உலகச் செய்திகள்
.

1 .  ஜப்பானின் அணு உலைகளிலிருந்து ஆபத்துமிக்க புளுட்டோனியம்
    வெளியேற்றம்
2    ஜப்பானின் அணு உலைகளிலிருந்து உயர்மட்ட கதிரியக்க செறிவுடைய நீர்
    கசிவு
3   லிபியாவில் அமெரிக்காவின் தலையீடு வரையறுக்கப்பட்டதாக இருக்கும்
    ஒபாமா தெரிவிப்பு

4. ஜப்பானிய கதிர்வீச்சு காரணமாக அமெரிக்காவில் பெய்த கதிர்வீச்சு மழை

5. ஜப்பானிய கதிர்வீச்சு இங்கிலாந்துக்கு பரவல்

1 . ஜப்பானின் அணு உலைகளிலிருந்து ஆபத்துமிக்க புளுட்டோனியம் வெளியேற்றம்
டோக்கியோ: பியுகுஷிமா அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தின் அளவு அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள மண்ணில் புளுட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1986 இல் உக்ரைனின் செர்னோபைல் அணுஉலை வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான அனர்த்தமாக பியுகுஷிமா அணு உலை வெடிப்பு உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கக் கசிவின் அளவு அதிகரித்துள்ளதுடன் அங்குள்ள மண்ணில் புளுட்டோனிய செறிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அணுவாயுத உற்பத்தி மற்றும் அணுசக்தி போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் புளுட்டோனியம் மூலக்கூறானது அணுஉலைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள மண்ணில் குறைந்தளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அணு உலைகளிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கு 10 மைக்ரோ சிவேற்ஸ் எனும் அளவில் கதிர்வீச்சு பரவலடைவதாகவும் அதனால் அதிகளவான ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் கிரீன்பீஸ் சூழல் ஆர்வலர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 50 மில்லிவேற்ஸ் அல்லது 50,000 மைக்ரோசிவேற்ஸ் கதிரியக்கப் பரவலை ஒவ்வொரு நாடும் அனுமதிக்கிறது என உலக அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை டோக்கியோவின் சில நகரங்களில் மணித்தியாலத்திற்கு 0.20 முதல் 0.22 மைக்ரோசியவேற்ஸ் எனும் அளவில் கதிர்வீச்சு பரவலடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி அணுவாயுதப் பரிசோதனைகளின் பின்னர் வளிமண்டலத்தில் 238,239,240 ஆகிய அளவுகளில் புளுட்டோனியம் செறிந்திருந்தது.எனினும் இவ் அளவுகள் மனித உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதல்ல என ரெப்கோவின் உதவித்தலைவர் சாகா மியுரோ தெரிவித்துள்ளார்.

புளுட்டோனியக் கசிவானது பியுகுஷிமாவிலுள்ள எரிபொருள் குழாயிலிருந்து அல்லது அணுஉலை 3 இலிருந்து ஏற்பட்டிருக்கலாமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புளுட்டோனியத்தின் கதிரியக்க மட்டம் ஒவ்வொரு கிலோவிற்கும் 0.18 முதல் 0.54 பெக்கரல் அளவில் அதிகரித்துச் செல்வதாக ஜப்பானிய அணு பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இது மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த நிலைமை கவலைக்குரியது எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஒரு அணு உலையிலிருந்து கொங்கிறீற் குழாய்கள் மூலமாக கதிரியக்க செறிவுடைய நீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது 1 இலட்சம் மடங்கு கதிரியக்கச் செறிவினைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நெருப்பு,வெடிப்புக்கள்,புகை போன்ற ஏனைய ஆபத்துக்களும் அங்கு ஏற்பட்டுள்ளன.அத்துடன் பியுகுஷிமா பகுதியில் மரக்கறி,பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் கதிரியக்கச் செறிவு காணப்படும் அதேவேளை ஜப்பானியக் கடற்பகுதிகள்,தரைக்கீழ் நீர்,நீர்த்தேக்கங்கள் போன்றவற்றிலும் குறிப்பிடக்கூடியளவு கதிரியக்கச் செறிவு காணப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராய்ட்டர்ஸ்
2 .   ஜப்பானின் அணு உலைகளிலிருந்து உயர்மட்ட கதிரியக்க செறிவுடைய நீர் கசிவு


டோக்கியோ: ஜப்பானின் பியூகுஷிமா அணு உலைகளிலிருந்து உயர்மட்ட அளவிலான கதிரியக்க செறிவுடைய நீர் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பியூகுஷிமா அணு உலைகளிலிருந்து உயர்மட்ட கதிரியக்க செறிவுடைய நீர் வெளியேறிவருவதுடன் இது மெதுவாக சூழற்றொகுதிக்குள் விடப்பட்டு வருவதால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படக் கூடுமென அஞ்சுவதாக அணு உலைநிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அணு உலைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது தொடர்பாக பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (ரெப்கோ) இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரான்ஸ் அணு சக்தி அமைப்பிடம் மேலதிக உதவிகளைக் கோரியுள்ளது.

அத்துடன் பிரான்ஸின் இரு முக்கிய அணு மின்சக்தி அமைப்புகளிடம் ரெப்கோ உதவிகோரியுள்ளதாக பிரான்ஸின் கைத்தொழில் மற்றும் சக்தி வலு அமைச்சரை மேற்கோள்காட்டி கொயோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அணு உலை 2 இலிருந்து வழமையை விட ஒரு இலட்சம் மடங்கு அளவிலான கதிரியக்கப் பரவல் இடம்பெறுவதுடன் அங்கிருந்து 30 மீற்றர் தொலைவிலிருந்து பெறப்பட்ட நீரில் ஒவ்வொரு 131 அயடினின் கன சதுர சென்ரி மீற்றருக்கும் 46 பெக்கரல் கதிரியக்க செறிவு காணப்படுகிறது.இது வழமையாக அயடின் செறிவை விட 1,150 மடங்கு அதிகமானதாகுமென அணு உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அணு உலை 2 உடன் இணைக்கப்பட்டுள்ள குழாய் மூலமாகவே கதிரியக்க நீர் கசிந்து வருவதுடன் இது மெது மெதுவாக சூழற்றொகுதிக்குள் சென்றடையலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் கதிரியக்க மட்டத்தின் அளவு தொடர்பாக தவறான செய்தியை ரெப்கோ நிறுவனம் வெளியிட்டிருந்தமை தொடர்பாக ஜப்பானிய அரசு கடுமையாக கண்டித்திருந்தது.

இதேவேளை அணு உலை 2 இன் குளிரூட்டும் பகுதியை மீளச் செயற்படுத்துவதற்காக 700 இற்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் அதிகரித்து வரும் கதிரியக்கப் பரவல் காரணமாக தற்போது அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இம் மாத முற்பகுதியில் வட கீழ் ஜப்பானில் ஏற்பட்ட 9.0 றிச்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் மற்றும் 33 அடிஉயரமான கடல்கோள் அலைகளின் தாக்கத்தினால் பியூகுஷிமா அணு உலை மிகமோசமாக வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

 3     லிபியாவில் அமெரிக்காவின் தலையீடு வரையறுக்கப்பட்டதாக இருக்கும் ஒபாமா தெரிவிப்பு

வாஷிங்டன்:தனது பதவிக்காலத்தில் முதலாவது இராணுவ ரீதியான தலையீட்டை நியாயப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா லிபியாவில் அமெரிக்காவின் தலையீடு வரையறுக்கப்பட்டதாக இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

லிபியத் தலைவர் முஅம்மர் கடாபியின் படைகளால் அச்சுறுத்தலுக்குள்ளான எண்ணற்ற உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே கூட்டுப்படைகளுக்கு அமெரிக்கா பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரம்ப நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமை தாங்கிய போதும் தற்போது நேட்டோ கூட்டணியினரிடம் பொறுப்பைக் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடாபியின் சொந்த நகரமான சிடேயுக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் மிக மெதுவாக இடம்பெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லிபியாவில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கூட்டுப்படைகள் ஐ.நா.,நேட்டோ,ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் அரேபிய லீக் ஆகியவற்றைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் லண்டனில் கூடியுள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டன் டிசியிலுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உரைநிகழ்த்திய ஒபாமா;

விமானப்பறப்புத் தடை வலயத்தை அமுல்படுத்துவதில் அமெரிக்கா தலைமை வகித்த போதும் தற்போது நேட்டோ கூட்டமைப்பிடம் பொறுப்பைக் கையளிக்கவுள்ளது.

எமது இராணுவம் மற்றும் வரி செலுத்துநர்களுக்கு இந்நடவடிக்கையால் எழும் அபாயம் மற்றும் செலவீனம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு முக்கியத்துவம் மிக்க அளவில் அமெரிக்காவின் தலையீடு குறைக்கப்படவுள்ளது.

நடவடிக்கையின் தேவைக்கு எதிரான எமது நலன்களை நாம் எப்போதும் அளவிடுவோம்.

உரிமையின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எப்போதும் விவாதத்திற்குரியவையாக இருக்க முடியாது.

பயங்கரத்தின் மட்டத்தை நாம் நேரில் கண்டோம்.இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேசத்தின் ஆணையுடனும் அரேபிய நாடுகளின் ஆதரவுடனும் லிபிய மக்களின் வேண்டுகோளின் பிரகாரமும் இந்நடவடிக்கையை மேற்கொண்டோமெனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் லிபியாவில் அமெரிக்காவின் தலையீடு வரையறுக்கப்பட்டதாக இருக்குமென்பதை வலியுறுத்தியுள்ள ஒபாமா,ஈராக்கில் போன்று லிபியாவிலும் உயிர்களையும் நேரத்தையும் பணத்தையும் அமெரிக்கா மீண்டும் செலவழிக்காதெனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல எண்ணெய் வள முக்கிய நிலைகளையும் கரையோரப் பகுதிகளையும் கைப்பற்றி வரும் கிளர்ச்சியாளர்கள் சிடேயை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

எனினும் கடாபியன் படைகளின் கடும் தாக்குதல்களால் கிளர்ச்சியாளர்கள் சிடேயை அடைவது தாமதமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பி.பி.சி.

4. ஜப்பானிய கதிர்வீச்சு காரணமாக அமெரிக்காவில் பெய்த கதிர்வீச்சு மழை


விபத்துக்குள்ளான ஜப்பானிய அணு உலைகளின் கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட மேகங்கள் அமெரிக்கா நோக்கி நகர்ந்துள்ள நிலையில் நேற்று அங்கு சில பகுதிகளில் கதிர்வீச்சு மழை பெய்துள்ளது.

கதிர்வீச்சு மழை குறித்த செய்தி கிடைத்த உடன் அமெரிக்க வானிலை நிலையம் பிரஸ்தாப பகுதிகளில் உடனடியாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. ஆயினும் மழையுடன் கலந்திருந்தது உண்மை என்ற போதிலும் அதன் காரணமாக மனித ஆரோக்கியம் பாதிக்கப்படாது என்ற விடயம் தெரிய வந்துள்ளது.

ஒஹியா, மசாசூசெட்ஸ் மற்றும் பென்சில்வேனியா பிராந்தியங்களிலேயே நேற்றைய தினம் கதிரியக்க தாக்கம் கொண்ட மழை பெய்திருந்தது.

அதன் காரணமாக தற்போது அமெரிக்காவில் பெய்யும் மழைநீர், குடிநீர் மற்றும் கதிரியக்கத் தாக்கமுறக் கூடிய பொருட்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5.  ஜப்பானிய கதிர்வீச்சு இங்கிலாந்துக்கு பரவல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி சம்பவத்தில் புகுஷிமா பகுதியில் இருந்த அணு உலைகள் செயல் இழந்தன.

இதனையடுத்து அதில் இருந்த கதிர் வீச்சுக்களால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாயினர். இந்நிலையில் இந்த கதிர்வீச்சு இங்கிலாந்துடன் இணைந்த ஸ்காட்லாந்து பகுதிக்கு பரவி இருப்பதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள கிளாக்ஸோ பகுதியில் கதிர்வீச்சு அபாயம் காணப்பட்டதாகவும் அவை சிறிதளவே இருப்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளதாக ஸ்கை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளிலும் இதன் பாதிப்பு சிறிதளவு உள்ளது என்றும் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் 92 க்கும் மேற்பட்ட இடங்களில் காற்றில் கதிர்வீச்சு அளவு குறித்து கண்டறிந்து வருகின்றனர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்வின்

No comments: