சுகம் அங்கே கிடைத்துவிடும்! எம்.ஜெயராமசர்மா..... மெல்பேண்

.

    

நல்லூரை நினைத்தாலே
நாவெல்லாம் இனிக்கிறது 
வெல்லுகின்ற வேலுடனே 
வேலவனும் வருவானே

அள்ளஅள்ள குறையாத
அருளை வாரித்தருகின்ற
தெள்ளுதமிழ் கந்தனவன்
நல்லைநகர் உறைகின்றான்

சித்தர்பலர் வந்தார்கள்
முத்திநிலை பெற்றார்கள்
அத்தனைக்கும் வேலவனின்
அருள்நோக்கே காரணமாம்

நல்லூரில் கொடியேறில்
நாடெல்லாம் திரண்டுவரும்
அல்லல்தனைப் போக்கிடென
அடியார்கள் வேண்டிநிற்பர்

தேரிலே கந்தன்வந்தால்
தெருவெல்லாம் பக்தர்கூட்டம்
ஊரெல்லாம் கூடியங்கு
ஒருங்குடனே தேரிழுப்பர்


வெள்ளைமணல் வீதிதனில் 
வேல்முருகன் தேரசைய
உள்ளமெலாம் உருகிடவே 
ஓம்முருகா எனவொலிப்பர்

முருகனது நாமவொலி
மூவுலகும் கேட்டுநிற்கும்
அருள்வெள்ளம் பாய்ந்தோட
அடியார்கள் மூழ்கிநிற்பர்

தெருவெங்கும் பக்தர்கூட்டம்
திரண்டுநிற்கும் காட்சிகாண
தேவர்கூட வந்துநிற்பார்
திருநகராம் நல்லூரில்

நேரத்தைக் கடைப்பிடித்து
நிறையப்பேர் மனம்மகிழ 
ஆரத்தி காட்டுமிடம்
அழகுதமிழ் நல்லூரே

இந்தியர்கள் வியந்த இடம்
எல்லோரும் மயங்கும் இடம்
சொந்தமுடன் சென்று வந்தால்
சுகம் அங்கே கிடைத்துவிடும்

சந்ததியும் தளைத்தி விடும்
வந்த வினை ஓடிவிடும்
கந்தனது பெயர் சொல்லி 
கை கூப்பித் தொழுவோமே

நல்லூரான் திருவடியை 
நாம்நினைத்த மாத்திரத்தில்
தொல்லைகள் மறப்போமென்று
சொன்னாரே யோகரன்று

எல்லையிலாப் பரம்பொருளாய்
எல்லோரின் மனமுறையும்
நல்லைநகர் கந்தனினால்
தொல்லையெலாம் அகலுமப்பா

நல்லைநகர் வீதியிலே
ஞானசம்பந்தர் ஆதீனம்
எல்லையில்லாப் பணிசெய்து
இயங்கியே நிற்கிறது

துர்க்கா மணிமண்டபத்தால் 
தூயதமிழ் எழுகிறது
சமயமும் வளர்கிறது
சகலர்க்கும் உதவுதது

நல்லூரை நினைத்துவிடின்
நமகென்றும் பெருமைதான்
அல்லல்வினை போக்குமவன்
அடிதொழுது நிற்போமே!

No comments: