.
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து என்பது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக ஓரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
மலர்வணக்க நிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து உறுதியுரையும், மாவீரர் நினைவுரையும் இடம்பெற்றன. மாவீரர் நினைவுரையை திரு. கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச்சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய கொற்றவன், போராட்ட வடிவங்கள் மாறினாலும் ஒன்றுபட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.
அதனை அடுத்து, நடனாலாயப்பள்ளி நடனப்பள்ளி மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. நடனத்தைத் தொடர்ந்து ‘கார்த்திகை 27’ என்ற குறுநாடகம் இடம்பெற்றது. “மாவீரர்கள் இன்னும் விழித்தபடியேதான் இருக்கிறார்கள், தமது கனவை தமிழ்மக்கள் என்றோ ஒருநாள் நனவாக்குவாக்குவார்கள், அதுவரை எமது மக்கள் ஓயமாட்டார்களென்ற நம்பிக்கையோடு மாவீரர்கள் இன்னும் விழித்தபடியேதான் இருக்கிறார்கள்” என்ற தொனிப்பொருளில் அமைந்திருந்த இந்நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது.
இறுதி நிகழ்வாக பரதசுடாமணி நடனப்பள்ளி மாணவிகளின் மாவீரர் நடனம் இடம்பெற்றது.
மாலை 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர் நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.
No comments:
Post a Comment