இலங்கைச் செய்திகள்


முதன் முறையாக ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

 'புவி" என்ற புலி உறுப்பினர் கைது: கார், கத்தி, வெளிநாட்டு நாணயங்கள், பொல்லுகள் மீட்பு

25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை

கொழும்பிலிருந்து யாழ். மட்டு.க்கு செல்லும் ரயில்: நேரங்கள் மாற்றம்


முதன் முறையாக ஜனாதிபதி மட்டக்களப்பு விஜயம்


02/04/2015 முதன் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம்  ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஸ்கா பண்டிகையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு விஜயம் செய்கின்றார்.
போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெறும் இப்பண்டிகை விழாவில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 






முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

01/04/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   நன்றி வீரகேசரி 








'புவி" என்ற புலி உறுப்பினர் கைது: கார், கத்தி, வெளிநாட்டு நாணயங்கள், பொல்லுகள் மீட்பு

01/04/2015 கார் மற்றும் போலி அடையாள அட்டைகள், கத்தி, இருப்புப் பொல்லுகள், மூன்று சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் 'புவி" என அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்திய தலைவர் ஒருவர் உட்பட மூவர் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கல்லடி பிள்ளையர் கோயில் வீதியில் குறித்த கார் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்தே  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெககெதர தலைமையிலான ஊழல் தடுப்;பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
'புவி" என அழைக்கப்படும் மகேந்திரன் புவிதரன் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன்; மற்றறைய இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன் கார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபர்பட்டுள்ளது.
காத்தான்குடி  பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டுள்னர். நன்றி வீரகேசரி 











25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை

01/04/2015 கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர்  இன்று ஆரம்பமாகவுள்ளது.


இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஹோமாகம தொடக்கம் கோட்டை ரயில் நிலையம் வரையிலான  ரயில் சேவை இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், 25 வருடங்களின் பின்னரான கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவணைகள் இன்று தொடக்கம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 








கொழும்பிலிருந்து யாழ். மட்டு.க்கு செல்லும் ரயில்: நேரங்கள் மாற்றம்

01/04/2015  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் எதிர்வரும் 2ம் திகதி முதல் நேரமாற்றம் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.



மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 க்கு புறப்படும் பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 க்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். அதுபோல் வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் பாடு மீன் நகர கடுகதி சேவை புகையிரதம் 8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10 க்கு வரும் புகையிரதம் 7.15 க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றம் இல்லை அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்து சேரும்.
மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பிற்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும். மட்டக்களப்பிலிருந்து காலை 5.10 க்கு புறப்படும் புகையிரத பஸ் கல்லோயாவில் 9.02க்கு சென்றடையும் மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30க்கு புறப்பட்டு மட்டக்களப்பிற்கு மாலை 4.55க்கு வந்து சேரும் எனவும் புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.

காலை 7.10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்லும் யாழ்தேவி புகையிரதம் காலை 6.30 மணிக்கு யாழில் இருந்து புறப்படவுள்ளது.
காலை 11.00 மணிக்கு யாழில் இருந்து செல்லும் நகர் சேர் கடுகதி 10.10 மணிக்கு புறப்படும் அதேநேரம், இரவு நேர தபால் 7.05 ற்கு சென்ற புகையிரதம், இரண்டாம் திகதி முதல் இரவு 7.00 மணிக்கு தனது பயணத்தினை ஆரம்பிக்கும்.

அதேநேரம், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 7.15 ற்கு வருகை தரும் யாழ்தேவி புகையிரதம் 6.05ற்கு அங்கிருந்து தனது பயணத்தினை ஆரம்பிக்கும்.
கொழும்பில் இருந்து 6.15 ற்கு பயணத்தினை ஆரம்பிக்கும் இரவு தபால் பிகையிரதம் எதிர்வரும் 01ம் திகதியில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும்.
காலை 5.50 மணிக்கு பயணத்தினை கல்கிஸ்ஸையில் இருந்து ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி புகையிரதம் 5.45 மணிக்கு கல்கிஸ்ஸையிலிருந்து புறப்படும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும், 10.00 மணிக்கு யாழிலிருந்து புறப்படும் புகையிரதம் இரண்டாம் திகதிக்குப் பின்னர் காலை 9.10 மணிக்கு யாழில் இருந்து புறப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது   நன்றி வீரகேசரி 







No comments: