ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் உலக புத்தக தினம். அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளுரைப்போம். பிறந்தநாள் பரிசாகவும், திருமணநாள் அடையாளமாகவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்
பரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம் தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள். ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு. புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.
புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு. குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை. தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது. ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன். நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன. இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன.
ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன. மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும். திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.
உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும். எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும். அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது. காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம். வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம். நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம். கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம்.
எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர். உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர். சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர். ஆனால், கண் பார்வை அற்றவர்!
பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று. 'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான். வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது. மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது. கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!
அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.
நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011
No comments:
Post a Comment