கண்ணானால் நான் இமையாவேன்..


.
உறவுகளின் உன்னதம் தன்னலத்தில் இல்லை! பிறர்நலத்தில் இருக்கிறது! நான் உனக்காகவும், நீ எனக்காகவும் என்றானபின் இதைவிட இன்பம் எங்கே? நினைவில், கனவில் எல்லாம் தொடரும் உறவில் இந்தப் பரிமாற்றம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், மனதிற்குள் ஒரு உந்துதலையும் தருவதுடன், மகிழ்ச்சிப்பந்தல்கட்டி திருவிழா நடத்துகிறது.

அன்பும் அக்கறையும் தன்மீது செலுத்த இன்னொருவர் / இன்னொருத்தி இருக்கிறார் எனும்போது மனதில் நம்பிக்கை நங்கூரமிடுகிறது. ஆண் –பெண் உறவின் அந்தரங்கம்கூட இதன் அடிப்படையிலேதான் சந்தோஷ சாம்ராஜ்யம் நடத்துகிறது.

சமீபத்திலும் கூட ஒரு திரைப்பாடல்..


நீ காற்று.. நான் மரம் .. என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் என்று வார்த்தை மழைதனில் அந்த வசந்த வைபவத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் இணைந்து கிடப்பதையும் நிதர்சனப்படுத்துகிறது!

பாயும் ஒளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு

என்று மகாகவி பாரதி கண்ணம்மா என் காதலியிடம் பகர்ந்ததை நினைவூட்டும் பாடல்கள்தான் எத்தனை எத்தனை?

காதல், பக்தி போன்ற பரிபூரணங்களில் உணர்வின் ஊற்றாய், உள்ளத்தின் பிரதிபலிப்பாய் சொற்கள் வந்து சேர்கின்றன. அதுவும் கவிஞரின் கைவண்ணத்தில்..

கண்ணானால் நான் இமையாவேன்

காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

கண்ணதாசனே! காற்று மண்டலமெங்கும் தமிழ்மொழி உள்ளவரை.. உனது கானங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்! அதில் மானிட சாசனங்களாய் உன் கவிதை வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்!!

என்றும் அன்புடன்,
கண்ணன் சேகருடன் இணைந்து
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)

No comments: