கனடா வாழ் ஈழத் தமிழரான அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸுக்கு “கூத்துக்கலைச் செம்மல் விருது” வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்‏

.

பூமிப்பந்தின் மூத்த மனிதர்களான தமிழினத்தின் மிகப் பிரதானமானது கூத்துக்கலை. அதன் வளர்ச்சிக்காக தொன்று தொட்டு பல கலைஞர்களும், அறிஞர்களும் வாழ்ந்து மறைந்து போயுள்ளனர். உலகத் தமிழினத்திற்க்காக அவர்கள் விட்டுச்சென்ற உன்னதக் கூத்துக் கலைக்காக அவர் தம் பின்னால் நடந்து ஆயுள் பரியந்தம் உழைத்த அண்ணாவிமாரையும், கலைஞர்களையும் வரலாறு குறித்து வைத்திருக்கின்றது.
ஈழதேசத்தின் மிகத்தொன்மையான கூத்துக்கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாக திகழ்பவை தென்மோடி, வடமோடி கூத்துக்களாகும். தென்மோடிக் கூத்தின் மூலவராகவும், தனித்துவம் மிக்க கம்பீரக் கலைஞராக, உச்சநிலை கொண்ட பாடகராக பன்முகத்திறனுடன் திகழ்ந்தவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் அவர்களாகும்.


 அவரின் மறைவுக்குப் பின் அவரது மகன் கலைவருணன் சவிரிமுத்து அவர்கள் அண்ணாவியாராகப் பணியாற்றி வருகின்றார். அவருடைய மகன் அண்ணாவி ச.மிக்கேல்தாஸ் 90களில் இருந்து பல பிரதிகளை உருவாக்கி புலம் பெயர்ந்த தேசங்களின் கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்காற்றும் பணியை முழுநேர ஊழியமாக செய்து வருகின்றார்.

இந்த வகையில் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களை கெளரவிக்கும் முகமாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அவர் நம் தமிழ்மரபை அயராமல் வெளிக்கொணரும் கலைப்பணியை எண்ணங்களிலேற்றி மாசிமாதம் 23ம் நாள் 2015ல் புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி அரங்கில் பேராசிரியர், முனைவர் கரு.அழ.குணசேகரன் புலமுதன்மையர் அவர்களின் தலைமையில். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் “கூத்துக்கலைச் செம்மல்” விருது வழங்கலும், கூத்துக்கலை பற்றிய விளக்கவுரையும், செய்முறைப் பயிற்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பேராசிரியர், முனைவர் கரு.அழ.குணசேகரன் அவர்கள் தமது தலைமை உரையில். கூத்து என்ற சொல் தமிழ் இனத்துக்குரிய மரபின் அடையாளம். மனிதரின் கண்டு பிடிப்புக்களில் கலைகள் குறிப்பாக கூத்துக்கள் மக்களின் முகவரியை காட்டவல்லன.

அந்த வரிசையில் கூத்து பாரம்பரியத்தைப் பேணிக்காத்துவரும் அண்ணாவியார் மிக்கேல்தாஸ் அவர்கள், கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் கலைப்பணியை மூன்றாம் தலைமுறையாளராக தொடர்ந்து வளர்த்து வருவதுடன் புலம் பெயர்ந்து கனடா, நோர்வே, பிரான்ஸ் நாடுகளில் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்காற்றுகை அளிப்பதும்.
மேலைநாட்டில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையினர் தமிழில் பேசுவதே அபூர்வம் அதிலும் தாள நயத்துடன் பாடுவது ஆச்சரியம்.
இவர்களுக்கான அரங்காற்றுப் பிரதிகளை உருவாக்கி தாள நயத்துடன் பாடவைத்து அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் பணியில் ஈடுபடுவதனாலும், இத்தகைய அண்ணாவிமார்கள் கூத்துக் கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கெளரவிப்பது நாம் நம் பாரம்பரிய கலைகளுக்குச் செய்யும் பெரும் பணி என்பதினால் அண்ணாவியார் அவர்களை கெளரவிக்கும் இவ்விழா நிகழ்கலைத் துறையால் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

அடுத்து, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் தனது அறிமுக உரையில், அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்கள் வரலாற்றுக்கூத்துக்களான கண்ணகி, மனுக்குல மீட்பர், ஸ்நாபக அருளப்பர், மாவீரன் பண்டாரவன்னியன், எதிரேறு எல்லாளன், ஆகிய சரித்திர வரலாற்றுக் கூத்துக்களை எழுதியதுடன், சமகால சமூக பாடுபொருள் நிகழ்வுக் கூத்துப் பிரதிகளாக சிறுமை, வீரசுதந்திரம், சுதந்திரமும் முரண்பாடுகளும், தமிழ் மரபுப் பொங்கல் ஆகிய கூத்துக்களை புதிய வடிவில் மீளுருவாக்கி நோர்வேயிலிருந்து இங்கு வந்திருக்கும் அவரது இளவல் அண்ணாவியார் ச.ஜெயராசாவுடனும், பிரான்ஸ் நாட்டில் வாழும் அடுத்த தலைமுறைக் கலைஞர் சூ.றொபின்சனுடனும் இணைந்து பல அரங்காற்றுகைகளை நடாத்தி வருவது நம் தமிழ் பாரம்பரிய கலைகளுக்குச் செய்யும் தொண்டெனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய புதுவை பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர், பதிவாளர் எஸ்.பன்னீர்ச்செல்வம் அவர்கள் எல்லாம் இழந்த நிலையிலும் புலம்பெயர்வோடு இவர் இப்பாரம்பரிய மரபுக்கலையை காவிச்சென்று, அங்கு நம் பண்பாட்டின் வேர்களை படைக்கும் ஆற்றலுடய அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களுக்கு, அவரின் கலைப்பணியை போற்றும் முகமாக புதுவை பல்கலைக்கழகம் இக்கெளரவ விருதினை வழங்குவதாக “கூத்துக்கலைச் செம்மல்” விருதினை வழங்கி விளக்கமளித்தார்.
தொடர்ந்து கருஞ்சுழி என்னும் நாடகத்தின் மூலம் இந்திய நாடக அரங்கிலும், உலக நாடக மேடைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய நாடக இயக்குனரும், பேராசிரியருமான வ.ஆறுமுகம் அவர்கள் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பளித்தார். தொடர்ந்து பேராசிரியர்களுக்கும், அண்ணாவியார் ஜெயராசா அவர்களுக்கும் சிறப்பளிக்கப்பட்டது.

பின்பு கூத்துக்கலை பற்றிய விளக்கவுரையும், செய்முறைப் பயிற்ச்சியும், பாடல், நடிப்பு என அண்ணாவியார் மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ஜெயராசா, வனபிதா வீனஸ் செபஸ்ரின் மற்றும் தர்சிகா, யுனிஸ்ரா ஆகியோரால் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. இறுதியில் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர், நாடகருமான இரா.இராசு அவர்களின் நன்றியுடன் விழா இனிதே நிறைவுற்றது.
பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் (தமிழகம்)-
nantri seithy.com

No comments: