ் முழக்கம் செய்வோம்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்....
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்  தமிழ் மொழியில்  இயற்றல்  வேண்டும் என்றெல்லாம் பாடிய பாரதியின் சந்ததியில் தமிழில் பேசுவதற்கு முடியவில்லை என்றால் அது பாரதியின் குற்றம் அல்ல.
தமிழர்களின் சந்ததிகள் வாழும் சூழல் - புகலிடம் பெறும் தேசங்களின் சூழல் என்பனதான் காரணம்.
இந்தப்பின்னணிகளுடன் அவுஸ்திரேலியா மெல்பன் பாரதி  பள்ளியின்  பெற்றோர்கள் சிலருடன் உரையாடினேன்.
இந்தக் கலந்துரையாடல்  நேர்காணல்  உலகெங்கும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் தமிழ் ஆசிரியர்கள் -  எழுத்தாளர்கள் - கலைஞர்கள் - ஊடகவியலாளர்களின் கவனத்திற்கும், தமிழ்த்தேசியத்தை வெளிநாடுகளிலும் தக்கவைத்துக்கொள்ள கடும் பிரயத்தனப்படும் அன்பர்களின் கவனத்திற்காகவும் இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
----------
'' அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மனங்களை வருத்தும் விடயங்கள் பல. அவற்றில் ஒன்று பிள்ளைகளின் தமிழ்க்கல்வி "    என்று  சுமார்  21   வருடங்களின்   முன்னர்  மெல்பன் கலை வட்டத்தினால்   மெல்பன்  மொனாஷ்  பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட  'பெற்றோர்   பிள்ளைகள்  உறவு '  என்ற  தலைப்பில்  நடந்த  முழுநாள் கருத்தரங்கில்   கட்டுரை   சமர்ப்பித்து  உரையாற்றிய  திரு. மாவை நித்தியானந்தன்    குறிப்பிட்டார்.
அந்தக்கருத்தரங்கிற்கு   சமுகமளித்த  பெற்றோர்கள்  அனைவரும்  -  தமது பிள்ளைகள்   ஆர்வமுடன்  வருகை  தந்து  தமிழைக்கற்பதற்கு  ஏற்ற திட்டத்தை   நடைமுறைப்படுத்தவேண்டும்  என்ற  வேண்டுகோளையே ஏகமனதாக   விடுத்திருந்தனர்.    அவுஸ்திரேலியாவில்  ஆங்கில  மூலம் பயிலும்   எமது  பிள்ளைகள்  தமிழை   மறந்துவிடும்  வாய்ப்பு  அதிகம் என்றும்,   அதனை   பயில்வதற்கு  கடினமான  முறைகளை அறிமுகப்படுத்தினால்   அவர்கள்  தமது  தாய்மொழியிலிருந்து அந்நியப்பட்டுவிடுவார்கள்    என்ற  கவலையும்  அவர்களின்  கருத்துக்களில் தொனித்தது.
அத்தகைய   எண்ணத்திலிருந்து  இங்கு  வதியும்  தமிழ்  மக்களின் நாடித்துடிப்பை  இனங்கண்டுகொண்ட  மாவை  நித்தியானந்தன் - எமது பிள்ளைகள்  எதில்  அதிகம்  ஆர்வம்  காட்டுகிறார்கள்...? என்பது  தொடர்பாக ஒரு   கள  ஆய்வை   மேற்கொண்ட  பின்னர்,  தாமதிக்காமல்  அதே  1994  ஆம் ஆண்டு   பாரதி  பள்ளியின்  வளாகங்களை   மெல்பனில்  சில  பிரதேசங்களில்   தொடக்கினார்.
அன்றைய   கருத்தரங்கு  உரைகள்  காற்றிலே  கலந்து  கரைந்து மறைந்துவிடாதிருக்க   அவரும்  அவருடன்  இணைந்த  பலரும்  அயராமல் உழைத்ததன்   பெறுபேறுதான்  பாரதி  பள்ளி   கடந்து   வந்துள்ள   இருபது ஆண்டுகள்.
இந்த  வருடம்  (2015)   பாரதி  பள்ளிக்கு  21   வயது  பிறக்கின்றது.  இதில் முக்கியமான   விடயம்  ஒன்றையும்  தெரிவிப்பது  மகிழ்ச்சியளிக்கிறது.
1994   ஆம்  ஆண்டு  பாரதி  பள்ளியில்  படிக்க  வந்த  பிள்ளைகள் காலப்போக்கில்   வளர்ந்து,  திருமணமாகி  அவர்களின்  பிள்ளைகளும்  பாரதி பள்ளியில்   இணைந்துவிட்டார்கள்.
எனவே   மூன்று  தலைமுறைகளின்  வாழ்வு  பாரதி  பள்ளியுடன்  இணைந்து   தொடர்கிறது.
இந்த    வளர்ச்சியில்  நீங்கள்  காணும்  மாற்றங்கள்,   முன்னேற்றங்கள், எதிர்காலத்தில்    எந்தத்  திசையில்  பாரதி  பள்ளி  பயணிக்கவேண்டும் முதலான   சில  கேள்விகளுடன்  பாரதி  பள்ளியின்  ஆரம்ப  கால பெற்றோர்கள்   சிலரை   சந்தித்து  கலந்துரையாடினோம்.
அன்பர்  சூரியகுமாரன்  தமது   குடும்பத்தினருடன்   1987  ஆம்   ஆண்டு கன்பராவுக்கு   வந்தபொழுது  அங்கே  சுமார்  60   தமிழ்க்குடும்பங்கள் வசித்தார்கள்.   முற்றிலும்  ஆங்கிலச்சூழலில்  தமது  பிள்ளைகள்  ஏன்  தமிழ்   படிக்கவேண்டும்...?  என்ற  எண்ணம்தான்  அவருக்கிருந்துள்ளது. அடுத்த   வருடம்  மெல்பனுக்கு  வருகிறது  அவர்களின்   குடும்பம்.   1990 இல்   அவருடைய  மனைவியின்  பெற்றோர்  இலங்கையிலிருந்து  வந்ததும் அவரது   பிள்ளைகள்  அவர்களுடன்  தமிழில்  உரையாடுவதற்கு சிரமப்பட்டிருக்கிறார்கள்.   இந்நிலையில்  சூரியகுமாரன்  மெல்பன்  கலை வட்டத்தில்   இணைகிறார்.   கலை   வட்டம்  1994   இல்   நடத்திய  பெற்றோர் - பிள்ளைகள்   உறவு  தொடர்பான  கருத்தரங்கு,  தலைமுறை இடைவெளிபற்றித்தான்   அதிகம்  பேசும்  என்று  நினைத்திருக்கிறார். ஆனால்,  அன்றைய  கருத்தரங்கு  அவருக்கும்  அவரது  குடும்பத்தினருக்கும்  புதிய  வெளிச்சம்  காண்பித்திருக்கிறது.


எமது  பிள்ளைகளுக்கு  தமிழ்  போதிக்க,  பயிற்றுவிக்க  அவர்களை  கவரும் நிகழ்ச்சி   நிரல்  பாரதி  பள்ளியில்  இருப்பதை   அறிகிறார்.   நாடகப்பயிற்சி, விளையாட்டு, தமிழுடன்  கணிதம்  முதலான  பாடநெறிகள்.  அந்தச்சூழலினால்  அவரது  பிள்ளைகளிடம்   படிப்படியாக  தமிழில்  ஆர்வம் வந்திருக்கிறது.    பிள்ளைகளின்  நட்பு  வட்டம்  அதிகரித்துள்ளது.  வாராந்தம் தமது   நண்பர்களுடன்  பாடலாம்,   ஆடலாம்,   நடிக்கலாம்,  விளையாடலாம் என்பதுடன்    தமிழையும்  படிக்கலாம்  என்று  பாரதி  பள்ளியின்  வகுப்புகளை   தவிர்க்காமல்  விருப்பத்துடன்  வந்தனர்.
சிறிது   காலத்தில்  வெளியான  பாப்பா  பாரதி  வீடியோ  அவர்களிடம் மேலும்   ஆர்வத்தை  தூண்டியது.  எனவே   பாரதி  பள்ளியின்  சாதனைக்கு அதன்   உளவியல்  ரீதியான  அணுகுமுறை   சிறப்பானது எனக்கருதுகின்றேன்."   எனச்சொன்னார்.
தம்பிராசா சண்முகராஜாவின்  மூத்த  மகன்  குழந்தைப்பருவத்தில்  வீட்டில் தமிழிலேயே   பேசி   வளர்ந்திருக்கிறார்.   அவருக்கு  ஆங்கிலம் அந்நியமாகவே   இருந்துள்ளது.    பெற்றவர்களும்  பேத்தியாரும் அந்தக்குழந்தையுடன்   தொடர்ச்சியாக  தமிழிலேயே   உரையாடி வந்தமையினால்  அக்குழந்தை   தனது ஆரம்பப் பாடசாலைக்குச்சென்றபொழுது  அங்கிருந்த  சூழல்  காரணமாக அந்நியப்பட்டிருக்கிறார்.   ஆங்கில  ஆசிரியர்களின்  வகுப்புகளில் ஆர்வமற்றும்   இருந்துள்ளார்.   இதனால்  ஆசிரியர்கள் -  பெற்றோருடன் உரையாடி   தமது  கவலையை   தெரிவிக்கும்  நிலைமையும்  வந்திருக்கிறது. பாரதி  பள்ளியில்  அவருடைய  மகன்  இணைந்தபொழுது தமிழ்    அந்தப்பிள்ளைக்கு  சிரமம்  தரவில்லை.   தமிழில் ஆர்வம்  காட்டி   பயின்று  பிரதான  பாடசாலையிலும்  தனது  கல்வியை  ஊக்கமுடன் தொடர்ந்து   தற்பொழுது  பல்கலைக்கழகத்தில்  படிக்கின்றார்.
சண்முகராஜா  தம்பதியரின்  மகன்  பிரகதீஸ்,  பாரதி  பள்ளியில்  பெற்ற நாடகம்   மற்றும்  பாட்டு   முதலான  பயிற்சிகளின்  பின் விளைவாக பின்னாட்களில்   மிருதங்கம்,   வாய்ப்பாட்டு  முதலானவற்றிலும்  தேர்ச்சி பெற்று   இரண்டு  துறைகளிலும்  அரங்கேற்றமும்  கண்டுவிட்டார்.   அவரது தங்கை  கிருஷ்ணி,  பாரதி  பள்ளியின்  நாடகப்பயிற்சிகளிலும்  ஆர்வம் காண்பித்து   இன்று  அவரும்  இசைத்துறையில்  முன்னேறுகிறார்.   இந்த இரண்டு   பிள்ளைகளுக்கும்  தமிழ்ச்சூழலும்  அதே   சமயம்  ஆங்கிலச்சூழலும்   சம  அளவில்  இருந்திருக்கிறது  என்பதை  அறிய முடிகிறது.    இந்தப்பிள்ளைகள்  தற்பொழுதும்  நன்றாக தமிழ்பேசக்கூடியவர்களாக  விளங்குகிறார்கள்.    
திரு . சுப்பிரமணியம்  என்ற  அன்பர்  தமிழ்நாட்டில்  கோயம்புத்தூரிலிருந்து 1988   ஆம்   ஆண்டு  குடும்பத்துடன்  மெல்பனில்  குடியேறியவர்.   அவரது குடும்பம்   தமிழ்நாட்டில்,  தமிழ்ச்சூழலில்  இருந்தவர்கள்.   இவர்கள் மெல்பனுக்கு   புறப்படும்பொழுது  அவரது  தந்தையார் "  மெல்பனில் தமிழும்   கறிவேப்பிலையும் இருக்குமா...?"  என்றுதான்  கேட்டாராம்.  அப்படி ஒரு   தயக்கம்  தமிழகத்தின்  மூத்ததலைமுறை   தமிழர்களுக்கு இருந்துள்ளது.
" இன்று  அவை  இரண்டும்  மெல்பனில்  தாராளமாக  கிடைக்கின்றது. கறிவேப்பிலையும்   தளிர்க்கிறது.   தமிழும்  துளிர்க்கிறது." -  என்றார் சுப்பிரமணியம்.
அவர்   பாரதி  பள்ளியில்  தமது   குழந்தைகளை  இணைக்கும்பொழுது  இங்கு பயிலும்   இலங்கைப்பிள்ளைகளுக்கும்  தமது  பிள்ளைகளுக்கும்  இடையே பேச்சு   உச்சரிப்பில்  சிறிதளவு  வேறுபாட்டையும்  அவதானித்துள்ளார். இலங்கையர்கள்   கதைத்தார்கள்  எனச்சொல்வார்கள்.   தமிழகத்தவர் பேசினார்கள்  எனச்சொல்வார்கள்.   ஆரஞ்சுப்பழத்திற்கும்  வேறு  பெயர் தோடம்பழம்.  எனினும்,  தமது  குழந்தைகளின்  வசதி  கருதி தமிழ்நாட்டிலிருந்து   வந்த  வேறும்  சில  குழந்தைகளுக்காக  நடத்தப்பட்ட விசேட   வகுப்பில்  இணைந்து,  காலப்போக்கில்  இரண்டற  கலந்தார்கள் என்றார்.
பாரதி   பள்ளியின்  ஆசிரியர்களை   அவர்   வெகுவாகப்பாராட்டினார். அவர்கள்   மாணவர்களுக்கு  கற்றுத்தரும்  முறைதான்  அதில் கவனத்திற்குரியது   என்றார்.  தமது  பிள்ளைகள்  தமிழை  ஓரளவு பேசினாலும்    தமிழை    மறக்காமல்  இருப்பதற்கு  பாரதி  பள்ளிதான்  காரணம் என்றார்.
சிவசுப்பிரமணியம்   என்ற  அன்பர்  சற்று  வித்தியாசமான  கருத்தை முன்வைத்தார்.   தமது  பிள்ளைகள்  பாரதி  பள்ளிக்கு  வாராந்தம் ஆர்வமுடன்   வந்தார்கள்.   அவர்கள்  வளர்ந்த  பிள்ளைகள்  என்பதனால் இலங்கையிலிருந்து   தமிழுடன்  வந்தார்கள்.   அதனால்  அவர்களுக்கு  பாரதி பள்ளியில்   தமிழில்  பேசித் தமிழைப்பயில்வது  சிரமமாக  இருக்கவில்லை. ஆனால்  - தாம்  வார  நாட்களில்  செல்லும்  ஆங்கிலப்பாடசாலையில் எழுத்துவேலைகள்   ஆங்கிலத்தில்  இருந்தமையினால்,  இவர்களினால் சரளமாக   தமிழில்  எழுத  முடியாது  போய்விட்டது.   பாடசாலை ஒப்படைகளில் ( Assignments )   அவர்களின்  கவனம்  அதிகரித்தது.
பாரதி   பள்ளியை  பொறுத்தவரையில்  தமது  உறவு  மூன்று தலைமுறைகாலமாகத் தொடர்கிறது.  பாரதி  பள்ளிக்கு  எமது  பிள்ளைகளை    அழைத்து  வந்த  பெற்றோர்களாகிய  நாம்,  முதல் தலைமுறை.    எமது  பிள்ளைகள்  இரண்டாவது  தலைமுறை.  பின்னர்  எனது   பிள்ளைகளின்  பிள்ளைகளும்  பாரதி  பள்ளிக்கு  வந்தார்கள். அவர்கள்  மூன்றாவது  தலைமுறை.   எனது  பிள்ளைகள்  12   ஆம் வகுப்புவரையில்   தமிழைக்கற்றனர்.   ஆனால்,  அவர்களின்  பிள்ளைகளிடம்   அதனை   எதிர்பார்க்க  முடியவில்லை.
 இன்று   இந்த  பல்தேசிய  கலாசார  நாட்டில்  பயிலும்  பிள்ளைகள் பாடசாலையில்   இரண்டாவது  மொழியாக  சீனம்,  பிரெஞ்,  இத்தாலி, கிரேக்கம்    முதலான  மொழிகளை  கற்கின்றனர்.  இந்திய  பிள்ளைகள் இந்திய  மொழிகளை  அல்லது  சீன,  ஐரோப்பிய  மொழிகளை  கற்கின்றனர். சிங்களப்பிள்ளைகளும்  அவ்வாறே  சிங்களத்தை  அல்லது  சீன,  ஐரோப்பிய மொழிகளை   இரண்டாவது  பாடமாகக்  கற்கின்றனர்.
VCE  பரீட்சையில்  இரண்டாவது  மொழியில்  40   புள்ளிகள்  எடுத்தால் பல்கலைக்கழக    பிரவேசத்திற்கு  போனஸ்  புள்ளிகள்  கிடைக்கும்  என்பதால்   எமது  பிள்ளைகள்  தமக்கு  எளிதான  இலகுவான  மொழியையே   தெரிவுசெய்வதில்  ஆச்சரியம்  இல்லை.
பாரதி   பள்ளி  இதுவரையில்  எமது  பிள்ளைகளின்  தமிழ்க்கல்விக்கு வழங்கியுள்ள   ஆதரவும்  ஊக்கமும்  பயனளித்திருக்கிறது.  அதே வேளையில்   நாம்  மற்றுமொரு  புதிய  பரிமாணத்தை நோக்கிச் செல்லவேண்டியுமிருக்கிறது.   உதாரணமாக  இந்நாட்டில்  ஆங்கிலமும் பிரெஞ்சும்   சில  குடும்பங்களில்  சமாந்தரமாக  பயிற்றுவிக்கப்படுகிறது. அவ்வாறு   நாமும்  தமிழையும்  ஆங்கிலத்தையும்  சமாந்தரமாக பயிற்றுவிக்கும்  புதிய  திட்டங்களை   நோக்கி  நகரவேண்டியிருக்கிறது என்றார்   சிவசுப்பிரமணியம்.
மெல்பனில்   வதியும்  திருமதி  ரேணுகா  தனஸ்கந்தா  இலங்கையில் ஆங்கில   ஆசிரியராகவும்  அதே  சமயம்  தமிழில்  இலக்கியப்படைப்புகளை எழுதியவராகவும்    இருந்தவர்.   அவரது  இரண்டு  குழந்தைகளும்  மெல்பனில்   பிறந்தவர்கள்.    தமது  பிள்ளைகள்  தமிழ்ச்சூழலில் வளரவேண்டும்   என்பதற்காக  கணவரின்  ஆலோசனையுடன்  பாரதி பள்ளியின்  Reservoir  வளாகத்திற்கு   அனுப்பினார்.   அங்கு  தமிழுடன் சிறுவர்   நாடகப்பயிற்சியும் -  ஆரம்பத்தில்  தமிழ்  கற்பித்த  ஆசிரியையின் ஊக்கமளிப்பும்   தொடர்ச்சியாக      கிடைத்தமையினால்,  எனது  மகன்  சியாமளன்  நான்கு  வயதில்  பாரதி  பள்ளிக்குச்சென்று 16 வயதில் VCE இல் தமிழில்  தோற்றி  சித்தியடைந்தார்.   இன்று  மகன்  மருத்துவத்துறையில்  இறுதியாண்டில் படித்தாலும்   சரளமாக  தமிழைப்பேசுகிறார்.   காரணம்  பாரதி  பள்ளியில் அவருக்கு   கிடைத்த  பயிற்சிகளே.
பாரதி  பள்ளியில்  இலகுவான  முறையில்   தமிழ்ச்சொற்கள்  அவர்களின் சிந்தையில்   ஊடுறுவியதையும்  அவதானிக்க  முடிந்தது.  பாட்டு,  கதை, நடிப்பு,   என்பன  எனது  பிள்ளைகளுக் கு ஆர்வம்  ஊட்டின.   நாம் இலங்கையில்    சரஸ்வதி  பூசை   காலத்தில்  கல்வி,  செல்வம்,  வீரம் முதலான    எண்ணங்களை   சமய  அடிப்படையில்தான் தெரிந்துகொண்டோம்.   ஆனால்,  முன்னேற்றமடைந்த  அவுஸ்திரேலியாவில்   பாரதி  பள்ளி  ஊடாக  எமது  பிள்ளைகள் அறிவுபூர்வமாக   அதனை   புரிந்துகொண்டனர்.
பாரதி  பள்ளியின்  ஊக்குவிப்பும்  அங்கு  பணியாற்றும்  ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான   சேவையுமே  அதற்குக்  காரணம்  என்றனர்  தனஸ்கந்தா தம்பதியினர்.
திரு. நவரத்தினம் அல்லமதேவன்   கருத்து  தெரிவிக்கையில், " தங்கள் பிள்ளை  பாரதி  பள்ளியில்  இணைந்த பின்னர்  தமிழில்  எழுதவும்  பேசவும் தமிழ்நிகழ்ச்சிகளில்  பங்கு பற்றவும்  நல்ல  பயிற்சியை   பெற்றதுடன்,  பாரதி பள்ளிக்கு   தொடர்ந்து  செல்வதற்கும்  ஆர்வம்  காட்டினாள்.   அவள் இந்தநாட்டில்தான்    பிறந்தாள்.   எனினும்  தமிழில்  சரளமாகப்பேசவும்  தமிழ் நிகழ்ச்சிகளில்  அறிவிப்பாளராக  செயற்படவும்  அவளால் முடிந்தமைக்குக்காரணம்  பாரதி  பள்ளியின்  தமிழ்  வகுப்புகள்  வழங்கிய பயிற்சியே.
 பரீட்சைவரையில்   தமிழையும்  ஒரு  பாடமாகப்பயின்று  தோற்றுவதற்கு ஏற்ற  தன்னம்பிக்கை  அவளுக்கிருந்தது.   விடுமுறை  காலத்தில்  இலங்கை சென்றபொழுது   எமது  உறவினர்கள்  நண்பர்களிடம்  அவள்  தமிழில் சரளமாக   தெளிவான  உச்சரிப்புடன்  பேசியது  கண்டு  அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.   பொதுவாகவே   வெளிநாட்டில்  பிறந்து  வளர்ந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு   தமிழ்  பேசவராது  என்ற  அபிப்பிராயமே அங்குள்ளவர்களுக்கு    இருக்கிறது.   ஆனால்,  அந்த  சிந்தனையை   எமது மகள்    மாற்றியதற்கு  காரணமே  பாரதி  பள்ளிதான்  எனச்சொல்வதில் மகிழ்ச்சிடைகின்றோம். "  என்றார்.
          பாரதி  பள்ளி  மெல்பனில்  தொடங்கப்பட்ட  1994  காலத்தில்  தமது  மூன்று மகன்மாரையும்   அழைத்துவந்து  இணைத்துவிட்ட  அன்பர்  திரு. இ. முருகேசு அவர்கள்  கருத்து  தெரிவிக்கையில்  கூறியதாவது:- "அவுஸ்திரேலியாவுக்கு   நான்  முதலிலும்  எனது  குடும்பத்தினர்  பின்னரும் வந்தனர்.   எனது   பிள்ளைகள்  இங்கு  வந்தால்  தமிழை   எப்படி  படிப்பார்கள்..?  என்ற  கவலையும்  வந்தது.  ஆனால்,  பாரதி  பள்ளி  நாம் வசித்த   பிரதேசத்துக்கு  அருகிலேயே    தொடங்கப்பட்டதையடுத்து  மிக்க மகிழ்ச்சியுடன்   எனது  மகன்மாரை  அங்கு  சேர்த்துவிட்டேன்.
அவர்கள்   அங்கே   தமிழுடன்  ஆங்கிலம்  கணிதமும்  பயின்றனர். அவுஸ்திரேலயா   அரச  பாடசாலைகளில்  சேருவதற்கு  தமிழ்  தவிர்ந்த இந்தப்பாடங்களும்   பாரதி  பள்ளியில்  பயிற்றுவிக்கப்பட்டதால் அவர்களுக்கு   வசதியாக  இருந்தது.
பாரதி   பள்ளியின்  கலை   நிகழ்ச்சிகளில்  குறிப்பாக  வில்லுப்பாட்டு,   நாடகம்,   விவாத  அரங்கம்  முதலானவற்றிலும்  எனது  பிள்ளைகள் ஆர்வமுடன   பங்கேற்றனர்.   பாப்பா  பாரதி   (வீடியோ  ஒளிப்பதிவு) நாடகங்களிலும்   பங்கேற்றனர்.   தமிழும்  கலையும்  அவர்களுக்கு சமாந்தரமாக  கிடைத்தது.    மேலதிகமாக  ஆங்கிலம்,   கணிதமும்  பயின்று பயனடைந்தனர்.
பாரதி  பள்ளி  பெற்றோர்கள்  சிலரது  இக்கருத்துக்கள்  பதச்சோறு  மாத்திரமே.   அவர்களுடனான  கலந்துரையாடலிலிருந்து   தெளிவான விடயத்தையும்   இங்கு  பதிவுசெய்து  இந்த  ஆக்கத்தை  நிறைவு செய்யலாம்.
ஆர்வம்   பிள்ளைகளுக்கு  எங்கிருந்து  உருவாகும்....? அந்த  ஆர்வத்தை தக்கவைத்துக்கொள்ளும்  பொழுது  தமது  சுயவிருத்திக்கு  ஏற்ற கவர்ச்சியான   அம்சங்கள்  அதில்  இருக்கிறதா...?  என்றுதான்  எமது குழந்தைகள்  எதிர்பார்க்கின்றனர்.
குழந்தைகள்   பராமரிப்பு (Child Care Centre)  நிலையங்களில்  படுக்கைகள் மாத்திரம்   இருந்தால்  என்ன   நடக்கும்...?
அங்கு   அவர்களுக்கு  ஆர்வம்  ஊட்டும்  விளையாட்டுப்பொருட்கள், விளையாட்டுக்கள்   இருந்தால்  அவர்கள்  அங்கு செல்வதற்கு விரும்புவார்கள்.   அதுபோன்ற  உளவியல்  முறையை  பாரதி  பள்ளி நடைமுறைப்படுத்தியிருக்கிறது.    அதுதான்  நாடகப்பயிற்சி.   அதில்  பேச்சு, உச்சரிப்பு, தேகப்பயிற்சி,   தன்னம்பிக்கை,   சுயவிருத்தி  என்பன இழையோடியிருந்தமையினால்  தமது  தாய்மொழியாம்  தமிழையும்  அதே வேளை   ஆங்கிலம்,  கணிதத்தையும்  நேசிப்புடன்  கற்றிருக்கிறார்கள். நாவன்மைப்போட்டிகளிலும்  விளையாட்டுப் போட்டிகளிலும்  ஆர்வம் காண்பித்திருக்கிறார்கள்.
இந்தப் பெறுபேறுதான்  பாரதி  பள்ளியின்  20   ஆண்டுகால   உழைப்பிலிருந்து  கிடைத்துள்ளது.
----------------------------------------------
letchumananm@gmail.com


No comments: