துரித விசாரணைக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கோரிக்கை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-
கனகராயன்குளம் மன்னகுளம் சந்தியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவியான 15 வயதுடைய செல்வராசா சரண்யா என்ற சிறுமி சிவராத்திரியை முன்னிட்டு, தெரிந்தவர்களுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றதாகவும், இரண்டு தினங்கள் கழித்து திரும்பி வந்த அவர், சுகயீனம் காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் வைத்தியத்திற்காக, கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
தொண்டை நோகின்றது கதைக்க முடியாத என்ற காரணத்திற்காகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆயினும், இவருடைய மரணம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், இந்தச் சிறுமி மோசமான முறையில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக சிறுமியின் அம்மம்மாவுக்கும், இந்த சிறுமியின் மரணத்தையடுத்து, அவர்களுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்த ஊர் முக்கியஸ்தர்களிடமும், வைத்தியசாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி விசாரணைகளை நடத்தியதன் பி;ன்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து சிறுமியின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
சுகயீனம் காரணமாக கடந்த புதன்கிழமை மாங்குளம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் மரணமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு வல்றுறவுக்கு இந்தச் சிறுமி உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்ப்பட்டுள்ள போதிலும், சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்னும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தனது அம்மம்மா சீதையம்மாவிடம் வளர்ந்து வந்த இந்த சிறுமிக்குப் பெற்றோர் இருவரும் இல்லை. இயல்பாக பாடசாலைக்குச் சென்று வந்த இந்தச் சிறுமி, அவருடைய மூத்த சகோதரன் தங்கியிருக்கின்ற வீட்டில் உள்ள இரண்டு சிறுமிகளுடன் நட்பு கொண்டிருந்ததாகவும், அந்தச் சிறுமிகளின் தாயாருடனும் நன்றாகப் பழகி வந்ததாகவும், அவர்களுடைய வீட்டில் இருந்தே இந்தச் சிறுமியும் ஏனையோரும் திருக்கேதீஸ்வரம் போய் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 16 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் சென்றிருந்த இந்தச் சிறுமி இரண்டு தினங்களின் பின்னர் 18 ஆம் திகதி திரும்பி வந்து, ஒரு வாரம் கழிந்த நிலையில் கடந்த புதன்கிழமையே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்த அந்த வீட்டுப் பெண், இது குறித்து சிறுமியின் அம்மம்மாவிற்கோ அல்லது வேறு உறவினர்களுக்கோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராஜா, ஜி.ரிலிங்கநாதன், தர்மபால செனிவிரத்ன ஆகியோர் உயிரிழந்த சிறுமியின் அம்மம்மா மற்றும் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர்கள், மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
அதன்போது, சிறுமி சரண்யா கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவர், அநியாயமாக உயிரிழந்துள்ளார் என்றும், இதனை பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், இந்த சிறுமியின் மரணம் தொடர்பாக மரண விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், இன்னும் எவருமே பொலிசாரினால் கைது செய்யப்படாமல் இருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதனால், இந்த விடயத்தை இருட்டடிப்பு செய்வதற்காக சிலர் முயன்று வருவதாகவும் எனவே, இதுவிடயத்தில் நீதி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் கோரியிருக்கின்றார்கள்.
பாடசாலை மாணவி ஒருவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்திருப்பது பொலிசாருக்கோ, சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கோ அல்லது மகளிர் மற்றும் சிறுவர் நலன்களுக்கான பிரிவின் அதிகாரிகளுக்கோ சாதாரண விடயமாகிவிட்டதோ? அதன் காரணமாகத்தான் சிறுமி சரண்யாவின் மரணத்தின் பின்னரும் அவர்கள் எவரும் இந்த விடயத்தில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் மௌனமாக இருக்கின்றார்கள் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சீற்றத்தோடு மக்கள் பிரதிநிதிகளிடம் வினா எழுப்பியிக்கின்றார்கள்.
இதனையடுத்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவு பொறுபு;பதிகாரி ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து சரண்யாவின் மரணம் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவித்த கனகராயன்குளம் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, சிறுமி சரண்யா மீது கூட்டு பாலியல் வல்லுறவு குற்றம் புரியப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் இந்தச் சிறுமியின் மரணம் குறித்து இன்னும் தெளிவில்லாத காரணத்தினால், அவருடைய உடலின் சில பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையைத் தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சிறுமியின் மரணம் தொடர்பான இறுதி மருத்துவ பரிசோதனை அறிக்கை தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கனகராயன்குளம் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் இன்னும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நபர் ஒருவர் இறந்த சிறுமி சரண்யா மற்றும் அந்த வீட்டுப் பெண்ணின் இரு மகள்களாகிய சிறுமிகள் ஆகியோருக்கு கைத்தொலைபேசியில் பாலியல் வீடியோ காட்சிகளைக் கொடுத்து பார்க்கச் செய்திருந்ததாகவும், மற்றுமொருவர் தன்னை பொலிஸ் சிஐடி என கூறிக்கொண்டு அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும், அதேநேரத்தில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் தமது அம்மம்மாவுடன் வாழ்ந்து வந்த சிறுமி சரண்யாவின் மூத்த சகோதரன் இரண்டு மகள்களுடன் வசித்து வந்த பெண்ணின் வீட்டில் ஏன் வசித்து வந்தார் என்றும், அத்துடன் அவர் ஏன் தனது சகோதரி சரண்யாவையும் அங்கு அடிக்கடி சென்று வர அனுமதித்திருந்ததுடன், திருக்கேதீஸ்வரத்திற்குப் போய் வந்ததன் பின்னர் சிறுமி சரண்யா என்ன காரணத்திற்காக அம்மம்மாவிடம் செல்லாமல் அந்த வீட்டிலேயே தங்கியிருந்ததன் பி;ன்னர் சுகயீனம் என தெரிவித்து அம்மம்மாவுக்கு, தகவல் தெரிவிக்காமல் சரண்யாவை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் கனராயன்குளம் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், மாங்குளத்தில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து மீதான கூட்டுப் பாலியல் கூட்டு வல்லுறவுககு உடபடுத்தப்பட்டதன் பின்னர் மரணமாகிய சிறுமி சரண்யாவின் மரணம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி இந்தச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்
No comments:
Post a Comment