தமிழ் சினிமா

நய்யாண்டி

தேசிய விருது பெற்ற இயக்குனர் சற்குணம், நடிகர் தனுஷ் இருவரும் கைகோர்த்திருக்கும் படம் நய்யாண்டி.
கும்பகோணத்தில் குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் குடும்பத்தின் இளைய மகன் சின்ன வண்டாக வருகிறார் தனுஷ்.
எப்போதும் தனது நண்பர்களுடனேயே அரட்டையடித்தபடி சுற்றித்திரியும் தனுஷ், பாட்டி வீட்டுக்கு வந்த வனரோஜா(நஸ்ரியா)வை பார்த்த மயக்கத்தில் காதலில் விழுகிறார்.
பின் என்ன வழக்கம்போல் ஹீரோயினையே சுற்றி வந்து, தனது காதல் வலையில் நஸ்ரியாவை விழவைக்கிறார் தனுஷ்.
இதற்கிடையில் தனது மகளுக்கு(நஸ்ரியா) சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக மாப்பிள்ளை பார்த்து நிச்சயத்தை நடத்தி விடுகிறார் ஆடுகளம் நரேன்.
இது தெரியாமல் காதலியின்(நஸ்ரியா) பிறந்த நாளுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக, நஸ்ரியாவை சந்திக்கும் தனுஷுக்கு தெரியவருகிறது இந்த ஷாக் நியூஸ்.
இதையடுத்து ஓட்டம் பிடிக்கும் ஜோடி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்கிறது.
தனது இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணமாகாத நிலையில் தான் இவ்வாறு செய்தது வீட்டில் தெரிந்தால், பெரிய ரணகளம் ஏற்படும் என்று பயந்து நஸ்ரியாவை வேலைக்காரியாக அனுப்பி தனதுவீட்டில் தஞ்சம் அடைய வைக்கிறார் தனுஷ்.
வீட்டிற்கு வந்த நஸ்ரியாவின் மீது மாறி மாறி ரூட்டு விடுகிறார்கள் தனுஷின் அண்ணன்களான ஸ்ரீமன் மற்றும் சத்யன்.
இறுதியில் இவர்கள் வீட்டில் தெரிந்து ஏற்றுக்கொண்டார்களா என்பதே வளவளவென செல்லும் மீதிக்கதை.
சின்ன வண்டு கதாபாத்திரத்துக்கு ஏற்ற சரியான பொருத்தம் தான் தனுஷ் என்றாலும், தனுஷுக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகனை இப்படத்தில் எந்த இடத்திலும் பார்க்கமுடியவில்லை. அது தனுஷின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
அதேபோல் ஓப்பனிங் பில்டப், சில பஞ்சஸ், இடைவெளியிலும் கிளைமேக்ஸ்லயும் பத்து பேரை பந்தாடி ஹீரோயிசம் காட்டுவது போன்ற காட்சிகளை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒப்பேத்துவார்களோ!
நஸ்ரியா தனது நடிப்பால் ஏதோ ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
தனுஷின் கூட்டாளிகளாக சூரி, சதீஷ், இமான் அண்ணாச்சி, அஷ்வின் ராஜா ஆகியோர் முதல் பாதியில் தத்தம் தமது பாணியில் வசனத்தை தெளித்தது நல்ல டைம் பாஸ்.
தனுஷின் தந்தையாக வரும் பிரமிட் நடராஜன் இங்கிலிஷ் தெரியாமல் விழிக்கும்போதும் நஸ்ரியாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரிந்தபிறகும் தன் நடிப்பில் கவர்கிறார்.
இரண்டாம் பாதியில் ஸ்ரீமன், சத்யனின் அலப்பரைகள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஜிப்ரானின் இசையில் 'டெடி பியர்' பாடல் கேட்டபோது ரசிக்கவைத்த அளவுக்கு காட்சியமைப்பில் கவர தவறுகிறது.
'ஏ லே லே எட்டிப் பார்த்தாலே', 'இனிக்க இனிக்க' பாடல் மெலோடி தன்மையில் லைட்டாக ஈர்க்கிறது. இக்கதைக்கு பின்னணி இசையில், இதற்கு மேல் எதுவும் தரமுடியாது.
படத்தின் ஒளிப்பதிவு வேல்ராஜ் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், ஒரு இடத்தில் கூட கமெரா அவரது மொழிப் பேசவில்லை.
ராஜாமுஹமதுவின் படத்தொகுப்பும் ஏதோ இந்த கதைக்கு ஏற்ற கட்டிங்கில் நகர்கிறதே தவிர புதிய யுக்தி ஒன்றும் இல்லை.
களவாணி போன்ற ஒரு கமர்ஷியல் படத்தையும், வாகை சூட வா போன்ற ஒரு தரமான படத்தையும் தந்த சற்குணம்... இப்படத்தில் ரொம்பவும் அட்டுப் பழசான கதையை எடுத்து தூசி தட்டியுள்ளார். அதிலும் பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
உண்மையிலேயே தேசிய விருது பெற்ற நடிகர் - இயக்குனரின் கூட்டணியில் உருவான படம்தானா இது..? என்று நம்மை பல இடங்களில் நெளியவைக்கும் பழைய திரைக்கதை பாணி.
ஏற்கனவே தொப்புள் பிரச்சனையால் டேமேஜான சற்குணத்தின் பெயர் இந்த கதையமைப்பிலும் பெரிதாகவே டேமேஜாகியிருக்கிறது.
மொத்தத்தில் பொழுதை நக்கல் நய்யாண்டியுடன் களிக்க மட்டுமே வெளிவந்துள்ளது இந்த நய்யாண்டி.
நடிகர்: தனுஷ், சூரி, சத்யன், சதீஸ், இமான் அண்ணாச்சி, ஸ்ரீமன், வம்சி கிருஷ்ணா
நடிகை: நஸ்ரியா நசிம்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: சற்குணம்
தயாரிப்பு: எஸ்.கதிரேசன்
நன்றி விடுப்பு

No comments: