சோகத்தில் முடிந்தது CHOGM


CHOGM 2013பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி ஒருவாறு பொதுநலவாய மாநாட்டை இலங்கை அரசாங்கம் நடாத்தி முடித்துள்ளது. இம்மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள், அரசாங்கம் நடந்துகொண்ட முறை போன்றவற்றால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் மேலும் அதிகரிக்குமா என்ற அச்சம் ஒரு பக்கமும், செலவு செய்யப்பட்ட நிதி விலையேற்றம் மூலமாக மக்களிடம் சுரண்டப்படுமா என்ற அச்சம் ஒரு பக்கமும் தற்போதைய சூழ்நிலையில் நிலவுகிறது.

இந்த மாநாட்டை ஒருசில நாடுகள் புறக்கணித்திருந்தன. இருப்பினும் பெரும்பாலான நாடுகளிலிருந்து ஒரு அரசியல் பிரமுகராவது மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். 9 நாடுகளின் அதிபர்கள், 5 நாடுகளின் பிரதி அதிபர்கள் உட்பட பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளடங்கலாக 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பிரமாண்டமான ஏற்பாடுகள்
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகர அழகுபடுத்துவதற்கு கொழும்பு மாநகரசபை 1,500 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. வீதிப் புனரமைப்பு, நடைபாதைகளை அமைத்தல், அலங்கார செடிகளை வைத்தல், பூங்கா நிர்மாணம், பஸ் தரிப்பிடங்களை நிர்மாணித்தல் மற்றும் மின் விளக்குகளை பொருத்துதல் உள்ளிட்ட வேலைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அதிகளவிலான நிதி செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மாநாட்டு செலவுகள் குறித்து ஐ.தே.க. வெளியிட்டுள்ள செலவு விபரங்கள் வருமாறு;

மாநாட்டுக்கான விளம்பரம் - 10,000 இலட்சம் ரூபா, வாகன இறக்குமதி - 24,000 இலட்சம் ரூபா, மாநாட்டின் முதலாவது அமர்வு - 50 மில்லியன் ரூபா, உத்தியோகபூர்வ இணையத்தளம் - 15 மில்லியன் ரூபா, வாணவேடிக்கை - 2 கோடியே 40 இலட்சம் ரூபா, ஊடக மத்திய நிலையம் - 800 மில்லியன் ரூபா. மொத்தச் செலவு 1400 கோடி ரூபா.

மாநாட்டில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்காக 4,500 விடுதி அறைகள் ஒதுக்கப்பட்டன. இவர்களின் பயன்பாட்டுக்காக 200 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது அந்த வாகனங்கள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது.
இந்தியாவின் அரசியல் காய்நகர்த்தல்
அயல்நாட்டு இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்துகொள்ளாமை பெற்றோர் இல்லாமல் நடைபெற்ற திருமணம்போல இருந்தது. ஆனாலும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகை தந்திருந்தமை இலங்கைக்கு ஓரளவு ஆறுதல்.

தமிழ்நாட்டின் பாரிய அழுத்தத்தையும் தாண்டி மாநாட்டில் கலந்துகொண்டால் அடுத்துவரும் தேர்தலில் சரிவைச் சந்திக்க நேரிடலாம் என்று அச்சத்தின் காரணமாகவே மன்மோகன் சிங் மாநாட்டிலிருந்து இலாவகமாக தப்பித்துக்கொண்டார். இறுதிக்கட்ட யுத்ததின் பின்னர் இலங்கையில் என்ன நடைபெற்றாலும் தமிழகத்தில் கொந்தளிப்பது வழக்கமானதொன்றாகிவிட்டது. இதற்கு அடிபணிந்தாலே அங்குள்ள தமிழ்மக்கள் வாக்களிப்பார்கள் என்பது இன்றயை நியதி.

மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்காகததை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தியா வருகை தராமை வருத்தமளிப்பதாக இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்த டேவிட் கமரூன் ஒருநாள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்று மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் முதலாவது அமர்வு

பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் அரச தலைவர்களின் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை நெலும் பொக்குன (தாமரைத் தடாகம்) அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு செம்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கையின் கலாசார அடையாளங்களைப் பிரதிபலிக்கும் முறையில் அழைத்து வரப்பட்ட அரச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அவரது பாரியார் ஆகியோரினால் வரவேற்கப்பட்டனர்.

இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டு, வாழ்த்துக்கூறும் கலாசார நடனத்தோடு ஆரம்பித்த மாநாட்டின் பிரதான அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்புரை நிகழ்த்தினார். பிரித்தானிய மகாராணியின் பொதுநலவாயத்துக்கான விசேட செய்தியை பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் வாசித்தார். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா செயற்பாடுகளை ஒழுங்கமைத்து உரையாற்றினார்.

பொதுநலவாயத்தின் அடுத்துவரும் இரண்டு வருடங்களுக்கான தலைமைப் பதவியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அயோட் கையளித்தார். இதனையடுத்து பொதுநலவாய மாநாட்டினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இனி தொடர்ந்து தலைமையேற்று நடத்துவார்.
சனல் 4 ஊடகவியலாளர்களுடன் முறுகல்
வவுனியாவுக்கு ரயில் மூலமாக சென்ற சனல் 4 ஊடகவியலாளர்கள் அநுராதபுரத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பட்டனர். இவர்களை அழைத்துவந்த வானுக்கு பணம் கொடுக்காததால், வான் சாரதி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். ஆரம்பத்தில் பணம் செலுத்தமுடியாதென மறுத்த சனல் 4 ஊடகவியலாளர்கள் பின்னர் 30 ஆயிரம் ரூபா பணத்தை கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

மாநாட்டுக்கு வருகைதந்திருந்த எங்களை இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பி்ன்தொடர்வதாக சனல் 4 ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான ஊடகவியலாளர் சந்திப்பில் சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரேயின் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கெலும் மெக்ரே ஏற்பாட்டாளர்களிடம் விவாதித்தார். இதனால் சிறிதுநேரம் ஊடக மத்திய நிலையத்தில் சலசலப்பு நிலவியது. பின்னர் குறித்த செய்தியாளர் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது.

சனல் 4 ஊடகவியலாளர்களுக்குப் பயந்து குறித்த செய்தியாளர் மாநாடு ரத்துச் செய்யப்படவில்லை. மாறாக பல நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு காரணமாகவே ரத்துச் செயப்பட்டதாக ஜனாதிபதியின் வெளிநாட்டு விவகார பேச்சாளர் அநுராத ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்த சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரேயுடனான விவாதத்துக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அழைப்பு விடுத்திருந்தார். இந்த விவாதத்தை ஏற்றுக்கொண்ட மெக்ரே, அதற்காக நியூயோர்க் செல்வதற்கு தம்மிடம் நிதி வசதியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த நேரத்திலும் விவாதத்துக்கு தயார் என்று தெரிவித்துள்ளார்.
குறுக்கிட்ட அஸ்வர் எம்.பி.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தீடீரென புகுந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் எழுப்பிய கேள்வியினால் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைப்பட்டிருந்த ஊடக மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு குறித்த கருத்துகளை தெரிவிக்கும் வகையிலும் ஜனாதிபதியில் ஊடக சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது குறித்தும் அறிவிக்கும் வகையிலும் பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் ஊடகப் பேச்சாளர் ரிச்சர்ட் உக்கு தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறுக்கிட்ட அஸ்வர் எம்.பி. சனல் 4 ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் கூலியாட்கள் என விமர்சித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கொடூரங்கள், காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை தனது கடுமையான தொனியில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்படாத நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சர்வதேச ஊடகவியலாளர்களை சாடியதால் அங்கு பெரும் சர்ச்சை நிலவியது.

இவரை பேச்சை ரிச்சர்ட் உக்கு பல தடவைகள் குறுக்கிட்டு தடுத்தபோதும் எதையும் பொருட்படுத்தாத அஸ்வர் எம்.பி. தன்பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார். இதனால் அங்கு குழுமியிருந்த ஏராளமான சர்வதேச ஊடகவியலாளர்கள் தங்களது அசெளகரியத்தை வெளியிட்டனர்.

பொதுவான ஒரு ஊடக சந்திப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குறுக்கிட்டு எவ்வாறு அதில் கலந்துகொண்டு தனது கருத்தை வெளியிடமுடிமென கேள்வியெழுப்பியபோது, அஸ்வர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை அறிந்திருக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்ப்பதாகவும் ரிச்சர்ட் உக்கு தெரிவித்தார்.
டேவிட் கமரூனின் யாழ். விஜயம்
விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்த பிரித்தானிய பிரதமர் அங்குள்ள மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்தார். தமிழ் மக்களின் உண்மை நிலையை அறிவதற்காகவே, சர்வதேச ஊடகங்களுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றேன். அங்குள்ள களநிலவரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்று டேவிட் கமரூன் தெரிவித்தார்.

1948ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் வடக்கு பகுதிக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் டேவிட் கமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விஜயத்துக்கு இலங்கையின் சில அரசியல்வாதிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

இலங்கை மீது வலுக்கும் சர்வதேச அழுத்தம்இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசு ஒரு விசாரணை மேற்கொள்ளாவிட்டால், பிரர்த்தானியா சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐ.நா. சபையிடம் வலியுறுத்தும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தொடர்ந்தும் அக்கறை காட்டவேண்டுமானால் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளரின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரௌசோ தெரிவித்துள்ளார்.

சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மனித உரிமை தொடர்பான தமது முன்னேற்றங்களை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அறிவித்து வந்துள்ளது. இம்முறையும் அதனை முன்வைக்கவுள்ளது. மனித உரிமையைப் பாதுகாப்பதில் பொறுப்புடனும் செயற்பட்டு வருவதாகவும், இதுதொடர்பில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது.

சம்பிக்க ரணவக்க பலத்த கண்டனம்பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வந்து செருக்கான விதமாக செயற்பட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார். மனித உரிமை மீறல்கள் குறித்து மார்ச் மாதத்துக்குள் விசாரணை நடத்துமாறு கூறுவதற்கு அவருக்கு உரிமையில்லை. யாழ்ப்பாணத்திற்கு செல்லவும் ஊடக சந்திப்புகளை நடத்தவும் அவருக்கு உரிமையில்லை.

பிரித்தானிய பிரதமர் 1700 ஆண்டுகளில்போல் ஏகாதிபத்திய மனநிலையை காட்டினார். 1818ஆம் ஆண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் பற்றி அவர் என்ன கூறப்போகிறார்? பிரித்தானியாவில் 12 ஆயிரம் யானைகள் இருந்தன. கமரூனின் உறவினர்கள் அதனை 400ஆக குறைத்தனர். இன்று அவர் எமக்கு இங்கு வந்து சமத்துவம் பற்றி போதிக்க பார்க்கின்றார்.

இலங்கை சிறிய நாடு என்பதால் கமரூன் சண்டித்தனம் காட்ட வருகிறார். அங்கிருப்பது நிலப்பிரபுத்துவ கொள்கை கொண்ட ராணி. சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இலங்கை வருவதற்கு இடமளித்ததும் தவறு. சனல் 4 தொலைக்காட்சி ஒப்பந்தம் ஒன்றையே இலங்கையில் நிறைவேற்றி வருகிறது என்று சம்பிக்க தனது கண்டத்தை தெரிவித்தார்.

சர்வதேசத்துக்கு ஜனாதிபதியின் கோரிக்கைஇலங்கை ஒரு ஜனநாயாக நாடு. இலங்கை மக்களை பிளவுபடுத்த வேண்டாம். கண்ணாடி கூண்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசியதாவது; இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்துள்ளோம். எமது நாட்டில் மனிதஉரிமை ஆணைக்குழ உள்ளது. அவற்றின்மூலம் தீர்வு முன்வைக்கப்படும். இதனை ஒரே இரவில் செய்துவிட முடியாது. நல்லிணக்கத்துக்கு காலவரையறை இருக்கமுடியாது. அவ்வாறு காலவரையறை விடுப்பதும் தவறாகும்.

வடக்கிலுள்ள முஸ்லிம், சிங்கள மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தொடர்பாக எந்தவொரு சர்வதேச தொலைக்காட்சிகளும் ஆவணப்படங்களைத் தயாரிக்கவில்லை. அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். இதற்கான செயற்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்று நல்லிணக்க செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தோம். நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தென்னாபிரிக்காவி்ன் அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

நாம் பொதுநலவாய விழுமியங்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம். அதனால்தான் ஜனநாயக ரீதியான தேர்தல்களை நடாத்தினோம். சகல செயற்பாடுகளும் இங்கு வெளிப்படையாக உள்ளது. எனவே, எமது நீதிமன்றத்துக்கும் மதிப்பளியுங்கள். எம்மை ஒரு மூளைக்குள் தள்ளிவிட வேண்டாம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பேசுபொருளாக மாறிய மனித உரிமை மீறல்இலங்கை மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பாகவும் கடத்தப்பட்ட மக்கள் தொடம்பாகவும் நியூஸிலாந்து பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுன் கலந்துரையாடியுள்ளார். அரச தலைவர்களின் மாநாட்டின் இறுதி நாளான்று சுமார் 15 நிமிடங்கள் வரை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. முக்கியமாக கடத்தப்பட்ட மக்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேட்ட நியூஸிலாந்து பிரதமர், அவர்களை அடையாளம்காண துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கை சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக் காட்டினால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் புலம்பெயர் மக்கள் சில நாடுகளை இயக்கி வருவதன் விளைவாகவே சில நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை இதுவரை மேலோட்டமான நடவடிக்கை மாத்திரமே எடுத்துள்ளதாகவும் கனடா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பில் போதுமான விடயங்களை செய்துள்ளதாகவும் கனடாவின் விமர்சனமானது ஏற்கதக்கதல்ல என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் வெளிவிவகாரம் மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார செயலாளர் தீபக் ஒப்ரோய் நாடு திரும்பி இலங்கையின் கடந்த காலம் மற்றும் தற்போதைய நிலைமைகள் ஏழ்மையான நிலையிலேயே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் சனல் 4 கேள்விஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என சனல் 4 ஊடகவியலாளர் ஜெனத்தன் மில்லர் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நாங்கள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அவ்விசாரணைகள் தொர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இது ஒரு நாளோ, இரண்டு நாளோ அல்லது ஐந்து வருடமோ நடைபெற்ற யுத்தத்தை அல்ல. முப்பது வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். போரில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலர் உயிரிழந்துள்ளனர். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை பாதுகாகப்பட்டுள்ளது. யார் எம்மீது குற்றம்சாட்டினாலும், விசாரணைக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாநாடு மோல்டா நாட்டில்2015ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மோல்டா நாட்டில் நடத்துவதென பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். இதுவொரு எதிர்பார்க்கப்படாத முடிவு என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதில் இருந்து மொரீசியஸ் விலகி கொண்டதையடுத்து மோல்டாவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடான மால்டா ஏற்கனவே 2005ஆம் ஆண்டில் பொதுநலவாய மாநாட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடாத்துவதற்கு தீர்மானித்திருந்த மொரீசியஸ் அந்நாட்டு தமிழ் மக்களின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதற்காக மாநாட்டை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டின் மறுபக்கம்மனித உரிமைகள் மீறல் தொடர்பான பேச்சு எமது நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகவே காணப்பட்டது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டினால் அது சர்வதேசப் பிரச்சினையாக மாறியுள்ளது. அரசாங்கமே இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்பாராத வகையில் பிரித்தானிய பிரதமர் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளமையால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இப்பிரச்சினை குறித்த அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம். நடப்பாண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மனித உரிமைகள் மீறல் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்குள் இலங்கை எடுக்கப்போகும் நடவடிக்கையை வைத்துத்தான் நாட்டின் தலைவிதி எழுதப்படப் போகிறது. இவ்வாறு இக்கட்டான ஒரு சூழ்நிலை வருமென்று ஏற்னவே தெரிந்திருந்தால், பொதுநலவாய மாநாட்டை நடத்துவதில் இலங்கை ஒருவேளை பின்வாங்கியிருக்கலாம். தற்போது சொந்தச் செலவில் சூனியம் வைத்துள்ள கதையாக இலங்கை அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது.
(பொதுநலவாய மாநாட்டிலிருந்து முஹம்மட் பிறவ்ஸ்)
நன்றி தேனீ

No comments: