நான் நம்பியதும் நம்பவில்லை என்பதும் - கவிதைகள்

 
கருணாகரன்
ஓவியம்: செல்வம்

நான் நம்பவில்லை
இத்தனை கடினமானதாயும் இலகுவானதாயும்
நீ இருப்பாய் என

அப்படித்தான் நம் வாழ்க்கையும் இருக்கிறது
என்றாய்

வெல்லவும் முடியா தோற்கவும் முடியா
முடிவற்ற சதுரங்க ஆட்டத்தில்
இனிமையும் கசப்பும் நிரம்பியிருக்கிறது
என்னருகிலே உள்ள
எல்லாக் கிண்ணங்களிலும்
நீயும் அப்படித்தானுள்ளாய்
கசப்பாயும் இனிப்பாயும்

உன்னிடமும் உலகிடமும்
அப்படித்தானுள்ளது என்றாய்



நாளெல்லாம் அங்கும் இங்குமாகத் திரிந்த பின்
களைத்துறங்கினோம்

கசப்பும் இனிப்புமாக வந்து திரையிட்டது கனவும்

கனவு முடிய, இரவு முடிய விடிந்தது
அப்போதும்
நேற்றும் இன்றும் நாளையும் என்ற
எல்லாக் கிண்ணங்களிலும் இருந்தன
கசப்பும் இனிப்பும் நிறைந்த பானங்கள்

அருகில் நீயிருந்தாய் கசப்பாயும் இனிப்பாயும்
அருகில் நானுமிருந்தேன் கசப்பாயும் இனிப்பாயும்
மேலுமங்கு உண்மையுமிருந்தது கசப்பாயும் இனிப்பாயும்.







மலராய் விரிதல்
நிழலின் சூடும் வெயிலின் குளிர்மையும்
தோன்றும் கணங்களில்
இயற்கையின் ஆனந்தத்தை உணர்கிறேன்

அதன் ரகசியத்தையும்.

ஒரு உயிர் மெழுகென உருகுவதும்
மலரென விரிவதும்
நிகழும் கணங்களில் நான் உணர்கிறேன்
ஆனந்தத்தின் கணங்களை

ரகசியத்தின் புதிரையும்.

பரவசத்தின் அரும்பிலே மலர்கின்றது மகிழ் மலர்

வானத்திலே பறவைகளோடு விளையாடுகின்றன
நட்சத்திரங்கள்
பறவைகளோடும் நட்சத்திரங்களோடும்
விளையாடுகின்றன
நம் குழந்தைகளும் நம் குழந்தைமையும்

ஆனந்தத்தின் கணங்கள் அவிழ்கின்றன
முடிவற்று எல்லையற்று
நீரூற்றும் மலரூற்றும் நம்மருகிற்தான்
நம்முள்ளேதான்.

பரவசத்தின் அரும்பிலே துளிர்க்கின்றன சிறகுகள்
புவிதழ்ச் சிறகுகள்.


மேலும் அறியாத ஒன்று
பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை
அவற்றின் கஸ்ரங்களையும் அலைச்சல்களையும்
பறப்பதினால் அவை அடையும் களைப்பையும்கூட

பறப்பதெல்லாம் ஆனந்தமேயென்ற எண்ணத்தில்
நாம் அறியத் தவறியதும் உணரத்தவறியதும்
எங்கெங்கும் அறியாமலும் உணராமலும்
விட்டதைப்போலத்தான்

தானியங்களை, பூக்களை, தேனை, கனிகளைத் தேடியலையும்
விதியும் வாழ்க்கையும்
ஒரு வீட்டை அமைப்பதும் காப்பதும்
சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வதும்
அத்தனை எளிதல்லப் பறவைகளுக்கும்

பறவைகளுக்கும் எதிரிகளும் எதிர்நிலைகளும் இருப்பதை
நாமுணர்வதில்லைப் பலவேளையிலும்
பறத்தலின் அதிசயமுண்டாக்கும் ஆனந்தத்தில்
பறவைகளின் துயரங்களை நாமறிவதில்லை
மேலும் அவற்றின் கஸ்ரங்களையும் அலைச்சல்களையும்
பறப்பதினால் அவை அடையும் களைப்பையும்
நம்மை நாமறியாதைத் போலவே.

Nantri: Kalachuvadu

No comments: