அவுஸ்திரேலியாச் செய்திகள்

.                                                                             
                                                                                                  செய்தித் தொகுப்பு : கரு 

1. மெல்பர்ன் நகரில் கடனட்டை மோசடிக்கும்பல் கைது! இலங்கையரும் உள்ளடக்கம்

2. சிட்னி ஒபனில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்

3. அவுஸ்திரேலிய புதிய கப்டன் கிளார்க்

1. மெல்பர்ன் நகரில் கடனட்டை மோசடிக்கும்பல் கைது! இலங்கையரும் உள்ளடக்கம்

இலங்கையர்களும் அங்கம் வகிக்கும் கடனட்டை மோசடிக் கும்பல் ஒன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 56 பேரைக் கொண்ட பிரஸ்தாப பாரிய மோசடிக்கும்பலில் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து சென்றிருப்பவர்களும் உள்ளடங்குவதாக அவுஸ்திரேலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் இலங்கையர்களைப் பணத்தைக் கொடுத்து வளைத்தெடுத்து, அவர்கள் மூலம் கடனட்டைத் தகவல்களைத் திருடுவதில் பிரஸ்தாப கும்பல் ஈடுபட்டுள்ளது. அதன் மூலம் அவுஸ்திரேலியாவில் பரந்த கடனட்டை மோசடி வலையமைப்பொன்றை உருவாக்க அவர்கள் முயன்றுள்ளனர்.

அவ்வாறான மோசடிகள் மூலம் அவர்கள் இதுவரை 25.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடியாக உழைத்துக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களிடம் இருந்த அறுபத்து மூவாயிரம் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


2.  சிட்னி ஒபனில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்


மிகப் பழைமையான இந்து ஆலயம் ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஓபன் நகரிலுள்ள மந்திர் ஆலயத்தின் மீது மார்ச் 19ம் திகதி இரவு முகமூடியணிந்த இரு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இச்சம்பவத்தினால் ஆலய குருக்களும் பக்தர்களும் பீதிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் காட்சி, ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆலயம் 3 தசாப்த கால பழைமையானதாகும். இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைதாகவில்லை.

3. அவுஸ்திரேலிய புதிய கப்டன் கிளார்க்


அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும் ஆடும் அணியில் முன்னாள் கப்டன் ரிக்கி பொண்டிங்கும் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டியில் காலிறுதியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியதையடுத்து அவுஸ்திரேலிய அணித் தலைவர் பொறுப்பிலிருந்து ரிக்கி பொண்டிங் விலகினார்.

இதனையடுத்து 29 வயதாகும் மைக்கேல் கிளார்க் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேன் வற்சன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 43ஆவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைக்கேல் கிளார்க் தலைமையில் பங்களாதேஷ் சென்று தொடரை எதிர்கொள்கிறது. இதில் பொண்டிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 அணியின் தலைவராக கமரூன் வைற் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: