தமிழ் சினிமாவை நூற்றாண்டு சிகரத்திற்கு கொண்டு சென்றுள்ளது விஸ்வரூபம்


.



உலக சினிமாவின் தரத்திற்குள் கால் பதித்துள்ள முதலாவது தமிழ் தயாரிப்பு.. தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் வெளியான மறு நாளே எழுதும் விமர்சனம் தமது தொழிலை பாதிக்கிறது என்ற கோரிக்கையால் விஸ்வரூபத்திற்கான உண்மை விமர்சனத்தை எழுத பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு அதுபற்றி உடனடியாக எழுதாவிட்டால் அதுவும் தொழிலைப் பாதிக்கும் செயலே என்ற உண்மையை அப்படம் ஏற்படுத்திவிட்டது.
இதுவரை டண்டுணக்கா.. டணக்கு ணக்கா என்றிருந்தலே போறும் என்றிருந்த இந்திய தமிழ் சினிமாவை ஒரே இழுவையாக இழுத்து, மலையின் உச்சிக்கு ஏற்றியிருக்கிறார் கமல்.
காதல் பாட்டுக்கள் இல்லை, வில்லனுக்கு மரணமில்லை, கிளைமாக்ஸ் இல்லை, கதாநாயகனுக்கு ஆர்பாட்டமான ஒரு தொடக்கமில்லை, ஆனால் கதிரையைவிட்டு எழும்ப முடியாமல் ரசிகரை ஆசனத்தின் நுனிக்கே கொண்டு வந்துவிடுகிறார்.
பிளாஸ்டிக் பையை விரித்துவிட்டு அதிலேயே நிற்க வைத்து தலையில் ஒரு வெடி, தரையில் சிந்தும் இரத்தத்தை துடைக்கும் அவசியம் இல்லாத கொலை..
சூடு வேண்டி இரத்தம் சரமாரியாக ஓட கிடக்கிறது ஓர் உடலம், அந்த நேரம் அதன் மார்பிற்குள் கிடக்கும் தொலைபேசி அடிக்கிறது, அந்த வைப்பரில் இரத்தம் சரக் கரக்கென அசையும் அசைவு, நுட்பமான வெளிப்பாடு.
ஒவ்வொரு நடிகருடைய முகபாவத்திற்கும் கொடுத்துள்ள கால அவகாசம், கைதேர்ந்த நடிப்புக் கலையை கமேராவிற்குள் கொண்டு வரும் கலை நேர்த்தி.. பொறுமையான படப்பிடிப்பு..

ஆப்கானின் சூழலில் ஒரு திரைப்படத்தை அமெரிக்க உலங்குவானூர்திகளின் தாக்குதல்களோடு படமாக்கிய சிறப்பு இந்திய சினிமாவிற்கே சவால் விட்டிருக்கிறது..
படம் பார்க்கத் தொடங்கிய 15 வது நிமிடமே நம்மை அறியாமலே கமல் பற்றிய பயம் மனதை வாட்டத் தொடங்கிவிட்டது காரணம் ஒரு திரைப்பட இயக்கனருக்கு உயிராபத்தைத் தரும் ஆபத்தான கதைக்கரு.
கமல் கால் வைக்கக்கூடாத இடத்தில் கால் வைத்துவிட்டார் என்ற அச்சத்தை ஏற்படுத்திய கதை, அந்த அச்சத்திலேயே நம்மை வாழ வைத்து, வேறு வழியில்லை இந்தக் குகைக்குள் நுழைந்துவிட்டோம் இதனால் வெளியேறியே ஆக வேண்டும் என்ற நிலைக்குள் நீச்சலடிக்க வைக்கிறது..
கமலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பிரபல சினிமா கலைஞன் பாலு மகேந்திரா சொல்லியிருப்பது முற்றிலும் பொருத்தமானது.
பணம், பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு, சினிமாவால் முதல்வராகும் மோசமான கனவு எதுவும் இல்லாமல் சினிமாவிற்காக ஒரு வெறியோடு கமல் உழைத்துள்ளார்.
களத்தூர் கண்ணம்மா படத்தில் சிறுவனாக நடிக்க ஆரம்பித்த கமல் ஆப்கான் காபுலில் தனது களத்தூரை வைத்து இந்தச் சாதனையை படைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
வெறுப்போடு பார்த்தால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தாக கருத முடியும், அதுபோல கமலின் கோணத்தில் பார்த்தால் அவருடைய நியாயங்களும் சரியானதாகவே இருக்கிறது.
மேலும் விஸ்வரூபத்தில் காட்டப்படும் காட்சிகள் யாவும் ஏற்கெனவே இணையத்தில் வெளிவந்த காட்சிகளே என்பதையும் மறுக்க முடியாது.


புறாக்களும் குருவிகளும் அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக இறந்து விழுந்த நிகழ்வுகள் கூட சென்ற ஆண்டு முற்பகுதியில் நடந்த நிகழ்வுதான்..
இந்தப் படத்தில் வரும் எல்லாக் காட்சிகளையும் நாம் பார்த்திருக்கிறோம் செய்திகளில், இப்போது திரைக்கு வந்திருக்கிறது அவ்வளவுதான்.
இப்படி பட்டி மன்றம்போல இரண்டு பக்கங்களுக்குமே நீதபதியின் இலாபத்தைப் பொறுத்து தீர்ப்புக் கொடுக்கக் கூடிய கதை இப்போது உலக மன்றுக்கு வந்துவிட்டது.
கதை கதைதான் இனி அரசியல் தலைவர்களோ, மதத்தலைவர்களோ, திரைப்பட தயாரிப்பாளர்களோ அதற்கு பாத்தியதை கொண்டாட முடியாது, பார்க்கும் ரசிகனே அது சரியா இல்லை தவறா என்ற தீர்ப்புக்கான நீதிபதி.
அல்குவைடா, ஜிகாத், இந்திய ரா அமைப்பு, அமெரிக்க எப்.பி.ஐ இந்த நான்கு அமைப்புக்களும் கதையின் பிரதான இரிசுகளாக சுழன்கின்றன.
இந்த நால்வருமே அவரவர் சுயநலத்திற்கு நல்லவரே அல்லாது பொதுவான உலகத்தினால் நல்லவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் எல்லாம் கடந்த மானுடத்தின் காவலரும் அல்ல.. அது அவர்களுக்கே தெரியும்.
குறைகளும் உண்டு…
உரையாடல்கள் வண்டிற் சில்லில் நெரிபட்டுப் பறக்கும் கருங்கற் குருணிகள் போல ஆங்கிலம், தமிழ், அரபி என்று பல மொழிகள் கலந்து மணிப்பிரவாள நடையாக இடறுகின்றன.
ஆப்கான் போர், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய பரந்த ஞானமும், வாசிப்பு அறிவும் இல்லாமல் தொடர் நாடகத்தின் அறிவோடு வாழ்ந்து வரும் ரசிகர்களுக்கு ஆப்கானுக்குள் நுழைவதும், கதைக்களத்தை புரிவதும் கடினமாக இருக்கும்.
பரந்த அறிவை வளர்க்காமல் தேமே என்று வாழ்வது அவரவர் குற்றம், அது கமலின் குற்றமல்ல..
சினிமா உயர வேண்டும்…
ரசனை மாறவேண்டும்..
செக்கு மாடாக சுற்றும் தமிழ் சினிமா உயர வேண்டும்..
இந்த இலட்சியங்களுக்காக தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுத்து கமல் உருவாக்கியிருக்கும் படைப்பு இந்திய சினிமா வரலாற்றில் நூற்றாண்டு மைற் கல்..
தமிழக முதல்வரின் வீட்டு வாசல் ஏறி கமல் பிச்சை கேட்டிருந்தால் கமல் என்ற மாபெரும் கலைஞனின் செருக்கு அழிந்திருக்கும், அவனும் மற்றவரைப் போல ஊரோடு ஒத்த பிழைப்புக் கலைஞனாகியிருப்பான்..
அன்று குருடனாகி, கோயிலில் பாடி மடிந்த எம்.கே.தியாகராஜ பாகவதரை கொலைக் குற்றம் சாட்டி சிறையில் தள்ளியபோதும், சிவாஜியை விட ஒரு ரூபா அதிக சம்பளம் தருகிறோம் சிவாஜிக்கு வில்லனாக நடியுங்கள் என்று வறுமையை காரணம் காட்டி கீழ்மைப்படுத்திய போதும், அதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தான் அந்தக் கலைஞன்.
அதுபோல தமிழக முதல்வரின் படி ஏறாது, தமிழகத்தில் படம் நின்றாலும் நிற்கட்டும் என்று அடிபணியாது கமல் கலைக்குக் கொடுத்திருக்கும் பெருமையானது எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு பிறகு தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் கமலே என்ற சிகரத்தை அவருக்குக் கொடுத்துள்ளது.
விஸ்வரூபம் எல்லோரும் பார்க்க வேண்டிய தரமான திரைப்படம்..
Nantri:அலைகள்

1 comment:

Anonymous said...

A very educated Film Review,Thanks & most appreciated.The comments are knowledgeable.

In My own "Review"-This Movie should be viewed as "Hollywood Movie",(is this the first?)(1)Produced (2) Directed (3)Story & Scripted & finally (4)Main Actor & Actress,being Indian.

Traditionally "Indian Movies" try to claim glory to have achieved "Hollywood Standards".

Kamal Hassan by his "Hollywood Production",has achived certain standards,the "Hollywood" has never seen.His message to Hollywood is,try & match Me!

Kamal Hassan by his unique Talent,ability & Gift,carried the billions of Indian Cinema goers
In India & World wide,with him into New York & into Afganistan.

Is this the pinnacle of Kamal Hassan's "Achivements? This is his Journey,He is destined to achive Many many more greatness.

What a Journey! Wow,I am glad & proud I am living in his era.

விஸ்வரூபம் எல்லோரும் பார்க்க வேண்டிய தரமான
Hollywood திரைப்படம்..

SivaSubramaniam Purushothamar