வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 20 - 01 -
2013 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன்
றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna) மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ் செயற்பாட்டாளர்கள் திரு. விஸ்னு இராஜன் அவர்கள்; அவுஸ்திரேலிய தேசியகொடியையும், திரு சந்திரகுமார் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியையும் ஏற்றிவைத்தும், மாமனிதர் தில்லை ஜெயக்குமாரின் துணைவியார்
திருமதி யோகா ஜெயக்குமாரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழர்
ஓருங்கிணைப்புக் குழு / நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியுமான திரு டொமினிக் அவர்களின்
வரவேற்பு உரையுடன் விழா தொடக்கிவைக்கப்பட்டது. தமிழர் விளையாட்டுவிழாவில் துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், சிறுவர்களுக்கான கள விளையாட்டுக்கள் என பல்வேறு வயதுப்பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன. இம்முறை தமிழீழத் தேசிய விளையாட்டான கிளித்தட்டு / தாச்சி விளையாட்டும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கரப்பந்தாட்டத்தில், டெனிஸ் அணியினர் வெற்றிக்கேடயத்தையும் காண்டீபன் அணி இரண்டாவது இடத்தையும், உதைபந்தாட்டத்தில் டான்டிபோய்ஸ் அணியினர் வெற்றிக்கேடயத்தையும் புளுஸ் (Blues) அணியினர் இரண்டாவது இடத்தையும், துடுப்பாட்டத்தில் வெஸ்ட் சைடர்ஸ் (West Siders) அணியினர் வெற்றிக் கேடயத்தையும் கைப்பிள்ளை அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
சிறுவர்களுக்கான போட்டிகளாக ஓட்டப்பந்தயப் போட்டிகள் சங்கீதக்கதிரை பழம்பொறுக்குதல், தவளைப் பாய்ச்சல், சாக்கோட்டம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகள் நடைபெறும் போது நாவிற்குச் சுவையான தோசை, பிட்டு, கொத்துரொட்டி, ஓடியல் கூழ், சிற்றுண்டி வகைகள் உட்பட பலவிதமாக தாயக உணவுப் பொருட்களுடன், அன்றைய வெப்பக் காலநிலைக்கேற்ப குளிர்பானங்களும், தொண்டர்களினால் தயார் செய்யப்பட்டு காலை முதல் இரவு வரை மக்களிற்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களினால் வெற்றிக் கோப்பைகளும், கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்தலைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டு விழா 2013 இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment