நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு கைது!
இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாரவிரதம்
இலங்கையில் நிலைமை மோசம், சர்வதேச விசாரணை தேவை: தென்னாபிரிக்க பேராயர்
=======================================================================
நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நீர் இணைப்பிற்காக குழியொன்று தோண்டிய போது எலும்புக்கூடுகள் உள்ளமை தெரிய வந்துள்ளது.
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு கைது!
இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாரவிரதம்
இலங்கையில் நிலைமை மோசம், சர்வதேச விசாரணை தேவை: தென்னாபிரிக்க பேராயர்
=======================================================================
நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு
மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இன்று புதன் கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நீர் இணைப்பிற்காக குழியொன்று தோண்டிய போது எலும்புக்கூடுகள் உள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை வரை 32 தடவைகள் குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டது.
இதன் போது சுமார் 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக மீட்கப்பட்ட குறித்த எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் 80 பெட்டிகளில் தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை 33 ஆவது தடவையாக மனித புதைகுழி தோண்டும் முகமாக திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறித்த அகழ்வுப்பணியில் ஈடுபட்டு வந்த அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் விக்கிரம சேகர ஆகியோருக்கு இடையில் நீண்ட நேரம் கருத்து பகிர்வு இடம்பெற்றது.
இந்த கருத்து பகிர்வின் இறுதியாக குறித்த மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் இன்று புதன்கிழமையுடன் (5) முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 80 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை ஆய்வுக்கு அனுப்பும் வகையில் அவற்றை எங்கு கொண்டு செல்வது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு கைது!
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொஸ்லாந்த பகுதி பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனொருவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவன் மறுநாள் பாடசாலைக்கு செல்ல மறுத்த மாணவனை அவரின் பெற்றோர் வினவிய போதே மாணவன் இது குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளான்.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கொஸ்லாந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாரவிரதம்
யாழ்ப்பாணம் சிறையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 116 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திடீர் என உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
தங்களை விடுதலை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி எஸ்.டி.மூர்த்தி யாழ்ப்பாணம் சிறைக்கு இன்று மதியம் சென்றார்.
அங்கு கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 116 மீனவர்களுடனும் அவர் பேச்சு நடத்தினார். கைதிகளின் மருத்துவ வசதிகள் மற்றும் விடுதலைக்கான முயற்சிகள் குறித்து அவர் உறுதிமொழி வழங்கியமையை அடுத்து மீனவர்கள் அனைவரும் இன்று பிற்பகலுடன் தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் கிரமமாக சிறைக்கு வருகை தந்து கைதிகளாக உள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிடுவர், அவர்களது நலன்களைக் கவனிப்பர் என்று தூதரகம் சார்பில் மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அறிய வந்தது. நன்றி வீரகேசரி
இலங்கையில் நிலைமை மோசம், சர்வதேச விசாரணை தேவை: தென்னாபிரிக்க பேராயர்
இலங்கையில், இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அவர் உட்பட்ட பல மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கையெழுத்திட்டு இந்தக்கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளனர்.
அதில் இலங்கையின் இறுதிப் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்காக ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதுவே இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் ஏற்படுத்தும் என்று கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் போர் முடிந்துவிட்டதாக கூறப்படுகின்ற போதும் இன்னும் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படவில்லை. ஜனநாயக பண்புகள் மறுக்கப்படுகின்றன.
மனித உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் போர்க்காலத்தை காட்டிலும் நிலைமை மோசமடைந்துள்ளதாக டுட்டு குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைவிட இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் திட்டமிட்ட புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் இந்த நூற்றாண்டில், இரண்டு தரப்புக்களும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே இலங்கையில் இறுதி சமாதானத்தை எய்தமுடியும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் நிதிய பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், தென்னாபிரிக்காவின் பொதுமக்கள் அமைப்பின் செயலாளர் டெனி ஸ்ரீஸ்கந்தராஜா, மலேசியாவின் மனித உரிமைகள் ஆர்வலர் இரானே பெர்ணான்டஸ், இலங்கை ஜனநாயகம் மற்றும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ள சிங்கள ஊடகவியலாளர் பாசன அபேவர்த்தன, உகண்டாவின் சிறுவர் நல திட்ட பணிப்பாளர் மாக்கி டக்ரி, பிரேசிலின் மனித உரிமையாளர் பிலேவியா பியோவேசன் உட்பட்ட மேலும் 28 மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.நன்றி வீரகேசரி
கொழும்பிலிருந்து பளை வரை விசேட சொகுசு ரயில் நேற்று முதல் ஆரம்பம்
08/03/2014 கொழும்பில் இருந்து பளை வரை நேற்று முதல் குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1400 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. இந்த சொகுசு ரயில் பிற்பகல் 2.45க்குப் புறப்பட்டு 6 மணி நேரத்தில் பளைக்கு சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது. கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப் பட்டதையடுத்து தினமும் 3 ரயில்கள் கொழும்பில் இருந்து பளை வரை பயணிக்கிறது. இதேவேளை நேற்று முதல் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளை சனிக்கிழமைகளில் மாத்தறையில் இருந்து பளை வரை ரயில் மற்றுமொரு சேவை இடம்பெற உள்ளது. விசேட சொகுசு ரயில் தினமும் பிற்பகல் 2.45 மணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுகிறது. இதற்கான பயணச் சீட்டுக்களை பளைவரையான சகல ரயில் நிலையங்களிலும் முன் பதிவு செய்து பெற முடியும் என அறிவிக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50க்கு பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்படுகிறது. நன்றி தேனீ
No comments:
Post a Comment