காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.
தினசரி இந்தக் காட்சியைக் காணலாம். சனி, ஞாயிறு மட்டும் இந்த காட்சிக்கு ஓய்வு. இந்தக்காட்சி எண்பதுகள் வரை இடம் பெற்றது. அதற்குப் பிறகு யாழ்குடாவில் சிவில் நிர்வாகத்தின் செயற்பாடுகள் முடங்கிப் போனதால் இதுவும் இல்லாமல் போய்விட்டது. இவரின் முழு நேரத் தொழில் நீதிமன்றம் செல்வது. ஆனால் இவர் வழக்கறிஞரோ, நீதிமன்ற ஊழியரோ கிடையாது. இவருக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் எல்லா நாட்களும் காணி வழக்கு இருக்கும், அப்படி வழக்கு இல்லாவிட்டாலும் ஏனைய வழக்கைப் புதினம் பார்க்கப் போவார். அதனால் காலையில் உறுதிக் கட்டுடன் (காணிப் பத்திரம்) நீதிமன்றம் போவார். மாலையில் வக்கீல் வீட்டுக்குக் காணி உறுதியுடனும் அன்பளிப்புப் பொருட்களுடனும் போவார். இவருக்கு இது பிடித்த தொழிலா? பிடித்த பொழுது போக்கா என என்னால் அனுமானிக்க முடியவில்லை.

இவருக்கு எப்படிப் பெருந்தொகையான காணி வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பலரின் காணிக்குள் இவருக்குப் பங்கிருக்கும். அல்லது இவரின் காணிக்குள் பலருக்கு பங்குகள் இருக்கும். அதைத் தவிர இவரது காணி வேலிகள், வயல் வரம்புகள் மெல்ல மெல்ல நகர்ந்து அடுத்தவரின் சொத்துக்குள் செல்லும். இதற்கு எதிராக பக்கத்து காணிச் சொந்தக்காரர் வன்முறையில் இறங்கினால் அகிம்சையைத்தான் இவர் கடைப்பிடிப்பார். கோட்டுக்குப் போவார். அதிலும் அவர் அகிம்சைதான். கிறிமினல் கோட்டுக்குப் போகமாட்டார். சிவில் கோட்டுக்குத்தான் போவார். இதற்கு எல்லாம் பணத்திற்கு எங்கே போவார் என பலரும் எண்ணலாம். ஒரு துண்டுக் காணியை விற்று இன்னொரு துண்டுக் காணிக்காக வழக்காடுவார். இவரது வழக்குகள் ஒன்றுக்கும் தீர்ப்புகள் வராமல் ஒத்திப் போட்டுக் கொண்டே போகும். ஆனால் இவரோ சளைக்காமல் புதிய புதிய காணி வழக்குகளைத் தொடுப்பார். ஒரு பக்கத்தாலை இவர் வழக்குக்காக காணியை விற்க இவரது வக்கீலோ இன்னொரு பக்கத்தாலை சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பார். நானறித்தவரை இவரது காணி வழக்குகள் மட்டுமல்ல எமது ஊரவர் எவரது காணிவழக்குக்கும் தீர்ப்பு வந்தது கிடையாது.

எமது ஊரின் இதயப்பகுதியென்று சொல்லக் கூடிய இடத்தைப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு பக்கம் பற்றைகளும் புதருமாக இருக்கும். இன்னொரு பக்கம் பாதி கட்டப்பட்ட கட்டடத்தில்; புதரும் பற்றையும் வளர்ந்திருக்கும். புதிதாய் வருபவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் சிறுவயதிலிருந்து பார்த்த எங்களுக்கு இது சாதரணமானது. இன்று வரை இந்தக் காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் காணிகளது வழக்கு இப்பவும் கோட்டிலிருக்கிறது. இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது சந்ததியினரில் பலர் வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து போய் விட்டார்கள். இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து ஒருவரும் இல்லாமல் வைத்திருந்து கனகாலத்தின் பிறகு விட்டு விட்டது. அதன் பின்னர் ஊர் பழைய மிடுக்குடன் திரும்பிவிட்டது. ஆனால் இப்பவும் வழக்கு நிலுவையில் உள்ளது. எமது ஊர் எவ்வளவு வளர்ச்சி கண்டாலும் ஊரின் மையப்பகுதியான இந்த இடம் இப்போதும் புதரும் பத்தையுமாக அசிங்கமாக, அவமானச்சின்னம் போல் காட்சியளிக்கிறது.
எனது தந்தை வழித் தாத்தா, பாட்டிக்கு ஊரில் நிறையக்காணிகள் இருந்தன. தாத்தா அந்தக்காலத்தில் எமது ஊரில் முதல் முதலில் கூடாரம் போட்ட திருக்கல் வண்டிலில் திரிந்த அந்தக்கால வியாபாரி. இப்போதைய பீ.எம். டபில்யூ எல்லாம் அதற்கு கிட்ட நிற்க ஏலாது. தாத்தா வழிக் காணிகள் வியாபாரத்தில் சேர்ந்த சொத்துக்கள் என்று கொஞ்சம் கௌவரமாகச் சொல்லலாம். உண்மையைச் சொன்னால் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஸ்ரப்படும் போது எனது தாத்தா வெறும் ஒரு கையெழுத்தை அல்லது பெரும்பாலும் ஒரு கைநாட்டைப் (பெருவிரல் அடையாளத்தை) பெற்றுக் கொண்டு பெருந்தன்மையாக விட்டு விட்ட புண்ணியவான். பிறகு இந்தக் கையெழுத்துக்கள் எல்லாம் காணியாக மாறியதன் மர்மத்தை நான் அறியேன். இப்படியேன் சுற்றி வளைத்துச்சொல்கிறாய், ஏழைகளின் சொத்தை சுருட்டினார் என விசயத்தை போட்டு உடைக்கலாம் என எனது உள்மனம் சொல்லுகிறது. அதை கணக்கில் எடுக்க வேண்டாம். இது தாத்தாவின் சொத்துக்கணக்கு.
பாட்டியின் தந்தை அந்தக் காலத்து ஓவேசியர். அனுராதபுரத்தில் வேலை. அவருக்கு காணி வயல்கள் எல்லாம் அனுராதபுரத்திலேயே இருந்தன. நான் சிறுவனாக இருந்த போது அனுராதபுரத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு நெல்மூட்டை வருவது வழமை. இப்படிப்பட்ட ஓவேசியருக்கு உள் ஊரிலையா காணிக்குப் பஞ்சம்? தாராளமாக காணிகள் இருந்தன. அதன் பங்குகளில் பாட்டிக்கும் தாராளமாக இருந்தன.
தாத்தா திடீரென ஏற்பட்ட நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மண்டையைப் போடுவதற்கு முன்னால் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார். அவருக்கு மூன்று ஆண்கள். மூத்தவர் என்னுடைய தந்தை. அவருக்கு அப்போது திருமணமாகியிருந்தது. ஒரு குழந்தை. மனைவியின் வயிற்றுக்குள் இன்னொன்று. (வயிற்றுக்குள் இருக்கும் அந்தக் குழந்தைதான் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இதை பகிரங்கப்படுத்தப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.) மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. இந்த வேளையில் குடும்பத்தில் அரசியல் குழப்பங்கள் நிறைய நடந்தன. ஒரு கட்டத்தில் எனது தந்தையார் வெளி நடப்புச் செய்துவிட்டார். பாகப்பிரிவினை நடைபெற்றது. பிச்சல் புடுங்கல் இல்லாத எனது தாத்தாவின் பெறுமதியான சொத்துகளில் அவரது வீட்டைத்தவிர ஏனையவைகள் அனைத்தும் தம்பிமார்கள் இருவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. பாட்டியின் சொத்துக்களான வில்லங்கமான சொரியல் காணிகள் எனது தந்தைக்கு வந்தன. அத்துடன் பிரச்சினைகளும் வந்தன.
எங்கள் வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது. அது இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். எனது தந்தை அதை அடிக்கடி தூசிதட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, எங்களது சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும்? இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். சீலாவடலி பதினான்கு பரப்பு, பள்ளபுலம் பத்துபரப்பு, பனுவில் இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார்.
பிறகு அவரது பங்காளிகள் (ஒன்று விட்ட சகோதரர்கள்) வீட்டை பேச்சு வார்த்தைக்குப் போவார். எல்லாப் பேச்சுவார்த்தைகளைப் போல இந்தப் பேச்சுவார்த்தையும் றபர் போல இழுபட்டுக்கொண்டிருக்கும். முடிவு வராது. ஆனால் பேச்சுவார்த்தை முறிவைடயும். சில காலத்தின் பின் திரும்பவும் பேச்சுவார்த்தை ஆரம்பித்து முறிவடையும். சிலர் வழக்குக்கு போகும்படி இலவச ஆலோசனை வழங்குவார்கள். ஆனால் தந்தையோ கோட் வாசல் மிதிக்கமாட்டன்என்று சபதம் எடுத்ததாக சொல்லுவார். இப்படியே காலம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. எங்களுக்கு நிறைய விவாயசாயக் காணிகள் இருந்தும், விவசாயம் செய்ய போதிய அளவு நிலம் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது போல காணிகள் எல்லாம் காகிதத்தில் தான் இருந்தன.
நாட்டு நிலமைகள் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு போனது. எமது ஊருக்கு அருகிலிருந்த இராணுவ முகாம் சிறிது சிறிதாக பெருத்துக்கொண்டு வந்து எமது ஊர் முழுவதையும் விழுங்கிவிட்டது. முடிவு, காணியுள்ளவர் காணியில்லாதவர்கள் மற்றவர்களது காணியை அபகரித்தவர் அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அகதிகள்.
அருகிலிருந்த கிராமங்கள் தஞ்சம் கொடுத்தன. ஆனாலும் அகதியாக ஓடிப்போகும் போது பாதுகாப்பாக கொண்டு போன பொருட்களில் இந்த காணி உறுதிக் கட்டுக்கள் முக்கிய இடத்தை வகித்தன.
சிறுது காலத்தின் பின்னர், எமது ஊரின் பெரும் பகுதிகள் விடுபட்டாலும், எமது காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது எனக்கு பெரும் நிம்மதியாக இருந்து. எப்படியோ மூன்று தலைமுறைப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வந்தது. ஆனால் இதை வெளியே சொல்லவில்லை. எப்படா இவனுக்கு துரோகி பட்டத்தைக் கொடுப்போம் என்று காத்திருப்போரின் வேலையை சுலபமாக்க விரும்பவில்லை. அதே வேளையில் பல ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்கள் அகதியானது பெரும்சோகம்.
இருபத்திரண்டு ஆண்டுகள் உயர்பாதுகப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் பெரும் பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்தது. பெரு மகிழ்சியடைந்தேன். காணியிருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையை சிறுவயதில் நான் அனுபவித்தவன். அந்த நிலை ஒருவருக்கும் வரக்கூடாது.
அண்மையில் ஊரிலிருந்து எனது உறவினரால் அனுப்பப்பட்ட பொதி ஒன்று அவுஸ்திரேலியாவில் இருக்கும் எனக்கு வந்து சேர்ந்தது. திறந்து பார்த்தேன். உள்ளே பழுப்பேறிய காகிதங்கள் கட்டுக்கட்டாக. எனது தந்தை தூசி தட்டி றங்குப்பெட்டிக்குள் பாதுகாத்து வைத்த அதே காணி உறுதிக்கட்டுகள். றிலே மாதிரி இரண்டு தலைமுறை கை மாறி மூன்றாவது தலைமுறையான எனக்கு வந்துள்ளது. ஐம்பது ஆண்டு காலப்பிரச்சனை. இதை அடுத்த தலை முறைக்கு நான் கையளிக்கப் போவதில்லை.


No comments: