.
மகான் ஆன மனிதன்
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
இளந்துறவி சுவாமி விவேகானந்தர் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையை முரசறைந்தவர். வீரத்துறவி, வேதாந்த சிங்கம், என்றெல்லாம் புகழப்பட்டவர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முன்னணி சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தவை. மனித சமத்துவம் என்பது உலக சகோதரத்துவதில் இருந்து மட்டுமே கிட்டும் உண்மையை அன்றே உலகுக்கு எடுத்துச் சொன்னவர். மதம், மாகாணம், ஜாதி, மொழி, இனம் போன்ற பல்வேறு வேற்றுமைகள் உலகில் சண்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பரந்த மனப்பான்மையை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர்.விவேகானந்தர் துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் 1897 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ராமகிருஷ்ண சங்கத்தை நிறுவினார்.
ஒருவர் குருவாக அடையாளம் காணப்படுவது பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருப்பதனால் மட்டுமே.
அவரது பிறப்பு, அவர் கூறும் கருத்துக்கள், அக்கருத்துக்கள் மக்களிடையே ஏற்படுத்தி உள்ள தாக்கம் ஆகியவையாகும்.
அதாவது
1.
அம் மகானின் பிறப்பு தெய்வீகப் பிறப்பாக இருத்தல்
2. அவர் கூறும் கருத்துக்கள் புதிய பரிமாணங்களில் இருத்தல்
3. அக்கருத்துக்கள் சமுதாயத்தில் பிரங்ஞையையும் மாற்றத்தையும் தோற்றுவிப்பதாக இருத்தல்.
இவையே ஒருவரை மகானாக அடையாளம் காட்டும் அம்சங்களாகும்.
1.விவேகானந்தராக உலகம் புகழும் ’நரேந்திர நாத் தத்தா ’ பிறப்பும் அப்படிப்பட்ட அடையாளங்கள் கொண்ட ஒரு பிறப்பு ஆகும். ’நரேந்திரனாத் தத்தா 1863 ஜனவரி 12ஆம் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் கல்கத்தாவில் மகனாகப் பிறந்தார். தாயார் புவனேஸ்வரி அம்மாள் வாரணாசியில் கோயில் கொண்டுள்ள வீரேஸ்வரிடம் தவமியற்றி பெற்ற பிள்ளை..சுவாமி விவேகானந்தரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் நரேந்திரன் தெய்வீகப் பிறப்பு என்பதினை ‘சப்தரிஷிகளில் ஒருவரே நரேந்திரனாக பிறந்துள்ளார்’ என்று கூறி உறுதிப் படுத்தி இருக்கிறார்.. பல சமயங்களில் தன் மற்ற சீடர்களுக்கு தர மறுத்த தூய்மை இல்லாத உணவை நரேந்திரருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அளித்துள்ளார். ‘நரேந்திரன் கொழுந்து விட்டெரியும் தீ. அவனிடம் அசுத்தம் எதுவும் தங்க முடியாது. அனைத்தையும் அவன் எதிர்த்துவிடுவான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மையானவர் மட்டுமல்ல முழுமையானவர் என்று நரேந்திரனை அவர் குறிப்பிடுவார். இது நரேந்திரனின் பிறப்பின் தன்மையைக் காட்டுகின்றது.
2. சிகாகோ சர்வமத மகாசபையில் 1893 செப்டம்பர் 11-ஆம் நாள், அவர் ஆற்றியசொற்பொழிவிற்கு பின்னர் நாடே அவருடைய மேன்மையை உணர்ந்து கொண்டாடியது.‘எனதருமை அமெரிக்க சகோதரிகளே. சகோதரர்களே’ என்ற வார்த்தைகளால் தனது உரையை தொடக்கிய போது அதுவரை கூட்டத்தினை அன்னியப் படுத்திய ‘சீமான்களே, சீமாட்டிகளே’ என்ற அனைத்து பேச்சாளர்களின் வார்த்தைகளையும் மறந்து சுவாமிஜியை தமது சகோதரனாக உணரத் தொடங்கிய தருணம் அது. அவர் புதிய நோக்கோடு , புதிய கருத்துக்களினை உலகுக்கு அளித்து புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார்.அவரது உலகம் தழுவிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அந்தப் பேச்சு அமைந்தது.
நரேந்திரன் என்ற சாதாரண மனிதன் சுவாமி விவேகானந்தனாக நிமிர்ந்ததும், மனித சமத்துவம் உலக சகோதரத்துவம், பெண் சமத்துவம், நாட்டின் விடுதலை , மற்றும் ஆன்மீகம், தத்துவம், எனப் பன்முகப் பரிமாணங்களையும் அடைய வழி கோலியதும் ,சர்வமத மகாசபையில் அவர் ஆற்றிய உரையே. இது அவரது கருத்துக்கள் புதிய பரிமாணங்களில் இருப்பதற்கு சான்றாகும்.
3.சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களின் வலிமையும் , கூர்மையும் உலகு உணர்ந்த ஒன்றாகும். அவை நூற்றாண்டுகள் தாண்டியும் மனித குலத்தில் நிலைத்து நிற்பது சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள பங்கினை மிகச் சிறப்பாக சொல்வதாகும்.
இன்றளவும் அவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவே உள்ளன.அவற்றில் சில மாதிரிகள்
இறைவன் ஒருவனே:
“இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வெவ்வேறு மார்க்கங்கள் மட்டுமே”
சர்வ மத ஒற்றுமை :
“ஒரு கிறிஸ்துவர் ஹிந்துவாகவோ. பௌத்தராகவோ மாற வேண்டாம், அதேபோல் ஒரு ஹிந்து அல்லது பௌத்தர் கிறிஸ்துவனாக மாற வேண்டாம், ஒவ்வொருவரும் மற்றவர்களிடமுள்ள நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, தனது சுய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’.
பெண்கள் அந்தஸ்து :
’எந்த நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக கல்வி, சமூக அந்தஸ்து போன்றவற்றால் இணையாக நடத்தப்படுகிறார்களோ அந்த நாடு பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களிலும் சிறந்து விளங்கும்’’
கல்வி:
’மனிதனுக்குள் உள்ள முழுமையான பூரணத்துவம் வெளிப்படுத்துவதற்கே கல்வி. தகவல்களை திணிப்பதல்ல கல்வி’
சுய முன்னேற்றம்:
‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’
பெண்கள் சமமானவர்கள்
’எந்தச் சூழலிலும் பெண், பலவீனமானவள், பாவம், பரிதாபம்; தவறே செய்தாலும் பெண் என்பதால் விட்டு விடலாம் என்றெல்லாம் சலுகைகள் கிடைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.’
அறிவு:
நமது அறிவு எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அனுமான அறிவிற்கும் அனுபவமே அடிப்படை. அனுமான அறிவில், நாம் சாதாரண அறிவிலிருந்து பொது அறிவிற்கோ பொது அறிவிலிருந்து விசேஷ அறிவிற்கோ செல்கிறோம்.
மனம்:
மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும்.
பிறர்க்கு உதவுங்கள்:
நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
உண்மை:
உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.
அறிவு:
எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
கல்வித்திட்டம் :
இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
சமுதாயக் கட்டுப்பாடு :
மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான்.
வெற்றி வாழ்வு:
நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.
நம்மை நேசித்தல்
தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.
அன்பு
அன்பு
அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
கருணை
கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.
No comments:
Post a Comment