'நானே எரிய போறேன்; நகை எதுக்குப்பா?' உயிர் கரையும் நேரத்திலும் உருகிய பெண்: 'கவுரவ கொலை'யில் கண்ணீர் காட்சி!

.
முதலில் கௌரவ கொலை என்ற சொல்லை பத்திரிகைகள் நீக்கவேண்டும் இது கௌரவ கொலை அல்ல சாதி வெறிக் கொலை 
Tamilmurasuaustralia 

சிவகங்கை: 'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்பது பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை பற்றிய பழமொழி. ஆனால், பெற்ற மனமும், சில நேரங்களில் இறுகிய பாறையாகிப் போகும் என்பதற்கு, சிவகங்கை உடைகுளத் தில் நடந்த, 'கவுரவக் கொலை' சாட்சி. 
காதலியாய் உருவெடுத்தாள் தமிழ்ச்செல்வி; அவளுக்கு எமனாக உருவெடுத்தார் தந்தை தங்க ராஜ். இன்னும் சில நிமிடங்களில் உயிர் கரைந்து காற்றில் கலக்கப் போகிறது... அந்த தருணத்தில், எந்த ஆன்மாவும் இப்படி நினைத்திருக்காது; தமிழ்ச்செல்வியை தவிர. 'நானே சாகப் போறேன்... என் நகையை கழற்றி தம்பி, தங்கச்சியிடம் கொடுங்கப்பா' என்றாள் தந்தையிடம். அந்த இடத்திலாவது, 'கல்லான' தந்தை கரைந்திருக்க வேண்டும்; மனிதர், அசையவில்லை!


சிவகங்கை அருகே உடைகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 47. இவரது மகள் தமிழ்ச்செல்வி, 19. கடந்த 3ம் தேதி, திடீரென தமிழ்ச்செல்வி இறந்தார். உடல் எரிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காதல் பிரச்னையில் அவரை, தந்தை தங்கராஜ் மற்றும் உறவினர்கள் கொன்று எரித்தது விசாரணையில் தெரிந்தது. தமிழ்ச்செல்வியின் எரிந்த உடலை, போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். வேறு சமுதாயத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவரை காதலித்ததால், தப்பி ஓடிய மகளை பிடித்து கொலை செய்ததாக, தங்க ராஜ் ஒப்புக் கொண்டார்.

கொலைவெறி குடும்பம்: தங்கராஜ், உறவினர்கள் தங்க பாண்டியன், 34, தங்கமணி, 25, பாலமுத்து, 37 ஆகியோரை, இன்ஸ்பெக்டர் பொன்ரகு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்; இருவர் தப்பி விட்டனர்.

கைதானவர்கள் விசாரணையில் தெரிவித்தது குறித்து, போலீசார் கூறியதாவது:
 சம்பவத்தன்று, தங்கராஜ் எங்களை அழைத்தார். மகளின் காதல் பிரச்னையை கூறி, அவரை கொலை செய்து எரிக்க, உதவி கேட்டார்.
அன்றிரவு, கிராமத்திற்கு அருகில் உள்ள கொக்குபத்தை காட்டுக்கு, மோட்டார் சைக்கிளில், மகளை அழைத்து வந்தார். தமிழ்ச்செல்விக்கு ஏற்கனவே காயம் இருந்தது. அவரை மரத்தில் கயிற்றால் கட்டினோம். அவரது கண் முன்பே, எரிப்பதற்காக விறகுகளை அடுக்கினோம். 
இச்செயலை பார்த்த தமிழ்ச்செல்வி, ''என்னை உயிரோடு விடமாட்டீங்க. தம்பி கார்த்திக் ராஜ், தங்கச்சி அபிநயாவை நன்றாக பார்த்துக்குங்க. நான் தீயில் எரியப் போறேன்; என் நகைகளை அவங்ககிட்ட கொடுங்க,'' என்றார். 
கட்டுகளை அவிழ்த்தபின், அவர் அணிந்து இருந்த தோடுகளை கழற்றி கொடுத்தார். மூக்குத்தியை கழற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில், விறகு கட்டையால் அவரை தலையில் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்றோம்.
பின், விறகுகளின் மேல் உடலை வைத்து பெட்ரோலை ஊற்றி எரித்தோம். ஒரு எலும்பு கூட மிஞ்சக்கூடாது என்பதற்காக, விடிய விடிய அங்கேயே இருந்தோம். உயிர்போகும் நேரத்தில், தமிழ்ச்செல்வி நகைகளை கழற்றி கொடுத்தது; தம்பி, தங்கையை பற்றி தந்தையிடம் கூறியது, உருக்கமாக இருந்தது. உறவினர் என்ற வகையில் தங்கராஜுக்கு உதவினோம். இவ்வாறு அவர்கள் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர்.

'கவுரவக் கொலை' என்ற பெயரில், மிருகத்தனமாக மனிதர்களை, மனிதர்களே வதைக்கும் இந்த கொடுமைக்கு, அரசும், சமுதாயமும் எப்போது விடை கொடுக்கும்?

nantri dinamalar

Advertisement

No comments: