.
என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும். ‘நாங்கள் காலையில் எழுவதை சூரியன் பார்க்கக் கூடாது. சூரியன் எழுவதை நாங்கள் பார்க்கவேண்டும்.’ ஆகவே அதிகாலையிலேயே உருட்டி உருட்டி நாங்கள் எழுப்பிவிடப்படுவோம். சாதாரண நாளிலேயே இப்படி என்றால் பொங்கல் நாள் பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. சூரியன் பூமியின் மற்றப் பக்கத்தில் நிற்கும்போதே நாங்கள் எழும்பியாகவேண்டும். புதுப்பானை, புது அடுப்பு, புதுநெல் என எல்லாமே முறைப்படி செய்யப்படும். சூரியன் உதயமாகும்போது கிழக்கு பக்கமாக பால் பொங்கி வழிந்து பொங்கல் தயாராகும். இப்படி சிறுவயதில் ஆரம்பித்த பொங்கல் என்னுடன் பல நாடுகளுக்கும் பயணித்தது.
ஆப்பிரிக்கா என்னை பெரிய அளவுக்கு அலுப்பூட்டவில்லை. அங்கே வாழ்ந்த அத்தனை வருடங்களும் பொங்கல் கொண்டாடினோம். அதிகாலையில் வீட்டின் வெளியே மூன்று கல்வைத்து புதுப்பானையில் கிழக்கு பக்கமாக பால் பொங்கி வழிய பொங்கல் செய்தோம். ஆப்பிரிக்க சிறுவர் சிறுமியர் பள்ளிக்கு ஊத்தை கலர் சீருடை அணிந்து செல்லும்போது வழியில் தங்கள் வேலையை மறந்து எங்களை சூழ்ந்துகொள்வார்கள். இவர்களுக்காகவே நிறைய சர்க்கரைபோட்டு சமைத்த பொங்கலை கையிலே வாங்கி சுவைத்தபடி மறுகையில் புத்தகப்பையை சுழற்றிக்கொண்டு இருபது நிமிடம் லேட்டாக புறப்படுவார்கள். கூரான தோள்மூட்டுச் சிறுமி இரண்டு கைகளிலும் பொங்கல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடுவாள். பொங்கல் முக்கியமா, பாடம் முக்கியமா என்பதில் அவளுக்கு ஒருவித சந்தேகமும் கிடையாது.
இந்த பத்து வருட காலமும் தவறாமல் ஒரு கிழவரும் வந்தார். பிளாஸ்டிக் போத்தலை நீளவாக்கில் பாதியாக வெட்டி தயாரித்த செருப்பை அணிந்திருப்பார். ஆப்ரஹாம் லிங்கன் அணிவது போன்ற உயரமான தொப்பி. துக்கம் அனுட்டிப்பவர்போல கால் வரைக்கும் நீண்ட சாம்பல் நிற அங்கி. கல் உருளுவதுபோல நிறுத்தாமல் பேசுவார். என்னுடைய ஒரு வார்த்தைக்கு அவரிடமிருந்து பத்து வார்த்தைகள் விழும். பொங்கலை சுடச்சுட வாங்கி அப்படியே வாயில் திணிப்பார். நீச்சல் துள்ளு பலகையில் துள்ளுவதுபோல நாலு தரம் துள்ளுவார். பின்பு மறைந்துவிடுவார். அடுத்த பொங்கலுக்குத்தான் மறுபடியும் அவரைக் காணமுடியும்.
பாகிஸ்தானில் பொங்கல் கொண்டாடியது வேறு அனுபவம். அங்கே பச்சை அரிசி, சர்க்கரை கல்கண்டு, பயறு எல்லாம் தாராளமாகக் கிடைக்கும். கரும்பு அந்த நாட்டில் நிறைய விளைந்தது, எங்கே வாங்குவது என்பதுதான் தெரியாது. சந்தையில் போய் நின்று ’அப்துல்லா’ என்று கத்தினால் போதும் நாலு பேர் ஓடிவருவார்கள். அவர்களிடம் சொன்னால் கரும்பு வீட்டுக்கு வந்துவிடும். ஆனால் பொங்கலை வெளிவாசலில் கொண்டாட முடியாது. கோலம்போட முடியாது. ஆகவே மொட்டைமாடி ஒன்றுதான் உங்கள் தேர்வு. அங்கே நேரே வரும் சூரியன் உங்களுக்கு மட்டும்தான். ஒரேயொரு சங்கடம்தான். துப்பாக்கி குண்டுகள் வழிதவறி மாடியில் வந்து விழுந்து ஒன்றிரண்டு பேர் இறக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் வருடத்துக்கு ஒருமுறை வரும் இனிப்பு பொங்கல் கிடைக்குமா?
சூடானில் பொங்கல் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். பால் எங்கேயும் கிடைக்கும் ஆனால் நைல் நதி நீர் கிடைக்குமா? சூடானில் வெள்ளை நதியும் நீல நதியும் சந்தித்த பின்னர் முழு நைல் நதியாக உருவாகி எகிப்துக்கு பயணம் செய்யும். சீசர் மயங்கிய பேரழகி கிளியோபட்ரா குளித்திருக்கக்கூடிய நைல் நீரில், உலகத்தின் அதிசயமான மிகப்பெரிய கீஸா பிரமிட்டை கட்டி எழுப்பிய சியோப்ஸ் மன்னர் கால் நனைத்திருக்கக்கூடிய அந்த நீரில் பொங்கியிருக்கிறோம். நைரோபியில் எழுத்தாளர் ஐஸக் டெனிஸன் வர்ணித்த ங்கொங் மலைக்கு முன்னாலும், ஒட்டகம் உலவும் சோமாலியாவின் பாலை நிலத்திலும் கூட பொங்கியிருக்கிறோம். சோமாலியாவில் மாட்டுப் பாலுக்குப் பதிலாக ஒட்டகப் பாலை சேர்க்கலாம் என்று மனைவியிடம் கெஞ்சியும் அது வாய்க்காதது பெரும் நட்டம் என்று இப்போது தோன்றுகிறது.
நான் பல வருடங்களுக்கு முன்னர் கனடா வந்து இறங்கியபோது எல்லாமே இங்கே வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்த்தாலும் பொங்கல் பண்டிகை மாறக்கூடும் என நினைக்கவில்லை. கனடா பத்து மாகாணங்களும் 3 பிரதேசங்களும் கொண்டது. ஒரு மாகாணத்திலும் மூன்று பிரதேசங்களிலும் வாழும் மக்களின் சனத்தொகை 250,000. கனடாவில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 300,000. அதாவது, தமிழர்களின் பலம் கனடாவில் ஒரு மாகாணத்துக்கும் மூன்று பிரதேசங்களுக்கும் சமமானது. தமிழ் ஈழம் கிடைக்கும்போது கிடைக்கட்டும். அதுவரைக்கும் இதுதான் என் நாடு. தமிழர்கள் சுதந்திரமாக உலவவும், மூச்சுவிடவும், இறக்கவும், இறந்தபின் அவர்கள் சமாதிகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கவும் உத்தரவாதமான நாடு.
நான் வாழ்வது கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் மார்க்கம் என்ற நகரில். எங்கள் நகரசபையில் முதலாவது தமிழ் அங்கத்தவர் திரு லோகன் கணபதி. இவர் முயற்சியால் இனி வரும் எல்லா வருடங்களிலும் ஜனவரி 14ம் தேதி தமிழர் பாரம்பரிய நாள்/ புதுவருடம்/ தைப்பொங்கல் என நகரசபையால் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவர் செல்வி ராதிகா சிற்சபைஈசன். இவர்கள் இருவரும் கனடா தமிழர்கள் சார்பில் முதன்முதலாக தமிழர் பாரம்பரிய நாளை/ பொங்கலை/ புதுவருடத்தை 14 ஜனவரி 2012 அன்று ஆரம்பித்து வைத்தார்கள். இது இனிமேல் வருடாவருடம் தொடரும்.
ஆனால் நான் வந்து இறங்கிய வருடம் பொங்கலை கொண்டாடுவது அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. பொங்கலுக்கு மனைவி பட்டியல் போட்டு தந்தால் அதை நான் எப்படியும் வாங்கிவரவேண்டும். ஒவ்வொரு சாமானும் ஒவ்வொரு திசையில் கிடைக்கும். பச்சையரிசி, பால், சர்க்கரை, பயறு, கரும்பு, முந்திரிப்பருப்பு, வாழை இலை என்று நீண்ட பட்டியல். வாழை இலைக்கு மாத்திரம் 15 மைல் தூரம் போகவேண்டி வந்தது. எப்படி எப்படியெல்லாம் போகக்கூடாது என்று நினைப்பேனோ அப்படி அப்படியெல்லாம் பிய்த்துக்கொண்டு காரை ஓட்டினால்தான் சமாளிக்கலாம்.. இருபது வருடம் வயதான சமையல் குறிப்பை பிரித்து வைத்து, படித்து சமையல் நடந்தது. முகத்தல், நிறுத்தல், பெய்தல், எண்ணல் என்ற நாலு வகை அளவுகளையும் அதிநுட்பமாக பயன்படுத்திய தயாரிப்பு. புதுப்பானை விளிம்பில் பால் மெள்ள அசைந்தது. மனைவி பானையை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார்.
விறகு அடுப்பில் சமைக்கும்போது ஆசுவாசமாக முடிவுகள் எடுக்கலாம். ஆனால் கனடியன் டயரில் வாங்கிய சிறிய சமையல் எரிவாயு அடுப்பு வேகமாக வேலை செய்தது. எதிர்பாராத சமயத்தில் பால் பொங்கியது. கிழக்குப் பக்கமாக வழிந்தால்தான் சுபிட்சம். நிறையப் பணம் சேரும். நாலு புது வங்கிக் கணக்குகள் திறக்கலாம். நான் வங்கிபற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி ‘எங்கே கிழக்கு? எங்கே கிழக்கு?’ என்று கத்தினார். நான் அமைதியாக ’சூரியன் உதிக்கும் பக்கம் கிழக்கு’ என்று கூறினேன். இப்பொழுது ’எங்கே சூரியன்? எங்கே சூரியன்?’ என்று கூக்குரல் எழுப்பினார். கனடா போன்ற ஒரு தேசத்தில் கேட்கவேண்டிய ஒரு கேள்வியா? இங்கே சூரியன் எப்பொழுது வேண்டுமென்றாலும் வரும். எப்பொழுது வேண்டுமென்றாலும் போகும். சில சமயம் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்து மறைந்து விடுவதும் உண்டு. வரும்போது கண்டு கொள்வதுதான்.
மனைவி அப்படி கத்தியபோது வெளியே இருண்டு பனி பொழிந்தவாறு இருந்தது. மழை பெய்வதுபோல, காற்று அடிப்பதுபோல பனி பொழியும்போது சத்தம் கிடையாது. ஒரே அமைதி. ஒருபனித்துகள் போல இன்னொன்று இல்லை. ஆகாயத்திலிருந்து எல்லோருக்கும் மேல் வித்தியாசமில்லாமல் விழுந்தது. பனித்தரை இரண்டு அங்குலம், மூன்று அங்குலம் என வளர்ந்து பூமியை மேடு பள்ளம் இல்லாமல் மூடி சமதரை ஆக்கியது. நாடு இருப்பவர்கள், நாடு இல்லாதவர்கள், குடியுரிமை கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோர் மேலும் சமமாக விழுந்தது. வெளியே பார்த்தபோது கனடா மறைந்துவிட்டது. ஒரே வெள்ளைப் பாலைவனம்.
மதியம் நெருங்கியபோது பொங்கல் உண்பதற்கு தயாரானது. முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிரான்பெர்ரி வற்றல் சேர்த்த பொங்கல் நல்ல வாசனையை பரப்பியது. அகப்பை பொங்கலோடு ஒட்டிக்கொண்டு விட்ட படியினால் அதை லேசாகக் கிளப்ப முடியவில்லை. மனைவி அகப்பையை பார்த்தார். பின்னர் என்னைப் பார்த்தார். பிறகு பானையை பார்த்தார். ’பெரிய புத்தகம் எல்லாம் எழுதிய உங்களுக்கு கிழக்குப் பக்கம் எங்கே என்று தெரியாதா?’ அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் குற்றம் செய்த வீட்டு நாய்போல குனிந்து தரையை பார்த்து அமர்ந்திருந்தேன். அப்போதெல்லாம் ஐபோன் கிடையாது திசை பார்ப்பதற்கு. 15 மைல் தூரம் பயணம் செய்து வாங்கிவந்த தலை வாழையிலை சும்மா கிடந்தது. நான் அதில் பொங்கல் விழும் சத்தத்திற்காக காத்திருந்தேன். யாரோ ஈரத்துணியில் சூடான ஸ்திரிப்பெட்டியை அழுத்தியதுபோல ‘உஸ்ஸ்ஸ்’ என்ற பெரும் சத்தம் எழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அது மனைவியின் பெருமூச்சு. ஒருவாறு பலத்தை பிரயோகித்து பொங்கலை கிளப்பி தோள்மூட்டுகள் குலுங்க பரிமாறினார். பொங்கலை சுற்றி இலை கறுப்பாகி வந்தது. இருவரும் ஒருவர் முன் ஒருவர் உட்கார்ந்து கொண்டோம். நடுவில் பொங்கல் பானை. சிலந்தி வலையை தொடுவதுபோல மெதுவாக ஓரத்தில் தொட்டு உண்ண ஆரம்பித்தேன்.
அன்றைய நாள் முடியுமட்டும் கிழக்கு பக்கம் வரவே இல்லை. வராது. நாங்கள் பொங்கியது மேற்குப் பக்கம் என்பதை சில மாதங்கள் சென்று கண்டுபிடித்தோம்.
Nantri:http://amuttu.net/
No comments:
Post a Comment