திருமறைக் கலாமன்றம் வழங்கிய ‘முள்முடி’ “The Crown of Thorns”


கனடா .
news
அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளால் 1965ம் ஆண்டு 
ஈழத்தில் ஸ்தாபிக்கப்பட்ட திருமறைக் கலாமன்றம், தற்போது 
கனடா உட்பட உலகின் பல பாகங்களிலும் கிளைகளைக் 
கொண்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் கனடாவில் இம்மன்றம் 
அரச இன மத அரசியல் சார்பற்ற ஒரு கலைமன்றமாக இயங்கி, 
வருடாவருடம் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது யாவரும் 
அறிந்ததே.அந்த வகையில் கடந்த வாரம் ரொறன்ரோவின் 
டொன்மில்ஸ் எக்லின்ரன்சந்திக்கருகே அமைந்துள்ள கனடா 
கிறிஸ்தவக் கல்லூரிக் கலையரங்கிலே பக்திப் பரவசமான ‘முள்முடி’ என்ற யேசுவின் 
திருப்பாடுகள் காட்சி, மிகவும் சிறப்பாக மேடையேறி பலரது பாராட்டையும் பெற்றுக் கொண்டது.






          




உரைஞர் ஒருவர் மூலம் காட்சிக்கான இரத்தினச் சுருக்கமான விளக்கங்களை வழங்கியதுடன், 
ஆரம்ப விளக்கத்திற்கு ஒளிக்காட்சியைப் பயன்படுத்தியிருந்தமை பாராட்டத்தக்கது.
நடனங்கள், நாட்டியங்கள் அனைத்தும் அருமை. சிறீமதி பத்மினி ஆனந்த், சிறீமதி நிரோதினி 
பரராஜசிங்கம்,சிறீமதி திருமகள் ரவீந்திரன், சிறீமதி கிருபாநிதி ரட்னேஸ்வரன், 
சிறீமதி திருமகள் பிரபாகரன் ஆகியோரின்மாணவர்கள், மிகச் சிறப்பாக தங்கள் 
கலைத் திறனை வெளிப்படுத்தினார்கள். அவர்களது நாட்டிய நடனங்களை,
நாடகத்தின் கதையோட்டத்துடன் பின்னிப் பிணைந்து, பொருத்தமாக அமைத்திருந்தமை
 அபாரம்.இயேசுவின் பிறப்பு, திருமுழுக்கு, சாத்தானின் சோதனைகள், இயேசுவின் 
போதனைகள், புதுமைகள் போன்ற நிகழ்ச்சிகள் மிக அழகாகக் சித்தரிக்கப்பட்டதுடன், 
அதற்கான பின்னணி இசையும் சிறப்பாக வழங்கப்பட்டிருந்தமை வியக்கவைத்தது.
பரிசேயர், தலைமைக் குருக்கள் ஒன்றுசேர்ந்து சதித்திட்டம் தீட்டி மந்திராலோசனை செய்து 
இயேசுவைக் கைதுசெய்யத் திட்டமிடும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தன.
கடைசி இராப்போசன விருந்து, ஜெத்சமெனித் தோட்டத்தில் துன்பம், யூதாசின் காட்டிக் 
கொடுப்பு, ஏரோது மன்னனின் விசாரணை, பிலாத்துவின் முன் விசாரணை போன்றனவும் மிக
 லாவகமாக அமைக்கப்பட்டிருந்தன.
கற்றூணில் கட்டி அடித்து, முள்முடி தரித்து, மரணத் தீர்வையிடும் காட்சிகள் பார்வையாளர்களைப்
பரவசப்படுத்தின. இயேசுவின் சிலுவைப் பாதை, சிலுவையில் மரணம் போன்றன 
உயிரோட்டமுள்ள காட்சிகளாக அமைந்து, பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்தன.
 உயிர்ப்பின் பின்னதான நாட்டிய நடனக் காட்சிகள், பல்வேறு செய்திகளைப் 
பார்வையாளர்களிடம் சொல்லி நின்றன.
கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்ச்சியாக ‘முள்முடி’ நடாத்தப்பட்டதனால், மக்களை 
இறைவன்பால் இழுக்கும் ஒரு உந்துசக்தியாகவும் ஆன்மீகரீதியாக ஓர் விழிப்புணர்வை 
ஏற்படுத்தும் ஓர் உன்னத நிகழ்வாகவும் இத் திருப்பாடுகளின் காவியம் அமைந்தது.
இதை சிறந்த முறையில் நடாத்த, தியாக மனப்பான்மையுடன் செயற்பட்ட கனடா 
திருமறைக்கலாமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒலி ஒளி 
அமைப்பாளர்கள், மேடை மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள், தொண்டர்கள் 
அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். இந்நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த எஸ்.இராசநாயகம், உதவி நெறியாள்கை செய்த எஸ்.ஜீவரட்ணம் மற்றும் யூஜின் டொமினிக், சிறந்த 
மேடையமைப்பையும் ஒப்பனையையும் வழங்கிய ஆனந்தன் மரியாம்பிள்ளை, 
இசைத்தொகுப்பில் உதவிய அன்ரன் பீலிக்ஸ், அனைத்தையும் நிர்வகித்து வெற்றிகரமாக
நடாத்திமுடிக்க உதவிய கனடா திருமறைக் கலாமன்றத்தின் தலைவர் எலியாஸ் அருளானந்தம்,
மற்றும் அனைத்து நடிகர்கள் தொண்டர்கள் போன்ற அனைவரும் மிகவும் பாராட்டிற்குரியவர்கள்.
ஒவ்வொரு பார்வையாளரையும் சிந்திக்க வைத்தது ‘முள்முடி’ திருப்பாடுகளின் காவியம்

Nanri: Uthayan

1 comment:

kirrukan said...

[quote]1993ம் ஆண்டு முதல் கனடாவில் இம்மன்றம்
அரச இன மத அரசியல் சார்பற்ற ஒரு கலைமன்றமாக இயங்கி[/quote]

அப்ப ஜெசு எந்த மதமாம்,மத சார்பற்ற மன்றம் என்றீயள் பிறகு ஜெசுக்கு விழா எடுபடுது.....ம்ம்ம் கேட்கிறவன் கே....ன் என்றால் எருமைமாடு எரோபிளேன் ஒடுமாம்.....