சென்னை பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் மெல்பன் எழுத்தாளர் திரு. மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா அவர்கள் திருக்குறளில் பன்முகம் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளார்.
Jeyarama Sarmaமதுரை யில் இயங்கும் உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து இம்மாதம் 18 , 19 ஆம் திகதிகளில், ( இரண்டு நாட்கள்) நடத்தவுள்ள பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் உலக அளவில் புகழ் பெற்ற திருக்குறள் அறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள்.
திரு. ஜெயராம சர்மா அவர்களுக்கு இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக அரசினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி அடிப்படை இலக்கணம் – தமிழ்ப்பாட வழிகாட்டி – வள்ளுவர் பேசுகிறார் – ஆசிரியரும் அகமும் – திருப்பம் – நெஞ்சே நீ நினை – வட்டுவில் முருகன் திருவூஞ்சல் – என் கடன் – தமிழும் கிறீஸ்த்தவமும் – கோவிலும் நாமும் ஆகிய நூல்களை எழுதியிருக்கும் திரு. ஜெயராம சர்மா அவர்கள், இலங்கை, தமிழகம், அவுஸ்திரேலியா மற்றும் தமிழர் புகலிடம் பெற்ற நாடுகளிலிருந்து வெளியாகும் இதழ்கள், இணைய இதழ்களில் தொடர்ந்து இலக்கியப்படைப்புகளையும் எழுதிவருகிறார். பட்டிமன்றம், கவியரங்குகளிலும் பங்குபற்றிவரும் அவர், நான்காவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு (மதுரை – 2008) மொழிவளர்ச்சி ஆளுமை மாநாடு (இலங்கை – 2009) அகில உலகச் சைவநெறி மாநாடு (சிட்னி -அவுஸ்திரேலியா 2014) ஆகியனவற்றிலும் பங்கேற்று சில அரங்குகளுக்கு தலைமையேற்றுள்ளார்.


இதுவரை யில் 50 நாட்டிய நாடகங்கள் – 100 ஓரங்க நாடகங்கள் – 70 வில்லுப்பாட்டு பிரதிகள் – 50 திருத்தலங்களுக்குப் பொன்னூஞ்சற் பாட்டு பிரதிகள் எழுதியிருக்கும் திரு. ஜெயராமசர்மா , 2007 இல் (மெல்பன்) “முதற்படி ” என்னும் தமிழ்க் குறும்படதுக்கு கதை வசனம் எழுதி நடித்துமுள்ளார்.
அவரின் இதர இலக்கியப்பணிகள்:
மெல்பன் தமிழ்ச்சங்கத்தின் போஷகர், மெல்பன் இந்துக்கலாசார மையத்தின் ஆலோசகர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் .
தமிழ் அவுஸ்த்திரேலியன் பத்திரிகையின் உதவி ஆசிரியர்.
திரு. ஜெயராம சர்மா அவர்களின் தமிழகப்பயணமும் நடைபெறவுள்ள பன்னாட்டு திருக்குறள் மாநாடும் சிறப்படைய வாழ்த்துவோம்.

No comments: