விழுதல் என்பது எழுகையே" - பகுதி 40 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி

.
இவர் யாழ் -பொன்னாலையை பிறப்பிடமாக கொண்டவர்  தனது ஆரம்பகல்வியை பொன்னாலை வரதராசப்பெருமாள் வித்தியாசாலையிலும்   உயர்கல்வியை யாழ்-விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரத்த்pலும் கற்றார.; அதன்பின்   சங்கானை -ப.நோ.கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்ததில் பணியில் ஈடுபட்டார். தமது  மாணவர்களின் நன்மைகருதி  -ரியூட்டறி அமைத்து கல்வி கற்பித்துவந்த காலத்தில் நாட்டு சூழ்நிலைகாரணமாக யேர்மனிக்கு 1979ம் ஆண்டு வந்தடைந்து. அக்காலத்தில் இருந்து எழுத்துத்தறையில் ஆர்வம் கொண்டார் அதன்பயனாக 1988 இல் யேர்மனியில் ,,வண்ணத்துப்பூச்சி,, என்னும் சஞ்சிகையை 2000ம் ஆண்டுவரை வெளியிட்டார். ஆந்த காலத்தில் 10 நாவல்களை எழுதி வெளியிட்டார்.
கடலில் ஒரு படகு  - சிறகொடிந்த பறவை மீண்டும் சிறகடித்தபோது - விடியலில் மலர்ந்த பூக்கள்-2000, - விழிகளைநனைத்திடும் கனவுகள் 2001 - வீட்டுக்குள் வந்த வெள்ளம் 1996, -சொந்தமும் சோதனையும் 1990 - ஒட்டாதஉறவுகள 2003 -மனங்கலங்கிய மன்னன் 1988 - வாழ நினைத்தால் வாழலாம் 2007 - புதிய திருப்பம்  1988 - அவன் காட்டிய வழி 1988 -அழாத உலகம் (நாடகம்)  1992; 

யேர்மனியில் வாணிவிழாவை தனது வெளியீட்டகம்  மூலம் 1991 இல் தொடங்கி பின்னர் அந்த நகரமக்கள் விழாவாக இன்றுவரை ஆண்டு தோறும் சமய அறிவிப் போட்டிகள் நடாத்தி திறம்பட நாடாத்திவருகிறார்.
அத்துடன் யேர்மனி தமிழ்ப்பாடசாலையில் 2000ம் ஆண்டுமுதல் 2011 ஆண்டுவரை தமிழாசிரியராகவும் பணிபுரிந்தார்.
தகவல்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்) 

விழுதல் என்பது எழுகையே
தொடர் பகுதி 40 தொடர்கிறது.
டென்மார்க்கில் சீலனுக்குக் கடைமுதலாளி ஆனந்தர் பெரும் உதவியாக இருந்தார். அவர் கடையின் மேல்மாடியிலிருந்த சின்னஞ் சிறிய அறையே அவன் வசந்தமாளிகை. கடையில் வைக்க இடமில்லாத பல சாமான்கள் அந்த அறையில் அங்குமிங்கும் போடப்பட்டு இருந்தன. அதற்குட்தான் சீலனுடைய சமையல், படுக்கையுடன் கூடிய வாழ்க்கை தொடர்ந்தது.
வீசா இல்லாததால் துணிந்து வெளியே நடமாடமுடியவில்லை. இடையிடையே தலை கிண்கிண் என்று இடிக்கும். முதலாளியிடம் டிஸ்பிரின் வாங்கிப் போட்டுக்கொள்வான். யோசிப்பதாலோ அல்லது வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடப்பதாலோ இருக்கலாம் என்று நினைத்தான். கள்ளன் போல் பயந்து பயந்து திரிவதும் குட்டியறைக்குள் பெட்டிப்பாம்பாகக் கட்டுப்பட்டுக் கிடப்பதுமாக சீலனின் பயனுள்ள வாழ்நாட்கள் குரங்கு பிடுங்கி எறியும் பூந்தளிர்கள் போல் வீணாகி மடிந்தன.
முதலாளி ஆனந்தர் தரும் சிறுதொகை சம்பளப்பணத்தை சீலன் மிகச்சிக்கனமாகப் பயன்படுத்தினான். கடையில் தூக்கிற, பறிக்கிற, கூட்டுற, கழுவுற வேலைகளைத் தானே இழுத்துப்போட்டுச் செய்தான். டாக்டராக வரப்போகின்றேன் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருங்கனவுகளுடன் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்களில் முதல்மாணவனாக விளங்கிய தர்மசீலன் இன்று, படிப்பைப் பாதியிலே குழப்பி சிறுவயதிலேயே கடைவேலையே தஞ்சம்புகுந்தவன் போல் தொட்டாட்டு வேலைகளைச் செய்துகொண்டு நின்றான்.அலுவலகர்களுக்கு, அவசியமான போது காசைக் கொடுத்து, உடனே வாங்கி அனுப்பியிருந்ததால் எல்லாம் வந்து கிடைத்துவிட்டன.
ஆனந்தர், தனக்குத் தெரிந்த நண்பர் மூலம் சீலனின் புதிய அகதி விண்ணப்பத்தைக் கொடுக்க, ஒழுங்கு செய்திருந்தார். இன்று மாலை அவரிடம் சென்று, கதைத்து, எழுத்து வேலைகளை முடித்தால் நாளை வெளிநாட்டு அலுவலகத்துக்குச் சென்று, அகதி விண்ணப்பத்தைக் கொடுக்கலாம். இது பற்றி சீலன், டேவிட் அங்கிளிடம் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்தான். ஆனால் அவர் அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.
„அவர் தருவதாகக் கூறிய பணத்தைத் தந்து உதவ முடியவில்லையே என்ற கவலையாக இருக்கலாம்“ என்று அவன் நினைத்தான்.
பத்மகலாவுக்கு பல தடவை ரெலிபோன் எடுத்தும் அவளைச் சந்திக் முடியவில்லை.
„இன்று இறுதியாக ஒருக்கா எடுத்துப் பார்ப்போம்“ என்று நம்பர்களை அழுத்தினான்.
மறுமுனையில் தொலைபேசி ஒலிக்க, சீலனின் மனதில் ஒரு புது இன்ப ஆரவாரத்தின் அதிர்வு இடித்தது.
கலாவின் வார்த்தைகள் வேண்டாவெறுப்பாக வந்தன. சீலன் பொறுமையாக, அன்போடு கதைத்தான். அவன் சொல்வது எதையும் கலா கேட்கத் தயாராக இல்லாதவளாய், „சீலன்! உங்களை நீங்களே காப்பாற்றத் தெரியாமல் நிற்கிறீங்கள்! பத்தாததுக்கு யாரோ ஒருவன் பெண்சாதியாம், பானு என்றவளோடை கூத்தடிச்சுத் திரிகிறீங்களாம்! நீங்கள் நீங்களாக இல்லை. வெளிநாடு வந்ததும் தலைகீழாக மாறிவிட்டீங்கள். எங்கள் பழைய காதல் இனிச்சரிவரும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் ஆதாளபாதாளத்துக்குள் விழுந்து விட்டீங்கள். நீங்களாவது இனி எழுந்திருப்பதாவது! தங்கச்சி, அம்மா என்று தலைக்கு மேலை பொறுப்புகளைச் சுமந்து கொண்டு நிக்கிறீங்கள். எனக்கு இணையான டாக்டராக வர இந்த ஜென்மத்தில் உங்களாலை முடியாது. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கோ!“
சீலனின் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள் பத்மகலா.
அவன் ஒரு கணம் ஆடிப்போனான்.
ரெலிபோன் எடுக்கும் போது இருந்த இன்ப ஆரவாரம் இப்போ ஆழிப்பேரலையாகி அவன் நெஞ்சில் பேயாட்டம் ஆடியது.
சீலனின் வாழ்க்கையை நிர்ணயிக்க இவள் யார்?
எப்பிடி --- எப்படி ஆதாளபாதாளத்துக்குள் அவன் விழுந்து விட்டானாம் --- இனி அவனுக்கு அஸ்தமனமாம் --- இந்த ஜென்மத்தில் எழுந்திருக்கவே முடியாதாம்!
ஆருயிர்க் காதலியாக நித்தம் நித்தம் நெஞ்சில் உலா வந்த பத்மகலா சொல்கிறாள்.
சீலன் ஒரு கணம் ஆடிப்போனது உண்மைதான். ஆனால் மறுகணம் அவன் முதுகில் சுளீர் என்று ஒரு சாட்டையடி விழுந்தது போல சிலிர்த்து எழுந்தான்.
„விழாதே! எழுந்து நில்!“ என்று வீடு அதிரக் கத்தினான்.
„சீலா! தர்மசீலா! எழுந்து நில்லடா!“ என்று தனக்குத் தானே அறைகூவல் விடுத்தான்.
நெஞ்சுக்குள் ஆழிப்பேரலையாக அடித்த பத்மகலாவின் வாசகங்கள் புஸ்வாணங்களாக அடங்கி ஒழிந்திட, ஒரு அமைதித்திரை இடையே விழுந்தது.
„ஒன்றும் இல்லாதவனா நான்?“
„அம்மா!“  என்று உதடுகள் துடிக்க விம்மினான்.
„பெற்றதாயைத் தலைக்குச் சுமை என்று சொல்கிறாளே! இவள் எல்லாம் படித்தவளா? தாய்ப்பாசம் என்றால் என்ன என்று அறியாத முட்டாள். அற்ப வசதிகளைக் கண்டு மதிகலங்கிப்போய் நிற்கும் பைத்தியக்காரி.
அம்மாவும் தங்கச்சியும் எனக்குப் பொறுப்பாம் --- உயிரடி! உயிருக்கு உயிர் தந்த உறவடி!
பாசம் என்றால் என்ன என்று தெரியாத மடைச்சாம்பிராணியடி நீ!“
சோகமும் கோபமும் அவனைச் சில நிமிடங்கள் எரிமலையாக்கி வேடிக்கை பார்த்தன.
„அகதியாகப் பதிஞ்சதாலை நான் அகதியா?
பரந்துபட்ட உலகமெல்லாம் சமுத்திரம்போல் விரிந்து கிடக்கடி என் உறவுகள்.
விழுந்தவனை மாடேறி விழக்குவது போல வார்த்தைகளால் என்னை மிதிக்கிறியா?
கேளடி பத்மகலா!
என்றைக்கோ ஒரு நாள் உனக்கு முன் வந்து நெடுமால் போல நிமிர்ந்து நிற்பேன்.
இது என் சபதமடி பத்மகலா!“
சீலனின் மனம் ஆவேசம் தாங்க முடியாமல் தனக்குள்ளே பொங்கிக் கொதித்தது.
„ஒன்றும் இல்லாதவனா நான்?
தாயே கலைவாணி! வித்தகியே! நீ எங்கே போய்விட்டாய்?
படித்த படிப்பெல்லாம் பாழாகிப் போய்விட்டதா?
ஆதாளபாதாளத்துக்குள் நான் விழுந்து விட்டேனாம், அவள் சொல்கிறாள்.
வாணி சரஸ்வதி தாயே! நீ என்ன சொல்லுகிறாய் அம்மா?
ஓரு வழியும் அறியாமல் நட்டாற்றில் நிற்பவன் போல் கதியற்று நிற்கின்றேன்.
வழிகாட்டு! நான் ஜெயிக்க வேண்டும். என் கடமைகளைச் செய்ய வேண்டும். என்னைத் தூக்கிவிடு!“ என்று கண்களில் நீர் பாய, பராசக்தியை மன்றாடிக் கொண்டிருந்தவன், மனச்சோர்வும் பசிக்களைப்பும் கண்களை மொய்க்க தன்னையறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்.
„சீலன்! சீலன்!“ என்றபடி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த முதலாளி ஆனந்தர், அவன் அயர்ந்து தூங்குவது கண்டு, „எழும்பு சீலன்! போகவெல்லே வேணும் எழும்பு!“ என்று அவனைத் தட்டி எழுப்பினார்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சீலன், திடுக்கிட்டுப் பதறித் துடித்து விழித்தவன், ஆனந்தரைக் கண்டதும் அவசரமாக எழுந்தான்.
„கோவிக்காதேங்கோ முதலாளி! அவள் சொன்னதை என்னாலை தாங்க முடியவில்லை.“ என்றான் கண்கலங்கியபடி.
„யார் சொன்னது என்ன சொன்னது?“ என்று ஏதும் விளங்காமல் ஆனந்தர் அவனைப் பார்த்தார்.
சீலன், தொலைபேசி உரையாடலின் போது பத்மகலா போட்டுடைத்ததை விபரித்தான். அவன் நா சோகத்தில் வறண்டு போயிருந்தது.
ஆனந்தர் அவனைத் தடவி ஆறுதல் வார்த்தைகள் பல கூறினார்.
„சீலா! மனிதர்கள் பறந்து கொண்டிருக்கிறார்கள், மனிதாபிமானத்தை மறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்காங்கே நல்ல மனிதர்கள், உண்மை உறவுகள், உயிர் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நீ தழம்பாதே! சூரியனுக்கு அஸ்தமனம் வந்தால் மறுநாள் காலை உதயமாகி, இளங்கதிர்கள் வீசி எழுந்திருக்கப் போகிறான் என்பதுதான் உண்மை. இது போலத்தான் இன்று உனக்கு அப்பிடியும் இப்பிடியுமாகக் குழப்பங்கள் வந்து கொண்டிருக்கு. இது ஓடி மறைந்து விடியும் நாள் விரைவில் வரும்!
முகத்தைக் கழுவிப்போட்டு வெளிக்கிட்டுக் கீழே வா! நான் கடைக்குள் நிக்கிறன்.“ என்று வெளியேற முனைந்தார்.
அப்போ சீலனின் கைத்தொலைபேசி ஒலித்தது.
மறுமுனையில் டேவிட் அங்கிள்.
சீலனுடன் டேவிட் அகதிவிண்ணப்பம் பற்றிக் கதைத்தார். அவன் ஆனந்தரை நிற்கும்படி கைகாட்டிச் சைகை செய்தபடி,
„நீங்களே முதலாளியுடன் கதையுங்கோ!“ என்று தொலைபேசியை ஆனந்தரிடம் நீட்டினான்.
ஆனந்தர் தொலைபேசியை வாங்கிக் கதைத்தார்.
„நீங்கள் சொல்வது எனக்கும் சரி எனப்படுகிறது. சீலனுக்குச் சம்மதம் என்றால் ஓகே.
படித்தபிள்ளை அவன் என்ரை கடையிலை தொட்டாட்டு வேலை செய்து வாழ்நாளைப் பாழடிக்கக் கூடாது. வேறு வழியில்லாமல் இவளவு நாளும் அவன் தங்கியிருக்க, என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். இனி தன் முன்னேற்றத்துக்கு ஒரு வழி பிறக்க வேண்டும் என்றால் முயற்சி செய்து பார்க்கட்டுமே டேவிட்!“
„திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்று சொல்வார்கள். நீங்களும் தெய்வம் போல் சீலனுக்கு உதவி புரிகிறீங்கள்“ என்று டேவிட் கூற, „சீச் -- சீ – அப்படி ஒன்றும் நான் பெரிதாகச் செய்யவில்லை. நீங்கள் தான் சுவீஸிலை மைக்டொனல்ஸ் வேலை எடுத்துக் கொடுத்ததிலிருந்து தொடர்ந்து அவனுக்குக் கைகொடுத்து உதவி வருகிறீங்கள்!“ என்று கூறி, தொலைபேசியைத் திரும்பச் சீலனிடம் கொடுத்தார்.
„நன்றி அங்கிள்! இவளவு உதவி செய்கிறீங்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் அனுப்பும் நண்பருடன் நான் ஜேர்மனிக்குப் போகிறேன். அங்கு போன பிறகு உங்களுடன் கதைக்கிறேன்.“ என்று தொலைபேசி உரையாடலை முடித்து, முதலாளி ஆனந்தரைப் பார்த்தான்.
அவர் சீலனின் அருகே வந்து, அவனை ஆதரவோடு தடவியபடி,
„சீலா! நீ நல்லா இருப்பாய்! நான் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் உன்னை மாதிரி ஒருவனை நான் உன்னிடம் தான் பார்க்கிறேன். உன்னுடைய உயர்ந்த மனசு உன் கண்களுக்குள் தெரிகிறது. பெரிய ஆலமரமாய் நிமிர்ந்து நிழல் கொடுத்து நிற்பாய்! எதையும் உன்னால் எதிர்கொள்ள முடியும். விழுந்தாலும் மறுபொழுது வீராப்புடன் எழுந்து நிற்க உன்னால் முடியும்!
ஜேர்மனிக்குப் போ! அங்கே அகதியாகப் பதி!
அது ஒரு பெரிய தேசம். எங்கள் பிள்ளைகளெல்லாம் அங்கே படித்து நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே போய்ப் பார்!
வந்த சில நாட்களிலே என் மனதில் இடம் பிடித்துவிட்டாய். டேவிட் உன்னிடம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். சுவீஸ் தவம், அந்த பானு இவை எல்லாம் உன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள்.
மக்னெற் மாதிரி பழகிற எல்லாரையும் உன்னிடம் ஈர்த்து நண்பர்களாக்கிக் கொள்கிறாய்!
சீலா! காதலி கை விரித்தாலும் நண்பர்கள் உனக்கு நிறையவே இருக்கின்றார்கள். உயிர் கொடுப்பார்கள். துணிந்து செல்!“ என்று முதலாளி அவனுக்குத் தைரியமூட்டினார். கொடுக்கவேண்டிய சம்பளத்தடன் மேலும் ஐந்நூறை „ஆரம்பச் செலவுக்குத் தேவைப்படும் வைத்துக்கொள்!“ என்று சீலனின் கைக்குள் வைத்தார் ஆனந்தர்.
டேவிட் கூறிய நேரத்துக்கு ஆனந்தரின் கடை வாசலில் கார் ஒன்று வந்து அமைதியாக நின்றது.
காரிலிருந்து இறங்கிய விவேக், அவர் மனைவி வவா இருவரும் ஆனந்தருக்கு வணக்கம் சொல்ல, அவரும் பதிலுக்கு வணக்கம் வாங்கோ! என்று வரவேற்றார்.
சூறாவளியில் சிக்கி அடிபட்ட மாங்கன்று போல் வாடிவதங்கி நின்ற சீலனை இருவரும் கட்டியணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய போது அவன் நெஞ்சுக்குள் கோடி நட்சத்திரங்கள் ஒன்றாகி ஒளிர்ந்ததை உணரமுடிந்தது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவனையறியாமலே வழிந்தது.
‚யார் இவர்கள்? டேவிட் அங்கிளுக்கு வேண்டப்பட்டவர்கள். ஆனால் என்னை இவர்கள் முன்பின் அறியாதவர்கள்.
இப்படி ஒரு ஆதரவான அணைப்பு…. அதுவும் இந்த வவா அன்ரி… அன்பொழுக அணைத்த விதம்…. என் தாயோ இப்படி ஒரு உருவத்தில்…. அல்லது கலைவாணி அம்மையோ இவ்வேடத்தில்?‘ என்று அக்கணம் திகைத்துப்போய் நின்றான்.
சிறிய பை ஒன்றை முதலாளி ஆனந்தர் கொடுக்க, அதற்குள் தன் உடுப்புகளையும் சேட்டிபிக்கற்களையும் வைத்துக்கொண்டான்.
கை எடுத்து அவரை நன்றியுடன் கும்பிட்டான். அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.
ஆனந்தர், அவன் கையைப் பிடித்து „சுகமாகப் போட்டு வா! எல்லாம் வெற்றியாக அமையும்“ என்று விடை கொடுத்தார்.
சீலனின் புதிய பயணம் ஆரம்பமாகியது.
தொடரும் பகுதி 41
„இதுதானா  என் வாழ்க்கை? இதற்கு மேல் என்னால் முன்னேற முடியாதா? சாண் ஏற முழம் சறுக்கிதே!“ என்று அவன் மனதில் எண்ணங்கள், விட்டு விட்டு அடிக்கும் மின்னல்கள் போல் வந்து ஒளிப்பதும் ஒடுங்குவதுமாக இருந்தன.  
அகதிப் பதிவுக்கு வேண்டிய பத்திரங்கள், சீலன் கேட்டுக் கொண்டபடி தாயும் தங்கையும் 

No comments: