படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
சிட்னி  கானா  பிரபா  எழுதிய  பாலித்தீவுஇந்துத்தொன்மங்களை  நோக்கி  
பயணித்த யாத்ரீகரின் பார்வையில்  பாலித்தீவு
பயணிக்கவிரும்பும்   தமிழ்ப்பயணிகளுக்கு துணையாகும்  வழிகாட்டி  நூல்
பாலித்தீவுக்கு  சென்றிருக்கிறீர்களா..  தென்கிழக்கு  ஆசிய  நாடுகளின்  மத்தியில்    உல்லாசப்பயணிகளை வெகுவாகக்கவர்ந்திருக்கும்   எழில்  கொஞ்சும்  அழகிய சுற்றுலாத்தீவு.   அவுஸ்திரேலியாவுக்கும்  இந்தோனேஷியாவுக்கும்   அடிக்கடி  உரசல் வந்துகொண்டிருக்கும்.   கிழக்குத்தீமோர் உருவான காலத்திலிருந்தே   இந்த  ஊடலும்  உரசலும்  தொடர்கிறது.  அதன் உச்சத்தையும்  அண்மையில்  பார்த்தோம்.
எனினும்  இந்தோனேஷியாவின்  எல்லைக்குள்    அதன்  ஒரு  பகுதியாக  இருக்கும்  இந்தத்தீவு,  அவுஸ்திரேலியர்களை தொடர்ந்தும்  கவர்ந்துகொண்டிருக்கிறது.



இந்து  மதத்தொன்மங்களுக்கு  மௌனசாட்சியாக  ஐதீகங்களையும்  வரலாற்றையும்   உள்ளடக்கி   உலகப்பிரசித்தம் பெற்றுள்ளது.  

சமீபத்தில்  அவுஸ்திரேலிய  பிரஜைகள்  இருவருக்கு  இந்தோனேஷியா   மரணதண்டனை  விதித்து,  அவர்களின்  உடல்களை  அனுப்பியிருந்த  வேளையில்  எனக்கு  படிக்கக்கிடைத்த நூல்  சிட்னியில்  வதியும்  கானா பிரபா  எழுதிய  பாலித்தீவு.
கானா  பிரபா  மடத்துவாசல்  என்ற  வலைப்பூவும்  வைத்துள்ளார்கலை,  இலக்கிய  வாசகர்கள்  ஆர்வத்துடன்  படிக்கும் வலைப்பூ மடத்துவாசல்.  அத்துடன்  சிட்னியிலிருந்து  24  மணிநேரம் ஒலிபரப்பாகும்   அவுஸ்திரேலியா  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஊடகவியலாளராக  பணியாற்றுகிறார்.
கலை,  இலக்கிய  ஆர்வம்  மிக்க  இளம்  தலைமுறை  எழுத்தாளர்.
இலங்கையில்  இவர்  மாணவராக  இருந்த  காலப்பகுதியில் அங்கிருந்த   மூத்த  எழுத்தாளர்  அநு.வைநாகராஜன்  என்பவரின்சிறுகதைகளைப் படித்துவிட்டு  தமது  வாசிப்பு  அனுபவத்தை   ஒரு கடிதமாகவே   எழுதியவர்.   அந்த  நயப்புரை   நாகராஜனுக்கு நன்கு பிடித்துவிட்டதனால்   அதனையே   தமது  நூலின்  முன்னுரையிலும் வெளியிட்டார்.


எம்மவர்கள்   தமது  நூல்களுக்கு  புகழ்பெற்ற  விமர்சகர்களையும் பேராசிரியர்களையும்   நாடி   ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில்  ஒரு பாடசாலை   மாணவனின்  கருத்துக்கு  நாகராஜன்  முன்னுரிமை கொடுத்து    முன்மாதிரியானார்.
இவ்வாறு   இளம்  வயதிலிருந்தே  கலை,  இலக்கியத்தில்  மிகுந்த ஈடுபாடுகொண்டு விளங்கிவரும்  கானா  பிராபா,   இலக்கியம்,இசைசிற்பம்,  ஓவியம்,  நடனம்,  சினிமா  முதலான  பல்துறைகளிலும் ஆர்வம்   மிக்கவர்.   அடிக்கடி  தமது  வாசிப்பு அனுபவங்களையும் தேர்ந்த  ரசனைப் பதிவுகளையும்   வரவாக்கிவருபவர்.


அத்துடன்   சிறுவயது  முதல்  யாத்ரீகனாக  பயணங்களும் மேற்கொள்பவர்.   பால்ய காலத்தில்  தம்மை   தனது  சைக்கிளில்இருத்தி  உலகம்  காட்டிய  தமது  அப்பாவுக்கே  இந்த  பாலித்தீவு நூலையும்   சமர்ப்பணம்  செய்துள்ளார்.  அப்பா  காண்பித்த உலகம் வேறு.   ஆனால்,  கானா  பிரபா  எமக்கு  காண்பிக்கும்  உலகம்  வேறு.
இலக்கியம்  மீதுள்ள  பற்றுதலை   தமக்குப் பிறந்த  குழந்தையிலும் காண்பித்து  இலக்கியா  எனப்பெயரிட்டவர்.
இந்தோனேஷியாவின்  ஒரு  மாநிலமாக  விளங்கும்  பாலித்தீவுக்கு கானா  பிரபா.  என்னையும்  அழைத்துச்சென்றார்  என்பதுதான்  அவரது  நூலைப் படித்ததும்  சொல்லக்கூடிய  இரத்தினச்சுருக்கமான செய்தி.
வாசகரை  தம்மோடு  தக்கவைத்துக்கொள்ளும்  சாகசம்  நிரம்பிய  பல  படைப்பாளிகளை  பார்த்திருப்போம்.  படித்த  பின்னரும்அந்தப்படைப்பு  பற்றி  யோசிக்கவைப்பார்கள்.  அது  கைதேர்ந்த  கலை.


சிட்னி  விமான  நிலையத்திலிருந்து  புறப்பட்டு  பாலித்தீவின் தலைநகர்    Denpasar     இல்  இறங்கி,  விடுதியில்தங்கியிருந்துகொண்டு   அந்த  எழில்  மிக்க  தீவு  முழுவதும் சுற்றிக்காண்பிக்கின்றார்  கானா  பிரபா.  நாமும்  உடன்பயணிக்கின்றோம்.
4.35   மில்லியன்  மக்கள்  தொகையுள்ள  இந்த  கடற்கரை  மாநிலத்தில்  84.5  வீதமானோர்  இந்துக்கள்.   மீதிப்பேர் இஸ்லாமியர்பௌத்தர்.
இந்துக்களின்  தொன்மையான  சிறப்புக்கு  பெயர்பெற்ற இத்தீவுக்குச்செல்லும்   அவுஸ்திரேலியர்களுக்கு  அயல்வீடு  என்றும்சொல்லமுடியும்.   ஆனால்,  எச்சரிக்கையுடன்  பயணிக்கவேண்டும்.
போதைவஸ்து   பாவனையாளர்களுக்கும்  கடத்தல்காரர்களுக்கும் எமகண்டம்  இந்த  பாலித்தீவு.   2004  ஆம்  ஆண்டு இந்தத்தீவுக்கு  பயணித்தபொழுது   போதைவஸ்து  எடுத்துச்சென்ற  குற்றச்சாட்டில்  Schapelle Corby  என்ற   அவுஸ்திரேலியா பெண்ணுக்கு கடுமையான   சிறைத்தண்டனை  கிடைத்தது.

அவளை   கஞ்சா குவின்  என்றும்  இந்தோனேஷிய  ஊடகங்கள் அன்று  வர்ணித்தன.
சமீபத்தில்  இரண்டு  அவுஸ்திரேலியர்களுக்கு  மரணதண்டனை கிடைத்தது.   அதில்  ஒருவர்  தமிழர்.   இவ்வாறு  கடும்கண்காணிப்புள்ள   தேசத்தின்  ஒரு  மாநிலமாக  உல்லாசத்தீவாக விளங்கும்  பாலிக்கு  செல்லும்  வெளிநாட்டுப்பயணிகள் தமது பொதிகளிலும்  தீவிர  கவனம்  செலுத்துகிறார்கள்இந்தச்செய்தியையும்   நூலின்  தொடக்கத்திலேயே   பதிவுசெய்துபயணிகளுக்கு    குறிப்பாக  தமிழ்  வாசகர்களுக்கு  எச்சரிக்கை மணியையும்    அடித்துள்ளார்  இந்த  யாத்திரீகர்.
இவருடைய   பயண இலக்கியம்  குறித்து  பாராகவன்  அவர்கள் -இவரை  உலகம் சுற்றிய  .கே.செட்டியாருக்கும்  கங்கை முதல் வேங்கடம்    வரையில்   எழுதிய    பாஸ்கரத்தொண்டமானுக்கும் ஒப்பிட்டு   அவர்களை   நினைவூட்டுகிறார்.
இதில்  பாஸ்கரத்தொண்டமான்  எனது  பாட்டானார்  என்பது  எனக்கும்  பெருமிதம்.   இவர்தான்  இலங்கை  காரை நகர்சிவன்கோயிலுக்கு   ஈழத்துச்  சிதம்பரம்  எனப்பெயர்  சூட்டியவர்)


பயண இலக்கியங்கள்  வரலாறு,  ஐதீகங்கள்,  சமயங்கள்பண்பாட்டுக்கோலங்கள்,   அரசியல்,  இலக்கியம்,  இசை,  சிற்பம்,ஓவியம்,   கைவினை,  பொருளாதாரம்,  உணவு - உடை   நாகரீகம்முதலான   இன்னபிற  செய்திகளையும்  இரண்டறக்கலந்து சொல்வது.
கானா  பிரபா,  பாலித்தீவின்  கதையை  எளிமையாக சொல்லும்பொழுதும்  அங்குள்ள  சிற்பங்கள்,   கோயில்கள்ஓவியங்கள்,   நடனங்கள்,  இசை  நிகழ்ச்சிகள்,  உட்பட  பலதரப்பட்ட தகவல்களைச் சொல்லுகின்றார்.    நாமும்  அவருடன்  அருகே  நின்றுஅவற்றை   தரிசிப்பது  போன்ற  உணர்வே  மேலோங்குகிறது.
சென்றேன்  - வந்தேன் -  சாப்பிட்டேன் -  உறங்கினேன் -  என்றில்லாமல்  பாலித்தீவுக்கு  செல்லும்  முன்னமே  அதன்வரலாற்றை   தெரிந்துகொண்டும்,  உள்ளே  பிரவேசித்தது  முதல் அனைத்தையும்   துல்லியமாக  அறிந்துகொள்ள  முயன்றும்,  முடிந்தவரையில்   தமது  பயணத்தை  வாசகர்களுக்கும் பயனுள்ளதாக்கியுள்ளார்.
இந்துக்களின்  தொன்மையை  விளக்குவது  இராமாயணமும்  மகா பாரதமும்.   இந்த  இரண்டு  காவியங்களும்  பாலித்தீவில் சிற்பங்களாக   கோயில்களாக  ஓவியம்  இசை  நடன  நாடக நிகழ்ச்சிகளாக   வழிபாடாக  வாழ்ந்துகொண்டிருக்கிறது.   அதன்சிறப்பினை   ஒவ்வொரு  அத்தியாயத்திலும்  ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
இன்றும்   தாய்லாந்து  மக்கள்  இராமர்  தங்கள்  நாட்டில்தான் பிறந்தார்   எனச்சொல்கின்றார்கள்.   இராமர்  இந்தியா - அயோத்திதாய்லாந்து,   கம்போடியா,   பாலி,  இராமேஸ்வரம்,  இலங்கை  என்று பரந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
கைகேயி  அவரை   காட்டுக்கு  களைத்தார்.   தற்கால  மக்களினால் அவர்   கோர்ட்டுக்கு  அழைக்கப்பட்டார்.   இராமர் சிறந்தவரா...? இராவணேசன்  சிறந்தவனா ....? என்ற  பட்டிமன்றங்கள்  இன்னமும் தொடருகின்றன.   (அதென்ன  அவர்....? அவன்...?)
பாலித்தீவில்   இராமரின்  பரிவாரங்களான  குரங்குகளும் நடன அரங்கில்  முக்கியத்துவம்  பெற்றுள்ள  தகவலையும் இந்நூலில் காண்கின்றோம்

  இராமர்  பெரிய  குரங்குப்படையை வைத்துக்கொண்டு    இராவணனின்  பேரரசை   தாக்குவதை விளக்கும் குழு   ஆடல்  கெச்சா  பாலித்தீவில்  உல்லாசப்பயணிகளை   கவரும் முக்கியமான   நிகழ்வு  என்பதையும்,   அதேசமயம்  அங்கு  சுதந்திரமாக   நடமாடித்திரியும்  உயிருள்ள  குரங்குகள்  பற்றிய எச்சரிக்கை   செய்தியையும்  தருகின்றார்.
இராமர்  சீதையை   மீட்டெடுக்க  வானரப்படையின்  துணையை நாடினார்.   ஆனால்,  பாலித்தீவில்....  வரும் உல்லாசப்பயணிகளின் உடமைகளை   பறிப்பதற்காகவே   வானரப்படைகளை   வளர்ப்பவர்கள் பற்றியும்    அறியமுடிகிறது.
பயணிகளின்  உடைமைகளை   குரங்குகள்  பறித்துவிட்டால்,  அவற்றை   மீட்டுத்தரும்  சாக்கில்  முன்னால்  தோன்றும்  சிலபாலித்தீவு  வாசிகள்  அவற்றை  குரங்குகளிடமிருந்து மீட்டுக்கொடுப்பதற்கு   சன்மானம்  வாங்கும்  தந்திரோபாயமானஉத்தியை    கையாள்கிறார்களாம்.
எனவே   பாலித்தீவுக்குச் செல்லவிரும்பும்  வெளிநாட்டுப்பயணிகள் தமது  கைப்பை  முதலான  சிறிய  உடைமைகளில் கவனமாக இருக்கவேண்டும்   என்ற  செய்தியும்  இந்த  நூலில்  கிடைக்கிறது.
இந்த  அனுபவம்  இலங்கையில்  தம்புள்ளையில்  எமக்கும்  உண்டுஅங்குள்ள  வரலாற்று   முக்கியத்துவம்  வாய்ந்த  பௌத்தவிஹாரையை  பார்க்கச் சென்றபொழுது ,  எனது  மகளிடமிருந்த குடையை  ஒரு  குரங்கு  அபகரித்துவிட்டது.
பின்னர்   சிறுவயதில்  படித்த  தொப்பி  வியாபாரியும்  குரங்குகளும் கதைப்பிரகாரம்    குடையை   மீட்டோம்.  ஆனால் -  அங்கு தந்திரோபாய   பிழைப்பு  இருக்கவில்லை.   பாலித்தீவு  குரங்குகள்  சற்று    வித்தியாசமனவைதான்.  அவை  பழங்களை  விடமுட்டைகளைத்தான்  விரும்பி  உண்கின்றன  என்ற  தகவலும் கிடைக்கிறது.
முட்டை  அசைவம்  இல்லை  என்ற  தகவலை  யார் அவற்றுக்குச்சொன்னது....?
பிள்ளையார்,  சிவன்,  துர்க்கை,  விஷ்ணு   முதலான  தெய்வங்களுக்கு பெரிய  கோயில்களும்  அமைந்துள்ள  பாலித்தீவில் இராமாயணம் மற்றும்   மகா பாரத  பத்திரங்களும்  பெரிய  சிற்பங்களாக ஆரோகணித்திருக்கும்  காட்சிகளைம்  கானா  பிரபா விளக்குகிறார்மொத்தம்  12   அத்தியாயங்களைக்கொண்ட  இந்நூலில் பக்கத்திற்குப்பக்கம்  வண்ணப்படங்களும் அழகூட்டுகின்றன.
உலகில்   உற்சாகம்  ஊட்டும்  பானம்  கோப்பி.   இதற்குத்தான்  எத்தனை   பெயர்கள்....? தமிழ்நாட்டில்  காப்பி  என்பார்கள்.ஆங்கிலத்தில்  Coffee  என்று   அழைத்தாலும்  சுவிட்சர்லாந்தில் Cafe  என்பார்கள்.   பிரேசில்  நாட்டுக்கோப்பிக்கு  தனி மரியாதை.
ஆனால் -  பாலித்தீவில்  விற்பனையாகும்  கோபிக்கொட்டை  பற்றிய புதிய   செய்தியொன்றை  கானா  பிரபா தருகிறார்.  கேட்டால் அருவருப்படைவீர்கள்.
அவர்   பாலித்தீவில் Tebasari  என்ற  மூலிகை  மற்றும் கோப்பித்தோட்டத்திற்கு  சென்றுள்ளார்.   அங்கே Luwake Coffeeபிரசித்தம்.   கீரியை  வளர்த்து  அதற்கு  கோப்பிபழங்களை உண்ணக்கொடுக்கிறார்கள்.   அவை  உண்ணும்  பழத்தின்கொட்டைகனை   அது  வெளிவிடும்  கழிவிலிருந்து  (மலம்பிரித்தெடுத்து  சுத்தம் செய்து  அதிலிருந்து  கோப்பித்தூள்தயாரிக்கிறார்களாம்.     Luwake   என்றதும்   உவாக்கென்று  இருக்கிறதா...?  எனவும்   கேட்கிறார்.  சொன்னதால்  தெரிகிறது.இல்லையேல்   உவாக்கென்றில்லாமல்   உவப்பாக  இருந்தது என்றல்லவா   அதனை  அருந்தியபின்னர்  சொல்வோம்.
ஆனால்   அந்த  Luwake Coffee  விலை  உயர்ந்ததாம்.
பாலித்தீவில்  2002 ஆம்  ஆண்டு  நிகழ்ந்த  பெரிய  குண்டுத்தாக்குதல் பற்றிய   செய்தியையும்  தவறவிட்டுவிடாமல்  பதிவு செய்துள்ளார் பயணி.   இந்தோனேஷியா  மிகப்பெரிய  இஸ்லாமிய  நாடு.  இங்கு அடிப்படைவாதம்   கோலோச்சுகிறது.  ஆனால், அதன்  ஒரு மாநிலமாக  விளங்கும்  பாலித்தீவின்  குட்டா  என்னும்  இடத்தில் அமைந்துள்ள   கடற்கரை  வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை பெரிதும்   கவர்ந்திழுக்கிறது.
அதற்கு   அடிப்படைக்காரணம்  ஆண்டுதோறும்  இளவெய்யிலுடன் கூடிய  பருவகாலம்.   Kutta Beach  இந்தோனேஷியாவின்அடிப்படைவாதங்களுக்கு  நேர்மாறான  சூழலைக் கொண்டிருக்கிறதுஉல்லாசப்பயணிகளின்   உடை குறித்தும்  கடற்கரை வெய்யில் குளியல்   குறித்தும்  அவர்கள்  அருந்தும்  மதுபானங்கள்  பற்றியும் இந்தோனேஷிய   அரசுக்கு  கவலை   இல்லை.   அந்நியசெலாவணியை அந்நாட்டுக்குப்பெற்றுத்தரும்  உல்லாசத்தீவாக  இருந்தாலும்  அங்கு வரக்கூடிய   போதைவஸ்து கடத்தல்காரர்கள்  தொடர்பாக விழிப்புடனும்   எச்சரிக்கையுடனும்  இருக்கிறது.
இங்குதான்  அந்த  பயங்கரம்  நிகழ்ந்தது.   அப்பிரதேசத்தில்  மூன்று இடங்களில்   தீவிரவாதிகள்  வைத்த  குண்டுகளினால்  202 பேர் கொல்லப்பட்டனர்.    அதில்  88  பேர்  அங்கு  உல்லாசம் அனுபவிக்கச்சென்ற   அவுஸ்திரேலியர்கள்.  சிறிது  காலம்ஊடகங்களில்   பேசுபொருளாக  இருந்த  இந்த  கடற்கரை  நகரத்தில் எங்கள்   நாட்டின்  கீரிமலை  கடலை  நினைவுபடுத்தும்காட்சியையும்  தாம்  கண்டதாக  கானா  பிரபா  விபரிக்கின்றார்.
இறந்துவிட்ட   தமது  குடும்ப  அங்கத்தினருக்கான அந்தியேட்டிக்கிரியைகள்   அங்கு  நடக்கின்றது.  ஒரு  பூசகர்  ஒருகுடும்பத்திற்கு  அதற்கான  பூசையை   இந்தக்கடற்கரையில் நிகழ்த்துவதையும்   பதிவுசெய்துள்ளார்.
கானா  பிரபாவின்  இந்த  பாலித்தீவு  பயணம்  எதுவித  சங்கடங்களும்  இன்றி  இனிதே  நிறைவேறியதற்கு  தொடர்ந்தும் தம்மை  ஏற்றிச்சென்று  இடங்களை  காண்பித்த,  ஜெடா   என்ற டாக்ஸி   சாரதி  பற்றியும்  விதந்து  சொல்கிறார்.  பயண  முடிவில்அவர்களுக்கு   இடையில்  சகோதர வாஞ்சையும்  துளிர்விட்டிருக்கிறது.
பாலித்தீவுக்கு  செல்லவிரும்பும்  தமிழ்  வாசகர்கள்  இந்த நூலைப்படித்ததும்  கானா  பிரபாவுடன்  தொடர்புகொண்டு  தமக்குஅந்த  சாரதியின்  தொலைபேசி  எண்களைத்தாருங்கள். " எனக்கேட்டாலும்    ஆச்சரியமில்லை.
பாலித்தீவில்   மக்களும்  வாழ்கிறார்கள்.   இராமர்  குடும்பமும் மகாபாரத   சகோதரர்களும்  இந்து  தெய்வங்களின்  குடும்பஉறுப்பினர்களும்   கோயில்களாக  சிற்பங்களாக  கலை நிகழ்ச்சிகளாக   ஓவியங்களாக  ஐதீகக்  கதைகளாகவாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நூலை   தமிழ்  அவுஸ்திரேலியன்  என்னும்  மாத  இதழையும் வெளியிட்டு  இணையத்தளத்தையும்  நடத்தும்   நிறுவனம்அழகியமுறையில்   வடிவமைத்து   அச்சிட்டுள்ளது.
நாமும்   பாலித்தீவுக்கு  செல்வோமா...?

1 comment:

Unknown said...

தங்களின் விரிவான பகிர்வுக்கு மிக்க நன்றி. ஒரு சின்னத் திருத்தம் அநு.வை.நாகராஜன் அவர்களின் "காட்டில் ஒரு வாரம்" என்ற சிறுவர் நாவலுக்கே எனது முன்னுரை பயன்படுத்தப்பட்டது.

அன்புடன்,
கானா பிரபா