இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் சிங்களவர்களால் நில அபகரிப்பு: துரைராசா நேரில் சென்று பார்வை

கூடி கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல்

நாடு கடத்தப்பட்டார் நடிகர் ஜெயபாலன்

நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் றஜீப் சடலமாக மீட்பு

வெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை

பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் ஏசி தாக்க முயற்சித்த விகாராதிபதி

ஐங்கரநேசனின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்

சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்துக்கு முன்னால் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல்












========================================================================




முல்லைத்தீவில் சிங்களவர்களால் நில அபகரிப்பு: துரைராசா நேரில் சென்று பார்வை

26/11/2013   முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 கி.மீ.  தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதேச மக்களின் தகவலை அடுத்து நேற்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிவிட்டு பிரதேச சபை உறுப்பினர் சிவலோகேஸ்வரன் உள்ளிட்ட மக்களில் சிலருடன் நேற்று மாலை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரன், அங்கு இடம்பெறும் நில அபகரிப்பை நேரில் அவதானித்தார்.

சம்பவ இடத்திற்கு ரவிகரன் சென்றபோது, இரண்டு கொட்டில்களில் இருந்த சிங்களவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து இக்காடழிப்பு தொடர்பில் அவர்களிடம் நேரில் அவர் விசாரித்தார். இதன் போது அவர்கள்  பயந்த சுபாவத்தோடு , தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் காடு அழிப்பதாகவும் ,மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது நடைபெறுவதாகவும் இத்திட்டத்தில் 22 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மாங்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடவேண்டிய மாங்கன்றுகளை  தாம் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். 
தங்களின் முதலாளி வேலைக்கு அமர்த்தியதால் இதைச் செய்கிறோம் என்றும் கூறினார். இதையடுத்து ரவிகரன், காடழிப்பு நடைபெறும் பகுதியை முற்றாக ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்தார். 
இதே வேளை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனை இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் பயணம் நெடுகிலும் தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரவிகரன் அவரிடம் எதற்காக என்னைப் பின்தொடர்ந்து வருகிரீர்கள்? என்று கேட்டார். ஒருவாறாக சமாளித்துக்கொண்டு தன்னை இராணுவப் புலனாய்வாளர் என அவர் அறிமுகப்படுத்த, பதிலளித்த ரவிகரன் " இங்கு இடம்பெறும் மோசமான நிலக்கொள்ளையை உலகறியச் செய்யவே நான் வந்துள்ளேன். நாளை விபரமாக ஊடகங்களில் இது வெளிவரும். ஆகவே என்னைப்பின்தொடர வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை" என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.  
பின்னர் இந்த நில அபகரிப்பைப்  பற்றிக் கருத்துத் தெரிவித்த ரவிகரன், 'இங்கு எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்துக் கொடுப்பது , ஒரு புறம் நடைபெறுகையில் , மறுபுறம் தோட்டச் செய்கை எனும் பெயரில் தற்போது சுமார் 600 ஏக்கர் நிலம் இப்போது அபகரிக்கப்படுகிறது. 
எம் மக்கள் எங்களின் பூர்விக நிலத்தில் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலையில், எங்கள் தாயகத்தில் சிங்களவர்களுக்கு குடியிருப்புக்கள், தோட்டச் செய்கைகள் என்கிற பெயரில் நிலம் வழங்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட நிலக்கொள்ளையாகும். 
தமிழரின் தாயகமான வடகிழக்கை நிரந்தரமாக துண்டாடும் நோக்கிலேயே வடக்கை கிழக்குடன் இணைக்கிற முல்லைத்தீவில் இவ்வாறு நிலம் கொள்ளையடிக்கப்படுகிறது. யார் நிலத்தை யார் , யாருக்கு தாரை வார்ப்பது? இம்மண்ணின் காவலர்கள் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். 

நன்றி வீரகேசரி











கூடி கதைத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல்


26/11/2013     யாழ். தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில், நேற்றிரவு கூடி கதைத்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினர் அப்பிரதேசத்தில் இருந்த மக்களையும் தகாத வாரத்தைகளால் திட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தெல்லிப்பளை கிழக்கு கட்டுவன்புலம் பகுதியில் உள்ள நாமகள் சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் கூடி கதைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் சிலர் குறித்த இளைஞர்களை இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கின்றீர்கள் என கூறி சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவே மேலும் அப்பகுதிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மேலும் சிலரை தாக்கியுள்ளதுடன் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நான்கு இளைஞர்களும் ஜனாதிபதியின் பதாதைகளை கிழித்ததாக கூறி தெல்லிப்பளை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
நாகேஸ்வர ஸ்ரீ தர்சன் (வயது22)  ரவீந்திரன் கஜீபன் (வயது21), முருகையா அசோக்குமார் (வயது35), அல்பிரட் பிரதீபன் (வயது30) ஆகியவர்களே இவ்வாறு தாக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி








நாடு கடத்தப்பட்டார் நடிகர் ஜெயபாலன்

26/11/2013    நோர்வே பிரஜையும் கவிஞரும்,பிரபல நடிகருமான ஜெயபாலன் இன்று இரவு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நாடுகடத்தப்பட்டார்.
வீஸா விதிமுறைகளை மீறியமை தொடர்பான அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு 9.20 மணிக்கு துருக்கி ஊடாக அவர் நோர்வேக்கு நடு கடத்தப் பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கேசரியிடம் தெரிவித்தார்.
' TK731 Turkis ' என்ற விமானம் மூலம் அவர் துருக்கி நோக்கி அனுப்பப்பட்டதுடன் அங்கிருந்து நோர்வேக்கு அவர் நாடு கடத்தப் படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுற்றுலா விஸா விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளியன்று ஜெயபாலன் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 
வவுனியா, மாங்குளம் பகுதியில் தனது தாயாரின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே அவர் கைதுச் எய்யப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து கடந்த சனிக்கிழமை முதல் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட ஜெயபாலன் குடிவரவு குடியகல்வு அதிகாரிகரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த விசாரணைகளில் ஜெயபாலன் வீஸா விதிமுறைகளை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சுட்டிக்காட்டியதுடன், அதனை அடுத்தே அவரை நாடுகடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஜெயபாலனை ஞாயிரன்று நோர்வே தூதரக அதிகாரிகளும் சந்தித்திருந்தனர்.இன்னிலையிலேயே இந்த நாடுகத்தல் இடம்பெற்றுள்ளது.
கவிஞர்,எழுத்தாலரான ஜெயபாலன் நோர்வே குடியுரிமைக் கொண்டவர் என்பதுடன் தென்னிந்திய திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ப்லராலும் அறியப்படுபவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி





நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் றஜீப் சடலமாக மீட்பு


26/11/2013     நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் றஜீப்  என்று அழைக்கப்படும் ரெச்சியானின் (வயது-48) சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். 
இதேவேளை  இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி









வெளிநாடு செல்லும் பெண்கள் 15 பவுண் நகைகளையே அணிந்து செல்ல முடியும் : சுங்கத்திணைக்களம் யோசனை

 27/11/2013      இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தப்படுவதையும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கம் கொண்டு வரப்படுவதையும் தடுக்க விஷேட திட்டங்களை அமுல் படுத்த இலங்கை சுங்கத்திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற சுங்க தினைக்கள உயரதிகாரிகளின் விஷேட கூட்டத்திலேயே விஷேட திட்டங்களை அமுல் செய்யும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன் படி நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு பயணிப்போர் அணிந்து செல்லத் தக்க தங்க நகைகளின் அளவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன.
வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்கள் அதிகபட்சமாக அணிந்து செல்லத்தக்க தங்க நகைகளின் அளவானது 15 பவுண்களுக்கும், ஆண்கள் அணிந்து செல்லத்தக்க தங்கத்தின் அளவானது 5 பவுண்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த தங்க நகைகளை அணிந்த நிலையிலேயே குறித்த பயணி செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கும் சுங்க திணைக்களம், மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வரும் போதும் அதே அளவான தங்க நகைகளை குறித்த இலங்கையர் அணிந்திருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளரும் சுங்க சேவைகள் பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவித்த அவர், குறித்த கட்டுப்பாடுகள் இலங்கயர்கள் விடயத்தில் மட்டுமே அமுல் செய்யப்படும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் விஷேட திட்டங்களை அமுல் படுத்தவுள்ள சுங்க தினைக்களம் அவர்களும், தாம் வெளியேரும் போது கொண்டு செல்லும் தங்கம் குறித்து சுங்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது அவசியம் என சுங்க பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கொச்சி விமான நிலையத்தில் வைத்து 56 இலங்கயர்கள் தங்கம் கடத்தியமை தொடர்பில் அந் நாட்டு சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பில் நேற்று சுங்க திணைக்கள உயர் மட்ட அதிகாரிகள் குழு விரிவாக ஆராய்ந்தது. எவ்வாறு குறித்த 56 பேரும் கட்டு நாயக்க விமான நிலையம் ஊடாக தப்பிச்சென்றனர் என்பது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதனையடுத்தே சுங்க தினைக்களம் இலங்கயர் ஒருவர் அணிந்து செல்லும் தங்கத்தின் அளவில் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கும் முடிவுக்கு வந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி












டானியல் றெக்ஷியான் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி

 27/11/2013   யாழ்.நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர்; டானியல் றெக்ஷியான்(றஜீப்); துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவரான றெக்ஷியானின் சடலம் நேற்று  அவரது வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்;டிருந்தது.
இவரது சடலத்தை மீட்ட பொலிஸார் புங்குடுதீவு வைத்தியசாலைக்;கு கொண்டு சென்று பின்னர் நேற்று  இரவு யாழ்.போதானா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர்.
இந்நிலையில் இன்றை தினம்  பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர் சிவரூபன் துப்பாக்கியால் சுட்டே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்தக்கொலைக்கு  9 மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.நன்றி வீரகேசரி












பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் ஏசி தாக்க முயற்சித்த விகாராதிபதி


28/11/2013     மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் புகுந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் அவரின் உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை பிரதேச செயலகத்துக்குள் சென்ற விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல தேரர் பட்டிப்பளை பிரதேசத்தில் விகாரை ஒன்றை அமைக்க உடனடியாக பதிவு செய்து தருமாறு கோரியுள்ளார். அதற்கு பிரதேச செயலாளர் நடைமுறை விடயங்கள் உள்ளன. அது தொடர்பில் பரிசீலனை செய்து பதிவு செய்வதாகவும் உடனடியாக பதிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஆத்திரமடைந்த தேரர் பிரதேச செயலாளரை கடுமையான தூசன வார்த்தைகளினால் பேசியுள்ளதுடன் அவரது மேசையில் இருந்த பொருட்களை இழுத்து வீசியுள்ளதுடன் பக்ஸ் இயந்திரத்தினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலக ஊழியர்கள் ஒன்றுகூட தேரர் வெளியேறிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி தமது அலுவலகத்துக்கு வருகை தந்து இப்பகுதியில் விகாரை ஒன்றினை பதிவு செய்து தருமாறு சில ஆவணங்களைக் காட்டினார். அதுவும் உடனடியாக அந்த பதிவினை செய்து தருமாறும் வலியுறுத்தினார்.
ஆனால் மதத்தலங்களை பதிவு செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படியே செயற்பட முடியும். அதனை ஆராய்ந்து பதிவு செய்து தருகிறேன் எனக் கூறினேன். இதன்போது கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் என்னைத் திட்டியதுடன் எனது மேசை மீது இருந்த பொருட்களை இழுத்து, பக்ஸ் இயந்திரங்களை உடைத்து சேதப்படுத்தினார். இது தொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன் என்றார்.
இது தொடர்பில் பட்டிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேரரின் அச்சுறுத்தலைக் கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் நேற்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் கருத்தைக் கேட்க தொடர்புகொண்ட போது அவரின் தொடர்பு கிடைக்கவில்லை.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் நேற்றுக் காலை சென்ற மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி பிரதேச செயலாளரைத் தாக்குவதற்கும் அரச சொத்துக்களை சேதமாக்கியமை குறித்து பொது நிருவாக அமைச்சு மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
இது விடயமாக அவர் மேலும் தகவல் தருகையில் கூறியதாவது,
நேற்றுக் காலை மேற்படி விகாராதிபதி பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் சென்று அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நான் பொது நிருவாக அமைச்சர் ஜோன் செனிவிரத்ன, அமைச்சின் செயலாளர் பி. அமரக்கோன் ஆகியோரை நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து முறையிட்டேன். பல தடவைகள் இவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் ஒருவரைத் தாக்கியுள்ளார் என்றும் எடுத்துக் கூறினேன்.
சமீபத்தில் மட்டக்களப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்திய பெரும்பான்மை இன இளம் சட்டத்தரணியையும் இவர் தாக்கியுள்ளார் என்றும் எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும் அறிக்கையினை கோருமாறும் அதிகாரிகளை பணித்தார்.நன்றி வீரகேசரி






ஐங்கரநேசனின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்


28/11/2013      வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது இன்று அதிகாலை கல்வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவீரர் தினத்தில் மரம் நடுகைநிகழ்வினை ஏற்பாடு செய்தவர் என்ற காரணத்திற்காகவே அவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி














சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்துக்கு முன்னால் மலர் வளையம் வைத்து அச்சுறுத்தல்


28/11/2013   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வல்வெட்டித்துறை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாதோரால் மலர் வளையமும் மலர் மாலையும் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குக்கு தகவல் தருகையில், தமிழ் மக்கள் அடக்கு முறைகளில் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்ல  கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி




No comments: