சிட்னியில் சித்திரைத் திருவிழா 2015 தமிழர் தம் நாட்டுப்புறக் கலைகளின் மணி மகுடம் - கானா பிரபா

.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தாய்த்தமிழகத்தின் மதுரை மண்ணின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று "சித்திரைத் திருவிழா". 
கள்ளழகர் தன்னுடை தங்கை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாணத்துக்காகப் புறப்படுமாற் போல அமைந்த அந்த மதுரை சித்திரைத் திருவிழா போன்று, தமிழக மண்ணில் இருந்து நம் தமிழரது ஆடல், பாடல் கலைகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களாகப் போற்றக் கூடிய கலைஞர்கள் சிட்னி மண்ணில் ஆண்டு தோறும் அரங்கேற்றும் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டம் இந்தச் சிட்னியில் சித்திரைத் திருவிழா.


தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் வழியாக இந்த ஆண்டோடு நான்காவது ஆண்டாக இந்தப் பெருமை மிகு விழாவை சிட்னி மண்ணில் அரங்கேற்றிச் சிறப்பிக்கின்றார்கள். புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதிகள், வேல் முருகன், சின்னப்பொண்ணு, தஞ்சை செல்வி, அய்யப்பன் தம்பதிகள் என்று நாட்டுப்புறப் பாடகர்களை சிட்னி மண்ணில் முதன் முறை அரங்கேற்றிய பெருமையோடு, நம்முடைய தனித்துவமான கலை வடிவங்களான காவடியாட்டத்தை நடராஜ் மற்றும் கரகாட்டத்தை தமிழ்ச் செல்வி ஆகிய கலைஞர்களை மேடையேற்றி ஆட வைத்துச் சிறப்புச் சேர்த்தது கடந்த காலங்களில் நிகழ்ந்த சிட்னியில் சித்திரைத் திருவிழாக்கள்.


இந்த ஆண்டு சிட்னியில் சித்திரைத் திருவிழா சற்று முன் கூட்டியே மார்ச் மாதம் 22 ஆம் திகதி Rosehill Gardens, Rosehil இல் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வெகு சிறப்பாக அரங்கமைத்து நடந்தேறியது. இம்முறை  சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தோடு கை கோர்த்தது தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைகளைப் பேணிப் பாதுகாக்கும் அமைப்பான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். தமிழகத்துக்கு வெளியே அயல்நாட்டில்   மஸ்கட் இற்கும் மலேசியாவிற்கும் சென்று தமிழரது நாட்டுப்புறக் கலைகளை மயக்கும் மண்வாசனையை  நடத்திக் காட்டிய இந்தத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சிட்னி மண்ணில் இருபதுக்கும் மேற்பட்ட கலைஞர்களை அழைத்து வந்து மேடையேற்றிய வகையில் நமக்கெல்லாம் பெருமை மிகுந்த வரலாற்று நிகழ்வாக இந்த விழா அமைந்திருக்கின்றது.
'தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின்  தலைவர், புகழ்பூத்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இருந்தும் திரட்டிய இருபதுக்கும் மேற்பட்ட கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்த விழா இவ்வளவு சிறப்பாக அமைய முதுகெலும்பாக இருந்து செயற்பட்டவர் டாக்டர் சோமசுந்தரம், இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமன்றி தேர்ந்த கரகாட்டக் கலைஞர் மற்றும் கரகாட்டம் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்ற சிறப்புக்குரியவர் இவர். இந்த நிகழ்வு நடப்பதற்கு ஒரு வாரம் முன்னர் எதிர்பாராத விபத்தால் மருத்துவ ஓய்வில் இருந்தவரை கலை விடவில்லை. தன்னுடைய உடல் உபாதையைத் தூக்கிப் போட்டு விட்டுப் பம்பரமாக உழைத்தார் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Hon. David Clarke MLC (Parliamentary Secretary for Justice),  Hon. David Ellliot MP (Parliamentary Secretary), Hon. Michelle Rowland MP, Mr John Robertson MP, Mr Geoff Lee MP, Mr Tony Issa MP இவர்களோடு
Mr Gurdeep Singh (Deputy Mayor, Hornsby), Mr Susai Benjamin MC, Ms Julia Finn MC, Mr A. S. Ranga (Consul, Indian Consulate), Ms Melissa Monteiro ( CMRC ) ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.


அன்றைய நாள் முகூர்த்த நாளாக அமைந்ததால் சிட்னித் தமிழர்கள் பலர் கல்யாண விசேஷங்களுக்குப் போக வேண்டிய தேவை இருந்தது. ஆனால் சித்திரைத் திருவிழாவைப் பொறுத்தவரை நம் குடும்ப விழா என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு ஆண்டும் கலந்து சிறப்பிக்கும் தமிழர்கள் குழந்தைகள், பெரியவரகள் வேறுபாடின்றிக் கலந்து சிறப்பித்திருந்தார்கள். எத்தகைய காலநிலைக்கும் ஈடு கொடுக்கும் வகையில் அமைந்த அரங்கத்தின் நடுநாயகமாக நிகழ்வை அரங்கேற்றும் மேடை, இரு புறமும் நாவுக்குச் சுவை தரும் சிற்றுண்டி வகைகளும், உணவு வகைகளும், தாக சாந்திகான பானங்களும் என்று நிறைந்த உணவு அங்காடிகள், பத்திரிகை, வானொலிகள், சமூக நலத் திட்டங்களை வழக்கும் தன்னார்வ அமைப்புகள், பக்தி நெறியை வளர்க்கும் இயக்கங்களுக்கான கரும பீடங்கள் இவற்றைத் தாண்டி குழந்தைகளைக் களியாட்டத்தில் ஈடுபட வைக்க அமைக்கப்பட்ட தன்னியக்க விளையாட்டுக் கருவிகள், சிறுவர்களுக்கான சிற்றுண்டிச்சாலைகள் என்று அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது இந்தக் களியாட்ட மையம்.

சிட்னியில் இயங்கும் தமிழர் பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் ஆடல், பாடல்கள், குறு நாடகங்கள் என்று இந்த நிகழ்வில் சரி பாதியைப் பங்கு போட்டுக் கொண்டு பார்வையாளரைக் களிப்பில் ஆழ்த்தினர். இவர்களின் நடனங்களாலும், பாடல்களாலும் ஈர்க்கப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் கலைஞர்கள் தாமும் மேடையில் ஏறிக் கலகலக்க வைத்தனர்.சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வின் முக்கிய நிகழ்வாகத் தமிழகத்தின் ஆடல், பாடல் கலைஞர்களை வரவேற்றும் சிறப்பு விருந்தினர்களை  வரவேற்றும் மேடைக்கு அழைத்துச் செல்லும் வைபவம் ஆரம்பமானபோது அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் எழுந்தும், ஓடிப் போய் வாயில்புறம் நின்று குழுமியும் வரவேற்றார்கள்.

மேடைக்கு முன்பாக இருந்த பார்வையாளர் பகுதியில் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் என்று நையாண்டி மேளம், நாதஸ்வரம் பக்க வாத்தியமாக அமைய நாட்டுப்புறக் கலைஞர்கள் மேடையில் தாம் அரங்கேற்றப் போகும் கலை வெளிப்பாடுகளுக்கான சிறு முன்மாதிரிகளை அப்போது நிகழ்த்திக் காட்டினர்.
    

 

இந்த நிகழ்வின் பிரதம அதிதி தேவா அவர்கள் சுவையான பல கருத்துகளைப் பகிர்ந்ததோடு  "தமிழகத்தின் மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டலால் தான் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்காக இம்மாதிரியான பெரும் எடுப்பிலான விழாவை நடத்தும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது" என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார். அத்தோடு தனது தனித்துவமான கானா பாடல்களையும் பாடி பார்வையாளர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் தேவா. 


 

தமிழரது நாட்டுப்புறக் கலைகள் என்பவை வெறும் உடற் பயிற்சி வழியாக வருபவை அன்று, அவற்றுக்குக் கட்டுப்பாடான மனப் பயிற்சியும் முக்கியம் என்பதை உணர்த்துமாற் போல இந்த நாட்டுப்புறக் கலைகளைக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டிய போது உணர முடிந்தது. ஒவ்வொரு கலை வெளிப்பாடுகளின் போதும் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு சாகச வெளிப்படுகளாகவும்  அவை அமைந்தன. இரண்டு தடிகளைக் காலில் கட்டி ஆடிய பொய்க்கால் குதிரையாட்டம் ஆகட்டும், தாளம் தப்பாமல் குழுவாக அமைத்துக் காட்டிய தப்பாட்டம் ஆகட்டும், கைச்சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பின்னல் கோலாட்டம், காளையாட்டம், ஒயிலாட்டம் என்று தொடர்ந்த ஒவ்வொரு நடன வெளிப்பாடுகளிலும் செய் நேர்த்தியும், தனித்துவமும் மிளிர்ந்தன. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முத்துக்குமார் அவர்கள் வழங்கிய காளியாட்டம் என்பது இந்தக் கலைகளையெல்லாம் உயர்த்திப் பிடித்துக் காட்டியது. நையாண்டி மேளம், நாதஸ்வரம், பறை போன்ற வாத்தியங்கள் சினிமா இசை கலக்காது நாட்டுப்புற இசையைத் தூக்கிப் பிடித்தன.

   

பாடகி மீனாட்சி இளையராஜா அவர்கள் வழங்கிய தெம்மாங்குப் பாடல்கள் வழியாக கிராமியக் காற்றைச் சிட்னி மண்ணில் தவழ விட்டது. இவர்கள் எல்லோருமே வாத்தியக் கருவிகளில் இருந்து, தமது உடையலங்காரம் வரை எல்லாவற்றையுமே தமிழகத்தின் அச்சொட்டான சுவடுகளாக எடுத்துக் கொண்டு வந்து நிகழ்த்திக் காட்டினர். "இம்மாதிரி எல்லா நாட்டுப்புறக் கலைகளையும் ஒரு சேரப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு வாழ்நாளில் வாய்த்ததில்லை" என்றும் "இப்போதுதான் இப்படியானதொரு நாட்டுப்புற நடனத்தைப் பார்க்கிறேன்" என்றும் நிகழ்வுக்கு வந்த பலர் கூறக் கேட்க முடிந்தது. 

இந்த நிகழ்ச்சி மாலை ஆறு மணி வரை நீண்ட போதும் பார்வையாளர்கள் உற்சாகத்தோடு ஆட்டங்களில் தாமும் பங்கெடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்ததோடு பெரும்பான்மையானோர் விழா முடியும் கடைசி நிமிடம் வரை அங்கு தங்கியிருந்து கெளரவமளித்தார்கள். 

   


சிட்னியில் சித்திரைத் திருவிழா வழியாக நான்கு வருடங்களாகத் தாய்த் தமிழகமும், ஈழத்தமிழகமும் இணைந்த பொதுவான தமிழ் விழாவாக நாம் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது இது நமது தமிழருக்கான பொதுவான விழாவாகப் பார்க்க முடிகின்றது, இந்த ஆண்டு சிட்னியில் சித்திரைத் திருவிழா நிகழ்வின் தலைவராக அமைந்து வெகு சிறப்பானதொரு நிகழ்வை நடத்திக் காட்டிய திரு.அனகன் பாபு அவர்களுக்கும், சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் அத்துணை உறுப்பினர்களுக்கும் சிட்னி மக்கள் சார்பில் நாம் நன்றி என்ற சொல்லை மட்டும் பகிராது ஒவ்வொரு ஆண்டும் கரம் கொடுப்போம் இது நமக்கான விழா என்று உறுதிகொண்டு ஆதரவளிப்போம். நம் கலைகளினூடாகத் தமிழை வாழ வைக்கும் இம்முயற்சி போற்றித் தொடர வேண்டியது.
No comments: