[ 1 ]
கா.சிவத்தம்பி ஈழ இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியம். இது வடக்குப்பகுதி இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு, இலங்கை முஸ்லீம்களின் இலக்கியம். இவர்கள் வடகிழக்கிலும் தெற்கிலும் வாழ்பவர்கள். மூன்று மலையக இலக்கியம்.
மலையக இலக்கியம் பிற இரண்டிலிருந்தும் வேறுபட்ட வட்டார- பண்பாட்டு அடையாளம் கொண்டது. எந்த ஓர் இலக்கியவகைமையைப்போலவும் இதுவும் ஒருசில அடையாளங்களை மட்டும்கொண்டு செய்யப்படும் தோராயமான பகுப்புதான். படைப்புகளின் சமூக-அரசியல் பின்னணியைப்புரிந்துகொள்வதற்கு மட்டுமே இது உதவும். இதனடிப்படையில் எந்த ஒரு படைப்பின் கலைப்பெறுமதியை வகுத்துக்கொள்ள முடியாது. படைப்பை முழுமுற்றாக இந்த அடையாளத்தால் குறிப்பிடவும் முடியாது
மலையகம் என்று சொல்லப்படும் நிலப்பரப்பு இலங்கையின் நுவரேலியா பகுதித் தேயிலைத்தோட்டங்கள் அடங்கிய மலைப்பகுதியாகும். இங்கே 1824 ஆம் ஆண்டு கண்டி பகுதியில் தேயிலை-காப்பி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. அதற்கான கூலி உழைப்புக்காக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து கொண்டுவந்து குடியேற்றப்பட்டனர்.
17690 களிலும் 1877 களிலும் தமிழகத்தை உலுக்கிய மாபெரும் செயற்கைப்பஞ்சங்களில் இங்கே லட்சக்கணக்கானவர்கள் பட்டினியில் மடிந்தார்கள். அந்தப் பஞ்சங்களிலிருந்து தப்பும்பொருட்டு மக்கள் தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டு கூலி உழைப்பாளிகளாக கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே கரீபியன் தீவுகள் வரை பல்வேறு நாடுகளில் சென்று குடியேறினார்கள். இவர்களில் மலேசியா ,இலங்கை, பர்மா போன்ற சில நாடுகளிலேயே அவர்கள் இன்று தமிழ்பேசும் சமூகங்களாக நீடிக்கின்றார்கள். பிறர் தோல் நிறத்தாலும் சில பண்பாட்டுக்கூறுகளாலும் மட்டுமே தமிழர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
இலங்கை மலையகத் தமிழ்மக்கள் அவ்வாறு குடியேறியவர்களின் சந்ததியினராக இன்று இலங்கையில் வாழ்கிறார்கள். இன்று நான்கு ஐந்தாம் தலைமுறையினராக இவர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இப்போதும் தோட்டக்கூலிகளாகவே உள்ளனர். அவர்களின் அடிமைக்கூலி வாழ்க்கைச்சூழலில் சமீப காலமாகவே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மலையக இலக்கியம் என்பது இந்த மக்களின் வாழ்க்கையைக் களமாகவும் கருவாகவும் கொண்டு எழுதப்படும் எழுத்துக்களைக் குறிக்கிறது.
இவ்வாறு புலம்பெயர்ந்து தோட்டங்களில் அடிமைக்கூலியாகக் கொடுமைகளுக்கு ஆளாகி வாழ்ந்த மக்களைப்பற்றி தமிழிலக்கியத்தில் நேரடியான முதல்பதிவு என்பது பாரதி எழுதிய கரும்புத்தோட்டத்திலே என்ற கவிதை. அது தமிழகச்சூழலில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியது. தமிழகத்தின் தேசிய இயக்கத்தினரில் கோ.நடேசய்யர், கோ. சாரங்கபாணி போன்று சிலர் மலேசியா, பர்மா. இங்கை போன்ற ஊர்களுக்குச் சென்று அம்மக்களுக்கு அரசியல் உரிமையுணர்ச்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட அது வழிவகுத்தது
மலையகத்தின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கும் முக்கியமான முதல் கதை என்று புதுமைப்பித்தனின் ’துன்பக்கேணி’யை சொல்லலாம். கேள்விப்பட்ட தகவல்களைக் கொண்டே புதுமைப்பித்தன் இந்தக்கதையை எழுதியிருக்கிறார். அடிமைக்கூலியாகச் சென்ற ஒரு தலித் குடும்பத்தின் நோயும் அவமதிப்பும் மரணமும் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்கதை உண்மையில் ஒரு நாவலுக்கான கட்டமைப்பு கொண்டது. புதுமைப்பித்தன் அதை பொறுப்பாக எழுதிமுடிக்கவில்லை. ஆகவே பிற்பகுதி சூம்பிப்போன ஆக்கமாக இது நின்றுவிட்டது
மலையக மக்கள் பெரும்பாலும் அடித்தளத்தவர். அவர்களின் உணர்ச்சிவெளிப்பாடு நாட்டார் பாடலாகவே இருந்துள்ளது. மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் என்ற தன் கட்டுரையில் லெனின் மதிவானம் எடுத்துக்காட்டியிருக்கும் இப்பாடல் ஓர் உதரணம்.
ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்
போரான கண்டியே
பெத்த தாயே நா மறந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்
போரான கண்டியே
பெத்த தாயே நா மறந்தேன்
பாதையில வீடிருக்க
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை?
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை?
பழனியில் சம்பாச் சோறிருப்பதாக நினைத்துக்கொள்ளும் அந்தக் கற்பனையின் துயரம் இந்தப்பாடலை அழுத்தம் மிக்கதாக ஆக்குகிறது.
ஆங்கிலத் தோட்டமுடையமையாளர்கள் அவர்களின் ஏவலர்களான கங்காணிகள் நடுவே வாழ்க்கையை ஒரு பெரும் வதையாக மாற்றிக்கொண்ட மலையக மக்களிடையே அடிப்படை மனிதஉரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் போராடவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது தொழிற்சங்க இயக்கம். அதன் முன்னோடி என்று கோ.நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார்.
நடேசையர் 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தவர். ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் எழவேண்டுமென்ற நோக்கில் 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தகமித்திரன் என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார். தஞ்சை மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கினார். அத்தகைய சங்கவேலைக்காக கொழும்புக்குச் சென்றார். அங்கே மலையகத் தொழிலாளரின் அடிமைவாழ்க்கையைப்பற்றி அறிந்து இலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கி மலையகத்தமிழர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார்.
நடேசய்யர் காங்கிரஸ் பின்னணி கொண்டவர். அவர் ஆரம்பித்த தேசநேசன் இலங்கையின் முதல் தமிழ் நாளிதழ். திருவிகவுடன் நெருக்கமான உறவுகொண்டிருந்தார். மலையக இலக்கியத்தின் பிதா என்று நடேசய்யர் குறிப்பிடப்படுகிறார். மலையக இலக்கியத்தில் முக்கியமான தொடக்கப்புள்ளி என்று குறிப்பிடப்படுபவர் சீ.வீ.வேலுப்பிள்ளை. வீடற்றவன், இனிப்படமாட்டேன்,வாழ்வற்ற வாழ்வு போன்ற நூல்கள் இன்றும் பேசப்படுகின்றன.
மலையகத்தில் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தபோது இடதுசாரி சிந்தனைகள் வேரூன்ற ஆரம்பித்தன. மலையக முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி என்று கே.கணேஷ் குறிப்பிடப்படுகிறார். 1946ல் அகில இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை கே.கணேஷ் உருவாக்கினார். மாத்தளை சோமு ,அந்தனி ஜீவா,சாரல் நாடன் போன்றவர்கள் பரவலாக அறியப்பட்ட மலையக எழுத்தாளர்கள்.
தெளிவத்தை ஜோசப் மலையக எழுத்தாளர்களில் முக்கியமானவர். அழகியல்ரீதியாக மலையக எழுத்து முதிர்ச்சியடைந்தது தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள் வழியாகத்தான் என்று நினைக்கிறேன்
[ 2 ]
வாசிப்பு வசதிக்காக இலக்கியப்படைப்புகளை இரண்டாகப் பிரிக்கலாம். அகம்நோக்கி எழுதக்கூடியவர்கள், புறம் நோக்கி எழுதக்கூடியவர்கள். இலக்கியம் எதுவானாலும் அது ஓர் அகநெருக்கடியில் இருந்தே உருவாகிறது. எத்தனைஅக எழுச்சி இருந்தாலும் புனைவிலக்கியம் புறவுலகைச் சித்தரிக்கையிலேயே நிகழமுடியும். அகமும் புறமும் கலந்ததே புனைவுகளம். வேறுபாடு அப்படைப்பாளி புனைவின் மையத்தரிசனத்தை எங்கிருந்து பெறுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டது
தன் தரிசனத்தைப் புறநிகழ்வுகளில் இருந்து பெறும் படைப்பாளிகளை புறம்நோக்கி எழுதுபவர்கள் எனலாம். அவர்களின் எழுத்தில் சமூகவியலும் அரசியலும் முக்கியமான பங்குவகிக்கின்றன.தங்களைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையின் புறவயமான யுதார்த்தங்களை நோக்கி அவற்றிலிருந்து பெற்றுக்கொண்டவற்றைக்கொண்டு தங்கள் புனைவுகளை உருவாக்குபவர்கள் அவர்கள். ஆகவே சமூக அரசியல் சூழலை அறிவதற்காகவும் நாம் அவர்களின் படைப்புகளை வாசிக்கிறோம்.
ஆரம்பகால தமிழிலக்கியத்தில் அகநோக்கு எழுத்துக்கு ராஜம் அய்யர் உதாரணம் என்றால் புறநோக்கு எழுத்துக்கு மாதவையா உதாரணம். மாதவையாவைப் பின்பற்றி சமூக அவதானிப்புகளை எழுதிய எழுத்தாளர்களின் நீண்டவரிசை நம்மிடையே உள்ளது. அவர்களின் முதல் வரிசையினர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் வரிசையினர் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
தேசிய இயக்கம் என்பது சமூகசீர்த்திருத்தநோக்குள்ளது. இருபதாம்நூற்றாண்டின் நவீன சுதந்திர ஜனநாயக நோக்கில் நம்முடைய நிலப்பிரபுத்துவச் சமூகத்தை மாற்றியமைக்க அது முயன்றது. இனக்குழுத்தன்மைகளையும் வட்டாரத்தன்மைகளையும் தொகுத்து இந்தியதேசிய அடையாளத்தை கட்டமைக்கும் பணியைச் செய்யக்கூடியது. தமிழில் ஆரம்பகாலப் படைப்பாளிகள் பலரும் இவ்வகையினரே.
அதன்பின்னர் இங்கே முற்போக்கு இலக்கியம் உதயமானது. அது சமூகத்திலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் முக்கியமாக கவனப்படுத்தியது. அதற்கு எதிரான எதிர்ப்பை உருவாக்கும் நோக்கு கொண்டதாகவும், அதற்காக சமூக உள்முரண்பாடுகளை வலுவாக முன்னிறுத்தக்கூடியதாகவும் இருந்தது.
தேசிய இயக்க எழுத்தாளர்களில் கல்கி, ராஜாஜி போன்றவர்கள் கட்சி சார்புடையவர்களாக இருந்தனர். நேரடி அரசியல்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சங்கர்ராம் , சி.சு.செல்லப்பா போன்றவர்களுக்கு அப்படி கட்சி சார்போ அரசியல் ஈடுபாடோ கிடையாது. அவர்களின் தேசிய இயக்கச்சார்பு என்பது அவர்கள் தங்கள் பார்வைகளில் உள்ளடங்கியிருந்தது. படைப்பில் உள்ளடக்கமாக மட்டும் வெளிப்பட்டது
அதேபோல தமிழில் முற்போக்கு இலக்கியமரபில் தொ.மு.சி.ரகுநாதன், கு.சின்னப்ப பாரதி போன்றவர்கள் வெளிப்படையான கட்சிச் சார்பும் அரசியல் ஈடுபாடும் கொண்டிருந்தனர். ஜெயகாந்தன், பூமணி போன்றவர்களை உள்ளடக்கவகையில் முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லமுடியும். ஆனால் அவர்களுக்கு கட்சியும் அரசியலும் இல்லை. முடிந்தவரை அத்தகைய நிலைப்பாடுகளைத் தவிர்க்கவும், விமர்சனநோக்குடன் அனைத்தையும் அணுகவும் முயன்றவர்கள் அவர்கள்.
மலையக இலக்கியத்தில் நடேசய்யரை தேசிய இலக்கியமரபைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தலாம். தெளிவத்தை ஜோசப் அவரது பார்வை காரணமாக முற்போக்கு வகைமைக்குள் சேர்க்கப்படவேண்டியவர். ஆனால் கட்சிசார்போ அரசியல் நடவடிக்கையோ இல்லாதவர். வெளிப்படையான கொள்கைமுழக்கமோ கோட்பாடுசார்ந்த ஆராய்ச்சியோ இல்லாத புனைவுலகம் அவருடையது. ஆகவே வழக்கம்போல அவரை அங்குள்ள இடதுசாரியினர் தங்கள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மட்டுமல்ல அவர் தங்கள் அரசியல்நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதற்காக அவ்வப்போது எதிரிகளின் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்கள்.
உதாரணமாக அவரது புகழ்பெற்ற ’காலங்கள் சாவதில்லை’ என்ற நாவலில் தொழிற்சங்க அரசியல் விரிவாகப் பேசப்படவில்லை என்பதனால் அது இடதுசாரிகளின் பங்களிப்பை மழுங்கடிக்க முயலும் பிற்போக்குநாவல் என்று அங்கே சொல்லப்பட்டுள்ளது. தான் எழுதும் காலகட்டத்தில் இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் பெரியதாக வளர்ந்திருக்கவில்லை என அதற்கு தெளிவத்தை பதில்சொன்னார். இல்லை வளர்ந்திருந்தது என இடதுசாரிகள் வாதிட்டனர்.
இந்த வாதிடலே அபத்தம். ஒரு புனைவுக்குள் ஏன் ஒரு விஷயம் வந்தது அல்லது வரவில்லை என விவாதிப்பது சாத்தியமே அல்ல. தெளிவத்தை உருவாக்கிய யதார்த்தத்தில் அது இல்லை. அந்நாவலை வாசிக்கும்போது அது உருவாக்கும் கடுமையான வாழ்க்கைச் சித்திரத்தின் தீவிரத்தை தொழிற்சங்க அரசியல் பற்றிய விவரிப்பு இல்லாமலாக்கிவிடும் என்ற காரணத்தால் ஆசிரியரின் புனைவொருமை சார்ந்த பிரக்ஞை தொழிற்சங்க அரசியலை விட்டுவிட்டது என்றே நான் உணர்ந்தேன்.
ஆசிரியன் முதன்மையாகக் கொள்ளவேண்டியது புனைவுக்குள் உள்ள ஒருமையை மட்டுமே. புனைவுக்குள் உள்ள யதார்த்தமே அவன் முன்வைப்பது. அப்புனைவுக்குள் அது புனைவொருமையுடன் முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதே முக்கியம். அதற்கு வெளியே உள்ள யதார்த்தம் அளவுகோல் ஆகாது. வெளியே உள்ளதாக சொல்லப்படும் யதார்த்தமே கூட ஒருவகை அரசியல்- வரலாற்றுப்புனைவே என்று ஆசிரியன் பதிலுரைக்கக்கூடும்.
தெளிவத்தை ஜோசப்பின் புனைவுலகின் அரசியலை ‘கோஷங்கள் அற்ற முற்போக்கு நோக்கு’ என்று சொல்லலாம். மார்க்ஸியம் இந்நூற்றாண்டு சிந்தனையாளனுக்கு அளித்துள்ள சமூக ஆய்வுச் சட்டகம் சில அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டது. சமூகம் சுரண்டுபவன் x சுரண்டப்படுபவன் என்ற இருமையினால் ஆனது என்றும் உலகியல்வாழ்க்கையின் துயரங்களுக்கு இந்தச் சுரண்டலே முதன்மையான காரணம் என்பதும் முதல்கொள்கை. சமூகவாழ்க்கை என்பது சமூக அதிகாரங்களின் விளையாட்டரங்கு என்பது இரண்டாவது கொள்கை. இவ்விரண்டையும் பற்றிய பிரக்ஞையை அடைவது விடுதலையை அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது கொள்கை. இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் புனைவுலகம் இயங்குகிறது என்பதைக் காணலாம்
தெளிவத்தை ஜோசப் பெரும்பாலும் மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையின் அவலம் பற்றிப் பேசுகிறார். ஒடுக்குமுறையின் நுண்ணிய செயல்பாடுகளைப் பலகோணங்களில் சித்தரிக்கும் கதைகள் அவருடையவை. ஒடுக்குமுறையை புரிந்துகொள்ளவும் அதிலிருந்து மீளவும் செய்யப்படும் பலவீனமான முயற்சிகளைக் காட்டும் கதைகள். அந்த மக்களுடன் நாம் நம்மை அடையாளம் காணச்செய்வதே இவற்றின் நோக்கமாக இருக்கிறது.
இந்நூலின் முதன்மையான கதையாக உள்ளது மீன். இதை தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக நான் என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் குறிப்பிட்டிருந்தேன். மலையகத்தமிழர்கள் தேயிலைத்தோட்டங்களில் வாழும் வாழ்க்கையின் அழுத்தமான சித்திரத்தை சுருக்கமாக உருவாக்கிவிடுகிறது இக்கதை. பலவகையில் எனக்குள் விரிந்துகொண்டே இருந்த புனைவு இது
இலங்கைத்தீவு என்றாலே இடுங்கலான குறுகிய இடம் என்ற மனச்சித்திரம் எனக்கிருந்தது. இக்கதை அதை மீண்டும் அளித்தது. தலைசாய்ப்பதற்கான இடத்துக்காகக் கெஞ்சி மன்றாடி போராடும் ஒரு தோட்டத்தொழிலாளரின் வாழ்க்கை இது. லாயம் என்று சொல்லப்படும் குறுகலான கொட்டடி. அதில் பிள்ளைகுட்டிகளுடன் நெருக்கியடித்து ஒண்டிக்கொள்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் இழப்பது அந்தரங்கத்தை.
அந்தரங்கம் இல்லாத வாழ்க்கை என்பது வாழ்க்கையே அல்ல. அது வெறுமே இருத்தல் மட்டுமே. முதலாளிக்கு வேலைசெய்வதற்காக உடலை தக்கவைத்துக்கொள்ளுதல், அவ்வளவுதான். அந்த நிலத்தில் வாழ்ந்து சாகலாம், ஆனால் அதில் ஒரு அடியைக்கூட அவன் சொந்தமாக நினைக்கமுடியாது. ஒரு குடிசை கட்டிக்கொள்ளக்கூடாது. இன்னும் சற்று பெரிய ‘காமிரா’வுக்காக கெஞ்சுகிறான். ஆனால் அதை அடைவதற்கான அதிகார விளையாட்டு அவனுக்குப்புரிவதேஇல்லை
சின்னஞ்சிறு கதைக்குள் ஓர் அரசாங்கம் செயல்படும் விதத்தையே சொல்லிவிடுகிறார் தெளிவத்தை. மூன்று அடுக்குகள் உள்ளன. துரைதான் ஆளும்வர்க்கம்.. கங்காணி அதிகாரி வர்க்கம். [Beurocracy] ஆளும்தரப்பிடம் நேரடியாக முறையிட முடியாது. அது அதிகாரவர்க்கத்தை கைகாட்டிவிடும். அது ஆளும்தரப்பின் தந்திரம். கீழே இருப்பவர்களுடனான தொடர்புக்காக அல்ல, தொடர்பை முறிப்பதற்காகவே அது அதிகார வர்க்கத்தை வைத்திருக்கிறது. எதுவும் ஆளும்தரப்பு வரை சென்று சேராமல் அது பார்த்துக்கொள்கிறது.
அந்தச் சேவையின் ஊதியமாக அதிகாரவர்க்கத்துக்கு அளிக்கப்படுவது லஞ்சஊழலுக்கான உரிமை. ஆளும்வர்க்கம் லாபம் கொய்கிறது. அதிகார வர்க்கம் லஞ்சத்தைப் பெறுகிறது. இரண்டுமே உழைக்கும்வர்க்கத்திடமிருந்து சுரண்டப்படுகின்றன. அந்த லஞ்ச ஊழலின் ஒரு சிக்கலான தருணத்தை எப்படி நளினமாகக் கடந்துசெல்கிறது அதிகாரவர்க்கம் என்பதைக் காட்டும் கதை இது. அதிலும் கடைசியில் பலி உழைப்பாளிதான்
ஆனால் இக்கதையை முதன்மையான கதையாக ஆக்குவது இதில் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் அந்தத் தொழிலாளியின் இழிவின் கணம்தான். சுயவதையாக அவனில் நீடிக்கும் ஒரு தருணம் அது. உண்மையில் அதனூடாக நான் அவனைப்பார்க்கவில்லை, அவனுடைய மகள்களையே பார்க்கிறேன். அவர்கள்தான் கடைசியாக சுரண்டப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களின் கடைசிநிலையில் இருப்பவர்கள்.
பலகோணங்களில் திறக்கும் பத்து முக்கியமான கதைகளின் தொகுதி இது. நம் மண்ணிலிருந்து உதிர்ந்து சென்ற நம் ரத்தங்கள் எப்படி வாழ்ந்தனர் எப்படிப் போராடினர் எப்படி எழுந்தனர் என்பதற்கான ஆவணம். ஆகவே இது நமது வரலாறு.
[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதியின் முன்னுரை]
Nantri:
No comments:
Post a Comment