கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) வித்யாசாகர்!!


6
நான் ஒன்றும் பேசவில்லை.

பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் -

“எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது” என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார்.

என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது.


“என் மக்கள் வாழ்ந்த, என் உறவுகள் வாழும் அந்த மண்ணை என் தேசமென்று சொல்லாமல் வேறெப்படிண்ணே சொல்வது?

சரி அதை விடுங்க, உங்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை. இனியும் இது தொடர்ந்தால் எனக்கு மீண்டும் கோபம் தான் வரும். கொழும்பு வழியாவே ஒரு பயணச் சீட்டு இருக்குன்னீங்களே அதையே பதிஞ்சி கொடுங்க நான் போறேன் “

“சரி தம்பி……, அண்ணன்னு சொல்லிப்புட்டு ஏன் இத்தனை கோபப் படுறிய? நான் தெரிஞ்சிக்கத் தானேக் கேட்கிறேன்? அது ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க, மூச்சுக்கு முன்னூறு தரம் ஈழம் ஈழம்றீங்க, அது நம்ம மக்கள் வாழ்ந்த தேசம்னு சொல்றீங்க, உண்மையாவே தெரிந்துக் கொள்ளனும்னு ஒரு அவா; இலங்கை என்ன நம்ம தேசமா?”

“ஆமாம்னே, இலங்கைன்றது நம்ம மக்கள் வாழ்ந்த இடம்ண்ணே, வரலாற்றுப் படி பார்த்தோம்னா ‘இலங்கைன்னு ஒரு பெயரே அங்கு முன்பு கிடையாது. இலங்கைன்றது இப்போ இருநூறு ஆண்டுகளுக்கு முன் வைத்த பெயர். லங்கா என்றால் தீவு என்று அர்த்தம். அதோடு நம் தமிழர் முறை படி ‘இ’ சேர்த்து இலங்கை ஆனது. மங்களகரம் வேண்டி ஸ்ரீ சேர்த்து ஸ்ரீலங்காவாக மாற்றம் கொள்ளப் பட்டது. ஆனால்; ஈழம் என்பதற்கு கிட்டத்தட்ட நான்காயிரத்து முன்னூறு வருடத்திற்கும் மேலான வரலாறு உண்டு.

இப்பவும் வடமேற்குப் பகுதியில் புத்தளத்திலிருந்து, கிழக்கே அம்பாறை மாவட்டம் துவங்கி வடக்கே யாழ்ப்பாணம் வரை நம்ம மக்கள் தான் இருக்காங்க, நடுவில் புகுத்தி வளர்க்கப்பட்ட சிங்களந்தான் தன் அரசபலத்தால் நகர்ந்து நகர்ந்து நம்மை ஈழம் விட்டே விரட்டப் பார்க்கிறான்”

“அபப்டியா???!!! அப்போ நீ போறியே கொழும்பு வழி; அதலாம் ஈழம் நாட்டை சேர்ந்தது தானா?”

“இப்போ இருக்குற ஈழம்னு எடுத்துக்குட்டீங்கன்னா கொழும்பு தாண்டி போகனும்ண்ணே. கொழும்பு, கொழும்பு தாண்டினா கம்பகா, கம்பகா தாண்டி புத்தளம், அப்புறம் அங்கிருந்து ஈழம் துவங்குது”

“அப்படியா!! சரி சரி..”

“ஆனா, மொத்தமாவே நம்ம வளர்ச்சி புடிக்காம சிங்களன் ஒரு பக்கம் ஆடுறான்னா, கூட சேர்ந்து வல்லரசு நாடுகளுமில்ல நிக்குது. எங்க ஈழம்னு ஒரு தனிதேசம் வந்தா நாளை தமிழகமும் அதோடு சேர்ந்துக் கொள்ளுமோ; பிறகு அதை பார்த்து பிற மாநிலங்கள் தனி தேசம் கேட்கத் துவங்குமோன்ற ஒரு அரசியல் நோக்கு இந்தியாவிற்கே உண்டு”

“ஓ… அதனால தான் இந்தியா இலங்கைக்கு, மன்னிக்கணும் சிங்களனுக்கு துணை போவுதா?”

“அதனாலையா இல்லை ஆள்பவர்களுக்கு அதையும் கடந்து சுய விருப்புவெருப்புக்கள் உண்டான்னு கடவுளுக்குத் தான் தெரியும்”

“இவனுங்க என்னத்த நினைத்து என்ன பண்ண? அதது கிடைக்கவேண்டியவர்களுக்கு கிடைக்கும் தம்பி”

“அந்த பயம் தான் அவர்களுக்கு, எங்கு நாம் நம் தேசமென்று ஈழத்தை பிடித்துக் கொண்டு; பிறகு மெல்ல மெல்ல அவர்களை விரட்டி விடுவோமோ எனும் பயம்.

அதற்கு உடன்பட்டுவிடக் கூடாதே நம்ம பகுதியிலிருந்து நம்மைச் சார்ந்த இனத்திலிருந்து உருவான இனமாயிற்றே சிங்கள இனமெனும் சுயநலம் கொண்ட பாகுபாடுகளும்; உள்ளே நம் இந்திய நாட்டவரான வடநாட்டவர்களுக்கு உண்டு. அதின்றி; எப்படி எல்லாம் நம்மை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரியும் நம் அண்டை மாநிலத்து சதிகாரர்களும் இதற்கு இன அழிப்பிற்கு உடந்தை.

மத்தியில் வீரியமில்லாத, எங்கு அதை கேட்கப் போய்; தன் இருக்கை பறிபோகுமோ என்று பயந்துக் கிடக்கும் நம் அரசியல்வாதிகளின் சுயநலக் கயமைத் தனம்; அவனுக்கு பலகாரம் செய்ய சர்க்கரை கிடைத்தது போல் ஆயிற்று.

உள்ளுக்குள்ள கூட்டுச் சேர்ந்துகே கொண்டு, ஊர் பார்வைக்கு சிங்களன் அடிச்சான்னு வீர வசனங்கள் வேற. எல்லாத்துக்கும் மத்தியில நம்ம உடைமைகளை பிடுங்கிக் கொண்டு; நம்மை அவர்களின் அடிமை போல, இரண்டாம்பட்சமாவே வைத்து அடக்கி ஆளப் பார்க்கிறான் நம்ம பின்னால வந்து நம்ம மண்ணுல புகுந்தவனால் உருவானவன்”

“யாரு?”

“சிங்களன் தான்..”

“இப்பயும் அடிக்கிறானா?”

“இனிமேலாவது கண்களை கொட்ட திறந்து ஈழம் பற்றிய செய்திகளை படிங்கண்ணே. கொத்து கொத்தா அழிக்கிறான். ஒரு நாயி நாதி ஏன்னு கேட்கலை. ஊர் உலகமெலாம் தமிழர் இருந்தும் என்ன புண்ணியம்? கேவலமா இருக்குண்ணே நம்மை நினைத்தாலே”

“வாஸ்தவந் தே(ன்)…”

“அதான் எனக்கு கோவம். வெட்டி முறிக்கனும்னு கோபம்”

“பின்ன வராத பின்ன??”

“அப்படி வாடி ஆத்தி; இப்போ புரிதில்ல; அப்போ கூட நாம் இலகிடுவோம்ண்ணே. நம்ம மனசு அதலாம் மன்னிச்சிடும். ஆனா, அவனுங்க போனாப்போகட்டும்; நம்ம மக்களை நாம மறக்கக் கூடாது இல்லையா? அவர்களுக்கு எதாச்சும் நம்மால முடிந்ததை செய்யனுமால்லையா?”

“கண்டிப்பா செய்யணும் தம்பி”

“நம்ம ஈழம்ண்ணே அது, நம்ம தமிழீழம்ணே அது. நம்ம தமிழர் வாழ்ந்த, வாழும் மண்ணுண்ணே அது. அதை எப்படின்னா மீட்கனும்ண்ணே. எல்லாத்தையும் நீ கொண்டு போ; என் பாட்டன்முப்பாட்டன் வாழ்ந்த மண்ணுல, என் சனம் வாழுற இடத்தையாவது மீட்டு; தாடான்னு பிடிங்கியாவது; தமிழர்னா என்னன்னு அவனுக்கும், தமிழன் வாழ்ந்தா எப்படி வாழ்வான்னு இந்த உலகத்திற்கும் ஆண்டு காட்டனும்ண்ணே.

நினைச்சாலே, சிலதை எல்லாம் படிச்சாலே மனசு உருகிப் போகுதுண்ணே. நம் எத்தனை வீரதீர செயல்களுக்கு முன்னால்; நாகரீகம் போதித்த இனத்திற்குப் பின்னால் வந்தும் இப்படி தலைகுனியும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டோம்னா அது நம் பாடம் வழியா நமக்கு இழைக்கப்பட்ட துரோகமன்றி வேறில்லை.

நம்ம வரலாறையே நம்மக் கண்ணுலக் காட்டாம எப்படி நம்மை இருட்டடிப்பு செய்திருக்காங்களேன்னு நினைத்தால்; ரத்தம் பொங்கிக் கொதிக்கிறது. எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறோம் தெரியுமா நாம?

அந்த மண்ணுல புதைக்கப்பட்டு வருகிற நம்ம வரலாறு எப்படிப் பட்ட வரலாறு தெரியுமா?

எத்தனை நம் தமிழ் மன்னர்களால் அன்றிலிருந்தே ஆளப் பட்ட மண்ணது தெரியுமா?

பண்டார வன்னியன் வீரசாகசம் புரிந்து வெற்றிகொண்டு மீட்ட மண்ணது. அதற்கும் முன், இராஜேந்திரச் சோழன் போரில் வென்று ஆண்ட மண்ணது. அதற்கும் முன்னால் எல்லாளன்ற மன்னனால ஆளப் பட்டிருக்கு…, அதுக்கும் முன்னாடி நாகர்கள் என்ற பெயரில் தமிழர்களே அங்கு வாழ்ந்திருக்கிறாங்க.

அது தவிர, இயக்கர்கள் என்ற பெயரில் சிங்களரல்லாதவர்களும் வாழ்ந்து வந்த சமயம் இடையே வந்து அக்குடியில் மணம் முடித்து சிங்களக் குடிக்கு முதல் விதை தூவி; இன்று நான் தான் நாட்டுக்கே அரசன்னு சொன்னா அது தவறு தானே???”

“ஆமாமா…”

“அப்படியே நீ அரசனா கூட இருந்துட்டுப் போ; எங்களை ஏன் சீன்டனும்?”

“வேற??!!!”

“அதுதான்ண்ணே கோபம், அதுக்காக புல்லு பூண்டு வரை எங்கல்லாம் தமிழ் கேட்குதோ அங்கல்லாம் அவன் தந்திரமா வெளிய ஒண்ணு காமிச்சு உள்ளே ஒண்ணு செய்து எல்லாத்தையும் அழிச்சிகிட்டு வரான்..”

“சரி தம்பி, நம்ம தானே முதல்ல இருந்தே இருக்கோம் பிறகு எப்படி நம்ப தேசம் மொத்தமும் அவனுக்கு கைமாறி போச்சி?”

“அது ஒரு காலக் குறைண்ணே. ஒண்ணு வெள்ளைக்காரன் செய்த ஒரு பெரிய அநியாயம்னு சொல்லலாம். அதை பிறகு சொல்றேன். அதுக்கும் முன்னால – நம் நாடு என்னும் இந்தியாவின்’ வடதேசத்தில் இருந்து போன விஜயன்னு ஒருத்தன் போய் உருவாக்கிய இனம் தான் சிங்கள இனம். இதை அவர்களின் மகாவம்சம் எனும் ஒரு பாளி மொழியில் எழுதப் பட்ட வரலாற்று நூலே உறுதி செய்கிறது”

“ஓஹோ.. பிறகு ஏன் இவர்களுக்கு இந்த கொள்ளை அநியாயம்???”

“அதுதான்ண்ணே என் கேள்வியும். நான் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வதுண்டு; ஒருவேளை விஜயன்னு ஒருத்தன் (அப்போதைய மகத நாடான பிகாருக்கும், கலிங்கத்து தேசமான ஒரிஸ்ஸாவுக்கும் இடையேயான வங்கப் பகுதியிலிருந்து) வட இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் போகலைன்னா, கலிங்கத்தை வென்ற பின் பௌத்தத்திற்கு மாறிய அசோக சக்ரவர்த்தியோட மகன் மகிந்தன் அங்க வந்து புத்த மதத்தை பரப்பலைன்னா, புத்தமதத்தை பரப்ப புத்த பிக்குகள் பாளி மொழியில் எழுதிய மகாவம்ச நூலை தனக்கென்று ஒரு தனி இனம் வேண்டிய அவசியம் கருதி சிங்களரை ஆதரித்து உணர்ச்சி ஊட்டி விடலைன்னா; அங்க சிங்களன்னு ஒருத்தன் இன்னைக்கு இருந்திருப்பனா? ன்றது கூட சந்தேகம் தான்”

“காலத்தை யாரால மாத்தமுடியுது தம்பி? அது என்ன நினைக்குதோ அதைத்தானே அதன் விருபத்திற்கு நகற்றிக் கொள்ளுது”

“மனிதர் மட்டுமில்லைண்ணே, இந்த இயற்கை கூட நமக்கு சதிண்ணே.”

“அதெப்படி”

“போரோட அதுவும் ஒண்ணுமா இன்னைக்கு வந்து அழித்த கடல்கோளிலிருந்து அன்னைக்கு நீரில் மூழ்கிய லெமூரியா கண்டம் வரை, இயற்கையின் சதி தானே?

அன்னைக்கு மட்டும் அந்த லெமூரியா கண்டம்னு ஒண்ணு கடல்ல மூழ்கலைன்னா; இன்று ஈழம் இன்னொரு தேசமா ஆயிருக்குமா?

உலகாளும் ஒரு தமிழ்பெருங்குடியா இருந்திருப்போம்!!”

“அப்படியா?!!!! சரி, அதென்ன லெமூரியா கண்டம்?”

“அது முன்பு இருந்த நாகரிகம் வளர்ந்திருந்த ஒரு கண்டம்ண்ணே. தமிழர்கள் தான் மூலக் குடியினர் என்பதற்கு உலகின் சான்றாக இல்லாமல் இயற்கையினால் கடல்கோல் வந்து கொண்டுசெல்லப் பட்ட, மூழ்கப் பட்ட ஒரு கண்டம். தற்காலிகமாக அதை அறிந்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதற்கு லெமூரியா கண்டம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இயற்கையும் அதன் பின் வந்த மனிதர்களும் செய்த சதி; இன்று ஆண்ட தமிழனையே வாழ ஒரு மண்ணின்றி போராட வைத்துவிட்டது பார்த்தீர்களா?

தன் மக்களை இழந்து, உறவுகளை இழந்து, தாயின்றி தந்தையின்றி, பெற்றக் குழந்தைகள் கூட வயிற்றின் கர்ப்பத்திலேயே கொள்ளப் பட்டு, ஆண்டாண்டு காலமாக ரத்தம் சிந்தி; உயிர்விட்டு; வருந்த வைத்துவிட்டது பார்த்தீர்களா? அறுபது வருடத்துக்கும் மேலாக எத்தனை உயிர்? எத்தனை குழந்தைகள்; எத்தனை பெண்கள்? எவ்வளவு தியாகம்? எவ்வளவு பொது ஜனம்ண்ணே சாவறது???”

“அப்படியா, அதலாம் நமக்கு தெரியாதே தம்பி………”

“தெரிந்துக் கொள்ளனும்ணே. இதலாம் தெரியாம பேசுறோமே, பெரிய இவரு மாதிரி கிழிக்கிறோமே; மேஜைக்கு கீழ தர நாலு காசு லஞ்சத்துக்கும், அதை தொடர்ந்து கொடுக்கிற அரசியல் இருக்கைக்கும் மனித மரியாதயினை எல்லாம் விட்டு கீழிறங்கிவந்து; மானங் கேட்டு போய் நிக்கிறோமே; தப்பில்ல அது?”

“இவ்வளவு இருக்குன்னா தப்புதான்.. தம்பி, கண்டிப்பா தப்பு”

“மெல்ல சொல்லாதீங்க; நம்ம இனம் அழிய நாமே அமைதி கொண்டு இப்படி பார்த்துக் கொண்டிருந்தா கண்டிப்பா அது தவறு தான் தவறு தான் தவறு தான்னு உரக்கச் சொல்லுங்க”

“நீங்க இதலாம் படிக்கிறீங்க தெரியுது, நமக்கெங்க?”

“சும்மா படிக்கலைண்ணே; வலி. கொத்து கொத்தா மக்கள் சாவுறதை பார்த்துட்டு வந்த வலி, வலிச்சி, தனியா யாரு இல்லாதப்போ தொலைகாட்சியில் செய்தியில் வருவதை எல்லாம் பார்த்துவிட்டு ஓ’ன்னு கத்தியழுத வலி. தடுக்க முடியாத கோபம். ஒத்தையாப் போயி ‘நிறுத்துங்கடா போரைன்னு’ நிறுத்திட முடியாத வெறுமை. நம் கையாலாகாத் தனத்தால நாணிக் கிடந்த தருணத்தின் வெம்மை. ஏன் இப்படி நடக்குது, எங்கே தவறு நிகழ்ந்ததுன்னு தேடி தேடி பார்த்ததுல படித்ததுல தெரிந்துகிட்ட கொஞ்சநஞ்ச பாடம்”

“அப்போ, சுத்தி வளச்சி யோசிச்சா; நம்ம இலங்கையை நமக்கே கொடுக்கணும்றீங்க, அதானே?”

“அவ்வளவு வேணாம்ண்ணே, அங்கிருக்கறதும் அப்பாவி ஜனங்க தானே? நமக்கெதுக்குண்ணே அவன் சுதந்திரம் பறிக்கும் ஆசை எல்லாம்? அவர்களும் மனிதர்கள் தானே? அங்கும் குழந்தையும் பெண்களும் பொதுமக்களும் வாழ்கிறார்கள் தானே? அவர்கள் வாழும் இடத்தில் அவர்கள் வாழ்ந்துக் கொண்டு போகட்டும்.

நம்ம ஆதிகாலத்துல இருந்தே ஆண்ட இடத்தைக் கூட விட்டுட்டு வெளியே வந்து பார்த்தா தெரியுதுபார்; இப்போ நம் மக்கள் வாழும் மண்ணு, அது நமக்கு கிடைத்தா போதும். ஓடி ஓடி நாட்டை பிடித்து கோடி நட்ட தமிழன், வாழ ஒரு குடிசை தேடி; நாடு நாடா அலைந்து கப்பலில் திருப்பி யனுப்பப் படும் சோகங்கள் நிகழாம இருந்தால் அது போதும். நம்ம இடம் மட்டும் நமக்குக் கிடைத்தால் போதும்ண்ணே.

ஆனால், வருத்தம் பார்த்தீங்கன்னா ‘இது யாருக்குமே தெரியவோ புரியவோ மாட்டேங்குது. நாம இப்பக் கூட அவனுடைய இடத்தையா கேட்கிறோம்; நாங்க ஆளும் வரை எங்களுக்கு கொடுங்கடா, நாங்க தனியா வாழ்ந்துக்குறோம்னு தானே கேட்கிறோம்? அதை கொடுக்கமறுத்து நம்மையே அழிக்கவும் பார்த்தால்; தமிழன் சும்மா இருப்பானா?”

“அதெப்படி??”

“அதான் அடிக்கிறான். அதனால தான் சண்டை வருது. அதனாலத் தான் அன்னைக்கும் வந்தது, இன்னைக்கும் நடக்குது, இத்தனை வருடங்களா அதுக்குத் தான் போராடவும் செய்யுறோம்.

இதை, கூட நாம் அபுரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு தூர நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் யாரு யாரோ வேற்று மக்களா? போகட்டும்னு விட.

வேற்று மக்கள்னாலே விடமாட்டோம், அப்படிப் பட்ட தமிழர் பரம்பரை நம்ம பரம்பரை. அதுக்கே என்னடா இப்படி பன்றானுவளேன்னு மனசு இளகும், கேட்கும் உரிமை அற்றுப் போயும் தவிக்கும். பிறகு, இவர்கள் நம் குடிகளாயிற்றே; ஏன்டா ன்னு ஒரு குரல் நாம கொடுத்திருந்தா அவனுக்கு இப்படி ஏறிவந்து விஷ குண்டு போட்டு நம்மை அழிக்க; நம் அடையாளங்களை அழிக்க; நம்மை வரலாற்றிலிருந்தே அகற்ற எண்ணம் கொள்வானா?

அதிலும், இன்றைய சூழ்நிலை பார்த்தீங்கன்னா; நாம தொலைத்த சில நம்மோட பழந்தமிழர் அடையாளங்களை கூட மாறாம அதிகபட்சம் வைத்துக் கட்டிக் காப்பதும், அழகிய தமிழ் பேசி தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வீருகொண்டெழுவதும்; தமிழ்மண்ணின் புகழை உலக அரங்கில் நிறுத்த முயல்வதும் அந்த நம்ம ஈழ மக்கள் தான்ணே.

நாம் இந்தியா எனும் ஒரு வட்டத்தில் நின்றுக்கொண்டு வெறும் இந்தியராகத் தான் இருக்கிறோம். அவர்கள் தான் இன்னும் தமிழராய், தமிழீழ தேசத்தின் விடுதலைக் காற்றாகத் தன்னையே தன் தேசத்திற்கென இழந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நம்ம பழமை பாரம்பரியங்களை தொலைக்காம பத்திரமா வைத்திருக்க அவுங்க வாழனும்ணே”

“கண்டிப்பா கண்டிப்பாப்பா, கண்டிப்பா வாழனும்பா. அவர்களை அழிய விடக் கூடாது, அவர்களை கொள்ள விடக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் செய்யனும் சத்யா….., அதுக்கு என் தலையை கொடுக்கணும்னா கொடுப்பேன்!!!!!!
7
அவர் உணர்வுகளால் தகித்திருந்தார்.

"தலையை எல்லாம் கொடுக்க வேண்டாம்ண்ணே. தலையை பயன்படுத்தனும். அவர்களின் விடிவிற்கு எது சரின்னு பார்க்க ஒரு தலைமையை தேர்ந்தெடுத்து, எந்த அரசியல் நிறமும் சேர்த்துக் கொள்ளாத ஓர் தலைமையின் கீழ் நின்று; அவசியமெனில் எல்லோரும் புறப்படத் தயாராகனும்.

அப்படி ஒரு தலைமை வேண்டுமே முதலில்!! என்று யோசனை வரலாம், வருமெனில்; போகும் நூறு பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்போம். உடனிருக்கும் ஆயிரம் பேரில் ஒருவரை நம்பி நிற்கவைப்போம். அவர் கீழ் பணியாளனாக நிற்பதற்கு பதிலாக இணையாக நின்று தோள் கொடுப்போம்.

தோள் கொடுப்போர் அவருக்கு நிகராக நின்று சிந்திப்போம், எது நம் தமிழரின் மதிப்பினை கூட்டுமோ, எது நமக்கு நம் செல்வாக்கினை, நிலையான ஒரு பிடி மண்ணினை மீண்டும் பெற்றுத் தருமோ, அடிமை நிலையிலிருந்து எது நம்மை நிலைமாறச் செய்யுமோ, இரண்டாம் பட்ச இடத்தை தூக்கி எறிந்துவிட்டு தனக்கான சுதந்திரத்தோடு வாழ, எந்த நிலைப்பாடு நம்மை மாற்றித் தருமோ, வாழ்விக்குமோ, நம் விடுதலைக் காற்றினை சுவாசிக்க எது தக்க வழிவகையின செய்யுமோ; அதற்கென சிந்திக்கனும். புதிய உத்திகளோடு நாம் நம் பழைய இடத்தினை அடையனும். அதற்கு தலை வேணும்ண்ணே"

"அப்போ நாமோ பழையமாதிரி இல்லாம மாறிட்டோம்ங்றியா?"

"கண்டிப்பா. நிறைய இடத்தில் நாம் மாறிவிட்டோம். எத்தனை அந்த மாற்றம் நமக்கு நல்லது செய்கிறது, கெட்டதாக அமைகிறது என்பதை விட, அதனால் நாம் இழந்தவை எத்தனை, என்னென்ன என்று யோசித்தால் கவலை வந்துவிடுகிறது.

எப்போ; வெள்ளைக்காரனின் வாழ்க்கை நமக்கு உயர்வாக பட்டுவிட்டதோ; அன்றிலிருந்தே சிறுமை பட்டுப் போனோம்ண்ணே. ஆங்கிலத்திற்கு ஆசைப் பட்டு தமிழை விற்கும் கயமைத் தனத்தை வேறெந்த இனமும் இத்தனை வேகமாக செய்திருக்காது.

வாட்சை தமிழென்றும், பக்கெட்டை தமிழென்றும், ஷூவை தமிழென்றும், லோன் தமிழென்றும், கரண்ட் தமிழென்றும், லெட்டர் தமிழென்றும், லெப்ட்டும் ரைட்டும் சரியென்று நினைத்தும் வளரும் குழந்தைகளுக்கு கைகடிகாரம், வாளி, பாதுகை, கடன், மின்சாரம், கடிதம், இடது, வலது என்று சொல்லித்தந்தால் என்ன மானம் குறைந்தா போய்விடும்?

ஆனால், இனி 'எல்லோரும்' அப்படி தெரிந்துக் கொள்ளவோ பழக்கி விடவோ தூய தமிழில் பேச தன்னை தயார்படுத்தவோக் கூட மீண்டும் ஒரு பிறப்புதான் தேவை என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டதே; அது நம் குறை தானே???

தொலைக்காட்சி நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், ரேடியோ நாம்கண்டு பிடிக்கவில்லை போகட்டும், கார் பஸ்சு ஏரோபிளேன் நாம் கண்டுபிடிக்கவில்லை போகட்டும், நன்றி வணக்கம் மன்னிப்பு போன்ற சொற்கள் கூட அற்றுப் போன ஓர் இழி பிறப்பா நாம்?
 
வாட்ச் கட்டு, டீ.வி போடு, போன் கொடு, பக்கெட்ல ஊத்து, அண்ணாக்கு பாய் சொல்லு, மாமாக்கு கிஸ் பண்ணு...னு' இப்படி ஆங்கிலத்தை கலந்து கலந்து மழலையில் சிரிக்கும் பார்க்கும் தவழும் போதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை கெடுத்துவிட்டால், பிறகு தமிழில் இதற்கெல்லாம் என்ன வார்த்தையென்று எப்படி அவர்களுக்கு சரியாக தெரியவரும்ண்ணே?"

"ஏன்பா அதுக்குன்னு தொலைபேசியில் பேசு, மகிழுந்தில் போ' கார்மேகம் சூழ்ந்து மழை பெய்யும் நேரம்' என்றெல்லாம் பேசினால்; கேக்குறவன் சிரிப்பானேப்பா!!!"

"சிரிக்கிறவனை அடிக்கனும்ண்ணே.........., தமிழரிடத்தில் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிப்பான்னா அவனை உதைக்கனும். ஆனால் அவனை அடிக்கும் முன்னாடி யோசிக்கவும் செய்ய வேண்டிய கட்டாயவாதிகள் தான் நாமெல்லோரும். காரணம், அவனை அப்படி வளர்த்ததே நாம் தானே???

பிறகு சிரிக்கிறவனை திருத்துவதும் நம் கடமை இல்லையா? சிரிக்கிறவனை சிரிக்கிறவனுக்கு புரியவைத்துவிட்டால் பிறகு சிரிப்பனா?

தெருவுல குடிச்சிட்டு விழுந்து புரளும் போது சிரிக்குதே மக்கள், குடிக்கிறதை விட்டுட்டோமா? அடுத்தவன் ஒரு இனத்தையே அழிக்கிறான், உலகமே தமிழகத்தின் மௌனத்தை எண்ணி சிரித்ததே; பொங்கி எழுந்துட்டோமா? பிறகு இதுக்கு மட்டும் எங்கிருந்துண்ணே வந்தது மானமும் வெட்கமும் அசிங்கமும்???

தமிழன் தமிழில் பேசினால் ஒருத்தன் சிரிச்சான்னா அவன் சிரிக்கட்டும், அவனை முட்டாள் என்று எண்ணிவிட்டு போவோம்ண்ணே.

ஒரு ஆங்கிலம் பேசும்போது இடையில் தமிழில் பேசுறோமா? ஹிந்தி பேசுகையில் இடையில் தமிழில் பெசுறோமா? பிறகு தமிழில் பேசுகையில் ஆங்கிலம் கலந்துப் பேசுவது மட்டும் எப்படி அழகும் நாகரிகமும் ஆனது?

கேட்டால், ஆங்கிலமே பேசலைன்னா உச்சரிப்பு வராதாம். வராதுதான். அதற்குத் தனியே அமர்ந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசி பயிற்சி எடு. ஏன், தமிழரிடம் தமிழில் பேசிவிட்டு தனியே ஆங்கிலத்தில் பேச அவசியம் ஏற்படும் போது, துல்லியமாக தெளிந்த ஆங்கிலத்தில் பேசு; யார் அதை மறுப்பார். அதைவிடுத்து; தமிழில் ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு பின் தமிழுக்கே தமிழன் பயிற்சி எடுப்பது என்பது எத்தனைப் பெரிய குறை இல்லையா நமக்கு?

மொழி என்பது முக்கியம்ண்ணே. ஒரு இனத்தின் உயிர், மொழி தான். மொழி தான் நம் அடையாளம். தாய் மொழியை தாய்மொழியாக மட்டுமே கருதனும். தமிழனாகிய என் தாய்மொழி தமிழ் மட்டும்தானேத் தவிர, தமிழும் ஆங்கிலமுமல்ல' என்று உறுதியினை மனதில் கொண்டு, தமிழரிடத்தில் பேசுகையில் நாம் தமிழில் மட்டுமே பேசவேண்டும்.

ஏன் பேசாவிட்டாலென்ன? தமிழ் பேசாவிட்டால் என்ன சோறா கிடைக்காது என்றெண்ணுகின்றனர் சிலர். சோறு கிடைக்கும், அதைத் தின்னும் நாம் தமிழராய் தின்னமாட்டோம். மொழி அழிந்தால் இனம் அழியும் என்று புரியாத வரை; தமிழர் தன்னை ஆதிப் பெருமைக்கு உரிய முதல் மனிதராய் எக்காலத்திலும் அடையாளப் படுத்திக் கொள்ளப் போவதில்லை.
பல மொழி கற்றவன் பல மனிதனுக்கு சமம் என்பார்கள். வரவேற்போம். ஆயிரம் மொழி கற்போம். அந்தந்த இனத்தவரிடம் அவருடைய மொழியில் பேசுவோம். அதற்கு முன் தமிழரிடத்தில்; தமிழில் பேசுவோம்ண்ணே...

தேங்க்ஸ் என்று பல முறை சொல்லும் இடத்தில் நன்றி ஐயா, நன்றி மணி, நன்றி துரை என்று சொல்லிப் பழகட்டுமே; பற்களா கொட்டிப் போகும்?

'சாரி' சொல்லச் சொல்ல சாரி சொல்லத் தயாராகிறான் ஒவ்வொரு தமிழனும். மன்னித்து விடச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்; செய்த தவறுக்காய் வெட்கி நாணிப் போவீர்கள்.

தவறுகள் திருத்தப் படனும்னா தவறை எண்ணி வெட்கப்படனும் வருந்தனும். தனை திருத்திக் கொள்ள அறிவு மனசை உறுத்தனும். தவறு செய்யக் கூடாதேன்னு உள்ளே உரைக்கனும். அப்படி உரைக்கனும்னா மன்னித்துக் கொள் என்று சொல்லிப் பாருங்கள்.

தவறு நிகழும்போதெல்லாம், மன்னித்துக் கொள் என்றே சொல்லுங்கள். அப்படி ஒவ்வொரு முறை சொல்லும் முன்பும் இனி சொல்லக் கூடாதென்றும் யோசிக்கத் தயாரவீர்கள். அப்படி யோசிக்கும் இடத்திற்கு மொழி நம்மை அழைத்துச் செல்கிறது. தமிழரினம் தமிழராய் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் தமிழராய் நம் இன உணர்வோடு பண்பு மாறாது வாழனும்ண்ணே.."

"பண்பு மாறாம வாழனும் தான், ஆனால், எவன்பா வாழறான்?"

"யாரும் இதில் ஒருவரை ஒருவர் எதிர்பார்த்தோ அல்லது குற்றம் சொல்லியோப் பயனில்லை. பிறரை கைகாட்டும் முன் தன்னை பற்றி மட்டுமே ஒவ்வொரு தமிழரும் சிந்திக்கவேண்டும். இது ஒரு காலநகர்தலின், வளர்ச்சி வேகத்தின் இடையே இடைசொருகளாய் நிகழ்ந்துவிட்ட குற்றம். ஆனால் அந்த காலநகர்த்தலின் குற்றத்திற்கு நாமும் காரணமானோம் என்பதே வருந்தத் தக்கது.

கடைசியாய் வெள்ளைக்காரன் விட்டுப்போகும் போது எல்லோரையும் இந்தியர்னு சொல்லிப் பிரித்து, தனியே இலங்கைன்னு சொல்லிப் பிரித்துச் சென்றதில்லாமல், அதற்கு முன்னதாகவே; சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட தேசத்தை, பின் களப்பிரர்கள், களப்பிரர்களுக்குப் பின் பல்லவர்கள், பல்லவர்களோடு இடையாக சாளுக்கியர்கள், விஜயநகர பேரரசுகள், மொகலாயர்கள், மராட்டியர்கள் இடையே வந்து வந்துப் போன டச்சுக் காரர்கள், போர்ச்சுக் கீசியர்கள், பிரெஞ்சு காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சம்னு; அவரவர் பங்குக்கு அவரவர் புகுந்து, நான் தான் நாட்டுக்கு ராசான்னு நடந்து போன பாதையில் விழுந்த நம் வீரதீரத்தால், நேரிட்ட மாற்றங்களால் நமக்குள் புது விதைகள் பல நன்மையையும் தீமையுமாய் இரைக்கப் பட்டுவிட்டது.

ஆனால்; அவைகளிலிருந்தெல்லாம் விலகி நின்று நாம் யார்? எப்படி வாழ்ந்தவர்கள்? எங்கு நிற்கிறோம்? இனி எப்படி வாழப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய பிறப்பு நம் தமிழ் பிறப்பில்லையா?

270 வருடம் நம்மை முழுமையாய் அடிமை படுத்தி ஆண்ட வெள்ளைக் காரானிலிருந்து எல்லாருக்குமே சென்னைனா வசதியான துறைமுகம் மட்டிமில்லாம தமிழ்நாடுன்னா வரப் போக வெள்ளமம் மாதிரியாச்சே!! இவுங்களுக்கு மத்தியிலயெல்லாம் நம்ம பண்பும் வாழ்க்கை முறையும் பேச்சு வழக்கும் சற்று மாறத் தானே செய்யும், ஆனால் முற்றும் மாறிவிடுவது தவறில்லையா?

இதுல சமஸ்கிருத கலப்பு, வடமொழி திணிப்பு, ஆங்கில ஆசைன்னு நம்மள சற்று ஒழுங்கும்; நிறைய நாசமும் பண்ணின சக்திகள் நம்மை கடந்து போகவில்லை, தமிழினத்தை தந்திரமாய் மிதித்துப் போயிருக்கிறது..
 
இதுல வேற தெலுங்கு, சவ்ராஸ்ட்ரம், மலையாலம்னு எல்லாம் சேர்த்துக் குழப்பி நம்ம அடையாளத்தையே நாம் மெல்ல மெல்ல நமக்கே தெரியாமல்; மொழி, பண்பாடு, கலாச்சாரம், வாழ்வின் தேவை, தேடுதல்கள் என எல்லாவற்றிலுமே முறைகேடான மாற்றத்தை சந்திக்கும் நிலைக்கு ஆட்பட்டுவிட்டோம்.

என்ன ஒன்னு, என்னதான் யார் வந்து யார் போனாலும் கடைசியா எப்படியோ தமிழர்கள் வாழும் பகுதியென; தமிழ்நாடுன்னு ஒரு பேரு மட்டுமே நமக்குன்னு மிச்சப் பட்டிருக்கு. ஆனால், அதற்கு வைக்கப்பபட்ட பெயர் பலகைகள் கூட ஆங்காங்கே ஆங்கிலத்தில் வைக்கப்படுகிறதே; அதை பற்றியேனும் சிந்திக்கவேண்டாமா??!!!

"நம் இனத்தை பற்றிச் சிந்திக்க இவ்வளவு தகவல்களை வைத்துக் கொண்டு வெறும் டிக்கெட் மட்டும் இல்லை இல்லை பயணச் சீட்டினை மட்டும் போட்டுக் கொடுத்து காலத்தை கழித்து விட்டேனே சத்யா? சரிப்பா; வேற யாராவது வரதுக்கு முன்ன “ஸ்ரீலங்கா பத்தி சொல்லேன், வேற கஸ்டமர் யாராவது வந்துடப் போறாக.."

"வேறென்னண்ணே, நாம வாழ்ந்த மண்ணு, அதில்லாம நாம் வியர்வை சிந்தி உருவாக்கின மண்ணு, அதை நாம தான் காக்க வேணும், அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்"

"அதென்ன உருவாக்கின மண்ணு? "

“ம்ம்..”

“ஆமா; நாம் வாழ்ந்த இடம் என்பதில்லாம காட்டினை அழித்து உருவாக்கின உழைப்பும் அந்த மண்ணில் உண்டுண்ணே.., இந்த நூற்றாண்டுல சுதந்திரம் வேண்டி ரத்தம் சிந்தினோம், இதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் ரத்தத்தை வியர்வையாய், உயிராய் - விட்டு ஊர் அமைத்து, விவசாயம் செய்துக் கொடுத்தோம். எல்லாவற்றையுமே செய்தோம்; இழந்தோம்; இழந்ததை எவனோ அனுபவிக்க, தமிழர் ஏமாளியாயினர்"

"அதை பத்தி சொல்லுங்களேன்...?

8
“பிரிட்டீஷ்காரனுங்க எப்பவுமே ஒரு இடத்தோட வாழ்ந்தோமா இருந்தோமான்னு போக மாட்டானுங்க. அப்பல்லாம், நாடு புடிக்க அலையிறதே அவனுங்களுக்கு வேலை. அதில்லாம, அவனுங்க நாட்டுல தப்பு பண்ணினா(ல்), தண்டிக்க அமெரிக்கா என்கிற குடியேற்றப் பகுதியில் போட்டு தண்டிக்கிறது தான் அப்போதைய அவனுங்க வழக்கமா இருந்துது"


"அமெரிக்காவுல போட்டா!!!?"

"ஆமாம், அமெரிக்காவுல தான்"

"அமெரிக்காவுக்கும் கதை இருக்கா?"

"நம்ம தெருவுக்கு பேரு 'முனியப்பன் தெரு'வுன்னு வைத்ததற்குக் கூட ஒரு கதை இருக்கும். நாம் தான் ஆராய்வதுமில்லை. வரலாற்றை ஆராய்ந்து தேடி படித்து நம்மை நாம் முழுமையாய் தெரிந்துக் கொள்வதுமில்லை"

"சரி அமெரிக்கா பெரிய கதையா? உன் கூட பேசி பேசி நேரம் போனதே தெரியலையேப்பா" இருவரும் பேசி பேசியே மதியம் வரை கடந்திருந்தார்கள். நடுவில் மேகநாதன் அண்ணனிடம் நாளை சத்யா புறப்படுவதற்கான விமானப் பயணச் சீட்டு கொண்டுவந்து கொடுக்கப் பட்டது.

இருவரும் பேசிக் கொண்டே நடந்துச் சென்று அருகாமையில் உணவகம் ஒன்றில் உணவுண்டார்கள். சாப்பிட்டுவிட்டு வந்து மீண்டும் அதே அறையில் ஏசி சரியாக பணி செய்யவில்லை என்று திட்டிக் கொண்டே மின்விசிறியின் வேகத்தினை அதிகப் படுத்திக் கொண்டு அமர்ந்துக் கொண்டார்கள். சத்யா அமெரிக்கா பற்றி சொல்லத் துவங்கினான்.

"அது ஒரு உருவாக்கப்பட்டு பின் விரிவு படுத்தப் பட்ட ஐம்பது மாநிலங்களின் கூட்டணி தேசம்ண்ணே. முதலில், நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்னிரெண்டாயிரம் ஆசிய மக்கள் சென்று வாழ்ந்த இடம் அது.

பின் பல நாட்டு மக்களின் குடியேற்றத்திற்கு பிறகு, ஜெர்மனியின் வரைபட நிபுணரான மார்டின் வால்ட்ஸ்முல்லர் என்பவரால்; மேற்கத்திய அரைக்கோள நிலப்பகுதிக்கு 'இத்தாலிய ஆய்வுப் பயணியாக வந்தவரும், வரைபட நிபுணருமான அமெரிக்கோ வெஸ்புகியின்' பெயரில் "அமெரிக்கா" எனப் பெயரிடப் பட்டது. பிறகு அது வளர்ந்து பெரிய அமெரிக்கக் கண்டமாக அறிவிக்கப்பட்டது என்பதெல்லாம் வேறு நிறைய பெரிய கதை.

இருப்பினும், அப்போதைக்கு அங்கே, குறைந்தளவே மக்கள் வாழ்ந்து வர, அவர்களோடு மேலும், ஐம்பதாயிரம் குற்றவாளிகளை தண்டிப்பதற்காக, பிரிட்டீஷிலிருந்து கொண்டுபோய் அமெரிக்காவில் சிறைவைத்து, அவ்விடத்தினை ஒரு தவறு செய்பவர்களை நாடுகடத்தித் தண்டிக்கப் பயன்படுத்தும் அடிமைகளின் இடமாகவே வைத்திருந்தார்கள் பிரிட்டீஷ் காரர்கள்.
 
அதேப் போல இந்தியாவுல தப்பு பண்ணா தண்டிக்கவும், தண்டிக்கையில யாருமே வந்து என்னன்னு கேட்காத மாதிரியும் ஓரிடம் தேவைப் பட்டதாகக் கருதி பிரிட்டீசாரால் தேர்ந்தெடுக்கப் பட்ட தீவு தான் அந்தமான்"


"அதுசரி, அப்போ அப்படி தான் அந்தமான் வந்துதா"

"அப்படி பயன்படுத்தப் பட்டது"

"அமெரிக்கா கூட அவர்கள் உருவாக்கியது தானா?

"அவர்கள் உருவாக்கியது கிடையாது, பிரித்தானியர்களால் நாடுகடத்தப் பட்ட குற்றவாளிகள் அங்கே விடப்பட்டு, அடிமைகளாக வைத்து ஆளப் பட்ட இடம். பின் பல குடியேற்றங்களுக்குப் பிறகு; தன்னை 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என்று தன் ஒற்றுமையாலும், உழைப்பாலும், முன்னேற்றத்தாலும் அறிவித்துக் கொள்ளுமளவிற்கு வளந்துப் போனது அமெரிக்கா""ஓ... ஹோ..."

"அந்த உத்தியில தான் பெரிய பெரிய குற்றவாளிகளை யெல்லாம் இன்றும் அந்தமான் ஜெயிலுக்கு மாத்துவாங்க. இந்த அந்தமான் பிரித்தானியர்களால் எப்படி இதற்கென கவரப் பட்டதோ; அது போல, அவனை துறைமுகம் சார்ந்தும் அழகு சார்ந்தும் மிகவும் கவர்ந்த இடம் 'திரிகோணமலைப் பகுதியாகும். இந்த திரிகோணமலை நம்ம பாரம்பரியத் தமிழர் வாழ்ந்த பகுதியில ஒன்று.

உலகின் நிறைய நாடுகளை, தனக்கு கீழாக வைத்திருந்த பிரிட்டீசாரின் பல நாடுகளுக்கு மத்தியில்; இந்தியா ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது வெள்ளையனுக்கு. எனவே, எங்க இலங்கையை சும்மாவிட்டா அது வழியா வந்து பிரெஞ்சு காரங்க இந்தியாவை கைப்பற்றுவாங்களோன்னு பயந்து டச்சுக் காரர்களிடமிருந்த இலங்கையையும் அவனே பிடித்துக் கொண்டான்.

அதற்கு மிக முக்கிய காரணமாக; இலங்கையில் இருந்த அந்த திரிகோணமலை துறைமுகமும், அந்த திரிகோணமலை ஒரு பூலோக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப் பெற்றதுமாக இருந்தது.

பின் கண்டி மலை நாட்டைக் கையகப்படுத்தி இலங்கையை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, மொத்த இலங்கையையே முழுதாகப் பிடித்து ஆளத் துவங்கினான்.

அவனை பொறுத்த வரை இலங்கை வேறில்லை, இந்தியா வேறில்லை, எல்லாம் தனக்குக் கீழான அடிமை பிரதேசங்கள், அவ்வளவு தான்.

அப்பவும், தமிழன் ஒரு புறம், சிங்களர் ஒரு புறம்னு வாழ்ந்து வந்த நிலையில; இலங்கை முழுதும் ஆளத் தொடங்கிய வெள்ளையன் அவனுக்கு சாதகமா எல்லோரையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவதா எண்ணி ஒட்டுமொத்தத்தையும் சிங்கள தேசம்னு அறிவித்துவிட்டு போயிட்டான்.அவன் கொடுமைகளிலிருந்து விடுபடல் ஒன்றே போதுமென்று எண்ணிய தமிழ் மக்களும்; சிங்களன் இத்தனை பெரிய கொடுங்கோளனாக வருவான் என்று எள்ளளவும் எண்ணாது விடுதலை ஒன்று கிடைத்தால் போதுமென்றே காத்திருந்து; பின் கிடைத்த விடுதலையை சிங்களனிடம் தொலைக்க வேண்டியதாகிப் போனதெல்லாம் எழுதா விதியாகிவிட்டதென்பது 'நாம் நாணப் படவேண்டிய விடயத்தில் ஒன்று.
 
இதற்கு முன்னதாக, தன் ராஜ்யத்தின் கீழுள்ள இந்திய மக்கள்வேறு (இருப்பதையெல்லாம் வந்தேறிகள் சூறையாடிக் கொண்டதால்) ஆங்காங்கே வருமையில் கிடப்பதாய் எண்ணி, அதையெடுத்து இங்கே விட்டலாவது நல்ல வேலை பார்க்க ஆளாகுமே என்று கணக்கிட்டு; 1827 ஆம் ஆண்டு ‘எட்வட் பர்ன்ஸ்’ற ஆங்கில கவர்னர் ஒருவனால், கண்டி மலைப் பிரதேசத்தில் காபித் தோட்டங்களை நிர்மாணித்து; அவற்றில் வேலை செய்வதற்காக சென்னை மாகாணத்தில் இருந்து 300 தொழிலாளர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை தான் காலப் போக்கில் பல மடங்காகப் பெருகிப் போனது.


காரணம், அவர்களின் உழைப்பில் திகைத்துப் போய் வாயடைந்துப் போன வெள்ளைக்காரன் பிறகு பாலம் கட்டுவதிலிருந்து, சாலை அமைப்பது வரைக்கும்; நம்ம தமிழரை வைத்துத் தான் செய்திருக்கிறான். அதோடு விட்டானான்னா; அதுவும் இல்லைன்னு தான் சொல்லுது வரலாறு”

“அதுசரி..” அவர் புதிதாக கேட்கும் கதைபோல கேட்டுக் கொண்டிருந்தார்.

“முதலில் காப்பி தோட்டம் அமைத்து, பிறகு; காபிக்கு பூச்சி பிடிக்கும் ஆபத்து வருவதைக் கண்டு, காப்பி தோட்டத்தினை அப்படியே விட்டுவிட்டு தேயிலை தொழிலை ஆரம்பித்து, அதை விருத்தி செய்ய இன்னொரு புறம் மீண்டும் தமிழர்களை போட்டுக் குவித்து, அடர்ந்து பயங்கரமாக வளர்ந்திருந்த காடுகளையெல்லாம் அழித்து, அழகான பசுமை பிரதேசங்களாக உருவாக்கின, தமிழர்களால உருவான, தமிழனின் ரத்தம் அன்றே வியர்வையாய் சிந்தி ஊறிய மண் அது ஈழம்"

"எந்த வருசத்துல.. தம்பி"

"வருசம்லாம் சொன்னா நிறைய சொல்லனும்ணே”

“தெரிஞ்சா சும்மா சொல்லுங்களேன், கேட்டு வைப்போமே”

“எனக்கு தெரிந்த வரையும், படித்தது வரையும் சொல்றேன், மீதியை நீங்கதான் ஆராய்ந்து சரிபார்த்துக் கொள்ளனும் சரியா..”

“எண்ணத்த பாக்க, அதான் இவ்வளோ விவரமா சொல்லுதியலே, விவரமா தானே படிச்சிருப்பிய, சும்மா சொல்லுங்க”

“கி.மூ 500க்கும் முன்னால் விஜயன்ற இளவரசன் நடத்தைக் கேடு காரணமாக நாடு கடத்தப்பட்டு, எழுநூறு பேரோட இலங்கைக்கு வந்திருக்கிறான். அவன் வந்து புத்தம் பரப்பி சிங்களம் உருவாக்கினதா சிங்கள ஆசிரியர்களே சொல்றாங்க. அவன் கி.மு 543-இல் துவங்கி கி.மு 504 வரை, 38 ஆண்டுகள் முழுதாக ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

அதுக்கப்புறம் அசோகா சக்ரவர்தியோட மகன் மகிந்தன் எனும் மகிந்த தேரரும் அவனுக்குப் பின் வந்த அவனின் சகோதரி சங்கமித்தையும் சேர்ந்து புத்தம் பரப்பினதாவும், அதற்கு முன்னரே அங்கு நாகர் இயக்கர்னு நான் முன்னம் சொன்னதுபோல நம்ம இனம் அங்கே வாழ்ந்ததாவும் தான் வரலாறு இருக்கு. அதுக்கப்புறமும் கூட நம்ம எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை 44 வருடம் ஆண்டிருக்கிறார்"
 
"கதைய மாத்தீட்டீங்களே தம்பி முதல்ல வெள்ளைக் காரன் ஆட்சியில தமிழர் சென்னையிலிருந்து போய் அங்கே காடழித்து ஊர் வளர்த்தார்கள் என்று சொன்னீங்களே!!! அதை முழுசா சொல்லலையே?"


"அதலாம் பெரிய கொடுமைண்ணே. இந்தியாவானாலும் சரி இலங்கையானாலும் சரி இரண்டுமே பிரிட்டிஷாரின் கீழிருந்த காரணத்தினால் எங்கும் எல்லோருமே அடிமைகள் தானே எனும் வருத்தம் எல்லோருக்குமே இருந்தது. யாரையும் யாரும் பிரித்துப் பார்த்துக் கொள்ளவில்லை. அனைவரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குடிமக்கள் எனபதை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்தும் கண்டிக்குப் புறப்பட்டனர்.

யாரும் செல்லவே இயலாத அடர்காடுகளுக்கு இம்மக்கள் அனுப்பப்பட்டு தன் ரத்தத்தை வியர்வையாக்கி இலங்கையின் பிற்கால ஏற்றுமதி உற்பத்திக்கு தன் உயிரையும் உழைப்பினையும் முதலாக இட்டனர். அவர்களால் செழுமை படுத்தப் பட்ட அந்நிலமே பின்னர் அழகிய மலையகமானது. அதற்கென அவர்கள் கொடுத்த உயிர்களின் என்னிக்கை கணக்கிலடங்காதவை என்கிறது வரலாறு.

1926 -இல் மட்டும் மலையகம் வந்தவர்களில் நூற்றில் நாற்பது சதவிகிதத்தினர் இறந்துபோனதாகவும், 1841-ற்கும் 1849 -ற்கும் இடையில் எழுபதாயிரம் பேர், அதாவது 25 சதவிகிதத்தினர் இறந்துப் போனதாகவும் பத்திரிகை செய்தியொன்றினால் சொல்லப் படுகிறது.

அதன் பொருட்டே; 1837 - இல் 4,000 ஏக்கராக இருந்த காபித் தோட்டத்தின் பரப்பு 1881 இல் 2,56,000 ஏக்கராக வளர்ச்சி கண்டுள்ளது. பின், 1860 இல் தேயிலை பயிரிடுதல் அறிமுகப்படுத்தப்பட்டு 1870 -இல் பூச்சிகள் தாக்கி காபிச் செடிகளெல்லாம் சேதமானதை கருத்தில் கொண்டு அவைகளெல்லாம் தேயிலை தோட்டங்களாக மாற்றப் பட்டன. அதன் பொருட்டு 1917 இல் தேயிலை உற்பத்தி 4,26,000 ஏக்கராக ஏற்றம் கண்டது.

இப்படி இன்றைய இலங்கையின் முதன்மை உற்பத்தி தொழிலான தேயிலை உற்பத்திக்கு அடி உரமாக தமழரின் உயிரும், பாலம் கட்டுதல், இருப்புப்பாதை மற்றும் சாலைகள் அமைத்தல் என வியர்வை சொட்டுமிடமெல்லாம் தமிழரின் ரத்தம் சொட்டப் பட்டும்; உருவான ஒரு மண்ணில் இன்று சொந்த ஒரு வீட்டிற்கு கூட இடமின்றி, போதிய சுதந்திரத்தோடு வாழ தகுதியற்றுப் போனான் தமிழன் எனில்; சொல்பவரை திருப்பி யடிக்க மாட்டானா தமிழன்????

சொட்டு சொட்டாக உயிரை விட்டு விட்டு காத்து வந்த மண்ணில் தனக்கு உரிமையில்லை என்றால் இல்லை என்றவனை எட்டிச் சுடமாட்டானா தமிழன்?

உலகிற்கு நாகரீகம் போதித்து; வாழ்விற்கு அர்த்தம் சொல்லிக் கொடுத்து, ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடி பறக்க வாழ்ந்த இனத்தை பின்னால் வந்தவன் வெளியேறு என்றால்; வெளியேறி விடலாமா தமிழன்?

அவன் ஆத்திரம் பொங்கக் கேட்கிறான். சத்தியாவின் கேள்வியில் எழும் கோபத்திற்கு பதிலற்ற இவ்வுலகின் ஊமைப் பார்வையின் வழியே மேகநாதனும் அமைதியாய் அவனையே பார்க்க; கொடுங்கோபம் வந்தவனாய் தன் சட்டையினை வெடுக்கென தன்னிரு கைகளால் பிய்த்தெரிந்து மார்பை காட்டி பார்த்தியா!! பார்த்தியா!! என்று மார்புகளைக் காட்டிக் கத்த, மார்பில் 'ஈழம் எம் மூச்சு, ஈழம் எம் தேசம், ஈழம் எம் லட்சியம்' என்று பச்சை குத்தி எழுதப் பட்டிருந்தது.
 
மேகநாதன், சற்று அதிர்ச்சியுற்றவராகப் பார்க்க, சடாரென நான்கு பேர் அந்த அறைக்குள் நுழைந்து மேகனாதனை நோக்கிப் பாய, சத்தியன் சிரித்துக் கொண்டே தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு அங்கிருந்த மேசையின் மீதேறி அமர்ந்து ஹா ஹா என்று கொக்கரித்து அரக்கத் தனமாக சிரிக்க, அந்த நான்கு பேரில் இரண்டு பேர் உடனே பாய்ந்து மேகநாதனைப் பிடித்து ஜன்னல் கம்பிகளின் வழியே கயிறு போட்டு கட்டி விட, மற்ற இரண்டு பேர் எகுறி பாய்ந்து மேகநாதனை சதக் சதக்கென கத்தியினால் குத்தி ரத்தசகதியாக்க, சத்தியன் வானமே அதிரும் அளவிற்கு மீண்டும் சிரிக்கத் துவங்கினான்....


----------------------------------------------------------------------------------------------

தொடரும்...

No comments: