உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது. - அ.முத்துலிங்கம்

.    
                       
ரூபவதியில் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான். சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருக்கும். பத்திரிகை படிக்கும்போதும், தேநீர் அருந்தும்போதும், வேலைகள் செய்யும்போதும், நடக்கும்போதும், அமரும் போதும், அலங்கரிக்கும்போதும் அது இருந்தது. அநேக சமயம் அவள் இருளில் கலந்துபோய் இருப்பாள். நீ அவளுக்கு முன் நிற்கிறாயா அல்லது இருட்டின் முன் நிற்கிறாயா என்ற சந்தேகம் உனக்கு ஏற்படும். அவளை மணமுடித்து ஆறு மாதம் சென்ற பிற்பாடுதான் அவளுடைய  முக அமைப்பு அப்படி என்பது உனக்கு புரிய ஆரம்பித்தது.
மணமான அன்று இரவு அவள் முகம் ஒருகணம் கூம்பி சோர்ந்தது. அப்பொழுதுகூட அவள் உதட்டிலிருந்து சிரிப்பு முற்றிலும் மறையவில்லை. நீ கேட்டாய் ’ஏதாவது வருத்தமா?’ என்று. அவள் சொன்னாள். ‘எங்கள் திருமணத்துக்கு 15 பேர் வந்திருந்தார்கள். எல்லோருமே உங்களுக்கு தெரிந்தவர்கள். எனக்கு ஒருவருமே இல்லை’ என்றாள். 



உனக்கு என்னவோ மாதிரி இருந்தது. ‘ஏன் நான் இருக்கிறேனே. நான் இருக்கிறேனே’ என்று நீ சொன்னாய். அவள் தலை குனிந்து நின்றாள். வாய் சிரித்தாலும் கண்கள் பளபளப்பாகின. உன்னை மட்டுமே நம்பி அவள் வந்திருக்கிறாள். உலகத்தில் அவளுக்கு ஒருவருமே இல்லை என்று நினைத்தபோது மனம் இரங்கியது. எக்ஸ்ரே எடுக்கும்போது ஈயக்கவசம் அணிந்ததுபோல உன் நெஞ்சு கனத்தது. நீ அவளை அணைத்து ஆறுதல் சொன்னது நினைவுக்கு வந்தது. ’உங்களுடன் பேசவேண்டும். நேரம் கிடைக்குமா?’ என்றாள்.  நீ ’என்னுடைய நேரம் எல்லாம் உன்னுடையவைதான் இனிமேல்’ என்றாய். அவள் உடல் உன் கைகளுக்குள் நசுங்கிக்கொண்டு கிடந்தது. ‘நான் ஆபத்தானவள் அல்ல’ என்று முணுமுணுத்தாள்.
ஆரம்பத்தில் இருந்தே அவள் விசித்திரமானவளாகத்தான் இருந்தாள். மரணக்கடல் சேற்றை முகத்தில் அப்பி ஒப்பனை செய்வாள். முகத்தை கழுவியதும் புதுப்பொலிவுடன் தெரிந்தாள். நீ ’கண்ணாடிபோல் உன் கன்னம் ஆகிவிட்டது’ என்று தடவினாய். உடனே அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். அடிக்கடி டிவி திரையில், மினுங்கிய தரையில், குளிர்பெட்டி கதவில் எங்கேயெல்லாம் பிம்பம் தெரியுமோ அங்கேயெல்லாம் பார்த்தாள். ரோட்டிலே தண்ணீர் தேங்கி நின்றால் அதில் சற்று நின்று தன்னை புதிதாகப் பார்ப்பதுபோல வேடிக்கை பார்ப்பாள். சமைக்கும்போதுகூட அடிக்கடி கரண்டியின் பின்பக்கத்தில் தன் வளைந்த முகத்தைப் பார்ப்பாள்.  ஒருநாள் நீ அவள் பிம்பத்துடன் பேசினாய். ‘உன் முகத்தில் உனக்கு அத்தனை ஈர்ப்பா?’ அவள் தடுமாறினாள். இரண்டு கைகளையும் மேலும் கீழும் ஆட்டி ஏதோ கெட்ட மணத்தை துரத்துவதுபோல வீசி  ’அப்படி ஒன்றும் இல்லையே’ என்று பதில் கூறினாள். நீ அத்துடன் அதை விட்டுவிட்டாய்.
சின்னச் சின்ன சம்பவங்களாக நடக்கத் தொடங்கின. ஒருசமயம் அவள் கேள்விகள் புத்திசாலித்தனமானவையாகத் தோன்றும்.  அடுத்த நிமிடம் மூடப்பெண்போல தோற்றம் தருவாள். உன்னால் தீர்மானிக்கவே முடிவதில்லை. ஒரு காலையில் நீ அவசரமாக அலுவலகத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தாய். இரவு ஆடையை நடு வயிற்றில் சுருட்டி பிடித்துக்கொண்டு ரூபவதி உனக்கு முன்னால் நின்றாள். நீ என்ன என்பதுபோல முகத்தை ஆட்டினாய். ’கனடாவின் தலைநகரம் என்ன?’ நீ ’ஒட்டாவா’ என்றதும் அவள் முகம் மாறிப் போனது. ’ரொறொன்ரோ இல்லையா?’ என்றாள். ’ஒட்டாவாதான் தலைநகரம்’ என்று நீ மறுபடியும் சொன்னாய். அவள் விடுவதாயில்லை. ’ஏன்?’ என்றாள். முதன் முதலாக முழுப் பைத்தியம் ஒன்றை மணுமுடித்துவிட்டாயோ என்ற எண்ணம் உனக்குத் தோன்றியது.
’நீயும் நானும் முடிவுசெய்யும் விசயமா இது? 150 வருடங்களுக்கு முன்னர் விக்டோரியா மகாராணி தீர்மானித்தது’ என்று சொன்னாய். அவளுக்கு சமாதானம் உண்டாகவில்லை. ’எதற்காக அப்படி தீர்மானித்தார்?’ என்றாள். ’கனடாவுடன் அமெரிக்கா போர் தொடுத்தால் ஒட்டாவாவில் இருந்து அதை எதிர்கொள்வது வசதியானது. அதுதான் காரணம்’ என்று நீ பொறுமையாகச் சொன்னதும் அவள் முகம் சுருங்கியதைப் பார்த்து நீ ஆச்சரியப்பட்டாய். ‘ஓ, அப்படியா? எனக்குப் படிப்பியுங்கள். தொடர்ந்து படிப்பியுங்கள். நான் அறிவைப் பெருக்கவேண்டும். நிறுத்தவேண்டாம்’ என்றாள் கெஞ்சலோடு.
ரூபவதி இதைச் செய்வாள் இதைச் செய்யமாட்டாள் என்று உன்னால்  முன்கூட்டியே ஊகிக்க முடியாது. அவள் புத்திசாலிதான், ஆனால் சிலவேளை மண்டைக்குள் மூளை புகுந்துவிடும் சமயங்களில் மொக்குத்தனமாக ஏதாவது செய்வாள். யாராவது அவளிடம் முகவரி கேட்டால் அவள் பதில் இப்படி இருக்கும். ’எக்லிண்டன் ரோட்டு கிழக்கில், 1717ம் நம்பரில், மஞ்சளும் பச்சையும் கலந்த 20 மாடிக் கட்டடம் ஒன்று நிற்கும். காவல்காரர் புத்தகத்தில் பெயரை எழுதிவிட்டு மேலே வரவேண்டும். மூன்றாம் மாடி, அதற்கு மேலே நாலாம் மாடி. அதற்கு மேலே இருப்பது 5ம் மாடி. அதிலே 514ம் நம்பர்’ என்று சொல்வாள். உனக்கு சிரிப்பு வரும். ‘அது என்ன 3ம் மாடி. அதற்கு மேலே 4ம் மாடி. அதற்கு மேலே 5ம் மாடி’ என்று நீ கேட்க நினைப்பாய், ஆனால் கேட்கமாட்டாய்.
இரவிலே அவள் உடம்பில் வெப்பம் அதிகரிப்பதும் ஒருவிதமான புதிர்தான். படுக்கைக்கு போகும்போது அவள் உடம்பு குளிராக சில்லென்று இருக்கும். நேரம் செல்லச்செல்ல வெப்பமானியில் மெர்குரி மேலே ஏறுவதுபோல அவள் உடம்பில் வெப்பம் மெள்ளக் கூடும். நடு இரவு தாண்டியதும் அவள் உடலிலிருந்து வீசும் வெப்பக் காற்று தாங்க முடியாததாகிவிடும். எப்படி இத்தனை வெப்பம் உண்டாகிறது என்று உனக்கு ஆச்சரியமாகவிருக்கும். ஆனால் அவள் ஆழ்ந்த தூக்கத்திலிருப்பாள்.
ஆரம்பத்தில் ஒரேயொருமுறை ஒரு புத்தகத்தில் காணப்பட்ட கவிதையை  அவளிடம் கொடுத்து படிக்கச் சொன்னாய். அவள் புத்தகத்தை கையிலே வாங்கி மேசையிலே வைத்தாள். ஓர் ஓவியத்தை ஆராய்வதுபோல புத்தகத்தை வலது பக்கம் திருப்பி பார்த்தாள்; பின்னர் இடது பக்கம் திருப்பி பார்த்தாள். நீ ’கவிதையை படிக்கவில்லையா?’ என்று கேட்டாய். இரண்டு நிமிட நேரம் வார்த்தைகளை ஒவ்வொன்றாக உச்சரிப்பது தெரிந்தது. ‘இன்றைக்கே படிக்கவேண்டுமா?’ ’ஆமாம்’ என்றாய். ’இப்பவேயா?’ ’ஆமாம்.’ ’கடைசி வரி வரைக்குமா?’ ‘ஏன், என்ன பிரச்சினை?’ என்று நீ கேட்டாய். ‘எல்லாமே வார்த்தைகளாக இருக்கின்றன’ என்றாள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு நீ அவளிடம் கவிதை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டாய்.
கையிலே ரூபவதி தேநீர் கோப்பையை ஏந்தி குடிப்பதும் ஒரு விசித்திரம்தான். தேநீர் கோப்பையை கையிலே எடுப்பாள். அதை உயர்த்தி உதட்டுக்கு கிட்ட கொண்டுபோய் உறிஞ்சிக் குடிப்பாள் என்றுதான் நீ எதிர்பார்ப்பாய். ஆனால் அது நடக்காது. முதுகை வளைத்து கழுத்தை குனிந்து கோப்பை விளிம்பில் உதட்டை வைத்து உறிஞ்சுவாள். ஒருநாள் நீ தாங்கமாட்டாமல் அவளிடம் கேட்டாய். ’எதற்காக இப்படி தேநீர் அருந்துகிறீர். இன்னொரு சிறந்த முறை இருக்கிறது. கையை தூக்கி கோப்பையை உதட்டுக்கு அருகில் கொண்டுபோவது.’ அப்படி நீ சொன்னாய். அவளுக்கு பிடிக்கவில்லை. ஆசனத்தை விட்டு விருட்டென்று எழுந்து போனாள்.
தொலைக்காட்சியில் அவள் விருப்பத்தோடு பார்ப்பது இரண்டு. ஒன்று ஒப்பரா. யாரோ முதுகில் கத்தியால் குத்தியதுபோல அரைவாசி திரையை மறைத்து ஒரு பெண் வாயை திறந்து கத்துவாள். கீழே கதை எழுத்துக்களில் காட்சியளிக்கும். ’என்ன கதை?’ என்று நீ கேட்பாய். ’நான் படிக்க முன்னர் எழுத்துக்கள் ஓடிவிட்டனவே’ என்பாள். அடுத்தது சிறுவர்களின் கார்ட்டூன். ஒரே கார்ட்டூனை பலமுறை பார்ப்பாள். ஒரு குறிப்பிட்ட இடம் வரும்போது சிரிப்பாள். எத்தனை தடவை பார்த்தாலும் முதன்முதல் பார்த்தபோது எப்படிச் சிரித்தாளோ அப்படியே சத்தம் குறையாமல் சிரிப்பு இருக்கும்.
சிலசமயம் அவள் கேட்கும் கேள்விகளில் நீ திக்குமுக்காடிப் போவதுண்டு. ’இலையின் நிறம் இருளில் என்ன?’ என்றாள். நீ யோசிக்காமல் ’பச்சை’ என்றாய். ’எப்படித் தெரியும்?’ என்றாள். ’இலையின் நிறம் பச்சைதானே. வெளிச்சத்திலும் அதே நிறம், இருளிலும் அதே நிறம்தான்.’ ’அது எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?’ உனக்கு எப்படி பதில்சொல்வது என்பது தெரியவில்லை. ’விளக்கை கொழுத்தினால் தெரியும்’ என்றாய். அவள் ’விளக்கை கொழுத்தினால் இருள் போய்விடுமே’ என்றாள். உனக்கு பதில் தெரியவில்லை. இருளில் இலையின் நிறம் பச்சையாக இருக்கலாம். வேறெதுவுமாகவும் இருக்கலாம். என்ன மூடத்தனமான பதில். எட்டாவது பிறந்த நாளுக்கு 7வது பிறந்தநாள் வாழ்த்து அட்டையை கொடுத்ததுபோல உனக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.
ஒருநாள் அதிகாலை ரூபவதி ஓட்டப் பயிற்சிக்கு புறப்பட்டபோது நீ ஆச்சரியப்படவில்லை. பழகிவிட்டது, ஆனாலும் சிறிது கவலை கொண்டாய். அவள் ஒருவித தயக்கமும் காட்டாமல் தேர்ந்த ஓட்டக்காரி மாதிரி ஓடிவிட்டு களைத்துப்போய் திரும்பினாள். எதற்காக திடீரென்று இந்த ஓட்டப் பயிற்சி என்று நீ கேட்டபோது அவள் மரதன் ஓட்டப் பந்தயத்தில் தான் கலந்து கொள்ளப்போவதாகச் சொல்லி உனக்கு கிலிமூட்டினாள். ’மரதன் ஓட்டமா?’ என்று நீ வியப்புடன் கூவினாய். அதன் பின்னர் வந்த மூன்று நாட்களிலும் நீ அவள் சொன்னதை திருப்பி திருப்பி யோசித்து வியந்துபோனாய்.
’விலங்குகளில் மனிதன் ஒருவன்தான் ஓடுவதற்காக படைக்கப்பட்டவன். அவனுடைய கணுக்காலும் பாதமும் ஓடுவதற்கு தோதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் முதலில் ஓடத் தொடங்குகின்றன; பின்னர்தான் நடக்கப் பழகுகின்றன. நிற்பது அதற்குப் பிறகுதான். மனிதனின் இயற்கை நிலை ஓடுவதுதான்.’ இவள் எங்கே இந்த தகவல்களை திரட்டினாள் என்று நீ உன்னையே கேட்டுக்கொண்டாய். ’எப்படி ஒரு மனிதனை தாண்டி குதிரை வேகமாக ஒட்டுகிறது?’ என்று கேட்டாய். அவள் சொன்னாள், ’குதிரை வேகமாக வேண்டுமானால் ஓடலாம். ஆனால் மனிதனால் நீண்டதூரம் ஓடமுடியும். ஒரு குதிரையும் மனிதனும் ஒரே நேரத்தில் புறப்பட்டால் குதிரை பாதி வழியில் நின்றுவிடும். மனிதன் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான். மரதன் போரில் கிரேக்கர்களின் வெற்றியை சொல்ல 26 மைல் தூரத்தை தாண்ட மனிதனைத்தான் அனுப்பினார்கள்; குதிரையை அல்ல. அது பாதி வழியிலேயே விழுந்து இறந்துபோயிருக்கும். இப்படி அவள் சொன்னதும் உனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்தக் கதையை நீ அப்புறம் எடுக்கவில்லை.
அவள் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிடுவதும் விசித்திரமானதுதான். ஒரு பூனைபோல சின்னச் சின்னதாக கடித்து வேகமாக உண்பாள். ’மணமுடித்து ஐந்து வருடமாகியும் பிள்ளை இல்லையே. மருத்துவரிடம் சென்று பரிசோதிப்போமா?’ என்று நீ கேட்டாய். குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் போய்விட்டதுபோல தலையை பலமாக ஆட்டினாள். நீ பார்த்துக் கொண்டிருந்தபோதே அவள் கண்கள் பெரிதாகின. நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து வேகமாய்ப் போனாள். அவளுடைய உணவுத் தட்டை நீதான் அன்று கழுவி வைத்தாய்.
வெளிநாட்டிலுள்ள உன் அதிகாரியுடன் நீ டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தாய். ரூபவதி உனக்கு முன்னால் நின்றாள். அவளுக்கு அவசரமாக ஏதோ உன்னிடம் கேட்கவேண்டியிருந்தது. பத்து நிமிடம் ஆகியிருக்கும். திடீரென்று திரும்பி தன் விரல்களால் உன் தாடையை அமுக்கிப் பிடித்தாள். உன் வாய் சற்று திறந்திருக்க சம்பாசணை நின்றது. அவள் உன்னைப் பார்த்து ‘உண்மையை சொல்லுங்கோ. ’கனடாவின் தலைநகரம் ரொறொன்ரோதானே’ என்றாள். அவள் விரல்களை எடுத்ததும் ‘இல்லை ஒட்டாவா’ என்று நீ சொல்லிவிட்டு அதிகாரியுடன் மீளவும் சம்பாசணையை தொடர்ந்தாய். ஆனாலும் உன்னால்  நேராகச் சிந்திக்க முடியவில்லை.  உனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அன்றுதான் மருத்துவரிடம் போகவேண்டும் என்று தீர்மானித்தாய்.
அவர் முதலில் இருவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தார். உன்னுடைய ரத்தத்தில் ஒரு பிழையும் இல்லை. உன் மனைவியின் ரத்தத்தை இன்னொரு முறை பரிசோதிக்கவேண்டும் என்றார். ஆனால் ரூபவதி மறுத்துவிட்டாள். ’எத்தனை தடவை கேட்பது? உங்களுடன் பேசுவதற்கு எனக்கு கால அவகாசம் வேண்டும்’ என்றாள். நீ சொன்னாய். ‘பேசலாமே அதில் என்ன பிரச்சினை. மருத்துவர் உடனே வரவேண்டும்’ என்கிறார். ’மருத்துவர் கேட்டுக்கொண்டே இருப்பார். நான் ரத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டுமா? பெண்கள் கர்ப்பம் தரித்து பிள்ளை பெறவேண்டும் என்பது எத்தனை அநீதியானது’ என்றாள். நீ திடுக்கிட்டுவிட்டாய். அவள் அப்படி ஒருபோதும் முன்னர் பேசியது கிடையாது. ’வேறு யார் செய்யமுடியும். அதுதானே இயற்கை’ என்றாய். அவள் சொன்னாள், ‘அப்படி உலக நியதி ஒன்றும் கிடையாது. கடல்குதிரையில் ஆண்குதிரைதானே குட்டியை ஈனுகிறது.’
உன் மூளை அதன் எல்லையை அடைந்துவிட்டது. நீ சேர்த்துவைத்த நினைவுகள் தாறுமாறாக ஓடின. வாழ்க்கை என்பது என்ன? உன் நினைவில் உள்ள சம்பவங்களின் தொகுப்புதானே. மேற்கொண்டு உன்னால் சிந்திக்க முடியவில்லை. ரூபவதி வேறு என்னவோ ஆக மாறிக்கொண்டு வருகிறாள். கைகளை மடித்து அதற்குமேல் தலையை வைத்து மல்லாக்காக நீ படுத்திருந்தாய். மேலே தட்டைக் கூரையில் ஓர் இலையான் தலைகீழாக நகர்ந்தது. பச்சை உடல், சிவப்பு தலை. கண்ணாடிபோல உடையும் தன்மையான இறகுகள். நீ நினைத்தாய் எதற்காக இந்த இலையான் தலைகீழாக நடக்கிறது என்று. அதற்கு என்ன வேண்டும்? அதனால் பறக்க முடியுமே, ஆனாலும் தலைகீழாக தொங்கியபடி மெல்ல மெல்ல ஊர்ந்தது. அதனிடம் உள்ள முழுத்திறமையை அது உணரவில்லை. அல்லது பாதித்திறமையே போதும் என அது நினைத்திருக்கலாம்.
என்ன நடந்ததோ ரூபவதி தானாகவே ரத்தப் பரிசோதனைக்கு சம்மதித்து உன்னுடன் கூடவந்தாள். அவள் முடிவுகள் அப்படித்தான் திடீர் திடீரென்று மாறும். பெயரை தாறுமாறாக உச்சரித்து ஒரு தாதி உங்களை உள்ளே அழைத்தார். மருத்துவர் மேசையில் பொருள்களை ஒன்று மாற்றி ஒன்று நகர்த்திக்கொண்டு முகத்தை பார்க்காமலே பேசினார். ரூபவதியின் ரத்தப் பரிசோதனை முடிவை ஒரு வாரத்தில் சொல்வதாக உறுதி கூறி உன்னை அனுப்பினார். ஒருநாள் மாலை ரூபவதி வழக்கம்போல தொலைக்காட்சியில் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இடது கையை நீட்டிப்பிடித்து சானல்களை மாற்றி வந்தவள் கார்ட்டூன் வந்ததும் அப்படியே நிறுத்தி பார்க்கத் தொடங்கினாள். அவள் எத்தனையோ தடவை ஏற்கனவே பார்த்ததுதான். அவளுக்கு பிடித்த இடங்கள் வந்தபோது புதிதாகப் பார்ப்பதுபோல குரல் எழுப்பிச் சிரித்தாள்.
மருத்துவரிடமிருந்து வந்த தொலைபேசியை எடுத்து நீ பேசத் தொடங்கியதும் உனக்கு தொந்திரவு இல்லாமல் இருக்க மியூட் பட்டனை அமர்த்திவிட்டு டிவியை பார்த்தாள். ஆனால் வாயை மியூட் பண்ணாததால் அது தொடர்ந்து சிரித்தது. மருத்துவர் உன்னுடைய மனைவியின் ரத்தப் பரிசோதனை பற்றி பேசினார். உடனே அவளை அழைத்துக்கொண்டு வரும்படி சொன்னார். ’மறுபடியுமா?’ என்று நீ அலறினாய். இரண்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவருடன் அங்கே காத்துக்கொண்டிருக்கிறார்கள். ’மனிதர்களின் ரத்தவகை 33 விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. உன்னுடைய மனைவியின் ரத்தவகை இந்த 33 பிரிவுகளில் அடங்கவில்லை. அது மனித ரத்தமே அல்ல.’
நீ தொலைபேசியில் பேசியபடியே உன் கண்களை மனைவி பக்கம் திருப்பினாய். உன்னால் நம்ப முடியவில்லை. மீன் தண்ணீரில் துள்ளுவதுபோல உன் இருதயம் ஒரு கணம் துள்ளி விழுந்தது. அவளுடைய கை நீண்டுபோய் தொலை இயக்கியை பிடித்திருந்தது. டிவியில் சானல்கள்  அதிவேகமாக மாறின. அவள் உதட்டிலே இருந்த புன்னகை கொஞ்சம் அதிகமாகி ஏறக்குறைய சிரிப்பாக மாறியது. ஒரு சிலை தலையை திருப்புவதுபோல மெல்ல தலையை திருப்பி உன்னைப் பார்த்தாள். நீ வெலவெலத்துப் போனாய். அவள் உடல் நாற்காலியில் இருந்து ஓர் அடி உயரத்தில் மிதந்தது.
உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது.

No comments: