நான் ரசித்த சேயோனின் மிருதங்க அரங்கேற்றம் - செ.பாஸ்கரன்

.
Photo  by SJ Images

நீண்ட ஈஸ்டர் விடுமுறை மனது மத்தாளம் கொட்டி மகிழ்திருக்க வானமும் மழைத்தூறல்களை வழங்கிக்கொண்டிருந்தது. ஞாயிறு மாலை கருமேகங்கள் நர்த்தனமாட மழைத்துளிகளை நகர்த்திக்கொண்டு எமது கார் பரமட்டா றிவர்சைட் தியேட்டரை அடைந்தது. ஆம் இன்றுதான் செல்வன் சேயோன் ராகவனின் மிருதங்க அரங்கேற்றம் இங்கு இடம்பெறுகின்றது.  மாலை 6 மணிக்கென்று குறிப்பிட்டிருந்ததனால் 5.50 மணிக்கே மண்டபத்தை அடைந்து விட்டோம். எவரையும் முன்புறத்தில் காணவில்லை , என்ன நேரத்துக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணியவாறே  சென்றபோது வாசலில் வரவேற்பிற்காக  நின்றிருந்த   ராகவனும் குமுதினியும் கூப்பிய கரங்களுடன்  வரவேற்றார்கள் , மதுரா மகாதேவ் புன்னகை அரசியாக ஓடோடிவந்து அழைத்துச் சென்று எமக்கான ஆசனத்தை காண்பித்தார். அப்போது தான் பார்த்தேன் அதிகமான இருக்கைகளில் ஏற்கெனவே பலர் அமர்ந்திருந்தார்கள்.



Photo  by SJ Images
மேடையைப் பார்த்தேன் திரை மூடியிருந்தது தொப்பை வினாயகர் மட்டும் திரைக்கு வெளியே மின் ஒளியிலும் குத்துவிளக்கின் சுடரிலும் பிரகாசித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பட்டுடுத்திய சிட்டைப்போல் வந்த ராகவனின் மகள் மாயி வந்தவர்களை வரவேற்றுவிட்டு வித்துவான்களை அறிமுகம் செய்ய அபர்ணா சுதந்திரராஜ் அவர்களை அழைத்தார் . திரை விலகியது பிரம்மாண்ட மேடையின் முன்புறத்தில் கர்நாடக இசைப்பாடகர் ஸ்ரீ ரி.வி.ராம்பிரசாத் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவருக்கு மிருதங்க இசை வழங்க அரங்கேற்ற நாயகன் சேயோன் அமர்ந்திருக்கிறார். அவர்களைச் சூழ வயலின் வித்வான் ஸ்ரீ.கே.தியாகராஜனும், மறுபுறம் கஞ்சிராவுடன் திரு.ஜனகன் சுதந்திரராயும் அருகே தம்புராவுடன் சோபனா ஜெயமோகனும் அமர்ந்திருக்கிறார்கள். சபையின் முன்வரிசையில் சேயோனின் மிருதங்க குருவானவர்களான ஸ்ரீ.ஆர்.சுதந்திரராஜ் அவர்களும் மேளக்காவேரி ஸ்ரீ.கே .பாலாஜி அவர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.

Photo by பாஸ்கரன் 


சபை மௌனித்திருக்க ஸ்ரீ.ராம்பிரசாத் பாடத் தொடங்குகிறார் கணீரென்ற கம்பீரமான குரல் காற்றில் மிதந்து காதில் நிறைகிறது. வயலின் இசையும் மிருதங்க இசையும் கலந்து வந்து மெய்மறக்க வைக்கிறது. கஞ்சிராவும் தம்பூராவும் கலந்து வந்து தலையசைக்க வைக்கிறது. மேடையில் மெல்லிய செந்நிற வானத்தில் மெல்ல மெல்ல கிழக்குச் சூரியனின் ஒளி வெளிவருகிறது. அந்த செந்நிற ஒளியில் பனைகளும் வடலிகளும் சூழ்ந்த வெளியில் அழகாய்த் தெரிகிறது ஊர்க்கோவிலும் அதன் கோபுரக் கலசமும். ஒற்றை மாட்டு வண்டியொன்று ஓரமாய் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஆகா ஊரிலே முருகன் கோவில் முன்றலிலே இருந்து கச்சேரிபார்த்த சுக அனுபவம் எம்மில் தொற்றிக்கொள்கிறது. எத்தனை கச்சிதமான மேடை அலங்காரம் ஒரு மண்டபத்துள் இருப்பதையே மனது மறந்துவிட என்ன ஆனந்தமான கச்சேரி.


பைரவி ராகத்திலே விறிபோனியும் கம்சத்வனியிலே வினாயகா நின்னுவும் ஆனந்தநடமிடுவார் என்ற பாடலும் இப்படியே தொடர்ந்த பாடல்களும் அதற்கு சேயோன் வழங்கிய மிருதங்க இசையும் எல்லோராலும் ரசிக்கக்கூடிய ஒரு கச்சேரி போன்றே இருந்தது. ஒரு அரங்கேற்ற நிகழ்வு இப்படி எம்மைக் கட்டிப்போடுகின்றதே என்று மனதில் எண்ணம் எழுந்து கொண்டது.

வாத்தியக் கலைஞர்கள் இருவரும் மிருதங்கத்திலும் கஞ்சிராவிலும் மாறி மாறி இசையை தந்தபோது மிக மிக அருமையாக இருந்தது அத்தோடு வயலின் இசை எம் நரம்புகளில் புகுந்து வந்ததுபோல் இருந்தது.
காதிற்கு உணவளித்தவர்கள் இடைவேளையின் போது சுவையான உணவையும்,  பானங்களையும் அன்போடு வழங்கினார்கள். அதை முடித்துக்கொண்டு மீண்டும் மண்டபம் திரும்பியபோது கீரவாணியிலே ராகம் தாளம் பல்லவி எல்லோரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியது.

அதன்பின்பு குருவானவர்கள் வாழ்த்தி ஆசிவழங்கினார்கள். கலைஞர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது. சேயோனின் குருவான ஸ்ரீ பாலாஜி அவர்கள் உரையாற்றும்போது "தனக்கு பிடித்த மாணாக்கர்களிலே திறமையானவரகள் வரிசையிலே ஜனகன் சுதந்திரராஜ் ஒருவர் அந்த வரிசையிலே சேயோனும் இணைந்து கொள்கிறான்" என்றதும் சபையோர் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். அத்தோடு "சேயோன் வாசித்தது ஒரு அரங்கேற்றக்காரன் போலில்லாமல் ஒரு வித்வான் எப்படி வாசிப்பாரோ அப்படி வாசித்தான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்றார் இது ஒரு மாணவனுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அத்தனை மகிழ்வோடு சேயோன் காணப்பட்டார்.


இறுதியாக தில்லானா எம்மை ஆடவே வைத்து விட்டது. தொடர்ந்து மங்களத்துடன் நிறைவடைந்த இந்த மிருதங்க அரங்கேற்றத்தை விட்டு வெளியேறும்போது. ஊர்க்கோவிலின் முன்றலில் ஒரு சிறந்த கச்சேரியை விட்டு எழுந்து வந்த நிறைவு மனத்திலே இருந்தது. அந்த மேடை அமைப்பை செய்திருந்த திரு.குணசிங்கத்தையும் அருமையான ஒலியமைப்பை செய்திருந்த பப்பு, அல்னூர் ஆகியோரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இசைபற்றிய நுணுக்கங்களுடனான விமர்சனம் அடுத்த வாரம் ஒரு இசைக் கலைஞரால் எழுதப்படுகிறது.

Photos  by பாஸ்கரன் 



















No comments: