புஸ்பராணியின் அகாலம் - நடேசன்akaalamஅகாலம் நூலை படித்து முடித்துவிட்டு கைத்தொலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது இரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பின்பு குளியலறைக்குச் சென்று வந்தபோது ‘ என்ன இந்த அகாலத்தில் லைட்டை போட்டுவிட்டு திரிகிறீங்கள்’ என்றாள் எனது பிரிய மனைவி. அவருக்கு ஏற்கனவே குறைந்தது மூன்று மணிநேரத்து நித்திரை முடிந்திருக்கும். இதுவரை நேரமும் புத்தகம் வாசித்தேன் எனப் பதில் சொல்லியிருந்தால் ‘கண்டறியாத புத்தகம் இந்த நேரத்தில்’ என வார்த்தைகள் வந்திருக்கும்

நான்குமணி நேரம் தொடர்ச்சியாக ஒரு நூலை வாசித்து பல காலமாகி விட்டது. பல நூல்களை முகவுரை மற்றும் சில அத்தியாயங்கள் எனப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சிலநாட்களின் பின்னர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்துவிட்டு மீண்டும் வைத்துவிடுவேன். பெரும்பாலும் இந்தப் பரிசோதனையில் நூல் தேர்வடைந்து தொடர்ந்து வாசிக்க முடியுமென முடிவுசெய்தால் குறிப்பிட்ட நூலை கையில் எடுத்து மீண்டும் வாசிப்பேன்.

புஷ்பராணி எழுதியிருக்கும் சிறை அனுபவங்களான அகாலம் நூலை படிக்கத்தொடங்கியதும், முதலில் அதன் முன்னுரையை வாசித்துவிட்டு இலங்கையிலிருக்கும் கவிஞர் கருணாகரனை அழைத்து ‘அருமையான முன்னுரை – ஆனால் அதை 17 பக்கத்துக்கு எழுதியிருக்கிறீர்களே சுருக்கியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்றேன்.

அதற்கு கருணாகரன் ‘நான் எழுதிய முன்னுரையையும் மதிப்புரையையும் ஒன்றாக சேர்த்து ஷோபாசக்தி பிரசுரித்ததால் நீண்டுவிட்டது ” என்றார்

அடுத்த நாள் புத்தகத்தை கையில் எடுத்து படிக்க தொடங்கியது முதல் முடிக்கும்வரையில் அதனை கீழே வைக்கவில்லை.

அகாலம் நூல் – ஈழப்போராட்டத்தில் முதலாவதாக சிறை சென்ற புஸ்பராணியின் நினைவுக்குறிப்புகள் ஆகும். சென்னையில் கருப்பு பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. அதன் பதிப்பாசிரியர் ஷோபாசக்தி.

புஸ்பராணியை இந்தியாவில் முதன்முறையாக கண்டதாக எனக்கு நினைவு உள்ளது. அதன்பின்பு பிரான்ஸ் சென்றபோது பாரிஸிலும் கண்டேன். ஆனால் நீண்டநேரம் பேசவில்லை. பேராதனை பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புஸ்பராணியை பொலிஸ் கைதுசெய்து அடித்து துன்புறுத்தியதாக கேள்விப்பட்டேன்.

எனது கவனம் அரசியலில் திரும்பிய பிற்காலத்தில் நடந்த அரசியல் விடயங்கள் கணினி யுகத்தில் வரும் மாறுதல்கள் போல் விரைவாக வேலுப்பிள்ளை பிரபாகரனால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதால் தமிழ் மக்களுக்கு இந்தப் போராட்டத்தில் சிந்திப்பதற்கு இடம் அல்லது சிந்திப்பதற்கு நேரம் இருக்கவில்லை. லொரியொன்றின் சக்கரத்தில் ஒட்டிய வாழைப்பழத் தோலாக தொடர்ந்து போய்க்கொண்டிருந்தது. போராட்டத்தில் ஆரம்பகாலத்தில் ஈடுபட்டவர்களைப்பற்றி சிந்திப்பதற்கு காலம், நேரம் இருக்கவில்லை. அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவனாகினேன்.
Pushparani-3
புஸ்பராஜாவைச் சந்தித்தும் பேசியும் இருக்கிறேன். அவரது ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் வந்தபோது மிகவும் ஆவலாகப் படித்தேன்.

புஸ்பராணியின் அகாலம் நூல் ஏனைய ஈழப் போராட்டவரலாறுகளிலிருந்து தனித்துவமானது. நேர்மையாக – உண்மைகள் மறைக்கப்படாது எவரையும் புனிதர்களாக்காமல் எழுதப்பட்டுள்ளது. மேற்கத்தைய பெண்களின் எழுத்துப்போல் வாசகர்களுக்கு திறந்த புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. நமது வழக்கமான கலாச்சார சமூக குறைபாடுகள், சுயநலமான சிந்தனைகள், முக்காடுகள் இல்லாது எழுதப்பட்டிருக்கிறது.

ஈழப்போராட்டத்தைப் பற்றி இதுவரை எழுதிய மற்றவர்கள் (புஸ்பராஜா உட்பட) பார்த்தவற்றை அல்லது அனுபவத்தை – அதாவது புகைப்படத்தைப் பார்த்து ஓவியம் வரைவது போல் மட்டுமே எழுதினார்கள். புஸ்பராணி தான் பார்த்ததை மட்டும் தரவில்லை. பார்த்தவற்றை பகுப்பாய்ந்து அப்ஸ்ராக்ட்( Abstract) ஓவியமாக நமக்குத் தருகிறார். நூலில் வழக்கமான தமிழ் எழுத்துகளில் வரும் சிங்கள இனத்துவேச மொச்சை மணம் ஏதுமில்லை என்பதால் ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ இந்நூலை அற்புதமாக மொழிமாற்றம் செய்யமுடியும்.

‘எங்களை அடித்து துவைத்து விசாரணை செய்ய அனுமதித்த பத்மநாதன் எங்கள் மீது பாலியல் குற்றங்கள் இழைக்கப்படுவதை அனுமதிக்கவில்லை. அதற்காக நன்றிகள் பத்மநாதனுக்கு சொல்லவேண்டும்.’

இப்படியான ஒருவார்த்தையை எழுதுவதற்கு மிகவும் பக்குவமான மனம்வேண்டும்.

அடிப்படையில் அர்த்தமில்லாத இந்த ஈழப் போராட்டம் ஏராளமான இளைஞர்கள், யுவதிகளை தன்னிடையே திணித்து கரும்பாலை மிஷினைப்போல் அவர்களது இளம்பருவங்களை உறிஞ்சிவிட்டு சக்கையாக வெளித் தள்ளியது. அந்த மாதிரியான போராட்டத்தில் முதலில் தனது இளமைப் பருவத்தின் உன்னத வாழ்வை பறிகொடுத்த புஸ்பராணி – தனது தனிப்பட்ட இல்லற வாழ்வை இரண்டு வரிகளில் கடந்து செல்வதும் – செல்லும் போது அந்த வார்த்தைகளின் வரிகளுக்கு இடையில் வாய்விட்டுச் சொல்லமுடியாத துயரம் படிந்திருப்பதும் எனக்கு புரிந்தது.

இலக்கியத்தில் சொல்லிய விடயங்களை விட மவுனமாக கடந்த இடைவெளிகள் மிகவும் கனமானவை. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இப்படி எத்தனை பெண்கள் உயிர் – உணர்வு – வாழ்வு – அவயவங்களை இழந்திருக்கின்றனர்.

இந்நூலை ஒவ்வொரு பெண்களையும் மட்டுமல்ல மற்றவர்களை தமது அரசியல் வேள்வியில் ஆகுதியாக்க அழைக்கும் எமது அரசியல்வாதிகளையும் கட்டாயப்படுத்தி வாசிக்கும்படி தூண்டவேண்டும்.
அவுஸ்திரேலியாவில் வீடுகளுக்கு ஏலம் நடக்கும்போது வீட்டுத்தரகர்கள் முன்னேற்பாடாக சிலரை முன்னால் நிறுத்தி ஏலத்தை அதிகரிப்பார்கள். இதனால் விலை கூடும். ஆனால் அவர்களுக்கு வீட்டில் ஈடுபாடு இல்லை. அதுபோல தமிழ் அரசியல்வாதிகள் எந்தக்காலத்திலும் உண்மையான நம்பிக்கையில் ஈழக்கோரிக்கையை வைக்கவில்லை. ஆனால் அப்பாவி இளைஞர்கள் இவர்களது வார்த்தைகளை நம்பினார்கள், பிரபாகரன் உட்பட.

1974 ஆம் ஆண்டு ஜுலையில் சிவகுமாரன் இறந்தபோது அந்த மரணவீட்டில் நானும் கலந்து கொண்டேன். அந்த மரணவீட்டை தமிழ் அரசியல்வாதிகள் பிரயோசனப்படுத்தியது அக்காலத்தில் புரிந்த விடயம். ஆனால் சிவகுமாரனின் அந்தியேட்டியில் இரண்டு வகையான உணவுப்பந்திகள் வைத்து சாதி ரீதியில் உணவு பரிமாறப்பட்ட தகவலை புஸ்பராணி அகாலம் நூலில் சொல்லியிருப்பது புதிய செய்தியாக இருந்தது.

நான் இந்நூலில் மிகவும் ரசித்த பகுதி புஸ்பராணியின் கொழும்பு சிறைச்சாலை அனுபவங்கள்தான். அங்கு தான் சந்தித்த சக பெண் கைதிகளைப்பற்றிய விடங்களை சொல்வது உன்னதமானது. இன மதபேதமற்ற இடத்தில் அதுவும் பெண்களிடையே ஒற்றுமை நிலவியது என்பது வியப்பாக இருந்தது.

நான் பெண்கள் சிறையைப் பார்த்தது தமிழ் ஆங்கிலப்படங்களில்தான். ஆனால் அவற்றில் அவர்களை – ஒருவரோடு ஒருவர் சண்டைபிடிப்பவர்களாகவே காட்டியிருக்கிறார்கள். அவை ஆண்களின் சிந்தனையில் உதித்த படங்கள் என நினைக்கிறேன். இது போதாதென்று தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் கூட சிறைப் பெண்களை மோசமாக காட்டுகின்றன. அதனால் இந்தப்பகுதிகளை புஸ்பராணி மேலும் கொஞ்சம் விவரித்து எழுதியிருக்கலாமே என நினைத்தேன். ஆண்களின் சிறைச்சாலை அனுபவங்கள் ஏராளமாக கிடைக்கும் போது பெண்களின் சிறைச்சாலை அனுபவங்கள் அரிதாகவே வெளியே தெரியவருகிறது.

இந்நூலில் நான்குறிப்பிட விரும்பும் ஒரு விடயம் – எனக்கு நன்கு அறிமுகமானவர்களான பத்மநாபா – வரதராஜப்பெருமாள் போன்றவர்கள் பற்றியதாகும். அவர்கள் பற்றிய புறவிவரிப்பு மட்டுமல்ல அவர்களைப் பற்றிய புஸ்பராணியின் அகவெளி அனுமானமும் எனக்கு மிகவும் சரியாக இருந்தது.
வரதராஜப்பெருமாள் மிகவும் புத்திக்கூர்மையானவர் – தொலைநோக்கு பார்வையுள்ளவர். ஆனால் எக்காலத்திலும் நாலு பேரை தன்னுடன் வைத்துக்கொண்டு அரசியல் செய்து பதவிகள் வகிக்கும் தன்மை அவரிடம் இருந்ததில்லை என்ற புஸ்பராணியின் வரிகளை வாசித்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. கற்பனையான ஒரு பிரதேசத்தின் முதல்வராக அவர் சிறிது காலம் பதவி வகித்தவர் என்பதும் நினைவுக்கு வந்தது.

இந்த நூலில் மற்றுமொரு முக்கிய விடயம் – தமிழ் இலக்கியத்தில் புஸ்பராணிக்கு பரிச்சயம் உள்ளதால் அவரது வார்த்தைகளில் சொல்லப்படும் தகவல்கள் வாசிப்பவர்களுக்கு மனத்தில் பதியும் விதத்தில் அமைந்துளளது இலங்கைத் தமிழ் அரசியலில் “புதியதோர் உலகத்தின்” பின்னரான காலத்தில் மனதில் பதியும்படி தெளிவாக எழுதப்பட்ட நூல் அகாலம் என நினைக்கிறேன்.

கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் தமிழ் அரசியலில் அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இந்நூலைப் படிக்கவேண்டும் என்பது எனது ஆசை.

No comments: