ஈழத்துத் தமிழ் இலக்கியம்


.

இலங்கைத் தமிழ இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி என்பன பற்றிக் குறிப்பிடும் போது, இலங்கையில் வெளிவந்தஆரம்ப்பகால பத்திரிகைகளான ‘ஈழகேசரி’மறுமலர்ச்சி’ இதழ்கள் பற்றிக் குறிப்பிடாமல் யாரும் எழுதுவதோ பேசுவதோ கிடையாது. அந்த இதழ்களில் எழுத ஆரம்பித்தவர்கள் பற்றி குறிப்பிடத் தவறுவதும் இல்லை. அந்தப் பத்திரிகைகள் குறித்தும்  அதில் எழுதியவர்கள் குறித்தும், இலங்கைத் தமிழிலக்கியத்தின செல்நெறியை முற்போக்குத் தடத்தில் வழிநடக்க வைத்ததில் பெரும் பங்காற்றிய மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், தமது இளமைக் காலத்திலேயே (56 வருடங்களுக்கு முன்பு) மிகத் தெளிவாக ஆய்வு செய்து எழுதிய கட்டுரையை, இன்றைய இலக்கிய ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகக் கீழே தருகின் றோம்..இந்தக்
க.கைலாசபதி


 கட்டுரை தமிழகத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, ‘சாந்தி’ இதழின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி 1955ல் வெளியான ஆண்டு மலரில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குழு
பாரதியுக இலக்கியம் என்ற பொதுத் தலைப்பின் கீழ் இன்று தமிழ் இலக்கியம்
வளர்ந்து வருகிறது. இந்த இலக்கிய வளர்ச்சியில் ஈழநாட்டுத் தமிழ்
எழுத்தாளர்கள் எவ்வாறு தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளார்கள் என்பதைச்
சுருக்கமாக ஆராய்வதே எனது நோக்கமாகும்.
அங்கொருவர் இங்கொருவராகத் தனிப்பட்ட சில ஆசிரியர்களைத் தவிர,
பொதுவாகத் தற்காலத் தமிழிலக்கிய இயக்கங்களும் இலக்கியப் படைப்புகளும்
பத்திரிகைகளின் வளர்ச்சியுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்து கிடக்கின்றன
என்பது யாவருமறிந்ததே.
1930-ம் வருடத்துக்குப் பின்னர் தமிழ் நாட்டில் காந்தி, சுதந்திரச்சங்கு,
மணிக்கொடி முதலிய பத்திரிகைகள் தோன்றியது போல, ஈழத்தில் காந்திய அரசியலினால் கவரப்பட்ட
சிலரின் முயற்சியால், அரசியலுடன் இலக்கியத்தையும் சேர்த்து வளர்க்க எண்ணி ஸ்தாபிக்கப்பட்டது
‘ஈழகேசரி’. ஈழகேசரியின் ஆரம்ப காலத்தில் பண்டிதர் பரம்பரையிலிருந்தே அதிக ஆதரவு கிடைத்தது.
பழைய இலக்கிய இலக்கண விளக்கக் கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், அரசியற் கட்டுரைகள் -
இவைதாம் பெரிதும் வெளிவந்தன. ஈழகேசரியின் இத்தகைய ஆரம்ப வளர்ச்சிக்கும் ‘கலைமகள்’
சஞ்சிகைக்கும் ஒப்புவமையைக் காணலாம். இதனால்தானோ என்னவோ ஈழகேசரி எழுத்தாளர்கள் சிலர்
கலைமகளுக்கும் விடயதானம் செய்ய முடிந்தது.
குல-சபாநாதன், சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர்
ஈழகேசரிக் குழுவினர் என்று கூறக்கூடிய வகையில் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இன்று
அக்கால இலக்கிய முயற்சிகளைப் பின்நோக்கிப் பார்க்கும் பொழுது, மேற்கூறிய இலக்கிய கர்த்தாக்கள்
மறுமலர்ச்சி இலக்கியத்தையோ, இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ, புதிய புதிய பரிசீலனைகளையோ
அதிகம் வளர்த்தனர் எனக் கூறுவதற்கில்லை. ஆங்கில விமர்சகர்கள் கூறும் ‘ரோமான்டிசிசம்’ என்னும்
கனவுலகக் காட்சிகளில் ஈடுபடச் செய்யும் இலட்சிய பூர்வமான சிந்தனைகளிலும், உணர்ச்சிகளிலும்
மயங்கி எழுதினர் என்றுதான் கொள்ளலாம்.
எனினும் 1938-ம் வருடமளவில், இளைஞர் சிலரின் ஆர்வத்திற்கும் துடிப்பிற்கும் இப்பத்திரிகை இடம்
தரலாயிற்று. மணிக்கொடி, ஊழியன் ஆகிய இரு பத்திரிகைகளும் இவ்விளம் உள்ளங்களுக்குப்
பொறாமைப்படத்தக்க முன் மாதிரியாக விளங்கின. இவ்விரு பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்த
இலக்கிய சர்ச்சைகளை இவர்கள் கவனித்தனர். சிறுகதை, (வசன) கவிதை ஆகிய இரு துறைகளுந்தான்
முன்னணியில் அடிபட்டன. இவற்றில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் அடிபடலாயின. தி.ச.வரதராசன்,
அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந்தம், விவியன் நமசிவாயம், ராஜ அரியரத்தினம், நாவற்குழியூர்
நடராஜன் ஆகியோர் ‘இலக்கிய’ உலகில் பிரவேசித்தனர்.


ஈழகேசரி இவர்களது கன்னிப் படைப்புகளுக்கு இடம் தந்து வந்ததாயினும், வாலிபத் துடிப்பின்
அவதியுடனும், இலட்சியக் கனவுகளுடனும் தமிழிலக்கிய உலகையே கலக்கிவிட வேண்டுமென
முனைந்து நின்ற இவ்விளைஞர்களுக்கு, தமக்கென ஒரு இலக்கியப் பத்திரிகை அத்தியாவசியம் எனத்
தெரிந்தது.
இக்காலத்தில்தான் திருச்சிப் பக்கமிருந்து ‘கிராம ஊழியன்’ வெளிவரத் தொடங்கியிருந்தது.
ஈழத்திலிருந்து இவ்விளைஞரிற் சிலர் அதில் தம் முயற்சிகளை வெளியிட வாய்ப்புக் கிடைத்தது.
1946-ம் வருடம் யாழ்ப்பாணத்திலிருந்து ‘மறுமலர்ச்சி’ என்ற மாத சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது.
தமது இலக்கிய ஆர்வத்தையே மூலதனமாகக் கொண்டு ஆரம்பித்த மறுமலர்ச்சிக் குழுவினர், முதல்
இதழின் ‘முகத்துவாரத்தில்’ பின்வருமாறு எழுதினர்:
“எழுத்தாளர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஆரம்பித்த பத்திரிகை இது. இதனுடைய வளர்ச்சி
இலக்கியத்தின் வளர்ச்சி….அரசியல் சமூக விடயங்களைக் குத்திக் கிளறுவதற்காகவே ஒரு புதுமையான
இலக்கியத்தை ‘மறுமலர்ச்சி’ சிருஸ்டிக்கப் போவதில்லை…”
ஆரம்பம் எடுப்பாகத்தான் இருக்கிறது. அப்படியிருந்தும் சில காலத்திற்குள் சஞ்சிகை சென்று
தேய்ந்திற்று முடிந்தது. ஏன்? சுருங்கச் சொன்னால் ‘மறுமலர்ச்சி’க் குழுவினர் இலக்கியத்தின் மேலிருந்த
‘ஆர்வ’ மிகுதியால் ‘கலை கலைக்காகவே’ என்ற பழைய கொள்கைக்குள் தம்மையறியாமலே சிக்கிக்
கொண்டனர் என்பது என் அபிப்பிராயம். இன்னுஞ் சொல்ல வேண்டுமானால், இவர்கள் தமது
சஞ்சிகைக்கு அப்பால் பரந்த மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறதென்பதை மறந்துவிட்டார்கள்.
இதனால்தான், சாதாரண மக்கள் மட்டுமல்ல பல ‘இலக்கிய’ வாசகர்களே மறுமலர்ச்சியின் ஆதி –
அந்தத்தைப் பற்றி அறியாதிருந்தார்கள்: இருக்கிறார்கள். மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோஹினி
ஆகிய பத்திரிகைகள் வந்த காலத்தில் நிரம்பிய ஆர்வத்துடன் ‘மறுமலர்ச்சி’ கோஸ்டியினர் இலக்கிய
உலகைத் தாமும் ஒருகை பார்க்க நினைத்தனர் என்பதுதான் இன்று பின்னோக்காகப் பார்க்கும் போது
நாம் கூறக்கூடியதாகும். “நானும் ஒரு ‘மறுமலர்ச்சி’ எழுத்தாளனாக்கும்” என்று சிலர் இன்று
சொல்லிக்கொண்டு திரியவும் அதனால் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது.
எனினும் தனிப்பட்ட முறையில் முருகானந்தம், “மகாகவி”, வரதர், நாவற்குழியூர் நடராஜன் ஆகியோர்
சில நல்ல படைப்புகளைத் தந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
‘மறுமலர்ச்சி’ குழுவினரிற் பெரும்பாலோர் உணரவும் செய்யவும் தவறியதை, அவர்க்குப் பின் எழுந்த
இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். மறுமலர்ச்சிக்குப் பின்
வந்தவர்களிடம், தாம் ஒரு இலக்கியக் குழுவினர் என்று சொல்லத்தக்க நெருங்கிய தொடர்பில்லை
என்பதைத் தவிர, சிந்தனை வளர்ச்சியில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. மேல்நாட்டு இலக்கியங்களில்
விருப்பும் பயிற்சியும், தமக்கும் தமது இலக்கியத்திற்கும் அர்த்தம் தரும் முறையில் வெளியேயிருக்கும்
மக்கள் சமுதாயத்தைப் பற்றிய உணர்வு, தாம் கையாளும் பாசையில் மிகுந்த சிரத்தை - இத்தகைய
பண்புகள் சிலவற்றை இவர்களது இலக்கிய வளர்ச்சியில் நாம் காணலாம்.
இக்குழுவினருள், சில்லையூர் செல்வராசன், முருகையன், சொக்கன், வ.அ.இராசரத்தினம் ஆகியோர்
குறிப்பிடத் தக்கவர்கள் என்பது எனது அபிப்பிராயம். ஈழகேசரியில் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே
முற்போக்கு எழுத்தாளராக விளங்கி வந்த அ.ந.கந்தசாமியையும் இக்குழுவினருடன் சேர்க்க
வேண்டியது அவசியமாகிறது. சமீபத்தில் ஈழத்து இலக்கிய உலகில் திடீர்ப்பிரவேசம் செய்து
மின்வெட்டுப்போல, பளிச்பளிச்சென்று நையாண்டிக் கவிதைகள் பல பாடி வரும் ‘தான்தோன்றிக்
கவிராயர்’ இக்குழுவைச் சேர்ந்த இன்னொருவர். இவரின் கவிதைகள் சில வேள+ர் கந்தசாமிக் கவிராயர்,
திருச்சிற்றம்பலக் கவிராயர் முதலியோர் படைப்புகளுடன் வைத்து எண்ணப்பட வேண்டும் என்பது
எனது துணிவான முடிவு.
பிரேம்ஜி, எச்.எம்.பி.மொஹிதீன், கே.டானியல், ‘புதுமை லோலன்’ ஆகியோர் முற்போக்கு எழுத்தாளர்
இயக்கத்தின் முன்னணியில் நிற்பவர்களாவர். நமது சமுதாயத்தின் முரண்பாடுகளை உணர்ந்து,
பொருளாதார மாற்றத்திற்காக உழைக்கும் அரசியலில் நம்பிக்கை காட்டும் இக்குழுவினர் பல
காரணங்களால் போதிய அளவு இலக்கிய சிருஸ்டிகளில் ஈடுபடவில்லை. முற்போக்கு எழுத்தாளர்
இயக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் நல்லதொரு இலக்கிய பரம்பரையை இவர்கள் உண்டுபண்ண
முடியும்.
யாழ்ப்பாணம் பண்டிதத் தமிழ் மீதும், சைவத்தின் மீதும் கொண்ட ஈடுபாட்டுக்குப் பேர் போனது.
எனினும் மணிக்கொடி காலத்திலிருந்தே யாழ்ப்பாணப் பணடிதர்கள் சிலர் மறுமலர்ச்சி இலக்கியத்தில்


போதிய அக்கறை காட்டி வந்தார்கள். பொதுவாகப் பண்டிதர்கள் சிறுகதை, (வசன) கவிதை, விமர்சனக்
கட்டுரை முதலிய இலக்கியப் பிரிவுகளில் தம் பார்வையைச் செலுத்துவது குறைவு. எனவே
இப்பண்டிதர்கள், ‘முற்போக்குப் பண்டிதர்கள்’ என வைதீகப் பண்டிதர்களால் கருதப்படவும்
நேர்ந்ததுண்டு. பஞ்பாட்சர சர்மா, தியாகராஜன், சரவணமுத்து ஆகியோர் மறுமலர்ச்சியில் ஆர்வம்
காட்டும் பண்டிதர்களாவர். பண்டித உலகில் இருந்துகொண்டு பழமையையும் புதுமையையும் அறிந்து
விளையாடுபவர் பண்டிதமணி; சி.கணபதிப்பிள்ளை.
கல்விக்கழகங்களின் பிரதிநிதி என்ற முறையில் ஈழத்தமிழின் மறுமலர்ச்சிக்கு அதிகம் உழைத்த ஒரு
சிலருள் சிறந்து விளங்குபவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை. சுமார் பத்து நாடகங்களும், சில
நாவல்களும், கவிதைகளும் எழுதியிருக்கும் இவர், ஈழத்தில் நாடக எழுத்தாளரின் ஏகப்பிரதிநிதயாக
விளங்குகிறார். விமர்சகர் ஒருவர் கூறுவது போல, “யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழின் ஜீவனை அறிந்து,
பேச்சுத் தமிழின் தாளலயங்களைக் கண்டு, அவற்றை தனது நாடகங்களில் அமைத்த ஒரே ஒரு ஆசிரியர்
இவர்தான்.”
இதுவரை நான் கூறியவற்றிலிருந்து சுமார், இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஈழத்து இலக்கிய
மறுமலர்ச்சி கனவுலகுக் காட்சிகளில் லயித்திருந்த எழுத்தாளர்களுடன் ஆரம்பித்து, யதார்த்த இலக்கியம்
படைக்கும் - படைக்கக்கூடிய – எழுத்தாளர்களுடன் வளர்ந்து வருகிறது என்பது புலனாகும் என
நினைக்கிறேன். “இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டு விடாதே. அது உன்னைக் கொன்றுவிடும்.
அதைப் பொழுதுபோக்காகவே வைத்துக் கொள்” என்று புதுமைப்பித்தன் ஒருமுறை சொன்னதாக
அறிகிறோம். இந்த உண்மையை உணர்ந்தோ என்னவோ, ஈழத்தில் தற்சமயம் ஒருவராவது
இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கவில்லை. பத்திரிகாலயங்களில் கடமை பார்ப்பவர்களைத்
தவிர, மிகுதிப்பேர் யாவருக்கும் இலக்கிய சிருஸ்டி பொழுதுபோக்கு. தகுந்தபடி பத்திரிகைகள்
சன்மானம் தராத நிலைமை, முதலாளித்துவ ஸ்தாபனங்கள் நடத்தும் பெரும்பாலான பத்திரிகைகளில்
முற்போக்கு இலக்கிப் படைப்புகள் வெளிவர முடியாத நிலைமை - இவை போன்ற காரணங்களால்
இலக்கியமும் இலக்கியகர்த்தாக்களும் திசை தெரியாது மயங்கி நிற்கும் ‘சரித்திர கதியில்’ இன்றைய
மறுமலர்ச்சி இலக்கியம் வந்து நிற்கிறது. இதிலிருந்து விடுபட்டு முன்னேறினால்தான் மறுமலர்ச்சியின்
பயனை அடைய முடியும்.
Nantri: vaanavil

No comments: