இலங்கைச் செய்திகள்


வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு

பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயரை எழுதி குளியாப்பிட்டியவில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

மத்தள விமான நிலையம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும்: பிரியங்கர


ஓய்வூதியத்தையும் இழந்தார் ஷிராணி பண்டாரநாயக்க!

எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற நிலைப்பாடு தொடரக் கூடாது!




வடக்கில் கைதான 44 பேரும் பூஸாவுக்கு மாற்றம்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 44 பேரும் காலி பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பிபிசியின் சிங்கள சேவையான சந்தேஷிய தெரிவித்துள்ளதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுதலைச்செய்வதற்கு முன்வருமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய பொறுப்பின் கீழ் இல்லை என்று புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி தேனீ 





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் கைது

ponkanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர்  பொன்காந்தன் என்றழைக்கப்படும் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் நேற்று  (20.01.2013 )கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பொன் காந்தன் நேற்று காலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் அறிவகம் எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிமருந்து , ஆபாச வீடியோக்கள் , புகைப்படங்களுடன் பிரதேச யுவதிகளின் புகைப்படங்கள் பல கைப்பற்றபட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றினால் இவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகி இருந்த பொன்காந்தன் நேற்று காலை இந்தியாவிற்கு புறப்படவிருந்த விமானம் ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தவாரம் யாழ்பாணத்தில் இரு இளைஞர்கள் சுமார் 11 கிலோ கிராம் வெடி மருந்துடன் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது ஒரு இளைஞன் சிறிதரனின் செயலாளரும் செருங்கியசகாவுமான அருணாச்சலம் வேளமாளிகிதனின் நெருங்கி நண்பர் என்பதும் அவர் கைதுசெய்யப்பட்டபோது கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அலுவலகத்திலிருந்தே புறப்பட்டிருந்தார் என்ற தகவலும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சி அலுவலகத்தை பொலிஸார் சோதனையிட்டபோது அங்கிருந்து அதேரக வெடிமருந்துகளுடன் மேலதிகமாக ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை பொன் காந்தனின் அலுவலகப்பைகள் மற்றும் அலுமாரிகளிலிருந்து மீட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டபோதும் 12ம் திகதி சனிக்கிழமை பொன் காந்தனை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரிடம் இல்லாத நிலையில் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை எடுத்துச்சென்ற பொலிஸார் தேடுதல் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்துள்ளனர். நீதிமன்று பொன் காந்தனை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. தன்னை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அறிந்த பொன் காந்தன் சுமார் 6 நாட்கள் தலைமறைவாக இருந்து இன்று இந்தியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையை அறிந்துகொண்டும் இவருக்கான இந்திய வீசா மற்றும் விமான பயணச்சீட்டுக்களை பெறுதல் போன்றவற்றிற்கு யார் உதவி செய்தார்கள் என்பன தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி தேனீ 























யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை
By General
2013-01-22

 
புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான சொலமன் ஆகிய இருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 




புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு

By General
2013-01-23
 

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் ஒன்று இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் மேஜர் ஏ.சி. ஜெகத்குமார தெரிவித்தார்.
     நன்றி வீரகேசரி





பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயரை எழுதி குளியாப்பிட்டியவில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்

By General
2013-01-24


இ. அம்மார்
இன்று குளியாப்பிட்டிய நகரில் அஸ்வெத்தும விஹாரைக்கு அருலிருந்து வெதஹாமுதுருவோ என்பரின் கீழ் இயங்கும் ஹெலசிஹல ஹிரு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஹலாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பிக்குகள் உட்பட சுமார் 150 பேர் அடங்கிய குழுவொன்று குளியாப்பிட்டி நகருக்கு முஸ்லிம்களின் மனதை மிகவும் புண்படக் கூடிய பதாதைகளை ஏந்தியவாறு குளியாப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு அருகில் சென்று அல்லாஹ் என்ற அரபு பதாதை சூட்டப்பட்ட கொடும்பாவி ஒன்றை எரித்தனர். 

இவர்கள் ஏந்தி வந்த பதாதைகளில் முஸ்லிம்களை மிகவும் நோவிக்கும் வகையில் பன்றி ஒன்றின் உருவத்தின் மேல் அரபில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாத் தலைவர் அ~;n~ய்க் சித்தீக் அவர்கள் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களுக்கு நேரடியாக முறைப்பாடு செய்ததை அடுத்து அப்துல் சத்தார் உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் கவனத்திற்கும் அமைச்சர்களான எம். எச். எம் பௌசி, அநுரயாப்பா போன்றவர்களுக்கு இது சம்மந்தமாக தெரியப்படுத்தியதுடன் உடனடியாக குளியாப்பிட்டிக்கு விரைந்தார். இவருடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். ந~Pர் இணைந்து கொண்டார்.

இவர்கள் குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க மற்றும் குளியாப்பிட்டிய நகர முதல்வர் லக்~;மன் அதிகாரி ஆகியோரைச் சந்தித்து இவைகளைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற் கொண்டனர்.

இது சம்மந்தமாக குளியாப்பிட்டிய நகரில் முக்கியமான பௌத்த சமயத் தலைவர்களைச் சந்தித்ததில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளியாப்பிட்டிய நகரில் உள்ளவர்கள் எவரும் சம்மந்தப்பட வில்லை எனவும் இதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டாலும் முஸ்லிம் சிங்கள உறவில் விரிசல் ஏற்படுவதற்கு தாங்கள் விரும்ப வில்லை எனத் தெரிவித்தனர்.

முக்கியமாக குளியாப்பிட்டிய நகர பிதா லக்ஷ்மன் அதிகாரி எக்காரணம் கொண்டும் குளியாப்பிட்டி நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெற தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றதுடன் பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக்க அவர்களும் இது சம்மந்தமான இனப்பிரச்சினைகளுக்கு பொலிஸார் இடமளிக்கப்போவதில்லை என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் மத்தியில் பிரச்சினையை உண்டு பண்ணுவதற்கு முன்நின்றவர்கள் சம்மந்தமான அனைத்து தகவல்களும் புகைப்படங்களும் தம்மிடம் இருப்பதாகவும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அப்துல் சத்தார் தெரிவித்தார்.


இந்தச் சம்பவத்தின் பின்பு ஜனாதிபதி மஹிந்த ராஜப்க~ முஸ்லிம் அமைச்சர்களது சந்திப்பு நடைபெற்றதுடன் இனப்பிரச்சினை தூண்டுபவர்கள் சம்மந்தமாக பாராளுமன்றத் தெரிவுக்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது
             நன்றி வீரகேசரி












மத்தள விமான நிலையம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும்: பிரியங்கர
By General
2013-01-24

 
ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் என விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையத்தின் ஓடுபாதை அமைக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படும் என்றார்.

இலங்கையின் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் 2000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மத்தள விமான நிலையம்
அமைக்கப்பட்டு வருவதோடு அதன் நிர்மாணப் பணிகளுக்கென 209 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் ஓடுபாதை 4000 மீற்றர் நீலமும் 75 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   நன்றி வீரகேசரி



ஓய்வூதியத்தையும் இழந்தார் ஷிராணி பண்டாரநாயக்க!
By General
2013-01-27

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி  பண்டாரநாயக்கவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றம் ஒருவரை சேவையிலிருந்து நீக்க தீர்மானிக்கும் விடத்து அவர் ஓய்வூதியம் பெறும் தகமையை இழக்கிறார் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பொது பணிப்பாளர் டி. சுவர்ணபால தெரிவித்துள்ளார்.
 நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியினால் பணி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தினால் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை முன்னாள் பிரதம நீதியரசர் இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி





எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற நிலைப்பாடு தொடரக் கூடாது!

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறும் சிவில் விவகாரங்களில் படையினரின் தலையீடுகளை இல்லாமல் செய்யுமாறும் அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்தக் கோரிக்கைகளை கொழும்பு செவிசாய்க்குமா என்ற சந்தேகம் இப்போது அதிகரித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது தொடர்பான இராணுவத் தரப்பின் அபிப்பிராயத்தை உள்ளடக்கிய அறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவால் பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இராணுவ உயரதிகாரிகள் 6 பேரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்த இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு, போராளிக் குழுக்களிடமிருந்து ஆயுதக் களைவு, கண்ணிவெடி அகற்றுதல் போன்ற விடயங்கள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ அறிக்கை கூறுகிறது.
அதேசமயம் வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் விடயத்தில், நாட்டின் கேந்திர மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு அமைவாக  எந்தப் பகுதியிலும் ஆயுதப் படைகளை வைத்திருப்பதற்கான முழு உரிமையும் அரசாங்கத்திற்கு உள்ளதாக இராணுவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத விதத்திலேயே இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் படையினர் நிலை கொண்டிருந்த பல காணிகள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு, கிழக்கில் (யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி, கிழக்கு) ஆகிய படைத்தளங்களுடன் தொடர்புபட்ட காணிகளில் தற்போது படையினர் நிலைகொண்டிருப்பதாகவும் அக்காணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமாகத் தேவைப்படுவதாகவும் ஆதலால் அக்காணிகளை சந்தைப் பெறுமதியில் சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளவும் அதேசமயம் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவதற்குமான விடயங்களை விரிவாகப் பரிசீலிப்பதற்கு விசேட சபைகளை அமைக்குமாறும் இராணுவ அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஆனால், பல்லாயிரக்கணக்கான வட பகுதி மக்கள் தத்தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை என்று தொடர்ந்தும் முறையிட்டு வருவதாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துவருகிறது.
இடம்பெயர்ந்த சகலரையும் மீளக்குடியேற்றிவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் பாரிய தொகைக்காணிகள் அரசியலுடன் தொடர்புபட்ட தனிப்பட்ட நலன்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அத்துடன் அதிகளவிலான இராணுவ பிரசன்னத்தாலும் கட்டுப்பாட்டாலும் தமிழ் மக்களின் கலாசார, பொருளாதார மற்றும் குடிப்பரம்பலிலும் பாரியளவு பாதிப்பும் பின்னடைவும் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஐக்கிய இலங்கைக்குள் அதிகளவு  அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வே வட,கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் அவர்களின் அபிலாஷைகளுக்கும் தீர்வாக அமையுமென சர்வதேச சமூகம்  மட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் சிவில் சமூகத் தலைவர்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பில் தற்போது உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் சிறியளவிலான அதிகாரப் பகிர்வைக் கூட அமுல்படுத்துவதில் அரச நிர்வாக இயந்திரம் இதயசுத்தியுடனான விருப்பத்தை இதுவரை வெளிப்படுத்தாத தன்மையே காணப்படுகிறது.
இந்தத் தடைகளிலிருந்து மீண்டெழுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள், தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு  தமிழ் மக்களின் நியாயபூர்வமான கவலைகள், பிரச்சினைகளை பெரும்பான்மைச் சமூகமான  சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே அனுகூலமான விடயம் என்று உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் கூறுகின்றனர். சர்வதேச ஆதரவு இந்த விடயங்களுக்கு அவசியமானதாக இருக்கின்றபோதிலும் அதிலும் பார்க்க உள்நாட்டில் வலுவான ஆதரவைத் திரட்டிக்கொள்வதன்  மூலமே தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு  நியாயபூர்வமான தீர்வை குறைந்தளவிலாவது பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு வியாதிகளால் வருந்தும் ஒருவர் நோய்களை அடையாளம் கண்டு உரிய சிகிச்சையை வழங்குமாறு மருத்துவரைக் கேட்டால், எந்தவொரு வியாதியும் இல்லை, வெறும் மனப்பிரமைதான் என்று மருத்துவர் கூறி நிராகரித்துவிடுவது போன்றே தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடும் காணப்படுகிறது.

நன்றி தினக்குரல் 

No comments: