அமீருக்கு இரண்டு பங்கு கேக் - ரெ.கார்த்திகேசு


.

“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி.

மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி.
இன்று காலை முதலே தன் பிறந்த நாள் பிரதாபங்கள் வீட்டில் அல்லோலகல்லோலப்பட்டன. மல்லியின் முதல் மகிழ்ச்சி தான் நான்கு வயது எல்லையை வெற்றிகரமாக அடைந்துவிட்ட வேளையில் அமீர் – அவளுடைய பாலர் பள்ளி சகா மற்றும் தலையாய பகைவன் – இன்னும் அதனை அடையவில்லை என்பது. “அமீருக்கு இன்னும் நாலாவது பெர்த்டே வரல! இன்னும் ரெண்டு மாசம் இருக்கு!”
பிறந்த நாள் ஒரு வார மத்தியில் வந்ததால் மல்லியின் பெற்றோர்களுக்கு அதனை நண்பர்களின் குடும்பங்களை அழைத்துக் கொண்டாட முடியவில்லை. அநேகமாக வார இறுதியில் பெலூன்களுடன்கூடிய ஒரு விழா இருக்கும். ஆனால் பிறந்த நாளான இன்று பெற்றோர்கள் வேலையிலிருந்து அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு காலையில் மல்லியைக் கோயிலுக்குக் கொண்டு சென்றார்கள். பின்னர் மல்லியின் பாலர் பள்ளிக்குச் சென்று அங்கு கேக் வெட்டி கொண்டாடுவதாக ஏற்பாடு.
கோயிலுக்குப் போகும் மகிழ்ச்சியை விட பள்ளிக்குப் போகும் மகிழ்ச்சிதான் மல்லிக்கு அதிகமாக இருந்தது. கோயிலில் அவள் அம்மா பூசிவிட்ட கீற்றுத் திருநீறும் சின்ன சந்தனப் பொட்டும் மல்லிக்கு அழகாக இருந்தன. புதுச் சட்டையெல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் பள்ளிக்கூட நாளாதலால் வழக்கமான பள்ளிச்சீருடையையே அணிவித்திருந்தார்கள்.
‘சீக்ரெட் ரெசிப்பி’யில் வாங்கியிருந்த விலையுயர்ந்த கேக் பெட்டியில் இருந்தது. சீக்ரெட் ரெசிப்பியின் கேக்குக்குத் தனி ருசி உண்டு. ஆனால் அதற்கான விலையும் கொடுக்க வேண்டும். கேக்கில் சுற்றிலும் தென்னங்கீற்றுத் தோரணங்கள் போல அமைத்திருந்தார்கள். நீளப் பாவாடை அணிந்த பெண்ணின் படம் போட்டிருந்தார்கள். எல்லாம் மல்லியின் அம்மா கொடுத்த மாதிரிப் படத்தைப் பார்த்துக் கேக்கை அணி செய்யும் சீனப் பெண் ஐசிங்கொண்டு வரைந்தது. பாவாடை இந்தியத்தனமாக இருந்தாலும் உப்பிய சிவப்புப்பூச்சுடைய கன்னங்களுடனான முகமும் (நெற்றியில் ஒரு பொட்டு இருந்தாலும்) மேல்நோக்கி ஏறி இறங்கும் இரட்டைச் சடையும் சீனர்கள் சாயலில் இருந்தன. சரிதான். இப்படியெல்லாம் இருப்பதால்தான் இது மலேசியா.மல்லியின் விருப்பத்துக்கு விட்டிருந்தால் கேக்கில் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பென்டென் இப்படி ஏதாவது நவீன கார்ட்டூன் ஹீரோக்களைத்தான் கேட்டிருப்பாள். அவற்றையெல்லாம் நட்பான வழிகளில் தட்டிக் கழித்துவிட்டு கேக்கில் இந்தியத் தன்மையைக் கொண்டு வந்தது அவள் அம்மா; என் மருமகள். வாழ்க்கையும் சடங்குகளும் எவ்வளவுதான் நவீனமாக ஆகிவிட்டாலும் முடிந்த அளவு அவற்றில் இந்தியத் தன்மைகளை நுழைக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. என் மகன் எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் ஆள். அந்தக் குணம் என்னிடமிருந்து வந்ததுதான் என்பதும் எனக்குத் தெரியும்.
இந்தக் கேக்கைத்தான் பள்ளியில் வைத்து வெட்ட வேண்டும். நான்கு அழகிய திருகிய குட்டி மெழுகுவர்த்திகளும் வெட்டுவதற்கு ஒரு பிளாஸ்டிக் கத்தியும் கேக் பெட்டிக்குள்ளேயே வைக்கப் பட்டிருந்தன. அதற்குத்தான் இப்போது மகனின் காரில் சென்று கொண்டிருந்தோம். எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுக்க நொறுங்குதீனிப் பலகாரங்களும் விளையாட்டுப் பொருள்களும் அடங்கிய சிறிய பைகள் ஏற்கனவே தயாரிக்கப் பட்டிருந்தன.
இந்தப் பிறந்த நாள் அன்று மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து ஊதி அணைக்கும் வழக்கம் இந்தியத் தன்மைக்கு ஏற்றதல்ல என்ற எண்ணம் எனக்கு என்றும் உண்டு. வாழ்க்கை விளங்க விளக்கை ஏற்றுவதுதான் நமது பண்பு. அணைப்பதல்ல. ஆனால் எத்தனையோ அன்றாட வாழ்க்கைப் பண்புகளை மேற்கத்திய அல்லது உலகளாவியப் பண்புகளாக ஏற்றுக் கொண்டோம். அதிலும் பல இனப் பிள்ளைகள் படிக்கும் இந்த பாலர் பள்ளியிலும் இந்தப் பிறந்த நாள் சடங்கு ஓர் அச்சில் வார்க்கப்பட்ட சடங்காகத்தான்இருக்க முடியும். மெழுகுவர்த்தியைப் பிள்ளை ஊதி அணைக்கும் தருணம்தான் பிள்ளைகள் கெக்கலித்துக் கைதட்டும் தருணம். அதை மாற்றினால் குழந்தைகள் குழப்பமடைவார்கள். ஆகவே இங்கே தமிழ்ப் புனிதத்தைத் தியாகம் செய்தே ஆகவேண்டும்.
மல்லியின் கேக் வெட்டிக் கொண்டாடும் சடங்குக்கு மல்லியின் தாத்தாவான என்னையும் அழைத்தார்கள் மகனும் மருமகளும். எனக்கும் ஆசைதான். சின்னப் பிள்ளைகளுடன் இருப்பது, அவர்கள் கொண்டாட்டத்தைப் பார்த்து மகிழ்வது என்னையும் இளமைக் காலத்துக்குக் கொண்டு செல்லும்.
ஆனால் என் காலத்தில் இதெல்லாம் ஏது? பிறந்த நாளுக்கு அப்பா ஒரு சட்டை வாங்கிக் கொடுப்பார். வீட்டில் அம்மா வடை சுட்டுப் பாயசம் செய்வார். சாமி அறையில் கும்பிட்டுவிட்டு எல்லாரும் சாப்பிடுவோம்.
அடைபட்டுக் கிடக்கும் காரின் கண்ணாடிக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வயதில் என்றோ இறந்து மறந்தும் போன என் பெற்றோரின் நினைவு வந்தது ஏதோ காலப் பொருத்தமில்லாத விஷயம் போல் தோன்றியது. அவர்கள் காலம் – என் இளமைக் காலம் – எங்கே, இப்போதைய காலம் எங்கே!
தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறிய என் தாத்தாவின் மூன்றாம் தலைமுறை வாரிசாக மலேசியாவிலேயே பிறந்த எனக்கு ஒரு மலாய்க்கார கம்பம்தான் பூர்வீகக் கிராமம். மண்ணெண்ணெய் விளக்கில் படித்த காலம், அப்பாவும் சரி, வாத்தியாரும் சரி கண்டிப்பான, இறுக்கமான முகத்தோடும் பிரம்போடும் திரிந்த காலம். பள்ளிக்கூடத்திற்குச் செம்மண்பாதையில் நடந்தும் சைக்கிளிலும் சென்ற காலம். கம்பத்து ஆற்றில் நீந்தி, அங்குள்ள கற்களுக்கு அடியே கிடந்த சிறிய ஊடான்களையும் (இரால்கள்) பிடித்த காலம். சண்டை மீன்களைப் பிடித்து பாட்டிலில் அடைத்து நண்பனின் சண்டை மீனோடு சண்டை போடத் தூண்டிய காலம்.
கம்பத்தில் மலாயும் தமிழும்தான் யார் வாயிலும். ஆங்கிலம் பேசுவோர் யாருமில்லை. ஆகவே நாங்கள் ஒரு மலாய்ப் பூச்சுடன் கூடிய தமிழ்த் தனத்தோடுதான் வளர்ந்தோம். மாதத்துக்கு இரண்டு கருப்பு வெள்ளைத் தமிழ்ப் படங்கள் பார்க்கக் கருப்பு மார்க்கெட்டில் அடிதடி. பாகவதரின் “அன்னையும் தந்தையும்தானே...” ரேடியோவில் ஒலிக்காத நாளில்லை. அண்ணனோடு சேர்ந்து கொண்டு “வதனமே சந்திர பிம்பமோ!” உச்சக் குரலில் பாடியது. அண்ணன்.... ஹூம்!
எங்கே இருக்கிறது அந்த உலகம்? இப்போது செத்துப் போன மீனாக மனதுக்குள் மிதக்கிறது. அடுக்குமாடி வீட்டு வாழ்க்கை, கார், குளிர் சாதனப் பெட்டியால் பதப்படுத்தப்பட்ட அறையின் சொகுசு; கணினி; எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க முடிகின்ற சுகம்! பிறந்த நாளுக்குக் கேக்கும் மெழுகுவர்த்தியும் “ஹேப்பி பர்த்டே” பாடலும்!
எல்லாம் நல்லதுதான். வளர்ச்சிதான். ஆனால் மனம் என்னவோ பழையதற்கு ஏங்குகிறது!
ஆனால் வெறும், அர்த்தமில்லாத ஏக்கம்தான். பத்தாண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு உந்துதலில் என் பிறந்த ஊருக்குப் போனேன். ஊர் கொஞ்சம் பாழடைந்து போனது போல இருந்தது. இல்லை. நான் அறிந்த பழைய ஊரை “ஓல்ட் டவுன்” என ஒதுக்கிப் பாழடைய விட்டுவிட்டு ஊர் வேறு திக்கில் “நியூ டவுன்” என புதிய வரிசை வீடுகளுடனும் சூப்பர் மார்க்கெட்டுடனும் வளர்ந்திருந்தது. எனக்குச் சுத்தமாக அந்நியமாகிப்போன பிரதேசம்.
தெரிந்த முகங்கள் ஏதும் இல்லை. இருந்தாலும் உருத்தெரியாமல் மாறியிருக்கலாம். யாரையும் எதையும் விசாரிக்க மனமும் இல்லை. கொஞ்ச நேரம் காரை விட்டிறங்கி தரை காலில் பட நடந்து மனம் ஏங்கிப் போக விருட்டென்று திரும்பி விட்டேன்.
தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்! ‘பிறந்த ஊருக்கு யாரும் திரும்பப் போக முடியாது’.
இப்படியான எண்ணங்கள் மனதில் அலைமோதப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போதுதான் மல்லி சொன்னாள்: “அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!”
“ஏம்மா ? ஏன் அமீருக்கு மாத்திரம் கேக் குடுக்கக் கூடாது?” என்று கேட்டார் மல்லியின் அப்பா.
“அவன் என்ன எப்ப பாத்தாலும் அடிக்கிறான் அப்பா!” என்றாள் மல்லி. ஒரு பிறந்த நாளின் போது குழந்தை சொல்லும் இந்தக் குறைபாடு பெற்றோர்களுக்கு மனதில் வலித்திருக்க வேண்டும்.
"அப்படியா! இத்தன நாள் நீ சொல்லவே இல்லியே!" என்றார் அம்மா.
நான் குறுக்கிட்டேன். மல்லியை பாலர் பள்ளியில் கொண்டு விடுவதும் பள்ளி முடிந்துத் திரும்பக் கொண்டு வருவதும் என் அன்றாடப் பணியாதலால், அவள் பள்ளிக்கூட வாழ்க்கை பற்றி அவர்களைவிட எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே தெரியும். "என் கிட்ட சில தடவ சொல்லியிருக்கும்மா! அது ஏதோ விளையாட்டுன்னு விட்டுட்டேன்!.
"அப்படி விடக் கூடாதப்பா! சிறு வயதில இந்த குழந்தைகள் பிற முரட்டுக் குழந்தைகளால கொடுமைப்படுத்தப்பட்டா அதனால் நீண்ட கால தாக்கம் ஏற்படலாம். நல்ல வேள இப்ப சொன்னிச்சி. டீச்சர்கிட்ட பேசுவோம்" என்றார் என் மகன். அதுவும் சரிதான் என நினைத்துக் கொண்டேன்.
*** *** ***

கேக்குடன் பள்ளிக்கூடத்தில் நாங்கள் நுழைந்ததும் பள்ளி கலகலத்தது. அது ஒரு முப்பது நாற்பது பிள்ளைகள் மட்டுமே படிக்கக்கூடிய சிறிய பள்ளிக்கூடம்தான். பல்கலைக் கழகத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் விரிவுரையாளர்களின் பிள்ளைகள் அதிகம் இருந்தார்கள். சீன, மலாய், இந்தியப் பிள்ளைகளின் கூட்டுக் கலவை. அதோடு அங்கு வெளிநாடுகளிலிருந்து மேல்பட்டப் படிப்பு படிக்க வந்துள்ள மாணவர்களின் குழந்தைகளும் அங்கு இருந்தார்கள். பெரும்பாலும் ஆப்பிரிக்க, மத்தியகிழக்கு மாணவர்கள்.
ஆசிரியை அவர்களை ஓரறைக்குள் கூட்டினார். நெற்கதிர்களை நாடிவரும் குருவிகளைப் போல கீச்சுகீச்சுத்துக்கொண்டே பிள்ளைகள் வந்து கூடினார்கள். ஒரு தாழ்வான மேசையில் ஆசிரியை கேக்கைத் திறந்து வைத்தார். கேக்கில் பாவாடையுடனும் பொட்டுடனுமான பெண்ணின் உருவம் பிள்ளைகளைக் கெக்கலிக்க வைத்தது. “ஹே, சீ மல்லி சோ ஃபன்னி!” என்று ஒரு பையன் கூவினான். எல்லாரும் சிரித்தார்கள். மல்லி அதை ஒன்றும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஆசிரியையின் துணையுடன் மருமகள் மெழுகுவர்த்திகளைக் கொளுத்த மகனின் கேமரா படம் எடுக்கத் தயாரானது. மல்லியைச் சுற்றி நின்ற பிள்ளைகள் ஹேப்பி பர்த்டே பாட நானும் அதில் உற்சாகமாகக் கலந்து கொண்டேன்.
மல்லி சமர்த்தாக மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தாள். பிள்ளைகள் கைதட்டிச் சிரித்தார்கள். பின் மல்லி தன் அம்மாவின் துணையுடன் கேக் துண்டை வெட்டியவுடன் அம்மா முதல் துண்டை மல்லிக்கே ஊட்டினார். பின் மல்லி அம்மாவுக்கு ஊட்டி, அப்பாவுக்கு ஊட்டி, எனக்கும் ஊட்டியவுடன் ஆசிரியை கேக்கைச் சிறிய துண்டுகளாக வெட்டி காகிதத் தட்டைகளில் எல்லாப் பிள்ளைகளுக்கும் விநியோகித்தார். சில பிள்ளைகள் நளினமாகவும் நாகரிகமாகவும் சாப்பிட சிலர் வாயில் அப்பியும் சாப்பிட்டார்கள். எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் சில பிள்ளைகளுக்கு மூக்கிலும் கூடக் கேக் துகள்கள் ஒட்டியிருந்தன. ஆசிரியை டிஸ்யூ எடுத்து எல்லாப் பிள்ளைகளுக்கும் அன்போடு துடைத்துவிட்டார்.
பலகாரப் பொட்டலங்களை மல்லி ஒவ்வொருவருக்காக வழங்க ஆசிரியை அந்தப் பொட்டலங்களைப் பிள்ளைகளின் புத்தகப் பைக்குள் வைக்க உதவினார்.
அமளி கொஞ்சம் குறைந்ததும் மல்லியின் அப்பா மல்லியின் வகுப்பாசிரியரிடம் சென்று தணிந்த குரலில் கேட்டார். “அமீர் என்பது யார் டீச்சர்?”
ஆசிரியை அறையின் மூலையில் உட்கார்ந்திருந்த பையனைச் சுட்டிக் காட்டினார். நானும் பார்த்தேன். என்னை முதலில் வந்து தாக்கியது பையனின் உருவ அளவு. மல்லியின் தோளுக்குக் கூட வரமாட்டான். சிறிய ஒடுங்கிய உருவம். இரண்டாவதாக என்னைத் தாக்கியது அவனது நிறம். இப்படி ஒரு கருப்பு இருக்கிறதா? தொட்டால் ஒட்டிக் கொள்வது போன்ற கருப்பு. கொஞ்சமும் பளபளக்காத கருப்பு. தலைமுடி சுருள்சுருளாக இருந்தது. ஆப்பிரிக்க இனத்தின் அப்பட்டமான அடையாளங்கள் அனைத்தும் இருந்தன.
மல்லி இவனைப் பற்றி என்னிடம் குறை கூறும்போதெல்லாம் இவன் ஒரு தடித்த, உயரமான முரட்டுப் பையனாக இருக்க வேண்டும் என்ற தோற்றமே எனக்கு உண்டானது. இவனுடைய நிறம் பற்றியோ உருவம் பற்றியோ மல்லி ஒரு நாளும் என்னிடம் சொன்னதில்லை. குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகள் தங்களைப் போன்ற குழந்தைகளாகத் தெரிகிறார்களே தவிர அவர்களுடய நிற அளவு வேறுபாடுகள் கண்ணுக்குப் பட்டாலும் கருத்துக்குப் படுவதில்லை. காலப் போக்கில் நாம்தான் இந்த வேறுபாடுகளைக் கற்றுக் கொடுக்கிறோம் போலும்.
இந்த நோஞ்சான் பையனா மல்லியைக் கொடுமைப்படுத்துகிறான்? நம்புவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.
“அமீரின் பெற்றோர்கள் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவனது அப்பா இங்கு பி.எச்டி. பண்ணிக்கொண்டிருக்கிறார். ஏன் கேட்கிறீர்கள்?” என்று ஆசிரியை கேட்டார்.
“அவன் மல்லியைக் கொடுமைப்படுத்துவதாக மல்லி கூறுகிறாள். உங்களுக்குத் தெரியுமா?”
ஆசிரியை கொஞ்சம் தயங்கிப் பேசினார். “அமீர் கொஞ்சம் மூளை வளர்ச்சி குறைந்த பையன். சாதுவான குணம். பெரும்பாலும் தனித்திருக்க விரும்பும் பிள்ளை!”
எங்களுக்கெல்லாம் இந்த வருணனை ஆச்சரியமானதாக இருந்தது. “அப்படியானால் அவன் மல்லியைக் கொடுமைப் படுத்துகிறான் என்று சொல்வது...?” என்று மகன்கேட்டார்.
“அவன் தனியாக இருக்கவே விரும்புவான். அவன் அப்படியே இருப்பது நல்லதில்லை என்பதால் நாங்கள்தான் பிற குழந்தைகளை அனுப்பி சேர்ந்து விளையாட அவனை அழைப்போம். சில குழந்தைகள் அவனை அன்பாக அழைப்பதுண்டு. சில பிள்ளைகள் முரட்டுத் தனமாகக் கையைப் பிடித்து இழுப்பதும் உண்டு. அப்படி யாராவது முரட்டுத் தனமாக அவனை இழுத்தால் அவனுக்குக் கடுமையான கோபம் வரும். வெறிகொண்டு தாக்குவான். நாங்கள் போய் சமாதானம் செய்து அழைத்து வருவோம்!”
மகன் கொஞ்சம் வாயடைத்து நின்றது போலத்தான் நானும் நின்றேன். பின் நான் கேட்டேன்: “மல்லியை ஏன் அவன் குறிப்பாகக் கொடுமைப்படுத்த வேண்டும்?”
“அப்படி ஒன்றும் இல்லை சார். அவனுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவனைச் சீண்டும் பிள்ளைகளில் மல்லியும் ஒன்று. அப்படிப்பட்ட வேளைகளில் அமீர் எதிர்த்துப் போரிடுவதுண்டு. சண்டைக்கு அதுதான் காரணம். ஆனால் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுக்கள்தான். நாங்கள் அணுக்கமாகக் கவனித்துக் கொண்டே இருப்போம். அமீரிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எல்லாப் பிள்ளைகளுக்கும் போதித்துத்தான் வருகிறோம்!”
வீட்டுக்குக் காரில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது அமீருக்குத்தான் இரண்டு பங்கு கேக் கொடுக்க வேண்டும் என்ற பாடத்தை நாங்களும் மல்லிக்குப் போதிக்க வேண்டியது அவசியம் என்ற எண்ணமே எனக்கு உச்சத்தில் இருந்தது.

Nanri:thinnai.com

2 comments:

Anonymous said...

It is true that nowdays our world is changing with new technologies also the human life and places are changing.It is a good idea of teachers to send kids to play with Amir but in this surcomstance they need to undersatnd the personality and how he likes to be alone. I aam glad that Mali's family well understood the problem. This should be the role model for all parents to understand the circumstance and the problem and after that to advice the kids.

Ghayaadhuri Srirudrakantha said...

The previous one is mine