சங்க இலக்கியக் காட்சிகள் 42- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

வந்தான் காண முடியவில்லை
வந்ததை அவளும் அறியவில்லை

அது அருவிகள் நிறைந்த ஒரு மலை நாடு. பள்ளைத்தை நோக்கிப் பாய்ந்தோடி வரும் அருவிகளுக்கு அங்கே பஞ்சமில்லை. மலைச் சாரல்களிலே எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த மலர்கள் வண்டுகளையும்ää தும்பிகளையும் தேனருந்த வாவாவென்று அழைப்பதுபோல இதழ்களை விரித்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.



அங்கே ஒரு புலியும் யானையும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. வேங்கை மரத்தின் மலர்க்கொத்துக்களைப் போலப் புலியின் உடல் தோன்றுகின்றது. யானையோ வேங்கை மரத்தின் பூந்தளிரைப் போன்ற புள்ளிகளைத் தன் முகத்திலே கொண்டிருக்கிறது. அதனால் புலியின் உடலிலும் யானையின் உடலிலும்ää உள்ளவை மலர்கள் என்று எண்ணி மயங்கிய தும்பிகள் புலியின் மீதும், யானையின் மீதும் மாறிமாறி வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சி எப்படியிருக்கின்றது தெரியுமா? வலிமைமிக்க வேந்தர்கள் இருவர் தமக்குள் போரிட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களிடையே சமாதானம் செய்துவைத்து அவர்களை நண்பர்களாக்க முயற்சி செய்யும் சிலர் மன்னர்கள்  இருவரிடமும் மாறிமாறித் தூதுசென்று அலைந்து கொண்டிருப்பதைப்போல, சண்டையிட்டுக்கொண்டிருக்கும் புலிக்கும், யானைக்குமிடையே சமரசம் செய்து வைப்பதற்காக அந்த இரண்டு விலங்குகளிடமும் தும்பிகள் மாறிமாறிப் பறந்து சென்று பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருப்பதைப் போன்று தோன்றுகின்றது. இப்படிப்பட்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த மலைநாட்டைச் சேர்ந்தவன் தலைவன். பக்கத்து நாட்டிலேயுள்ள ஒரு சிற்றூரிலே வாழ்ந்தவரும் அழகிய இளம் பெண்ணின் மேல் அவனக்குக் காதல் உண்டாகிறது. அவளுடைய மனதிலும் தலைவன் இடம்பிடித்துக் கொள்கிறான். நாட்டைக்கடந்து, ஊர்களைக் கடந்து நள்ளிரவு நேரத்தில் அவளைக் காண வருகின்றான். அவளது ஊருக்குள் நுழைகின்ற இந்தத் தருணத்தில் திடீரென்று இடிமுழக்கத்துடன் கடுமையான மழை பெய்கின்றது. அவளின் வீட்டுக்குச் செல்ல அவனால் முடியவில்லை. நெடு நேரமாகியும் மழை விடுவதாயில்லை. தங்குவதற்கு இடமும் இல்லை. யாராவது இங்கே வந்த காரணத்தைக் கேட்டுவிட்டால் சொல்வதற்கு வழியுமில்லை. காதலியைப் பார்க்க வந்ததாகச் சொல்வது சரியுமில்லை. அதற்கான துணிவும் இல்லை. அப்படியே அவளைக் காணாமலேயே திரும்பிப் போய்விடுகிறான். ஆனால் தலைவியோ அவன் வருவான் வருவான் என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கிறாள்.
காற்றோடு பெய்த மழையினால் அவளின் வீட்டருகே நொச்சிப் பூக்கள் விழுகின்றன. அந்தச் சத்தம் தலைவிக்குக் கேட்கிறது. தான் வந்துவிட்டதைத் தெரிவிக்க தலைவன்தான் நொச்சிப் பூவை விட்டெறிகிறான் என்றெண்ணித் அவள் வெளியே எட்டியெட்டிப் பார்த்துப் பலமுறை ஏமாந்து போகின்றாள். அதனால்ää தாங்கொணாத துன்பத்தில் தவிக்கிறாள். மறுநாள் காலை விடிகிறது. தலைவி வழமையபோல எழுந்திருக்கவேயில்லை. அவளைக் காணவந்த தோழி அவள் படுகின்ற துயரத்தைக் கண்டு கவலையடைகின்றாள். தலைவனைத் தேடிச் செல்கின்றாள். அவனைக் காணுகிறாள். “அங்கே, அவள் உன்னோடு சேரவேண்டும் என்ற ஆசையால் வெதும்பிக்கொண்டிருக்கிறாள். இரவு முழுவதும் உனக்காகக் காத்திருந்தாள். நீவந்துவிடவேண்டும் என்றும் உன்னைக் கண்டுவிட வேண்டும் என்றும் கடவுளையெல்லாம் வேண்டினாள். இங்கே நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறாள். தலைவன் தோழியிடம்ää தான் சொன்னபடி தன் காதலியைக்காண வந்ததையும். இடியோடு மழை பெய்ததையும், பகலில்கூடக் காணாமல் போய்விட்டோமே என்று தான் வருந்திக்கொண்டிருப்பதையும் எடுத்துரைக்கிறான்.
“மழையை வேண்டி வானைநோக்கிப் பாடுகின்ற வானம்பாடியைப் போல அவள் உன் வரவை வேண்டிக் காத்திருந்தாள். உன்னுடன் கொண்ட காதல் என்ற நோயினால் அவள் துடிக்கிறாள். நீ என்னடாவென்றால் இப்படி வெறுப்படைந்தவன் போலப் பேசுகின்றாய். உனக்கு இரக்கமே இல்லை. உனது நாட்டிலுள்ள அருவிகள் நிறைந்த அழகுமிக்க மலையிடுக்குகள் ஒன்றெயொன்று எதிரொலிப்பதைப் போல, உன்னைக் காணாததால் அவளுக்கு உண்டான நோய் உன் நினைவையே எதிரொலிக்கின்றது. அதனால், எப்படியாவது, ஏதாவது பொய்சொல்லியாவது அவளின் துன்பத்தை நீதான் போக்கவேண்டும், . இல்லையென்றால் அவள் தாங்கமாட்டாள்” என்று தோழி தலைவனிடம் சொல்கின்றாள்.
இந்தக்காட்சியினை வெளிப்படுத்தும் பாடல்:
வியலகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம்சிறை மணிநிறத் தும்பி
வாய்இழி கடாத்த வான்மறுப்ப ஒருத்தலோடு
ஆய்பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கையஞ் சினையென விறற்புலி முற்றியும்
பூம்பொறியானைப் புகர்முகம் குறுகியும்
வலிமிகு வெகுளியான் வாள்உற்ற மன்னரை
நயன்நாடி நட்பு ஆக்கும் வினைவர்போல் மறிதரும்
அயம்இழி அருவிய அணிமலை நன்னாட!
ஏறு இரங்கு இருளிடை இரவினில் பதம்பெறாஅன்
மாறினென் எனக்கூறி மனங்கொள்ளும், தான் என்ப
கூடுதல் வேட்கையான் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யானாக.
அருஞ்செலவு ஆரிடை அருளிவந்து, அளிபெறாஅன்
வருந்தினென் எனப்பல வாய்விடுஉம், தான் என்ப
நிலைஉயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்
பலசூழும் மனத்தோடு பைதலேன் யானாக
கனைபெயல் நடுநாள்யான் கண்மாறக், குறிபெறாஅன்
புனையிழாய்! என்பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
துளிநசை வேட்கையால் மிசைபாடும் புள்ளின், தன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யானாக
எனவாங்கு,
கலந்தநோய் கைமிகக் கண்படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை
இலங்குதாழ் அருவியோடு அணிகொண்ட நின்மலைச்
சிலம்புபோல் கூறுவ கூறும்
இலங்குஏர் எல்வளை இவளுடை நோயே.

(கலித்தொகை, குறிஞ்சிக்கலி பாடல் இல: 10 பாடியவர்: கபிலர்)


No comments: