சிட்னியில் கிளைட் ரெயில் ஸ்ரேசனில் தமிழ்ப்பெண் மரணம்.


.
74 வயதுடைய இலங்கை ஈவினை சுண்ணாகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்மணியான திருமதி இரத்தினம் சத்தியதாசன் அவர்கள் சென்ற 11ம் திகதி சிட்னியில் கிளைட் ஸ்ரேசனில் விழுந்து இறந்து விட்ட செய்தி பலரும் அறிந்த செய்தியாகும். ஆரோக்கியமாக தனியாக பிரயாணிக்கும் இவர் விழுந்து இறந்தது என்பது அவரை அறிந்த பலருக்கும் கவலை தரும் செய்தியாகவே இருந்தது. இவரது கணவரான காலம் சென்ற சத்தியதாசன் Times of Ceylon இல் Journalist என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு சத்தியவான், சத்தியேந்திரா, சத்திய வாணி, சத்தியநிதி என்ற நான்கு பிள்ளைகள் சிட்னியில் இருக்கின்றார்கள்.. இந்த மரணம் பற்றி அவரது மகன்மாரில் ஒருவரான சத்தியேந்திரா கூறியதாவது.தாயார் சில காலமாக முளங்காலில் மூட்டுவலியோடு இருந்தார். நடக்கும்போது பெரிதாக நோ இல்லாவிட்டாலும் ஏறி இறங்கும்போது நோவினால் கஸ்டப்படுவதுண்டு. அதற்காக அண்மையில் வைத்தியரிடம் மருந்து எடுத்துக் கொடுத்தேன். 11.04.2011 திங்கட் கிழமையன்று வழமையாக வெளியே செல்வது போல் சென்றிருந்தார். அன்று வாசிப்பதற்கும் அண்மையில் உள்ளவற்றைப் பார்ப்பதற்கும் பாவிக்கும் மூக்குக் கண்ணாடியை எடுத்துச் செல்லவில்லை. இரவு 9 மணியாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் எதுவும் தெரிய வராததால் இரவு 9.30 மணியளவில் ஓபன் பொலிஸ் நிலையத்தில் காணவில்லை என்று முறைப்பாடு செய்தேன். மறுநாள் காலை 7.30 மணியளவில் கிறான்வில் பொலிசார் தொலைபேசியில் அழைத்து கிளைட் ஸ்ரேசனில் ஒரு பெண்ணுக்கு அக்சிடென்ற் ஆகியுள்ளது போட்டோ கொண்டுவருகின்றோம் ; அடையாளம் காட்டுங்கள் என்று கூறி அரைமணி நேரத்தில் போட்டோவுடன் வந்தார்கள். அது அம்மா ஸ்ரேசன் மேடையில் நிற்கும் நிழற்படம்தான்.
அம்மாவிற்கு என்னநடந்தது என்று கேட்டபோது அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.
ஸ்ரேசனில் பொருத்தியிருக்கும் கமராவில் பார்த்த விடயங்கள் என்று பொலிசார் கூறியவை.
ஸ்ரேசன் மேடையில் விழுந்திருக்கிறார் விழும்போது அவருடைய கைப்பையில் இருந்த பொருட்கள் விழுகின்றது அத்தோடு கைப்பையும் கீழே விழுகின்றது. மீண்டும் அவர் எழும்புகின்றார் எழும்பும்போது எழும்ப முடியாமல் தடுமாறி மீண்டும் விழுகின்றார் இம்முறை தண்டவாளப்பக்கமாக விழுந்ததினால் கமராவில் அது தெரியவில்லை. விழுந்தவர் மேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் விழுந்திருக்கின்றார் அந்நேரத்தில் விரைவு ரெயில் ஒன்று சென்றபோதும் அது நிற்பாட்டப் பட்டது என்றும் கூறப்பட்டது.  இவரை எவரும் தள்ளிவிடவோ அல்லது கொள்ளைக்காக செய்யப்பட்டதோ அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மண்டையில் அடிபட்டதால் ஏற்பட்ட காயத்தால் இறந்ததாகவும் கை நெற்றி போன்றவற்றிலும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ரெயில் மோதியிருக்குமா என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காமலே உள்ளது. கையிலும் நெற்றியிலும் ஏற்பட்டுள்ள காயங்கள் சிறிய காயங்களாகவே உள்ளதால் கைப்பகுதி மோதுப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேடையில் கிடந்த கைப்பை பின்பு காணப்படவில்லை என்றும் அதை நிறுத்தப்பட்ட ரெயிலில் வந்தவர்கள் யாரும் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கைப்பையில் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை என்றும் அம்மா இறந்த செய்தியால் தாங்கள் கைப்பையைப் பற்றி அதிகம் அப்போது ஒன்றும் கேட்கவில்லை என்றும் சத்தியேந்திரா  குறிப்பிட்டார்.
திருமதி இரத்தினம் சத்தியதாசனின் தனனக்; கிரிகைகள் 18.04.2011 திங்கட் கிழமை மாலை 3.00 மணிக்கு சிட்னியில் றொக்வூட் மயாணத்தில் இடம் பெற்றது.

No comments: