.
கடந்த பெப்ருவரிமாதம் மெல்பேணில் நடைபெற்ற இருசகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம் இசைப் பிரியர்களுக்கும், கலைஞர்களுக்கும் மட்டுமன்றி எல்லோருக்குமே பெருவிருந்தாக அமைந்திருந்தது. திரு.திருமதி. விஜயமனோகரன் - குமுதினி தம்பதிகளின் புதல்வர்களான செல்வன் லோஜன் விஜயமனோகரன், செல்வன் ஆதவன் விஜயமனோகரன் இருவரதும் மிருதங்க அரங்கேற்றம் கடந்த பெப்ருவரி மாதம் ஆறாம் திகதி மாலை பேசின் நிகழ்கலை அரங்கத்தில், ஒரே மேடையில் ஒன்றாக இடம்பெற்றது.
இவர்கள் இருவரும் மிருதங்கமேதை காரைக்குடி மணி அவர்களின் “சுருதி லய கேந்திரா, அவுஸ்திரேலியா” என்னும் நுண்கலைப் பள்ளியின் நிறுவனரும் இயக்குனருமான புகழ்பூத்த மிருதங்க வித்துவான் திரு. மதியாபரணம் இரவிச்சந்திராவின் மாணவர்களாவர். திரு. மதியாபரணம் இரவிச்சந்திராவினால் பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேற்றம் காணுகின்ற முப்பத்தி ஆறாவது மற்றும் முப்பத்தி ஏழாவது மாணவர்கள் இவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் மிருதங்கமேதை காரைக்குடி மணி அவர்களின் “சுருதி லய கேந்திரா, அவுஸ்திரேலியா” என்னும் நுண்கலைப் பள்ளியின் நிறுவனரும் இயக்குனருமான புகழ்பூத்த மிருதங்க வித்துவான் திரு. மதியாபரணம் இரவிச்சந்திராவின் மாணவர்களாவர். திரு. மதியாபரணம் இரவிச்சந்திராவினால் பயிற்றுவிக்கப்பட்டு அரங்கேற்றம் காணுகின்ற முப்பத்தி ஆறாவது மற்றும் முப்பத்தி ஏழாவது மாணவர்கள் இவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆழகிய ஆலய மண்டபத்தின் மத்தியில், நர்த்தனமாடும் விநாயகரின் தோற்றத்துடன் கூடிய திரை அலங்காரம் மேடையின் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தமை மிருதங்க அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
நிசப்தம் பூரணமாக நிறைந்திருந்த மண்டபத்தில் இரண்டு இளைஞர்கள் ஓம் என்ற பிரணவ மந்திரத்தினைப் பக்தியுணர்வு பூர்வமாக உச்சரித்து, வடமொழியில் தெய்வீக வாழ்த்தினை ஓதியபோது அந்த ரம்மியமான ஒலி, புனிதமான கலையொன்று அரங்கேறுவதற்கான சூழலை மண்டபத்தில் வியாபிக்கச் செய்து, மக்கள் அனைவரது உள்ளங்களையும் இழுத்து ஒருமுகப்படுத்திய உன்னத உணர்வு உண்டாயிற்று.
அரங்கேற்றம் நடைபெற்ற நாள், லோஜன் ஆதவன் ஆகியோரின் பாட்டி, திருமதி. செல்லம்மா தம்பிமுத்துவின் எண்பத்தியோராவது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டபோது, சற்றும் தயக்கமின்றி ஒலிவாங்கியில் அதற்கு நன்றி தெரிவித்ததுடன், தனது பேரக் குழந்தைகளின் அரங்கேற்றம் நல்லமுறையில் நடந்தேற கம்பீரமான குரலில் அவர் ஆசிகூறியதும் அரங்கமே நெகிழ்ச்சியில் உருகி மகிழ்ந்தது.
இந்த இரு சகோதரர்களின் அரங்கேற்றத்திற்கு இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இருவர் வாய்ப்பாட்டு வழங்கினார்கள் என்பதுடன் அவர்களும் சகோதரிகளாக அமைந்திருந்தமையும் ஒருவகையில் பொருத்தமாகவே இருந்தது. தென்னிந்திய இசையுலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக விளங்குகின்ற மாம்பலம் சகோதரிகளில் இருவரான திருமதிகள் ஆர். விஜயலக்~pமி ஆர்.சித்திரா ஆகியோரே அவர்கள். மாம்பலம் சகோதரிகளில் இளையவரான முனைவர் திருமதி ஹேமலதா ரங்கராஜன் வயலின் இசை வழங்கினார்.
இத்தகைய மிகச்சிறந்த கலை விற்பன்னர்களுக்கு ஈடுகொடுத்துத் தமது மிருதங்க வாசிப்புத்திறமையை வெளிப்படுத்தவேண்டிய சவாலை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தாம் கற்ற வித்தையினை லோஜன், ஆதவன் சகோதரர்கள் அரங்கேற்றம் செய்தார்கள். எல்லாப் பாடல்களுக்குமே அவர்களின் வாசிப்புத்திறமை சொல்லிக் குறிப்பிடத்தக்கவகையில் சிறப்பாகவே இருந்தது என்று பொதுவாக விதந்துரைக்கலாம் என்றாலும், அவற்றில் முத்திரை பதித்த சில இடங்களை மட்டுமாவது இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
வழமைபோல வர்ணத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானாலும் வழமையாக வர்ணத்திற்குப் பாடுவதற்கு பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படாத “கருணைகடலே கல்யாணி” என்ற தமிழ்ப்பாடல் இங்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது. கல்யாணி இராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த இந்தப் பாடலை அரங்கேற்ற நாயகர்கள் இருவரும் நன்கு கிரகித்து வாசித்தமையை உணரக்கூடியதாகவிருந்தது. இருவர் சேர்ந்து மிருதங்கம் வாசிப்பதில் சில பிரதிகூலங்கள் உள்ளன. அதிலும், பாடல் முழுவதற்கும் இருவரும் சேர்ந்து வாசிப்பதிலும் பார்க்க இருவரும் பகுதி பகுதியாகப் பிரித்துத் தனித்தனியாக வாசிப்பதற்கு நல்ல பயிற்சியும், அதிக கவனமும் தேவை. முக்கியமாக இருவரது வாசிப்பும் சமநிலையில் இருக்க வேண்டும். சமநிலை பிறழும்போது இருவரதும் வாசிப்புக்களின் ஏற்ற இறக்கங்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். இருவருக்கும் உன்னிப்பான கவனிப்பு அவசியம். இந்த விடயங்களிலெல்லாம் நல்ல அறிவும், பயிற்சியும் உள்ளவர்கள் என்பதை லோஜனும், ஆதவனும் தமது கச்சிதமான வாசிப்பின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
எல்லா மிருதங்க அரங்கேற்றங்களையும் போலவே இதிலும் பஞ்சரத்னகிருதியும் இடம்பெற்றது. “அம்பா காமாட்~p” என்ற பாடல் பைரவி இராகத்தில், மி~;ரசாப்பு தாளத்தில் பாடப்பட்டது. சுரம் ஒரு பாகமும், சாகித்யம் மறுபாகமுமாக இரண்டு பாகங்களாக அமையப்பெற்ற இந்தப் பாடலை மிகவும் அனுபவம் வாய்ந்த பாடகர்கள் மட்டுமே கச்சேரிகளில் பாடுவார்கள். பண்பட்ட இசை அனுபவத்திற்குக் குறைவில்லாத மாம்பலம் சகோதரிகள் இந்தப்பாடலைப் பாடியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், மிருதங்க அரங்கேற்றமொன்றில் இதனைப் பாடுகின்றபோது அரங்கேறும் மாணவர்களுக்கு அது ஒருபெரிய சவாலாகவே இருக்கும். அதி வேகமாகவும், மிகவும் மெத்தனமாகவும் காலப்பிரமாணத்தை மாற்றி மாற்றி வாசிப்பதிலும், குமுக்கியைச் சரளமாகப் போடுவதிலும் இருவரும் மிகவும் அருமையாக வாசித்துத் தமது திறமையை வெளிப்படுத்தினார்கள். இவர்களைப் பயிற்சியளித்த குருவான திரு. மரியாபரணம் இரவிச்சந்திராவும், மற்றொரு குருவான இரவிச்சந்திராவின் சிரே~;ட மாணவரான திலீபன் முருகநாதனும் பெருமைப்படலாம்.
அரங்கேற்றத்தை மிகவும் களைகட்ட வைத்து அனைவரையும் தாளம்போடவைத்துக் களிப்பூட்டிய மற்றுமொரு பாடல் அமிர்தவர்~pனி இராகத்திலும், ஆதிதாளத்திலும் அமைந்த “ஆனந்தமிர்தகர்சினி” என்ற பாடலாகும். பாடகர்கள் வித்தியாசமான தொனியில், மிகவும் விறுவிறுப்பாக இந்தப் பாடலைப் பாடியபோது, சொற்கட்டுக்கள் மிகவும் பொருத்தமாகவும், தெளிவாகவும் மிருதங்கங்களில் பாட்டின் எடுப்பிற்கு ஏற்ப வந்து விழுந்தன. லோஜனும், ஆதவனும் பாடலின் லயத்தை நிழல்போலத் தொடர்ந்து நன்கு கவனித்து வாசித்தார்கள். அதேவேளை எவ்வித சிரமமும் தென்படாமல், இருவரும் மிகவும் இயல்பாகவே வாசித்து விறுவிறுப்பான இந்தப் பாடலுக்கு முற்றுமுழுதான தாள ஒத்துழைப்பை வழங்கியமை கற்ற வித்தையில் அவர்கள் கரிசினையோடு பெற்றுக்கொண்ட பயிற்சியின் தரத்தினைப் பறைசாற்றியது.
ராகம் தானம் பல்லவியில் “கேட்ட வரமும் அருளும்” என்ற பாடல், பிருந்தாவன சாரங்கா, பரமு ராகங்களில் சத்யசாயி பகவான் அவர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. அதிலேயே தனி ஆவர்த்தனமும் இடம்பெற்றது. தனி ஆவர்த்தனம் சரியான தொனியுடன் வாசிக்கப்படாவிடில் அலுப்பைத்தருவது வழக்கம். ஆனால் இந்த அரங்கேற்றத்தில் தனி ஆவர்த்தனத்தை இருவர் பிரித்து வாசித்தமையால் எவருக்குமே சிறிதளவும் அலுப்பு ஏற்படச் சாத்தியமிருக்கவில்லை என்பதற்கும் மேலாக, இருவரும் மாறிமாறி வாசித்த வேகம் உண்மையில் மிகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது என்றே சொல்ல வேண்டும். பார்வையாளர்கள் மற்றும் லய வித்துவான்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி இரசித்துக்கொண்டிருந்தனர்.
இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட இராகங்களில் அமைந்த “ஓடம்” என்ற தமிழ்ப்பாடல் அரங்கம் முழுவதையும் இனிமையில் நிரப்பியது. ஏற்கனவே நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிராத இந்தப்பாடல் ஒன்றன் பின் ஒன்றாகப் பல இராகங்களில் மாறிமாறி வந்துகொண்டிருக்க, அவற்றிற்கு ஏற்பப் பொருத்தமான வாசிப்பை அரங்கேற்ற நாயகர்கள் அழகாகத் தந்துகொண்டிருந்தார்கள்.
இசைமேதை பாலமுரளிகிரு~;ணா அவர்களால் வடிவமைக்கப்பட்ட தில்லானா இறுதியாக இடம்பெற்றது. குந்தளவராளி இராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த இந்தத் தில்லானா மிகவும் வழுக்கலான போக்குடையது என்று இசையறிஞர்கள் சொல்வார்கள். மிகவும் அவதானமாகக் கிரகித்து வாசிக்க வேண்டிய இந்தத் தில்லானாவிலும் லோஜனும், ஆதவனும் தமது திறமையை நன்கு வெளிப்படுத்தினார்கள்.
மிக நீண்டகாலாமாக அவுஸ்திரேலியாவில் கர்நாடக இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை சளைக்காமல், பெருவிருப்போடு ஒழுங்குசெய்து வருகின்ற மிகச்சிறந்த இரசிகரான திரு. சங்கரன் ரமேஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியின் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் தமது உரையில், லோஜன் விஜயமனோகரன், ஆதவன் விஜயமனோகரன் சகோதரர்கள் இருவரதும் கலை ஈடுபாட்டையும், பங்களிப்புக்களையும் எடுத்துக் கூறியதுடன், மிருதங்க வாசிப்பில் அவர்களது நுண்ணிய அறிவையும், நுணுக்கமான திறமையையும் அரங்கேற்ற வாசிப்பில் இருந்து சில உதாரணங்களை எடுத்துக்கூறி வியந்துரைத்தார். அவரது வார்த்தைகள் இந்த அரங்கேற்றத்தின் சிறப்பிற்கான அங்கீகாரமாக அமைகின்றன எனலாம்.
கற்பித்த ஆசிரியரான மதியாபரணம் இரவிச்சந்திரா, அவரின் சிரே~;ட மாணவரும் மற்றுமொரு குருவுமான திலீபன் முருகநாதன் ஆகியோரின் கற்பித்தல் முறைமைக்கும், பயிற்றுவிக்கும் திறமைக்கும் இந்த அரங்கேற்றம் மெல்பேணில் இன்னுமொரு சான்றாக அமைந்ததுடன், இசைக் கலைஞர்கள் உட்பட, பார்வையாளர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது என்றும் சொல்லலாம்.
செல்வன் லோஜன் விஜயமனோகரன், செல்வன் ஆதவன் விஜயமனோகரன் ஆகியோர் தம் பெற்றோர்களான விஜயமனோகரன் - குமுதினி தம்பதிகளைத் தம்மைப் பெற்றபோதினும் பெரிதுவக்கவைத்துத் தமது மிருதங்க அரங்கேற்றத்தினைப் பலரும் வியந்து பாராட்டும் வண்ணம் சிறப்பாக நிறைவேற்றினார்கள்.
இக் கலையை அவர்கள் மென்மேலும் பயின்று, இன்னும் சிறந்து, உயர்ந்து புகழ்பெற எமது வாழ்த்துக்கள்.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
No comments:
Post a Comment