கைகூப்பிக் கேட்கின்றேன் ! ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )

.

அன்னையின் அரவணைப்பில் ஆனந்தம் நாம்கண்டோம்
     அவள்மடியில் படுத்துறங்கி அனைத்தையுமே நாம்பெற்றோம்
     இல்லையெனும் வார்த்தையவள் இதயத்தில் வந்ததில்லை
     இவ்வுலகில் அன்னையைப்போல் எவருமே இருந்ததில்லை

    அழுகுரலை அவள்கேட்டாள் ஆடியே போய்விடுவாள்
    பழுதுவெமை நாடாமல் பார்த்திடுவாள் அன்னையவள்
    கொழுகொம்பு போலவள் கோலாமாய்க் கொண்டிடுவாள்
    முழுவுலகில் அன்னையைப்போல் முன்னிற்பார் யாருமிலர்

    அன்னையவள் அடிதொழுதால் அனைவருக்கும் ஆனந்தம்
    அன்னையினை ஆலயமாய் அனைவருமே எண்ணிடுவோம்
    ஆருமற்று நிற்கின்ற அவலம்தனை காணாமல்
    அன்னையினைப் போற்றுதலே அவர்க்காற்றும் அருந்தொண்டே

    காப்பாற்றி நின்றவளை காப்பகத்தில் விட்டுவிட்டு
    கண்துடைக்கக் கொண்டாட்டம் கனவானே செய்யாதீர்
    கண்ணுக்குள் மணியாகக் காத்துகாத்து வளர்த்தவளை
    கண்கலங்கச் செய்யாதீர் கைகூப்பிக் கேட்கின்றேன் !

No comments: