ஸ்ரீ காசியின் மகிமையும் காசி யாத்திரையின் பலன்களும் எனது அனுபவங்களும் பரமசாமி பஞ்சாட்சரம்

ஆனை முகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு

ஸ்ரீ காசியின் மகிமையும் காசி யாத்திரையின் பலன்களும் எனது அனுபவங்களும்
பரமசாமி பஞ்சாட்சரம்




1.0     காசியின் மகிமை
மக்கள் ஆதிகாலத்திலிருந்து தொடர்ச்சியாக வசித்து வருவதும் உலகில் மிகப் பழைமையானதும் ஆகிய நகரம் காசி ஆகும். Kaasi is the oldest living city in the world.
ஆதிகாலத்தில் கட்டப்பட்ட நகரத்தின் அமைப்பில் எதுவித மாற்றமும் செய்யப்படாமல் பராமரிக்கப்பட்டு வருவதால் அது பழைய வாழும் நகரம் என்ற சிறப்பை இன்றும் தக்கவைத்துள்ளது. 
புண்ணிய தலமாக இருப்பதினாலும், ஆன்மீகம் தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டு இருப்பதினாலும், இந்நகரம் இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் (Spiritual capital of India) என்ற புகழுடன் இன்றும் விளங்குகிறது.
ஆதிகாலம் தொட்டுக் காசியை ஆண்டுவந்த அரசர்களும், இந்தியாவை ஆட்சி செய்துவந்த மற்றைய அரசர்களும், வெளிநாட்டு அரசர்கள் சிலரும், தனவந்தர்களும் காசியில் இருப்பவர்களுக்கும், காசியாத்திரைக்கு வருபவர்களுக்கும் ஆன்மீக அறிவை வளர்ப்பதற்காகவும், தெய்வ வழிபாடு, தவம், தியானம், பிதிர் கருமம், ஸ்நானம் (தீர்த்தம் ஆடுதல் - Holy Dip) ஆகியவற்றைச் செய்வதற்காகவும், கங்கைக் கரையில் கோவில்களையும், கோபுரங்களையும், தங்கு மடங்களையும், பார்வை மண்டபங்களையும், படித் துறைமுகங்களையும், படிக்கட்டுகளையும், பாதுகாப்பு அரண்களையும் கட்டி வைத்துள்ளனர்.


காசி நகரமும் - கங்கை நதியும்

காசி நகரமும் - கங்கை நதியும்




காசி நகரமும் - கங்கை நதியும்





காசிநகரத்தின் ஒடுக்கமான பாதைகளில் உயிரினங்கள்
காசிநகரத்தில் ஒரு பாதை (Ancient Lanes)





காசிநகரமும் கங்கை நதியும்

1.1     முனிவர்களும் ஞான நெறிப் புலவர்களும்
தொன்று தொட்டு இப்புனிதத் தலமாகிய காசியில் முனிவர்களும், தவசிகளும் திருவருளால் ஈர்க்கப்பட்டுத் தவம் செய்து வந்துள்ளார்கள். இத்தலம் மகரிஷி வேத வியாசர், துளசிதாசர், சூர்தாசர், கபீர்தாசர், குமரகுருபரர் ஆகியோர் வாழ்ந்து அருள் பரப்பிய ஞானபூமியாகும்.
மார்க்கண்டேய மகரிஷி, திருமங்கையாழ்வார், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், சைதன்யர், வேதாந்த தேசிகர், கபீர்தாசர், துளசிதாசர், இராமானந்தர், சூர்தாசர் போன்ற ஞானநெறிப் புலவர்களாற் பாடப் பெற்ற திருத்தலம் காசியாகும். இவர்களால் எழுதப்பட்ட பாடல்கள் இன்றும் எங்கும் எல்லோராலும் பாடப்பட்டு வருகின்றன. ¤



1.2   காசியும் புராண இலக்கியங்களும்
கந்தபுராணம், பிரம்மவைவர்த்த புராணம், பிரம்ம புராணம், வாயுபுராணம், மச்சபுராணம், கூர்மபுராணம், பத்மபுராணம், வாமனபுராணம், இலிங்கபுராணம், நாரத புராணம், சிவமஹாபுராணம், பாகவத்புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினிபுராணம் ஆகிய 14 புராணங்களிலும், காசிரகசியம், அரிச்சந்திரசரிதம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய இலக்கியங்களிலும் காசியின் பெருமை விரிவாக எழுதப்பட்டிருக்கின்றது. 
பல வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள் காசியில் தோன்றியமையும், பிரம்ம சூத்திரம் முதலான பல அரிய நூல்களுக்கு விரிவுரை இயற்றப்பட்டமையும், காசியிலே மலைமகள் அலைமகளோடு கலைமகளின் பேரருளும் பாலித்திருந்ததைக் காட்டுகின்றது.
1.3     இந்தியாவின் இதிகாசங்களும் காசியும்
இராமர் காசிக்கு வந்து தனது தந்தைக்குப் பிதிர்காரியம் செய்ததையும், அவர் தனது பாவங்களைப் போக்கு வதற்குக் காசி வந்து சிவனை வழிபட்டுப் பூசைகள் செய்ததையும் இந்தியாவின் இதிகாசமான இராமா யணத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் இராமர் தனது தந்தை தசரதருக்குக் கருமம் செய்த இடம், காசிக் கரையில் உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் என்றதும் இராமாயணத்திற் கூறப்பட்டிருக்கின்றது.
இந்த இடத்தில் இரண்டடுக்கு இராமர் கோவிலும், ஒரு ஆலமரமும் இப்பொழுதும் காட்சியளிக்கின்றன.
நிலத்தளத்தில் (ground floor) இராமர் கோவிலும், மரத்தின் மேற்பக்கமும், நிலத்தின் கீழ்த்தளத்தில் (basement) தசரதர், இராமர், சீதை, இலக்குமணர், அனுமார் ஆகியயோரின் விக்கிரகங்களும், ஒரு பக்கத்தில் ஆலமரத்தின் அடிப்பாகமும், அதன் வேர்களும் காணப்படுகின்றன. இங்கு அடிமரத்திற்கும், அதன் வேர்களுக்கும் பூசை கிரமமாகச் செய்யப்படுகிறது.
இந்தியாவின் இன்னுமொரு இதிகாசமான மகாபாரதத்தில் பாண்டவர்கள் போருக்குப் போவதற்கு முன்பு தங்கள் மல்யுத்த வீரர்களைக் காசியில் இருக்கும் அனுமான் கரைக்கு அனுப்பி மல்யுத்தம் பழக்கினார்கள் என்றும், குருக்ஷேத்திரப் போரின் விளைவால் தங்களுக்குப் பாவங்கள் ஏற்படாமல் இருப்பதற்குக் காசி சென்று சிவபூசை செய்து, பிதிர் காரியங்கள் செய்தார்கள் என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.
1.4     இருக்கு வேதமும் காசியும்
இந்த நகரம் “இருக்கு வேதத்தில்” (Rig Veda) காசி என்று குறிக்கப்பட்டுள்ளது. “கா” என்பது ஒளியையும், “சி” என்பது பிரகாசிக்கும் செல்வச்சிறப்புகள் யாவும் நிறைந்து விளங்குவதையும் குறிக்கிறது. காசி என்றால் ஒளி பிரகாசித்துக் கொண்டு இருக்குமென்றும் (the luminous one’,) இலக்கியம், ஓவியம், பண்பாடு ஆகியவை கற்பதற்குரிய கல்வி மையம் என்றும் கூறப்பட்டுள்ளது  (‘Centre of Learning Literature, Art and Culture’).



No comments: