இலங்கைச் செய்திகள்

.
இறுதிப் போரின் இரத்தக் கறைகளை அழித்த ஐ.நா நிபுணர்குழு அறிக்கை - த ரைம்ஸ்
வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...

இப்படி ஆட்டு மந்தைகளைப் போல கொடூரமாக எடுக்கப்பட்ட வன்னி வாழ் மக்களின் படங்கள் தமிழ் சி.என்.என் புலனாய்வுச் செய்திப்பிரிவினால் சேகரிக்கப்பட்டவை.

இப்படியான வயதான காலத்திலும் சிறிலங்காப் படையினரால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது போல நிறுத்தப்படுகிறார்கள்..

உளவியல் ரீதியாகச் சிதைத்தே மீதமிருப்பவர்களையும் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறார்கள் இந்த சிறீலங்காவின் நவீன ஜம தூதர்கள்...

அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து பாருங்கள்... முகங்கள் அப்படியே சுருங்கி விட்டன...

படங்களில் உள்ள அனைவருமே தங்களின் பாசத்துக்குரிய உறவுகள் யாரையாவது நிச்சயம் இழந்திருப்பார்கள்... எத்தனை நாள் உணவின்றி இருந்திருப்பார்கள்...

ஒரு தமிழனாக உயிர் வாழுவதற்காய் அவர்கள் படும் அவலத்தை பார்க்க இதை விட நேரிடைச் சாட்சியம் எங்கும் கிடையாது....

புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூவிக் கொண்டு திரியும் சிறீலங்கா அரசு இன்னமும் ஏன் இவர்களைச் சித்திரவதை செய்கின்றது.

இவர்களால் இனி ஆயுதம் ஏந்த முடியுமா? அப்போ எதற்காக கொலைக் குற்றவாளி போல நிற்க வைத்து இந்தக் கேவலமான படப் பிடிப்புக்கள்...

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் இவர்களிடம் அப்படி என்ன கேட்டார்கள்... தற்போதைக்கு இருக்க ஒரு இடமும் குறைந்தது இரண்டு வேளையாவது சாப்பாடும்....

புலிகளை முன்னின்று கொன்றொளித்த இந்தியாவுக்கும் இவர்களின் வேதனை தெரிவதில்லை... சர்வதேசத்துக்கும் புரிவதில்லை..

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சிங்களவனை இப்படியாக நிற்கவைத்து படம் பிடித்திடுமா சிறிலங்கா அரசு?

இவர்களுக்கு குறைந்தது மனிதத் தன்மை கூட இல்லையா?

சிறீலங்காவின் நவீன தண்டனைகளை நித்தமும் அனுபவித்து வரும் தமிழ் மக்களைப் பற்றிப் பேசுவதற்கு இலங்கையில் ஆட்கள் இல்லை... உண்மையும் கூட..

ஏனெனில் இவர்களுக்காகப் பேசியவர்கள், போராடியவர்களை அழித்தும் இரண்டரை வருடங்கள் ஆகி விட்டனவே... இனி யார் பேசப் போகிறார்கள்...

தற்சமயம் பேசுகின்ற நிலையில் இருப்பவர்களும் கூட தலைமைத்துவப் போட்டிகளிலையும் பணம் சம்பாதிப்பதிலையுமே குறியாக இருக்கிறார்கள்....

ஒரு சிறிய பிரச்சினைக்கு கூட முண்டியடித்து முதல் ஆளாக அறிக்கை விட்டு நாடாளுமன்றத்திலே விவாதிக்கும் கூட்டமைப்புக்கு பாவம் இந்த வன்னி மக்கள் பற்றி எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை...

உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களையே இப்படிக் கொடூரமாக சிறுகச் சிறுக சித்திரவதை செய்து சாகடிக்கும் அரசு உள்ள நாடு சிறீலங்கா மட்டுமே...

புலிகளை அழித்து விட்டால் தமிழர்களின் உரிமையைக் கொடுத்து விடுவோம் என்று சொன்ன சிறிலங்கா அரசு மானம் மரியாதையோடு வாழ்ந்த தமிழ் மக்களை கள்ளன், காடையர்களை போல நிற்க வைத்துப் படம் பிடிக்கிறது...

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இத்தகைய கேவலமான செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

கொடூர கொலைக்குற்றம் செய்தவர்கள் போல இந்த அப்பாவி மக்களை நிறுத்தப்படும் கொடூரம் உலகில் உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக் கூடாது...

நன்றி தமிழ்.cnn

இறுதிப் போரின் இரத்தக் கறைகளை அழித்த ஐ.நா நிபுணர்குழு அறிக்கை - த ரைம்ஸ்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை நிபுணர் குழுவின் அறிக்கை அழித்துவிடாது என த ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

வன்னிப்போரில் 20 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள் ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாருக்கு தெரிவித்திருந்தனர்.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த விஜய் நம்பியார் விரும்பவில்லை.

அதற்கான காரணம் விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் என்பவரே இலங்கை இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார் என த ரைம்ஸ் நாளேட்டின் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் ஒரு அனைத்துலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அழுத்தத்தை ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தப்போகின்றது என த டைம்ஸ் நாளேட்டின் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஐ.நாவின் அறிக்கை ஆதாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றில் காணப்படும் ஆதாரங்களில் சில டைம்ஸ் நாளோட்டினால் பிரசுரிக்கப்பட்டவை. இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களினால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போரின் இறுதி ஐந்து மாதங்களில் எறிகணைத் தாக்குதல்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக த ரைம்ஸ் நாளேடு முதலில் தெரிவித்திருந்தது. மனித உரிமை அமைப்புக்களும் பல ஆதாரங்களை ஆவணப்படுத்தியுள்ளன.

நிபுணர்குழுவின் அறிக்கையில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதக் கேடயங்களாக மக்களை பயன்படுத்தியமை, சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றங்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டாலும் இலங்கை அரசின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை தடுத்தமை போன்றவற்றினால் தான் அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகின்றது. வெளிநாட்டு அவதானிப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதை இலங்கை அரசு விரும்பவில்லை. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூவர் கொண்ட ஆலோசனைக்குழு ஒன்றை கடந்த வருடம் அமைத்திருந்தார்.

மேற்குலக நாடுகளினதும் மனித உரிமை அமைப்புக்களினதும் அழுத்தங்களை தொடர்ந்தே அவர் அதனை அமைத்தார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா வெள்ளைச்சாயம் பூச முற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

வன்னிப் போரில் 20 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு தெரிவித்திருந்ததாக ஐ.நா அதிகாரிகள் எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர். எனினும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த நம்பியார் விரும்பவில்லை.

அதற்கு காரணம் விஜய் நம்பியாரின் சகோதரர் சரீஸ் நம்பியார் என்பவரே இலங்கை இராணுவத்திற்கு பணத்திற்காக ஆலோசனைகளை வழங்கி வந்திருந்தார். இந்திய இராணுவத்தின் முன்னாள் ஜெனரலாக செயற்பட்டவரே சரீஸ் நம்பியார்.

நிபுணர்குழு இலங்கைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. எனினும் அவர்கள் புகைப்படங்கள், காணொளிகள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பெற்றிருந்தனர்.

இலங்கை அரசு ஐ.நாவின் அறிக்கையை நிராகரித்துள்ளது. ஆய்வு செய்யப்படாது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கை ஐ.நாவின் மேலதிக நடவடிக்கையை வலியுறுத்தியுள்ளதுடன், இலங்கைக்கும், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் இடையில் மோதல்களையும் உருவாக்கியுள்ளதாக மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு மூலம் பான் கீ மூன் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு நிறுத்துவது கடினமானது. ஏனெனில் சீனா போன்ற எதிர்த்தரப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக உள்ளன.

லிபியா மீது நேட்டோ படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

லிபியா மீதான தாக்குதலுக்கு முன்னர் கேணல் கடாபியை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் பாதுகாப்புச்சபை ஆதரவளித்துள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இராணுவம் படுகொலை செய்ததாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்வின்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கலிற்கான பிராந்திய அலுவலகம் மிக விரைவில் வவுனியாவில்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பிராந்திய அலுவலகமொன்று மிக விரைவில் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கொழும்பில் இயங்கும் கடவுச்சீட்டு வழங்கும் பிரதான அலுவலகத்தின் கிளைகள் தற்போதைக்கு மாத்தறை, அநுராதபுரம், கண்டி ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

அதில் அநுராதபுரத்தில் இயங்கும் கிளைக்கு மிகக்குறைந்தளவான வாடிக்கையாளர்களே வருகை தருகின்றனர். அத்துடன் அங்குள்ள வசதிகளும் மிகக்குறைவாக இருப்பதால் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள கொழும்புக்கே செல்ல வேண்டியுள்ளது.

அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அநுராதபுரத்தில் இயங்கும் கிளையை மிகவிரைவில் வவுனியாவுக்கு இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கிடைத்துள்ளது. அதன் மூலம் வட மாகாண மக்களுக்கு மிக இலகுவாக கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழியேற்படும்.
நன்றி தமிழ்வின்

அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் சிங்கப்பூரில்! த.தே.கூ. பிரதிநிதிகள் விஜயம்


[ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 04:35.06 PM GMT ]

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கருத்தரங்கொன்றை சிங்கப்பூரில் நடாத்த உள்ளது.

குறித்த கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தற்போதைக்கு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர்.

அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் போது எவ்வாறான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பில் இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்படவுள்ளது.

தீர்வுத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் சிங்கப்பூர். மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த கல்விமான்கள்இ ஐரோப்பிய வலய நாடுகளின் முக்கிய நிறுவனங்கள்இ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியன இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி தமிழ்வின்

இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய ஐ.நா.அறிக்கை - மனோ கணேசன்


[ செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011, 01:53.37 PM GMT ]
ஐ.நா. சபை செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா நிபுணர் குழுவின் இலங்கை அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக செல்வதா என்பதை இந்த அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஐ.நா அறிக்கை முதலாம் குற்றவாளியாக இலங்கை அரசாங்கத்தையும், இரண்டாம் குற்றவாளியாக விடுதலை புலிகளையும், மூன்றாம் குற்றவாளியாக ஐ.நா அமைப்பையுமே அடையாளம் கண்டுள்ளது.

இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதற்கு முன்னரும், பின்னரும் எதுவுமே முறை கேடாக இலங்கையில் நடைபெறவில்லை என்று கூறி எவரும் இனி தப்பித்துக்கொள்ள முடியாத நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பிலே உலகம் கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளது.

இதன் மூலம் போரினால் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியையும், சமாதானத்தையும் ஐ.நா சபை உடனடியாக கொண்டுவந்து தந்துவிடும் என்று நாங்கள் கனவு காண முடியாது.

இது ஒருவிதமான ஆரம்பம். இதன் அடுத்து வரும் கட்டங்களை ஐ.நா சபை தீர்மானிக்காது. அவற்றை இலங்கை அரசாங்கமும், தமிழ் தலைமைகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள கூட்டமைப்புடன் அரசாங்கம் இன்று பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றது. இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தீர்வை நோக்கி செல்லவேண்டும்.

பேச்சுவார்த்தைகளை காலங்கடத்தும் தந்திரமாக அரசாங்கம் கொண்டு நடத்துகின்றதா என்ற சந்தேகம் இன்று தமிழர் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.

விடுதலை புலிகளின் இராணுவ தோல்வியை தமிழ் மக்களின் தோல்வியாக காட்டி முழு நாட்டையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றிடும் கொள்கையை இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவற்றிக்குரிய பதில்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

யுத்த வெற்றியை மாத்திரம் தொடர்ந்து முன்னெடுத்து சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதன் மூலம் உலகத்துடன் இணக்கமாக செல்வதா என்பதை இந்த அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும்.
நன்றி தமிழ்வின்


கிரிக்கெட் இலங்கையணியின் தலைவர் டில்ஷான்


இலங்கை அணியின் தலைவராக டி.எம்.டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கையணித் தெரிவுக்குழுவின் தலைவர் துலிப் மென்டிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப் போட்டிக்கு டில்ஷான் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் உரிய தீர்வைக்காண முன்வந்தால் ஐ.நா. அறிக்கைக்கு எதிராக போராடத் தயார் _இனப்பிரச்சினை உட்பட உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முன்வந்தால் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து போராடுவதற்கு எமது கட்சி தயாராகவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சர்வாதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றை புறந்தள்ளி யாவருக்கும் சமனாக சட்டம் மதிக்கப்படுமானால் ஐ.நா.வின் அறிக்கையினால் எதுவும் செய்துவிட முடியாது. அதுமட்டுமல்லாது மின்சாரக் கதிரையில் அமர வேண்டுமே என்ற அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

ஐ.நா. இன்று எமது உள்ளக பிரச்சினைகளுக்குள் தலையிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 1988 மற்றும் 89களில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது பயங்கரமானது. பாரதூரமானது. இதற்கு எதிராக செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும். இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இதே நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு இதற்கு எதிராகப் போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமானால் உள்நாட்டில் நிலவுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது தரப்பு நியாயமாகும்.

ஐ.நா. எமது பிரச்சினைகளில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவ்வாறானதொரு நிலைமை தற்போது ஏற்படுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 1988 1989 காலப் பகுதிகளில் பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டார். அதன் பிரதிபலனைத்தான் இன்று அனுபவிக்கின்றோம்.

பயங்கரவாதம் எனும்போது அது தமிழ்ப் பயங்கரவாதமா சிங்களப் பயங்கரவாதமா என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எதுவாக இருந்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம்தான்.

எது எப்படி இருப்பினும் உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர அந்நியர்கள் தலையிடும் அளவுக்கும் அவர்களது அழுத்தம் பிரயோகிக்கப்படும் அளவுக்கும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஆனாலும் அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து அந்த அலுவலகத்தை மூடிவிடுவதற்கு அரச தரப்பினரும் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக் கொள்வோரும் நடவடிக்கை எடுப்பார்களேயானால் அல்லது அமெரிக்கா மற்றும் நோர்வே தூதரங்களை இங்கு மூடிவிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால் இந்நாட்டில் பிரச்சினை இருக்கின்றது என்றே அர்த்தமாகின்றது. எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு நிகழ்கின்ற கதி தெரிந்த விடயமாகும். அவர்கள் கடத்தப்படுகின்றனர்.

காணாமல் போகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் பதிலும் இல்லை. தீர்வும் இல்லை.

தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அது அந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதுவும் நடப்பதாக இல்லை. இந்நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் வைத்துள்ள அரசாங்கத்திடம் அவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அது அரசாங்கத்தினால் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

ஐ.நா.வின் அறிக்கைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் தொடர்பிருக்கின்ற காரணத்தினால் அந்த அறிக்கைக்கு தக்க பதிலை வழங்குவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார். ஏனெனில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் வரிசையில் சரத் பொன்சேகாவுக்கு பாரிய பங்கு உண்டு. எனவே, அனைவருமாக இணைந்தே இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது.

அவ்வாறு செயற்பட்டால் இலகுவாக எம்மால் சாதிக்க முடியும். அதற்கு முன்னதாக சிறையில் இருக்கின்ற சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும். இந்நாட்டின் சட்டமானது அரசுக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் ஆதரவாளர்களுக்கு சார்பாகவும் செயற்படுத்தப்படுகின்றது. அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல், சர்வாதிகார நிர்வாகம் ஆகியவையே இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான காரணங்களே ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு வழிவகுத்துள்ளன.

எமது நாட்டில் நிலவுகின்ற மேற்படி பிரச்சினைகளுக்கு நாமே நல்ல முறையிலான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல வேறு எந்த அமைப்பும் ஒன்றும் செய்துவிட முடியாது.

எனவே, மேற்கூறப்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியான தீர்வினைக் காணுமானால் ஐ.நா.வின் அறிக்கை அற்பமானதாகிவிடும். இதனைத்தான் எமது பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எடுத்துரைத்திருந்தார். ஆனால் அவர் மீது புலி முத்திரை குத்தி துரோகிப் பட்டமும் சூட்டப்பட்டது.

அந்நியர்கள் எமது உள்ளக பிரச்சினைகளில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அந்நியர்கள் எமது பிரச்சினைகளில் தலையிடாதிருக்க வேண்டுமானால் ஐ.நா.வின் அறிக்கைக்கு பதில் கொடுக்க வேண்டுமானால் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அரசாங்கம் செய்யுமானால் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசுடன் இணைந்து ஐ.நா.வின் அறிக்கைக்கு எதிராக செயற்பட தயாராகவே இருக்கின்றது.

மாறாக சர்வாதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கும் அரசியல் நீடிக்குமானால் அது பாரதூரமானதாகவே அமையும். ராஜதந்திர ரீதியில் அணுகு முறைகளைக் கையாளுவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியும். அரசாங்கம் நேர்மையுடன் செயற்படுமானால் இலங்கை மீதான ஐ.நா.வின் அழுத்தத்திற்கு எதிராக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இணைத்துக் கொண்டு போராட முடியும். அதுமட்டுமல்லாது மின்சாரக் கதிரையில் அமர வேண்டுமே என்ற அச்சமும் எவருக்கும் தேவையும் இல்லை என்றார்.

நன்றி வீரகேசரி இணையம் 

No comments: