தமிழ்ச்சுடர் விபுலானந்தன் - கவிஞர் க. கணேசலிங்கம்

.

அருந்தமிழ்ப்பண் ணிசைமரபை ஆய்ந்தறிந்து
அரியபெரு யாழ்நூலைச் அளித்தசெம்மல்
பொருந்துகலை விஞ்ஞானம் தெரிந்தமேதை
பொதுநலனில் மனம்மகிழ்ந்த கர்மயோகி
திருந்துதமிழ் வளர்ஈழம் மீன்கள்பாடும்
தேனாடு மட்டுநகர் தந்தமைந்தன்
பெருந்துறவி யாய்வாழ்ந்தும் தமிழணங்கின்
பேரழகில் தனையிழந்த விபுலானந்தன்!




வெள்ளைநிற மல்லிகையோ வேறுபூவோ
விழைந்திலன்நல் லிறை;உள்ளக் கமலமொன்றே
வள்ளலவன் விரும்பிடுவான் எனவுரைத்தான்;
வளம்மிக்க எம்பண்டைப் பெருமைவேற்று
வெள்ளத்தில் கரையாது மீட்டான்;தொண்டின்
விளக்கமெனும் ஆறுமுக நாவலன்தன்
உள்ளத்தின் வழிபணிகள் தொடர்ந்தான்;கல்வி
ஊட்டினன்;நல் லுயர்பள்ளி பலஅமைத்தான்.


பழந்தமிழர் இசைசிற்பம் கலைகளென்று
பல்பொருளில் விரிவுரைகள் செய்தான்; உள்ளம்
விழைந்துபல மொழிகற்றான்; வேதாந்தத்தில்
விழங்குபவை மொழிபெயர்த்தான்; சித்தாந்தத்தைச்
செழுந்தமிழின் நூல்களிலே படைத்தான்;உண்மைச்
செயல்வீரன்; பேரறிஞன்; தமிழுலகில்
எழுந்தஇருள் கிழிக்கவந்த ஞாயிறாவான்!
எழுச்சிதரு தமிழ்ச்சுடரே விபுலானந்தா!

- கவிஞர் க. கணேசலிங்கம்
('உணர்வுக்கோலம்' கவிதைத் தொகுப்பு, 1997)


No comments: