திரும்பிப்பார்க்கின்றேன் - 27 - முருகபூபதி

.
காணாமல்  போனவர்கள்    பட்டியலில்    இணைந்துள்ள  காவலூர்  ஜெகநாதன்

1980  ஆம்    ஆண்டு     காலப்பகுதி.

 வீரகேசரி   அலுவலகம்   பரபரப்பாக   இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒப்புநோக்காளர் -  அறைக்குள்   Proof   திருத்திக் கொண்டிருக்கின்றேன்.

இங்கே     யார்   முருகபூபதி ?    கேள்வி     எழுந்த     பக்கம்    நோக்கித் திகைக்கிறேன்.    வாசல்     கண்ணாடிக்கதவை     தள்ளித் திறந்து  கொண்டு    ஒரு   இளைஞர்   நிற்கிறார்.

எனக்கும்    அவரை  முன்பின்    தெரியாது.

நான்தான்  முருகபூபதி.      நீங்கள் யார்?   உங்களுக்கு    என்ன    வேண்டும்? - என்று எழுகின்றேன்.

சக   ஊழியர்களின்   முகத்திலும்   திகைப்பு   வழிகின்றது.   திடீரென  ஒருவர் உட்புகுந்து   இவ்வாறு   நடந்து   கொண்டது   வியப்பல்லவா?

அந்த   வியப்பும்   சில   கணங்கள்தான்.

நான்தான்   காவலூர்   ஜெகநாதன்.

  அது   நீங்களா ?என்ன    அது   என்று   அஃறிணையில்   அழைக்கிறீர் ?

மன்னிக்கவும்  --- வாருங்கள்  --- உட்காருங்கள்   -  உள்ளே    அழைக்கின்றேன்.

நான்  அவசரமாகத் திரும்பவேண்டும்.   அதற்கு   முன்பு   உங்களைப்   பார்த்துப் பேச விரும்பினேன்.   நீங்கள்தானே    ரஸஞானி?

இப்படித்தான்   எனக்கு   காவலூர்   ஜெகநாதனுடன்    நட்பு  மலர்ந்தது.

அவசரமாகத்   திரும்ப  வேண்டும்   -   என்றாரே?

இந்த   அவசரம்    அவரது   பேச்சில் -   எழுத்தில் -   செயலில் -   வாழ்க்கையில் நிரம்பியிருந்தது.     அதனால்தானோ    தெரியவில்லை   அவர்   அவசரமாகவேஎம்மிடமிருந்து     விடை பெற்றுக் கொண்டார்.

நீ   ஒரு   அவசரக்குடுக்கையப்பா    நன்றாக    நெருங்கிப் பழகிய   பின்பு  ஒரு  நாள் கோபத்தில்   உரிமையுடன்   சத்தம்   போட்டேன்.

இருவரும்    உரத்துச் சத்தம்   போட்டு   சண்டைகளும்   பிடித்துள்ளோம்.   ஆனால் பகைத்துக்   கொண்டதில்லை.

நீ   இப்போது      நெருக்கமாகிவிட்டாய்.     அதனால்தான்    எனது   குறைகள்   உனக்குத்   தெரிகிறது.  - என்றார்

ஜெகநாதன்  -   எழுத்தாளனுக்கு   கோபம்   இருக்கலாம்.     இருக்க வேண்டும்.    ஆனால் அவசரம் கூடாது.     நிதானம்தான்   முக்கியம்   - இவ்வாறு   பல  தடவைகள் சொல்லியிருப்பேன்.

1980  ஆம்   ஆண்டின்   பின்னர்   ஈழத்து   இலக்கிய   உலகில்   அதிகம்   பேசப்பட்டவர் காவலூர்   ஜெகநாதன்.

காரணம் - இவரது   எழுத்துக்கள்   அடிக்கடி   பத்திரிகை   சஞ்சிகைகளில்   இடம் பிடித்திருந்தன.

 தொடர்கதை  - சிறுகதை,  - கட்டுரை.     சுடர் - சுதந்திரன் - வீரகேசரிதினகரன் - தினபதிசிந்தாமணி     இப்படியாக    கொழும்புப் பத்திரிகைகளில்    அடிக்கடி   அவரது எழுத்துக்கள்    பிரசுரமாகிக் கொண்டிருந்தன.

  எப்பொழுதும்   வேகமாகத்தான்   பேசுவார் .   பேச்சில்    அலட்சிய    மனோபாவம் மேலோங்கி   இருக்கும்.

எனது   இலக்கிய   நண்பர்களையும்   சில   சமயங்களில்   எடுத்தெறிந்து    பேசுவார். இச்சந்தர்ப்பங்களில்   தான்      மோதிக்கொள்வதுண்டு.

இம்மோதல்   நீடிக்காது.    முற்றுப்புள்ளி     இடுபவரும்     அவர்தான்.

சரி  -    சரி -  விடு   மச்சான்.  -  உன்னிட்ட   சொல்லாமல்   வேறு   யாரிடம்தான் சொல்வது   உரிமையுடன்   சமாதானமாகிவிடுவார்.

கொழும்புக்கு   வரும்   சமயங்களிலெல்லாம்   என்னைச்   சந்திக்கத் தவறுவதுமில்லை.

சுடர்   -   சுதந்திரனில்     அடிக்கடி    எழுதியமையாலும் - முற்போக்கு   இலக்கிய முகாமுடன்   இயல்பாகவே   கொண்டிருந்த   வெறுப்பினாலும்   பல   எழுத்தாளர்கள்   இவருடம்   நண்பராகிக் கொள்ளாமல்   ஒதுங்கியிருந்தனர்.

இந்நிலைமையை   ஜெகநாதன்   விரும்பவில்லை.  மனம்   வெதும்பிச்  சொல்வார். மச்சான்  -    நான்   என்ன   எழுதுகிறேன்   என்று   பார்க்காமல் - எதில்   எழுதுகிறேன் என்று   பார்க்கிறார்கள்.

மல்லிகையிலும்   எழுதும்  -   எல்லோரும்   பார்ப்பார்கள்   என்றேன்.   எழுதினார். தனது   எழுத்துக்களை    மல்லிகை ஜீவா  பிரசுரிக்கமாட்டரோ   என்ற  அவரது தயக்கம்   நீங்கியது.

அத்துடன்    ஜெகநாதனிடமிருந்தும்  குழு   மனப்பான்மைப்   போக்கும்    நீங்கியது.

தமிழகப் பத்திரிகைகளிலும்   எழுதினார்.   காவலூர்   ஜெகநாதனின்   எழுத்துக்கள் தினமணிக்கதிர்  -   இதயம் பேசுகிறது  -    சாவி  -   கணையாழி  -   தாமரை   உட்பட  சில இதழ்களில்    இடம்பெற்றன.   தமிழகத்தில்  பல  நட்புகளையும்   தேடிக் கொண்டார்.

இவர்   நட்புகளைத்   தேடுவது  அவரது  தேவைகளின்  பொருட்டுத்தானோ?   என்ற சந்தேகமும்    இலக்கிய   வட்டாரத்தில்   உருவானது.

அப்படி   என்ன   தேவை?

தேவை   இருந்தது.   அவரது  படைப்புக்களுக்கு   களம்   தேவைப்பட்டது.   களம் கொடுத்தவர்களெல்லாம்   நண்பர்களானார்கள்.

 தமிழகத்தின்   தரமான   சிறு  சஞ்சிகைகள்   உட்பட   ஜனரஞ்சகமான   வணிக நோக்குச்   சஞ்சிகைகளில்   எழுதினார்.

அடுத்தடுத்து   அவரது   புத்தகங்கள்   தமிழகத்தில்   வெளியாகின.

 வேகம் .-    வேகம். -    வேகம்.--

மச்சான்  -   உனது     சுறுசுறுப்பு  -   மகிழ்ச்சியாக     இருக்கிறது.     ஆனால்    இந்த வேகம்  -    எனக்குப்    பயமாக     இருக்கிறது   -    என்று   மனம்   விட்டுச் சொன்னேன்.

நான்    குறிப்பிட்ட   பயம்  வேறு   -    ஆனால்   நடந்த   பயங்கரமோ   வேறு!.

எனக்கு   அவர்   பிறந்த  காவலூர்  தெரியாது. ஆனால்   அந்தப்பெயரை   தமது இயற்பெயருக்கு   முன்னால்   இணைத்திருக்கும்   எழுத்தாளர்   ராஜதுரையைத் தெரியும்.   காவலூரின்   பெயரை   இணைத்தமையால்தான்   அந்தப்பெயரிலும் ஜெகநாதன்    பிரபலமானார்.

அவர்    திருநெல்வேலியில்   வசித்தார்.   விவசாய   ஆராய்ச்சித்துறையில்   நல்ல வேலையிலும்    இருந்தார்.    திருநெல்வேலிக்கு   வருமுன்னர்   பேராதனையிலும் பணியாற்றினார்.   என்னை   அழைத்துச்சென்று   காவலூரில்   பிரபலமான   புனித அந்தோனியார்    கல்லூரியில்   ஒரு  இலக்கியச்சந்திப்பும்   நடத்தினார்.

அவரது   எழுத்திலிருந்த   வேகம்   அவரது   நடையிலும்  நீடித்தது.   வேகமாகத்தான்   நடப்பார்.

1983    இற்குப்பின்னர்   தனது   தொழிலையும்   விட்டு விட்டு  அவர் சென்னைக்குப்புறப்பட்டபொழுது   அதிலும்   அவசரம்   தெரிந்தது.    குடும்பத்தினரை அண்ணா நகரில்   விட்டு   விட்டு   அடிக்கடி   இலங்கை   வந்து   திரும்பினார். வரும்பொழுது   அவருடன்   அவரது   புதிய   நூல்  ஒன்றும்  வரும்.

அக்காலப்பகுதியில்   தலைமன்னார் -  ராமேஸ்வரம்   மார்க்கமாக   இராமனுஜம் கப்பல்   பயணிகளை   ஏற்றி   இறக்கியது.   அதில்தான்   வந்து  திரும்புவார். விரைவில்    தனது   பேச்சு  சாதுரியத்தினால்  எவரையும்  நண்பராக்கிக்கொள்ளும் கலையில்   தேர்ந்தவர்.   அதே   சமயம்   முரண்பட்டுக்கொள்ளும்    இயல்பும் அவருக்குரியது.

குறிப்பிட்ட    ராமானுஜம்   கப்பலில்   பணியாற்றியவர்களையும்    ராமேஸ்வரத்தில் பொதிகள்   சுமக்கும்    தொழிலாளர்களையும்   அவர்   தனது   நண்பராக்கியவர். அத்தகைய   விசித்திரமான   மனிதர்   காவலூர்   ஜெகநாதன்.

வீரகேசரியில்   பல   தமிழக   பயணக்கட்டுரைகளை  வெகு   சுவாரஸ்யமாக எழுதினார்.   சந்திக்கும்பொழுதில் - மச்சான்   கட்டுரைகளில்   எழுத்துப்பிழை   வராமல்   பார்த்துக்கொள்   என்பார்.   அவரது   பல   கட்டுரைகளை   நான்   Proof  இலேயே     படித்துவிடுவேன்.

ஜெகநாதன்   -    எனக்கும்    தமிழ்நாட்டைப்   பார்க்க   வேண்டும்   என்று  ஆசை.  ஜீவா பல   தடவை   தம்முடன்   அழைத்தார்.   போகமுடியவில்லை. -   என்று    ஒரு  நாள் சொன்னேன்.

சரி --   என்னுடன் வா -- Office   இல்   லீவு   எடுத்துக் கொள்.   தங்குவது   எங்கே   என்று யோசிக்காதே  அண்ணாநகரில்   எங்கள்   வீட்டில்   தங்கலாம்  ---- ஊரையும் பார்க்கலாம் - உனது   உறவினர்களையும்   சந்திக்கலாம் -    83   இல்   தமிழகத்துக்கு இடம்   பெயர்ந்த   எழுத்தாளர்களுடன்   பேசலாம்-  யோசிக்காமல்     பயணத்துக்கு ஏற்பாடு   செய்.

எனக்கு    தைரியமூட்டியதுடன்   நின்று   விடாமல்   நீர்கொழும்பில்   வீட்டுக்குவந்து   எனது   குடும்பத்தினரிடமும்   சொன்னார்.

அங்குஎனது   வீட்டுக்கு   வராத   எழுத்தாளர்களை  விரல்   விட்டுச் சொல்லிவிடலாம்.

உணவுண்டு    உறங்கும்போது   சொன்னார்  -   மச்சான்   மணிக்கூட்டில்  அதிகாலை 4 மணிக்கு    - அலார்ம்  -   வைத்துவிடு.

நான்கு    மணிக்கு    எழுந்து     என்ன     செய்யப் போகிறாய்?.

வீரகேசரிக்கு      ஒரு    கதை    கொடுக்க   வேண்டும்.   விடியவே   எழும்பினால் எழுதி   முடிச்சிடலாம்.   வேலைக்குப்   போகும் போது    உன்னிடமே கொடுத்துவிடலாம்  -   என்றார்.

எனக்கு   வியப்பாக   இருந்தது.   இது   எப்படி   சாத்தியம்!   ஒரு   சிறுகதையை  பல தடவை    எழுதித் திருத்தியும் - வெட்டியும்தானே  செப்பமாக்க   முடியும்.   இவன் என்ன   சொல்கிறான்.   ஒரே   மூச்சில்   எழுதி   விடுவானோ?   அது    தரமாக இருக்குமோ?    என்   மனதில்   நினைத்ததை   வெளியில்   சொல்லவில்லை.

குறிப்பிட்டவாறு    அதிகாலை   4   மணிக்கே    எழுந்து   எழுதித்  தந்தார்.  பின்பு வீரகேசரியில்    வெளியாகியது.   தரமாகத்தான்   இருந்தது.

காலையில்     எழுந்து     எழுது.    ஆழ்ந்த   துயில்   கலைந்து   எழுது.   எழுத முடியும் என்று    எனக்கு   உபதேசித்தவர்   நண்பர்   காவலூர்   ஜெகநாதன்

இது    எழுத்தாளர்களுக்கு   மட்டுமல்ல   எந்தத்துறையில்   ஈடுபாடு கொண்டவர்களுக்கும்   நல்ல   ஆலோசனைதான்.

பாரதியும்    சொன்னாரே--- காலை   எழுந்தவுடன்   படிப்பு  - என்று

பிரபல்யமான    கேரள    எழுத்தாளர்   தகழி  சிவசங்கரன்பிள்ளை  அதிகாலை  3 மணிக்கு     எழுந்து     படிப்பாராம்     எழுதுவாராம்.

அவுஸ்திரேலியாவின்    குளிர்   காலத்திலும்கூட   அதிகாலையே   எழுந்து   எழுதும் எழுத்துத்தான்   என்னுடையது.   இயந்திரமயமான   வாழ்வுக்குப்   பலியாகிப் படிப்பதற்கும்   எழுதுவதற்கும்   நேரம்   ஒதுக்க   முடியாமல்   தவிக்கும் எழுத்தாளர்களுக்குநண்பர்   காவலூர்   ஜெகநாதனின்   ஆலோசனையைத்தான்  நான்   வழங்க   முடியும்.

1984    ஆம்   ஆண்டு   என்னை   தமிழகத்திற்கு  அழைத்த  ஜெகநாதன்   அழைத்ததுடன்   நின்றுவிடவில்லை.

தீபம்  -   நா.பார்த்தசாரதியிடம்   சென்று   அவரது   தீபம்   காரியாலயத்தில்   ஒரு இலக்கியச்   சந்திப்பையும்   ஒழுங்கு   செய்தார்.

அந்த   இலக்கிய   ஏடு   வெளிவந்த  காரியாலயத்தில் -  தரையில்  கம்பளம்  விரித்து அமர்ந்து   உரையாடினோம்.   எனது   வாழ்வின்   இனிய   மாலைப்பொழுதுவித்தியாசமான  சிந்தனைப் பொழுது  அந்த  நாள்.

தி..சிவசங்கரன்  (தி..சி)   தலைமை.   சிதம்பர  ரகுநாதன்,  - சிட்டி  - ராஜம்கிருஷ்ணன் -சா.கந்தசாமி  -   ஜெயந்தன்  -   சோ.சிவபாதசுந்தரம்  -   அசோகமித்திரன்    உட்பட   ஈழத்து   எழுத்தாளர்கள்  - மு. கனகராசன்  -   கணபதி    கணேசன்  -  நவம்  (இன்று கனடாவில் - நான்காவது   பரிமாணம்   இதழை   நடத்தியவர்)   ஆகியோர்   கலந்து கொண்ட   அருமையான   இலக்கியச் சந்திப்பு.

வீரகேசரியில்   இலக்கியப்பலகணி  க்கு  எழுதுவதற்கு   நிறைய   தகவல்களைத் திரட்டுவதற்கும்   உதவியது   அந்த   தமிழகப்பயணம்.   என்னை   உரிமையோடு  உபசரித்துஊர்   சுற்றிக்காட்டிய   நண்பன்   இன்று   இல்லை.

1985   இல் -   ஒரு   நாள்   ஜெர்மனியிலிருந்து   ஒரு   தொலைபேசி   அழைப்பு. எழுத்தாளர்   காவலூர்   ஜெகநாதன்   பற்றி   துயரமான   செய்தி   வெளியாகியுள்ளது. உங்களுக்கு   ஏதும்   தெரியுமா?    அந்தக்குரலின்    சொந்தக்காரர்   யார்   என்பது   எனக்கு   இன்று   வரையில்   தெரியாது.

ஆயினும் - நிதானமாக  -    அப்படியொன்றும்   கேள்விப்படவில்லை   சிலமாதங்களாக அவர்   இங்கு   வரவில்லை.    விசாரித்துப்பார்க்க   வேண்டும்  -   என்றேன்.

ஒரு   மாதம்   கழிந்துஜெகநாதனின்   இனி   வரும்  நாட்கள்    குறுநாவல் பார்சலில்   எனக்கு   வந்தது.   முகவரி   அவரது   கையெழுத்துத்தான்.   கடிதம் ஒன்றும்   இல்லை.

பலரிடத்தும்   தொடர்பு   கொண்டு   விசாரித்தேன்.

இன்னும்   என்னால்   நம்பமுடியவில்லை.

எனக்கு   சொல்லப்பட்ட   செய்திகளை   ஊர்ஜிதப்படுத்தவும்   இயலவில்லை.

என்னுடன்   தாமாகவே   வந்து   நட்புப்பூண்டுஉறவாடி   உரிமையோடு   சண்டையும் பிடித்து   -  இலக்கியப்பலகணி க்கு    செய்திகள்    பல   திரட்டித்தந்துஎழுது- -  எழுது --  எழுதிக் கொண்டேயிரு--  என்று   ஊக்கமளித்த    நண்பன்   இன்று இல்லையாம்.     ஆனால்     நினைவுகள் தான்     எஞ்சியுள்ளன.

அவர்    தமிழ்நாட்டில்   சென்னையில்   கடத்தப்பட்டார்.   காணாமல்  போனார்.

கடத்தியது   யார்?   அவிழ்க்க   முடியாத   பல  புதிர்களில்  இதுவும்  ஒன்று.

இன்று   --  இலங்கையில்   காணாமல்   போனவர்கள்   தொடர்பாக   சர்வதேச விசாரணை   தேவை   என்ற   அழுத்தங்கள்   நீடிக்கிறது.   .நா.  சபை   தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறது.   காணாமல்   போனவர்கள்   தொடர்பாக    பூகோள அரசியலும்   நீடிக்கிறது.   வடக்கில்   ஜனாதிபதி   ஆணைக்குழு   போர்   முடிந்து   ஐந்து   ஆண்டு   நெருங்கும்   வேளையில்   இயங்குகிறது.

ஆனால்   1983 - 85   களில்   தமிழ்நாட்டில்   காணாமல்போன   எம்மவர்கள் பற்றிப்பேசுவதற்கு   அப்பொழுது   எந்த   நாதியும்   இல்லை.

தமிழ்நாட்டில்   மட்டுமல்ல   இலங்கையிலும்   சில   தமிழ்ப்படைப்பாளிகள் கவிஞர்கள்   ஊடகவியலாளர்கள்   காணாமல்   போனார்கள்.    கவிஞர்கள்  செல்வி - புதுவை   ரத்தினதுரை   ஆகியோரின்   வரிசையில்   காவலூர்   ஜெகநாதன்.

அவர்    ஏன்   காணாமல்  போனார்?   எங்கே  அழைத்துச் செல்லப்பட்டார் ?  ஏன் - எதற்காக என்ற  மர்மமும்  துலங்கவில்லை.   அதனால்தானோ -  இன்று வரையில் அவரது   நண்பர்களிடமிருந்து   அனுதாபச்  செய்திகளோ அஞ்சலி  உரைகளோநினைவு   தினக் கூட்டங்களோ   இல்லை.

எனினும் -   அவர்    நினைவுகளாக   எம்முடன்.

அவருடைய   சகோதரன்  குகநாதன்  பத்திரிகையாளராக   எனக்கு   அறிமுகமானவர். யாழ்ப்பாணம்   ஈழநாடுவில்   குகநாதன்  பணியாற்றிய வேளையில்  சந்தித்து அன்று  முதல்  எனது  இனிய  நண்பர்.  அவர்  பிரான்ஸ_க்கு   புலம்பெயர்ந்த பின்னர்   அவர்   வெளியிட்ட   பாரிஸ்  ஈழநாடு   இதழில்   நெஞ்சில்   நிலைத்த நெஞ்சங்கள்   தொடரை   எழுதியபொழுது   காவலூர்   ஜெகநாதன்     பற்றியும் பதிவு  செய்திருக்கின்றேன்.

தற்பொழுது   டான்  தொலைக்காட்சி   சேவையிலிருக்கும்   நண்பர்   குகநாதனை சந்திக்கும்   சந்தர்ப்பங்கள்   யாவற்றிலும்   எமது   பேசுபொருளாக   காவலூர் ஜெகநாதனும்    இருப்பார்.

                                        ----0----

No comments: