ஞானம் சஞ்சிகையின் 175வது சிறப்பிதழ்

.
ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
 948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், 2 நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
2000ஆம் ஆண்டுமுதல் வெளியாகும் ஞானம் சஞ்சிகை தனது 50வது இதழைப் பொன்மலராகவும், 100வது இதழை ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாகவும், 150வது இதழை ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாகவும் வெளியிட்டது. தற்போது ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

ஞானம் வெளியிட்ட சிறப்பிதழ்களில் இதுவே அதிகூடிய கனதி கொண்டது. ஒரு சிறப்பிதழை வெளிக்கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான பணி. விடயதானங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்துதல், வடிவமைத்தல் முதல்கொண்டு புத்தக உருவாக்கம் வரை ஞானம் சஞ்சிகையினரின் கடின உழைப்பு மலரில் தெரிகின்றது. ஒவ்வொரு பக்கமும் செதுக்கிய சிற்பம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளமை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. சிறுகதைகள் கவிதைகளின் தெரிவில் சமூகப் பயன்பாடு, அழகியல் நேர்த்தி காணக்கூடியதாக உள்ளது.


புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் கலை கலாசாரம் பழக்கவழக்கங்கள் மாறத் தொடங்கும் நேரம் இது. இந்த நேரத்தில் இப்படியொரு சிறப்பிதழ் வந்திருப்பது காலத்தின் தேவை. இன்னும் ஒரு ஐம்பது வருட காலங்களின் பின்னர் இருக்கப் போகின்ற புலம்பெயர் இலக்கியம்ஆனது, தற்போதைய நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கும். அந்த நேரத்தில் தாம் கடந்துவந்த பாதையினை ஒப்புநோக்குவதற்கு இது ஒரு முக்கிய ஆவணமாக இருக்கப் போகின்றது.

என்ன ஒரு கவலை... ‘புலம்பெயர் இலக்கியம்என்ற சொற்றொடரை உலகுக்கு அளித்த எஸ்.பொ இந்த மலரினைப் பார்க்காமலே போய்விட்டதுதான்.
இந்தச் சிறப்பிதழில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சிசு.நாகேந்திரன், கே.எஸ்.சுதாகர், சு.ஸ்ரீகந்தராசா, யசோதா பத்மநாதன், எம்.ஜெயராமசர்மா, ஆசி.கந்தராஜா, அருண்.விஜயராணி, மாவை.நித்தியானந்தன், நடேசன், ஆவூரான், யாழ்.பாஸ்கர், சாந்தினி புனேந்திரராஜா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாத்தளை சோமு, முருகபூபதி, அம்பி, நட்சத்திரன் செவ்விந்தியன், ஆழியாள், பாமதி பிரதீப் போன்ற பலரின் படைப்புகள் உள்ளன.

புத்தகத்தைப் பற்றிய மேலதிக தகவலுக்கு – கே.எஸ்.சுதாகர் / kssutha@hotmail.com

No comments: