பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை
உக்ரேனிய பிராந்தியத்தில் படையினரை குவிக்கும் ரஷ்யா; பதற்றநிலை அதிகரிப்பு
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டம்
======================================================================
பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை
07/03/2014 இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதியொன்றுக்கு தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற மலேசிய உயர் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பொங் கொங் மெங் (58 வயது) மற்றும் அவரது மனைவி தியொஹ் சிங் யென் (56 வயது) ஆகியோரே தம்மிடம் 3 வருடங்களாக பணியாற்றிய மேற்படி இந்தோனேசிய பெண்ணான இஸ்ரி கோமாரியஹ்ஹை (26 வயது) அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் பட்டினியால் வாடவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேற்படி தம்பதியிடம் பணியாற்ற ஆரம்பித்த போது 46 கிலோகிராமாக இஸ்ரியின் நிறை, அவர் இறக்கும் போது 26 கிலோகிராமாக இருந்துள்ளது.
அத்துடன் அவரது முதுகு, கைகள் மற்றும் நெற்றியில் சிராய்ப்புக் காயங்களும் காணப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி
உக்ரேனிய பிராந்தியத்தில் படையினரை குவிக்கும் ரஷ்யா; பதற்றநிலை அதிகரிப்பு
04/03/2014 ரஷ்யாவானது உக்ரேனின் கிறிமியா பிராந்தியத்திலான தனது இராணுவ பிரசன்னத்தை பலப்படுத்தியுள்ளது.மேற்படி பிராந்தியத்திலிருந்து வாபஸ்பெற மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிராந்தியத்திலான பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் பல்லாயிரக்கணக்கான ரஷ்யப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பிராந்தியத்தை நோக்கி ரஷ்ய கவச வாகனங்களும் கப்பல்களும் தொடர்ந்து நகர்ந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா உக்ரேனின் இறைமையை மீறியுள்ளதாக உலகின் அதிகாரத்துவமிக்க 7 பிரதான தொழிற்றுறை சக்திகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உக்ரேனானது இந்நெருக்கடி தொடர்பில் தனது படையினரை முழுமையாக அணி திரள உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக சர்வதேச ஆதரவைக் கோரியுள்ளது.
தனதும் கிறிமியா மற்றும் உக்ரேனின் ஏனைய பிராந்தியங்களிலுமுள்ள ரஷ்ய மொழி பேசுபவர்களதும் அக்கறைகளை பாதுகாக்கும் முகமாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரேனுடன் போரில் ஈடுபட விரும்பவில்லை என ரஷ்ய பிரதி வெளிநாட்டு அமைச்சர் கிரகோரி கரஸின் ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியானது ரஷ்ய பங்குச் சந்தைகளில் திங்கட்கிழமை பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கிறிமியா பிராந்தியம் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், ஆனால் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிறிமியாவிலுள்ள இரு மிகப் பெரிய உக்ரேனிய படைத்தளங்கள் ரஷ்ய படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், விமானநிலையம் போன்ற முக்கிய கட்டடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவையும் கிறிமியாவையும் பிரிக்கும் கடல் கால்வாயில் ரஷ்யாவின் பக்கமாக பெருமளவு கவச வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிமியாவின் தூர கிழக்கு பிரதேசத்திலுள்ள படகுதுறையொன்றை ரஷ்ய ஆதரவு படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அப்பிராந்தியத்துக்கான சில கையடக்கத் தொலைபேசி சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்இ உக்ரேனிலுள்ள ஆண்களுக்கு திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் 10 நாள் இராணுவ பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் கண்டனம் தெரிவித்துள் ளன.
ரஷ்ய சொசி பிராந்தியத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள 'ஜி8' நாடுகளின் உச்சிமாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனுக்கு பலமான நிதி ஆதரவை வழங்கப்போவதாக 'ஜி 7' நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உக்ரேனில் நிலவும் நெருக்கடிக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வொன்றை எட்டுவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலியஸன் இந்த விவகாரம் தொடர்பில் ஆராய உக்ரேனுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உக்ரேனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிநாட்டு செயலாளர் வில்லியம் ஹேக்இ ஐரோப்பா இந்த நூற்றாண்டில் எதிர்கொண்ட மிகப் பெரிய நெருக்கடியாக உக்ரேனிய விவகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மாதம் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பதவியிலிருந்து வெளியேற்றப் பட்ட பின்னர் பதவியேற்றுள்ள அரசாங்கத்தை அங்கீகரிக்க ரஷ்யா மறுத்து வருகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான முக்கிய உடன்படிக்கையொன்றை யனுகோவிச் கைவிட தீர்மானித்ததையடுத்துஇ அங்கு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக அவர் பாராளுமன்ற தீர்மானத்தின் பிரகாரம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். நன்றி வீரகேசரி
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டம்
08/03/2014 உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரிமியாவில் உள்ள ரஷ்யஆதரவாளர்கள் இன்று தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க கோரி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மூத்த எம்.பி. கிரிகொரி லாபி தெரிவித்திருப்பதாவது:- “கிரிமிய நாடாளுமன்றம் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த வேண்டுகோளை ரஷ்ய அதிபர் பரிசீலிக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் வரும் மார்ச் 16-ந்தேதி கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் ஆதரவாக 86 எம்.பி.க்களில் 78 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்” என்றார். சமீபகாலமாக ரஷ்ய ஆதரவு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா, உக்ரைனின் தன்னாட்சி பெற்ற குடியரசுப் பகுதியாகும். 18-ம் நூற்றாண்டு வரை ரஷ்யாவுடன் இருந்த இந்த பகுதி, உக்ரைன் தனி நாடாக பிரிந்தபோது கிரிமியாவை 1954ம் ஆண்டு சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ
No comments:
Post a Comment