.
எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்
நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள் வெகு விரைவில் நிகழுமா?
உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம்.
ஆனால் வெள்ளைக்காரங்க சொல்லை விட எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால எல்லா துறைகளிலும் துரித கதியில் வளர்ச்சி காண்றாங்கோ. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் இனத்தால மூனுக்குப் (நிலாவுக்கு) போக முடியலை எனும் போது வெட்கமா இல்லையா? எம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சுக்கனுமுங்க. தமிழர்களின் ஒரே பண்பு என்ன தெரியுமா? எதற்குமே ஓர் எல்லை வைப்பது. இத்துப் போன கலாச்சாரப் பண்பிலிருந்து விலக முடியாது இந்த வழியில் தான் நாம வாழ்வோம் என அடம் பிடிப்பது. இந்தப் பண்புகள் உள்ள வரை எந்த ஜென்மத்திலும் தமிழனால முன்னேறவே முடியாதுங்க.
முதல்ல இந்த கேவலமான குணங்களை தூக்கி குப்பையில போடனுமுங்க. எம்மில் நூற்றுக்கு 99 வீதமான தமிழர்கள் பெற்றோர் சொற்படி, எம் முன்னோர் சொற்படி எதற்குமே ஓர் எல்லை வைத்து வாழ்வதையே பழக்கமாக கொண்டிருக்கிறோம். கல்வி என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி ஓர் கோடு கீறி அதன் மேலே வாழ்றோமுங்க. உதாரணமா ஒருத்தன் கம்பியூட்டர் டிகிரி படிக்கிறான் என்றால் அவன் டிகிரி முடிச்சதும் எப்படா வேலை கெடைக்கும் என்று தேடிக்கிட்டு இருப்பான். வேலை கிடைச்சதும் அந்த வேலையே கதி என்று கிடந்து காலத்தை ஓட்டிக்குவான். பொத்தாம் பொதுவா அநேக தமிழர்கள் இப்படித் தானுங்க.
டிகிரிக்கு அப்புறமா மாஸ்டர்ஸ், அப்புறம் PHD இருக்கே அதையும் படிச்சா ரொம்ப முன்னேற முடியுமே என உணர்ந்து படிக்கிறவங்க ஒரு வீதமான தமிழர்கள் தான். ஒருத்தர் ஆசிரியரா இருக்கார் என்றால் அவர் அந்தப் புள்ளியோடையே தன் வாழ்க்கையை நிறுத்திடுவார். இல்லேன்னா ஏதாச்சும் குறுக்கு வழியை கையாண்டு பதவி உயர்வு பெற்றிடுவாங்க. அதுவும் முடியலைன்னா மேலதிகாரி கால்ல விழுந்து, கையை புடிச்சு கெஞ்சி பதவி உயர்வு பெற்றிடுவாங்க. ஆனால் வெள்ளைக்காரங்க வழியில அப்படி எல்லாம் இல்லைங்க. ஒருத்தர் சாதாரண ஆசிரியரா இருக்கார் என்றாலே மிகவும் கஷ்டப்பட்டு மேற்படிப்பு படித்து பேராசியர் லெவல் வரைக்கும் போயிடுவாங்க.
இதனால தான் அதிகளவான விஞ்ஞானிகள் அவங்க சமுதாயத்தில இருந்து வாறாங்க. ஆனா நம்மாளுங்க ஓர் இத்துப் போன கல்வி முறையை வைச்சு இத்தோடு நிறுத்திக்கனும் அப்படீன்னு சொல்லி வட்டம் போட்டு வாழ்றாங்க. நம்ம பெற்றோர் விடும் மிகப் பெரிய தவறும் ஓர் வகையில் எம் சமூகத்தில் உள்ள கல்விமான்களை ஓர் எல்லைக்குள் தம் அறிவினைச் சுருக்கிக் கொள்ள காரணமாக அமைகின்றது. "அப்பனே! நீ இவ்வளவும் படிச்சதும் போதும், வேலைக்கு போயி வூட்ட பாத்துக்கும் வழியை பாரு" அப்படீன்னு சொல்லுவாங்க. அப்புறம் எங்கே நம்மாளுங்க மேல படிப்பாங்க. மேல் நாடுகளில் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வசதியினை வழங்கியிருக்காங்க. ஆனால் நம்ம நாடுகளில் படித்து முடிய முன்னாடியே பெற்றோர் கடனை தீத்திடனும் அப்படீன்னு எழுதி வைச்சிருக்காங்கோ! தமிழேன்டா!
கடந்த ஈஸ்டர் விடுமுறையின் போது கன்பராவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும் அரிய சந்தர்ப்பமும் கிட்டியதுங்க. கன்பரா நகரின் மையப் பகுதியிலிருந்து அண்ணளவாக 21.5 கிலோ மீட்டர் (27 நிமிட ட்ரைவிங்) தொலைவில் இந்த இடம் அமைந்திருக்குதுங்க. அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று விண்வெளி ஆய்வு மையங்கள் (தரையில் இருந்து நிலவில் நடப்பவற்றை அவதானிக்கும் நிலையங்கள்) இருக்குங்க. அதில ஒண்ணு தான் ஆஸ்திரேலியவின் கண்காணிப்பில் அமெரிக்காவின் உறுப்புரிமையுடன் கன்பராவில் அமைந்திருக்கும் ஆய்வு மையம்.
இந் நிறுவனத்தினை அமெரிக்காவின் நாஸா நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிர்வகிக்கின்றார்கள். இங்கே போயிருந்த வேளையில் நிலவிற்குச் சென்று வந்த ஓர் விஞ்ஞானியின் விளக்க உரையினை கேட்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. "நீ என்னா படிக்கிறே?அப்படீன்னு கேட்டார். நான் படிக்கும் பாடத்தின் பெயரை சொன்னேன். அவர் சொன்ன பதில், "இந்தப் பாடம் உனக்கு எல்லையா இருக்க கூடாது. நீ இதுக்கு மேலையும் படிக்கனும். இன்னும் அதிகமா படிக்கனும். ஏன் உங்களைப் போன்றோரால் ஏன் விண்வெளிக்கு / நிலவிற்கு போக முடியாது?" அப்படீன்னு ஓர் கேள்வி கேட்டாரு. நம் தமிழனின் பண்பாட்டினை நான் சொல்லி மானங் கெடவா முடியுமுங்க?
நம்ம ஆளுங்க, நமக்கு முன்னே பொறந்த விஞ்ஞானிங்க நிலவிற்கு போகும் வழி தெரியாது மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ச்சி பண்ணி நிலவிற்குப் போனாங்க. இப்போ வாழும் உங்களைப் போன்ற பசங்களுக்கு நிலவிற்குப் போவதற்கு வழி தெரியும். இப்போ இலகுவான வழி இருக்கு. இந் நிலையில் அடுத்து நிலவில் காலடி வைக்கும் விஞ்ஞானி உங்களில ஒருவரா இருக்க கூடாதென்று கேட்டாரு? நான் ஷாக் ஆகிட்டேனுங்க. காலம் பூரா ஓர் எல்லை வைச்சு வாழ்ந்து, கடுமையா உழைச்சு, மூனு வேளையும் மூக்கு நிரம்ப சாப்பிட்டு தூங்கிட்டு வாழ்க்கை பூரா அதே மாதிரி வேலையினை தொடர்ந்து செய்யும் தமிழன் மூனுக்குப் போவது பத்திச் சிந்திப்பானா என்று சொல்லவா முடியுமுங்க? ஸோ....அன்பு நிறை தமிழ் நெஞ்சங்களே! நிலவிற்குப் போகும் தமிழனாக உங்கள் பிள்ளை ஏன் இருக்க கூடாது? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!
இனி நான் இந்த விண்வெளி ஆய்வு தொடர்பாடல் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை உங்கள் பார்வைக்காக இங்கே இணைத்திருக்கிறேன். பார்த்து மகிழ்வதோடு நின்று விடாது, விண்வெளிக்குப் பறக்கும் நபராக நீங்கள் மாற முயற்சி செய்யுங்கள் உறவுகளே!
பெயர்:Canberra Deep Space Communication Complex (Csiro)
அமைவிடம்:Discovery Drive, Paddys River, Australian Capital Territory
அனுமதி: இலவசம்
வாகன வசதி: பப்ளிக் ட்ரான்ஸ்போட் கிடையாதுங்க. மலை உச்சிக்குப் பயணிக்க வேண்டும் என்பதால் காரில் போகும் போது ஒரு எக்ஸ்ட்ரா டயரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
விண்கலம் ஒன்றின் உட்புறத் தோற்றம் |
விண்வெளியில் கால் பதிப்போர் அணியும் உபகரணங்கள். |
இரண்டு ராக்கெட்டுக்கள் சம நேரத்தில் செல்லும் போட்டோ. |
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் (கல், மண், உப்பு) |
விண்வெளியிருந்து எடுக்கப்பட்ட கல் |
விண்வெளிக்கு செல்வோர் கொண்டு செல்லும் ஒளிப்பட கருவி (வீடியோ காமெரா) |
டிஸ்கவரி விண்கலத்தின் முன் பக்க மாதிரி தோற்றம் |
ராக்கெட்டினை வடிவமைக்கும் விஞ்ஞானிகள் போட்டோ |
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அணியும் ஆடை வகை |
விண்ணில் டிஸ்கவரி விண்கலத்தின் மாதிரி தோற்றம் |
விண்கலத்தினுள் விஞ்ஞானிகள் போட்டோ |
விண்கலத்தினுள் உறங்கும் விஞ்ஞானியின் போட்டோ. |
விண்வெளி வீரர்கள் எடுத்துச் செல்லும் உணவு வகை |
செவ்வாயில் நிற்கும் விண்கலத்தின் மாதிரி தோற்றம் |
படங்களைப் பெரிதாக்கி பார்க்க...படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்.
No comments:
Post a Comment