பார்த்து ரசித்த A GUN AND A RING திரைப்படம் - செ .பாஸ்கரன்

.ஞாயிற்றுக்கிழமை 4 மணிக்கு இந்த திரைப்படத்தைப் பார்க்க ஓபன் றீடிங் சினிமாவிற்கு சென்றபோது நண்பர் ரஞ்சகுமாரையும் சக்திவேலையும் கண்டு கதைத்துக்கொண்டு சென்றேன் தியேட்டரை அடைந்த போது ஒரு சில தமிழர்கள் அதுவும் இலக்கியத்தோடு நெருக்கமானவர்களை மட்டுமே பார்க்கக் கூடியதாக இருந்தது. உள்ளே சென்று அமர்ந்தபோது ஒரு 30 பேர்வரைதான் பார்வையாளர்கள் இருந்தார்கள்.

சீன திரைப்பட விழாவிற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படத்தை பார்ப்பதற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது வேதனையாக இருந்தது. அது மட்டுமல்ல 1999 என்ற ஒரு நல்ல திரைப்படத்தை தந்த லெனின்தான் இந்தப்படத்தையும் நெறியாள்கை செய்திருந்தார். இதே ஒரு இந்திய படமாக இருந்திருந்தால் இன்று எவ்வளவு கூட்டம் வந்திருக்கும். ஏன் என்ற கேள்வி மண்டையை குடைந்துகொண்டிருந்தபோதே படம் ஆரம்பமானது.

காட்சிகள் நகர்ந்துகொண்டிருக்க நானும் இருக்கையின் விளிம்புக்கு நகர்ந்துகொண்டிருந்தேன். மனதை வருடிச்செல்லும் இசையுடன் முழுநிலவை காட்டியபடி பாடல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அது பாடல் அல்ல மனதை சுண்டியிழுக்கும் அற்புத கவிதையொன்று.

ஆறு சின்னக்கதைகளாக எம் மண்ணின் வலிதான் உலகெங்கும் உள்ள வலி என்றும் கனடாவின் புலப்பெயர்வு வாழ்க்கையோடு இந்தவலி எப்படி பிணைந்து கிடக்கிறது என்பதையும் வலிநிறைந்த அழகிய சினிமாவாக பேசியிருக்கிறார் லெனின் எம் சிவம்.
போரின் உரசல்களில் ஊனமாக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல உளவியல் நோயின் உக்கிரத்தால் தம்மையிளந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் நிலை கண்ணீரை கொண்டுவருகிறது. போரில் பட்ட மனக்காயங்கள் ஆறாத வலியில் துடித்துக்கொண்டிருக்கும்  அபி என்ற அப்பாவி பெண். திருமணத்தை நாடி கனடாவின் வந்து விமான நிலையத்;தில் கைவிடப்பட்டு படுகின்ற வேதனையும் சமுதாயத்தில் அவள் பெற்றுக்கொள்கின்ற பாடங்களும் எந்த அபலைப் பெண்ணையும் ஒரு கணம் நிமிர்ந்து நிற்க செய்துவிடும் அற்புதமான பாத்திரப்படைப்பு. சுடானின் போரினால் குடும்பத்தையே இளந்து தனித்து நிற்கும் முன்னாள் பாதிரியார் டேவிட் உலக மக்களின் வலியாக மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இருவரும் சந்திக்கின்ற காட்சி மனதை உலுக்கி விடுகின்ற காட்சி அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற அங்கலாய்ப்பு. புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும் அபியிடம் என்ன செய்கின்றாய் என்சு கேட்க என் கேள்விக்கு விடை தேடுகிறேன் என்ற அவள் பதிலோடு பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆறுதலாக பைபிளில் அது கிடைத்துவிட்டதா என்று அவன் கேட்கும் கேள்விகள் ஆயிரம் அர்த்தங்களை தூக்கி நிறுத்தி விடுகின்றது.


முகாமில் கொடுமைப்படுத்திய இரும்பனைக் கனடாவில் கண்டுவிட்ட அப்பாவி இளைஞன் துப்பாக்கிக்காக அலைவதும். உயரத்தில் நின்ற கொலையாளியின் கையில் இருந்து விழுந்த துவக்கை எடுத்த இளைஞன் பிள்ளையார் பென்ரனை முத்தமிட்டுவிட்டு இறைவனே உன்னைக் கொல்லுவதற்கு இந்த துப்பாக்கியை தந்திருந்தார் என்று உணர்ச்சியோடு கூறும்போது அந்த வலியில்கூட நாம் சிரித்து விடுகின்றோம். இரும்பன் நம் இயக்கங்களின் பொதுவான கதாபாத்திரம். மிக அற்புதமான நடிப்பு அவரின் நடிப்பு.
 ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடும் அழவிற்கு நடித்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும். காடசிப்படுத்திய விதம்  இசை ஒளிப்பதிவு கமரா என்று அத்தனையும் ஒரு தண்டவாளத்தில் செல்வதுபோல் அத்தனை அழகாக சென்றுகொண்டிருந்தது. சத்தியஜித்ரேயின் படம் பார்த்தபோது ஏற்படும் அனுபவம் கிடைக்த்தது. a  GUN and  a  RING  என்ற இந்த திரைப்படத்தின் மூலம்.


வசனங்கள் அமைத்தவிதம் பாராட்டப்பட வேண்டியது. நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லிக்கொண்டு போகவேண்டும்போல் இருக்கிறது. அது முழு திரைக்கதையையும் திருப்பிச் சொல்லுவது போல் அமைந்து விடும் அதனால் நிறுத்திக் கொள்கிறேன்.

கைக்கெட்டியும் வாய்கு எட்டவில்லை என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அதுபோல் சிட்னியில் இருந்தும் இதைப்பார்க்க தவறியவர்கள் கொடுப்பனவில்லாதவர்கள் என்றுதான் கூறவேண்டும். நல்ல சினிமா ஒன்றை தந்து இதுதான்டா சினிமா என்று ஓங்கி கூவியிருக்கும் லெனினும் அவரது குழுவும் ஈழத்தமிழனை கலையில் சினிமாவில் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளார்கள்.

சென்ற வாரம் இந்த திரைப்படத்தில் அபி என்ற பாத்திரத்தில் நடித்த தேனுகா கந்தராஜா அவர்களை தமிழ் முழக்கம் வானொலியில் பேட்டி கண்டிருந்தேன். அவர் கூறியிருந்தார் இந்தக் குழுவோடு இணைந்தது தன் பாக்கியம் என்று. அது உண்மை என்று அடித்துக் கூறலாம்.

மீண்டும் எப்போதாவது திரையிட்டால் நிட்சயமாக சிட்னிமக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

No comments: