இலங்கைச் செய்திகள்
.

1. யாழில் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபட்ட கும்பல் இராணுவத்தினரிடம் அகப்பட்டது

2. இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!

3. யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை

4. புதிய துணைவேந்தராக வசந்தி  நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்
1. யாழில் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபட்ட கும்பல் இராணுவத்தினரிடம் அகப்பட்டது

யாழ். நகரை அண்டிய பகுதியில் நீண்ட காலமாகப் பெண்களுடன் அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கும்பலில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பில் முடிந்ததனாலேயே இராணுவத்தினர் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

மேற்படி கோஷ்டியினர் யாழ். நகரை அண்டிய கஸ்தூரியார் வீதி, நாவலர் சந்திப்பகுதியில் நீண்ட காலமாகப் பெண்களுடன் அங்கச்சேட்டைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று வரும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என யாரையும் இவர்கள் விடுவதில்லை. பெரும்பாலும் சனி ஞாயிறு தினங்களில் இவர்கள் மது போதையில் பெண்களுடன் சேட்டைவிடுவதுடன், வீதியால் போவோர் வருவோரையும் சீண்டியிருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3.30 மணியளவில் மது போதையில் தமக்கிடையே வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோஷ்டியில் ஒருவருக்கு மண்டை உடைந்துள்ளது.

இதனைக் கண்ணுற்ற இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சமரசத்தில் ஈடுபட முயன்ற வேளை கோஷ்டியினர் இராணுவத்தினரையும் தாக்க முற்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு மேலதிகமாக படையினர் அழைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோஷ்டியை இராணுவத்தினர் மடக்கிப்பிடித்ததோடு, யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, இதே குழுவைச் சேர்ந்த நால்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கசூரினா கடற்கரைப் பகுதியில் மது போதையில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டதனால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ்வின்

இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்!
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது – 28) என்ற ஆசிரியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர்.

இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடைபெற்ற நாளன்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆசிரியர் சம்பந்தன் சக்திதரன் காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அண்மித்த மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியிருக்கின்றார்.

அதே மதுபான விற்பனை நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் தகவல் அனுப்பியிருந்ததாக குறித்த நண்பர் தெரிவித்திருக்கின்றார். ஆனாலும் குறித்த நண்பர் அங்கு சென்றிருக்கவில்லை.

அதன் பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்திற்குச் சென்ற ஆசிரியர் சக்திதரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் குப்பிளானைச் சேர்ந்த நபர் போதை அதிகம் என்பதால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் என்று மறித்திருக்கின்றனர்.

அங்கிருந்து 7.30 மணியளவில் வெளியேறிய சக்திதரன் திருநெல்வேலி சந்திப்பகுதியில் தடுமாறியதாகவும், அவரை இடைமறித்த இராணுவத்தினர் இருவரும் சிவில் உடையில் இருந்த இருவரும் உரையாடியிருக்கின்றனர். அதன் பின்னர் இராணுவத்தினர் அவரைத் தாக்கியதை தாம் கண்ணுற்றதாக திருநெல்வேலி சந்திப் பகுதி வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை தமிழீழம் கிடைத்தால் நீங்கள் யாழ்ப்பாணத்தில் நிற்க முடியாது என்று இராணுவத்தினரைப் பார்த்து அவர் தெரிவித்ததை அடுத்தே இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் உயிரிழந்தமைக்கான காரணம் கொலையே என்று சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு - இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

ஆசிரியரான சத்திதரன் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குப்பிளானிலுள்ள தமது வீட்டிலிருந்து தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக மாலை 5.30 மணியளவில் புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார். அங்கு நண்பருடன் இணைந்து சில மணிநேரத்தைக் கழித்துள்ளார்.

பின்னர் பலாலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தனியாகப் பயணித்துள்ளார். திருநெல்வேலியில் பழைய பிரதேச செயலகத்திற்கு அருகில் இவரை இராணுவத்தினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அவ்வேளை அங்கு ஒரு முறுகல் நிலைமை ஏற்பட்டதாகத் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அங்கு மக்கள் கூடியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அருகிலுள்ள மஞ்சமுன்னா தடியை முறித்து மிரட்டியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார் என்பது குறித்துத் தெரியவில்லை.

அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் பிரஸ்தாப ஆசிரியர் சுயநினைவு இல்லாத நிலையில் 119 அவசர அம்புலன்ஸ் மூலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டார். அங்கு அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகத் தெரிவித்தே அனுமதிக்கப்பட்டார். உடனடியாக ஆசிரியர் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடலில் உள்ளாடையைத் தவிர வேறெந்த ஆடைகளும் இல்லாத நிலையிலேயே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து சுயநினைவில்லாமல் இருந்த பிரஸ்தாப ஆசிரியர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி மரணமானார்.

இவரது முதுகுப்புறத்தில் வயரினால் தாக்கியமைக்கான காயங்கள் காணப்படுவதுடன் தலையில் பலமாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் (காயங்கள்) உள்ளன என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தில் காயமடைந்தமைக்கான எந்தவித அடையாளங்களும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா யாழ்.ஆஸ்பத்திரியில் மரண விசாரணைகளை நடத்தினார். சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

நன்றி தமிழ்வின்


3. யாழ். யுவதியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த இராணுவத்தினருக்கு மரண தண்டனை


யாழ். யுவதியொருத்தியை வல்லுறவுக்குட்படுத்திக் கொலைசெய்த மூன்று இராணுவத்தினருக்கு புதன்கிழமை, 30 மார்ச் 2011  ம் திகதி  கொழும்பு நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கோண்டாவில், உரும்பிராய் பிரதேசத்தைச் சோ்ந்த வேலாயுதன் ரஞ்சனி எனும் 22 வயது யுவதியைக் கடத்திப் போய் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்த குற்றச்சாட்டிலேயே மூன்று இராணுவத்தினருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அவர்களுக்கு எதிராக கடத்தல், வல்லுறவு, படுகொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமாஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

யுவதியைப் படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதித்த நீதவான், கடத்தல் மற்றும் வல்லுறவுக்குற்றச்சாட்டுகளுக்கு புறம்பான சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் குற்றவாளிகளுக்கு மேன்முறையீட்டுக்கான சந்தர்ப்பமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

4. புதிய துணைவேந்தராக வசந்தி  நியமனம் இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண்
யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக மருத்துவ பீடபேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பதவியேற்கின்ற முதல் பெண் துணைவேந்தர் இவரே. இவரது நியமனத்தின் மூலம் இனிவரும் காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் கல்வி மற்றும் வளங்களில் முன்னோக்கிச் செயற்பட வேண்டும் என்று குடாநாட்டின் கற்றறிந்தோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கும் கடிதம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.யாழ்.பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது. பேரவை உறுப்பினர்களின் தெரிவுப்படி பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருந்தார். பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், தற்போதைய பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் தலா 9 வாக்குகளைப் பெற்று அடுத்த நிலையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நடைமுறையின் பிரகாரம் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களின் பெயர்களை பல்கலைக்கழகப் பேரவை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்காக அனுப்பி வைத்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பின்னர் துணைவேந்தர் ஒருவரை ஜனாதிபதியே நியமிப்பார். மாதக்கணக்கில் இந்நியமனம் இடம்பெறாமல் இழுபறிப்பட்டு வந்தது. அதன் பின் கடந்த வருட இறுதியில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் துணைவேந்தராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தார்.

நன்றி தேனீ

No comments: