.
13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.
துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்படுகின்றனவாம். முதல் நான்கு வரிகளும் சொற்கள் அடையாளம் காண்பதற்கு ஏற்றவாறு அமையவில்லையாம். 5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.
இந்தச் சாசனத்தில் முக்கியமான மூன்று விபரங்கள் காணப்படுகின்றன. முதலாவது ‘உடையார்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.
இன்னொரு அதிமுக்கியமான விடயம் ‘தம்பலகாமம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளமையாகும். தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழங்கி வருகிறது என்பது இச்சாசனித்தினூடாக உறுதியாகின்றது.சாசனத்தின் மூன்றாவது முக்கியமான அம்சம் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது பற்றிய குறிப்பாகும். ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.
வரலாற்றுத்துறை பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் இச்சாசனம் குறித்து ஆய்வுகள் செய்து இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.
கந்தளாய் கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
பழமையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தம்பலகாமப்பற்று ஒரு தனி வன்னிமையின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. இது வன்னியர்கள் பற்றிய தமிழ் நூல்களிலும் ஒல்லாந்த பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா? என்ற சந்தேகங்களை வரலாற்றுப் பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்போது இது தொடர்பான சில விபரங்களை தடையங்களை அல்லது செவிவழிமூலமான செய்திகளையும் ஆய்வுக்குத் துணையாக எடுத்துக்கொள்வது பயனள்ள ஒரு விடயமாக அமையும் என நாம் நம்புகிறோம்.
போர்த்துக்கீசர் கோணேசர்கோயிலை இடித்து அழித்த பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தோற்றம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள தம்பலகாமம் புதிய குடியேற்றக் காணிகளுக்குச் செல்லும் பாதையில் சுமார் 250 மீற்றர் தூரத்தில் சுமார் பத்து அல்லது15 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டுப்பகுதி இன்றும் ‘கோட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது. பழமையில் இது சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.
கலிங்க மாகனின் படையணியொன்று இக்கோட்டையில் இருந்ததாகவும் ‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் வீரஞ்செறிந்த அத்தளபதி கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை புறங்கண்டு ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ளது.இதேபோல தம்பலகாமத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘கப்பல்துறையில்’தம்பலகாமத்து இளைஞர்கள் ‘திரைகடலோடியும் திரவியம் தேடினர்’என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கடல் வாணிபத்தினூடாகவும் கப்பல்துறைக்கடலில் முத்துக்குளித்து பொருளீட்டிய காரணத்தினாலும் தம்பலகாமம் ஒரு பட்டினமாகக் காணப்பட்டது எனக்கருதுவதில் எவ்வித தவறுமில்லை.
குளக்கோட்டன் காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பாவநாசத் தீர்த்தம் கப்பல்துறை கடலோரமாக அமைந்திருந்தது.தற்பொழுது ஆலங்கேணிக் கிராமத்திற்கருகில் உள்ள கங்கையாற்றில் ஆதிகோணநாயகரின் தீர்த்தோட்சபம் நடைபெற்று வருகிறது எனினும் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார் குடும்பத்தினர் பழமையில் நடைபெற்ற கிரிகைகளை ஞாபகத்தில் கொண்டு கப்பல்துறைக்குச் சென்று கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தில் இச்சடங்குகளை வருடாவருடம்நிறைவேற்றி வருவது இன்றும் நடைமுறையிலுள்ளது.
‘தம்பைநகர்’ எனப்புராணங்களிலும் கோணேசர் கல்வெட்டிலும் விளிக்கப்படும் தம்பலகாமம் கப்பல் துறையையும் தன்னகத்தே கொண்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் மிகப் பொருத்தமானதாகும்.இவ்விடயங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு தம்பலகாமம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிகப் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலையாகும்.
வே. தங்கராசா
தம்பலகாமம்
nantri yarl.com
No comments:
Post a Comment